புதுப்பாக்கள்

ஏப்ரல் 01-15

முயற்சி

தொட்டுவிடும்
தூரத்தில்
வெற்றி இல்லை!
ஆனாலும்…
அதை விட்டுவிடும்
எண்ணத்தில்
நானும் இல்லை!!
முயற்சிக்கு என்றும்
தோல்வியுமில்லை!!

– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.

கலவரம்

ஊர்வலம் வந்த
அம்பாளால்
வரம் தரமுடியவில்லை
கலவரம் தந்து
மோசமான
நிலவரம் தந்தாள்

– வீ. உதயக்குமாரன், வீரன்வயல்

வணக்கத்திற்குரியோர்

காடு திருத்தி நாடாக்கிய
கல் முள் தைத்த
அவர்களின் புழுதிப்பாதம்
புனிதமானவை

மேழி பிடித்துக் காய்ப்பேறிய
அவர்களின் கரங்கள்
உன்னதமானவை

நட்டு களைபறித்து
பொழுது சாயும்வரை சிந்தும்
அவர்களின் வியர்வை
மகோன்னதமானவை

மானிட
வயிற்றுப் பள்ளத்தை நிரப்ப
வயல் பள்ளத்தை
வாழ்க்கையாக்கிக்கொண்ட
வணங்கத்தக்க அவர்களை
நன்றிகெட்ட சமூகம்
நிற்கச் சொல்கிறது வாசலில்
ராசராசனைப்போல்

– பி. செழியரசு, தஞ்சை

விலங்கு ஒடிந்தது

பசுமை மட்டுமே ஒற்றை நிறமாய்
விசும்பு தொட்ட விரிதலைக் காடு
அசைந்து நடந்த ஆற்றின் ஓசை
பறந்து பழகிய பறவைகள் ஓசை

ஓலை வேய்ந்த பர்ணசாலை
அரசகுமாரர்க்கு ஆயுதக் கலையைப் போதித்திருந்தான் துரோணாச்சாரி

இளைஞன் ஒருவன் வேலிக்குள் வந்து
ஆசான் காலில் வீழ்ந்து வணங்கினான்

யார் நீ என்று அதட்டினான் ஆசான்
ஏகலைவன் முன்னொரு ஆண்டில்
கல்வி கேட்டு உம்மிடம் வந்தேன்
தாழ்ந்த ஜாதி உனக்கா கல்வி?
போடா – என்று விரட்டி யடித்தீர்

உமைப்போல் ஒரு சிலை வடித்துவைத்து
நாளும் நானே பயிற்சி எடுத்தேன்
எய்யும் கல்வி கைவரப்பெற்றேன்

நன்றி உமக்கு நவின்று செல்லவே
அடியேன் வந்தேன் வாழ்த்துக அய்யா
என்றான் தொலைநிலை மாணவன்

தாழ்ந்த ஜாதியான் கற்றுத் தேர்வதா?
தாடி ஆசானை ஆட்டியது ஆத்திரம்

என்னை எண்ணி உன்னை வளர்த்ததால்
காணிக்கை எனக்கு நீ செலுத்தல் கட்டாயம்
தந்துசெல் என்றான் இடியோசை ஆசான்

கட்டணம் யாதோ கட்டளை செய்க –
பணிந்து கேட்டான் குனிந்த மாணவன்

வலதுகைக் கட்டைவிரல் வெட்டித்தா என்றான்
ரத்தருசி கண்ட புத்தகாசிரியன்

கட்டை விரலை விட்டுக் கொடுத்தால்
விற்கலை அனைத்தும் வீணாய்ப் போமே…
ஆயுதம் இலாது நம் வாழ்க்கை இயலுமா?
நிலையை இளைஞன் எடைபோட்டுப் பார்த்தான்

அவ்வாறே செய்வேன் ஆச்சார்ய தேவரே!
இறுதியாய் ஒருமுறை எய்து பார்க்கிறேன்
அப்புறம் தாங்கள் பெறுக தட்சணை என்றான் ஏகலன்

சரி சரி விரைந்துசெய் என்றான் துரோணன்

ஏகலைவன் இழுத்தான் நாணை
வளைந்த வில்லின் வாயிலிருந்து
பாய்ந்தது அம்பு சாய்ந்தான் துரோணன்

நேர்நிலைக் கல்வி நீர் தராததனாலே
குறிதவறிவிட்டது போலும், மன்னிப்பீர் என்றான் ஏகலன்
இதற்குள் ஆசான் இறந்துபோயிருந்தான்

வருந்தாதீர்கள் மாணவர்காள், இனி
நானே பயிற்றுவேன், அனைவருக்கும் கல்வி என்றறிவித்தான் ஏகலன்
சிறையிருந்த கல்வி விடுதலை பெற்றது

– நீலமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *