நேயன்
திருக்குறளுக்கும் ஆரியர்களுக்கும் என்ன தொடர்பு? தமிழில், தமிழரால் எழுதப்பட்ட ஒப்பற்ற உயர்நூல் திருக்குறள். திருக்குறளுக்கு இணையாக உலகில் வேறு ஒரு நூல் இல்லை. இது உலகமே ஒப்புக் கொண்ட உண்மை. அப்படியிருக்க, தமிழரின் முதன்மை நூலான திருக்குறளை ஆரியர்களின் சொத்து என்பது மோசடியான கருத்தல்லவா? சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் என்னும் தமிழரால் எழுதப்பட்ட காப்பியம்; தமிழ்ப்பெண் ஆண்டாள் எழுதியது திருப்பாவை; தஞ்சை பெரிய கோயில் தமிழ்மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. கட்டியவர்கள் தமிழர்கள். இப்படி முழுக்க முழுக்க தமிழுக்கு உரியவற்றை ஆரிய சம்பத் என்பது கூறுவது உலகமகா மோசடியல்லவா? எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்லாமிய மன்னன் ஷாஜகானால், அவன் மனைவி பெயரால் கட்டப்பட்ட தாஜ்மகாலை ஆரிய சம்பத் (ஆரியர்க்குரிய சொத்து) என்பது நகைப்பிற்குரிய பித்தலாட்டமல்லமா? இப்படிக் கஞ்சா போதையில் பாரதி கக்கிய பிதற்றல் கருத்துகளை அடிப்படையாக வைத்து இந்தியாஆரிய நாடு என்று இந்த முற்றிய பைத்தியம் அரவிந்தன் நீலகண்டன் கூறுவது கேலிக்குரியது அல்லவா?
தமிழர்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை, இசைக்கலை, இந்தியா எங்கும் உள்ள மற்ற கலைச் செல்வங்கள் எல்லாம் ஆரிய சம்பத் என்று பாரதி கூறியதை எடுத்துக் கூறி இந்தியா ஆரிய நாடு என்பது அறிவார்ந்த வாதமா? சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம் போன்றவற்றை ஆரிய சம்பத் என்றது மட்டும் சரி. சமஸ்கிருதத்தில் இவை எழுதப்பட்டிருப்பதால் இந்தியா எப்படி ஆரிய நாடாகும்? ஒரு நாடு யாருக்குரியது என்பது ஆய்வின் மூலம், அரிய தடயங்கள் மூலம் அல்லவா உறுதி செய்யப்பட வேண்டும்?
“பாரதியும், அம்பேத்கரும், விவேகாநந்தரும் எதிர்த்த இந்த இனவாதக் கோட்டுபாடு, வேதத்தின் மீது சுமத்தப்பட்டு, நம் குழந்தைகள் மீது திணிக்கப்படுவதன் காரணம் என்ன? அய்ரோப்பிய மனம் ஆராய்ச்சித் தன்மை கொண்டது என நாம் கருதுவதே. அதன் ஆராய்ச்சிக்கு உள்நோக்கங்கள் இருக்க முடியாது என நாம் நினைக்கிறோம்.’’
“உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் விவேகாநந்தரும், அம்பேத்கரும், பாரதியும் சொன்ன கருத்துகளுக்கே வந்தடைகிறார்கள்’’ என்கிறார், அரவிந்தன் நீலகண்டன்.
இது எப்படிப்பட்ட பித்தலாட்டம் பாருங்கள்!
விவேகாநந்தர் என்ன சொன்னார் என்றும் சொல்லவில்லை; அம்பேத்கர் என்ன சொன்னார் என்றும் சொல்லவில்லை; பாரதி சொன்னதில் 10 வரிகளை மட்டும் கூறியுள்ளார்.
உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் என்ன கூறியுள்ளனர் என்றும் சொல்லவில்லை; ஆக, எவர் கூறியதையும். எடுத்துக் கூறாது, விவேகாநந்தர், பாரதி, அம்பேத்கர் கூறிய கருத்துகளையே உண்மைகளைத் தேடும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் என்பது என்ன ஆய்வு முறை?
கண்ணைக் கட்டி காட்டுக்குள் அழைத்துச் செல்வது போல, தமது கருத்துகளை வாசகர்களுக்குக் கூறிச் செல்கிறார் இவர்.
“ஆரியர் இந்தியாவுக்குள் வந்தேறிய அயல் நாட்டார்; தமிழர்கள் (திராவிடர்கள்) இந்தியாவின் பூர்வக் குடிகள்’’ என்ற இருபெரும் வரலாற்று உண்மைகள், அகழ் ஆய்வு, மரபணு ஆய்வு, தொல்பொருள் ஆய்வு மூலம் அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டு விட்ட இக்காலத்தில், வேதங்களையும், விவேகாநந்தரையும் பாரதியையும் காட்டி, வரலாற்றைத் திரித்து, ஆரியர்களின் தாயகம் இந்தியா என்று ஏமாற்றப் பார்க்கிறார், இந்த ஆரியப் பார்ப்பன எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்.
அய்ரோப்பிய ஆய்வாளர்கள் விருப்பு வெறுப்போடு இந்திய வரலாற்றை எழுதி, ஆரியர்கள் அயல்நாட்டினர் என்று காட்டி வருகிறார்கள் என்று அவர்கள் மீது பழி சுமத்துகிறார் இந்த ஆரியப் பார்ப்பனர். அய்ரோப்பியர் சொன்னாலும், ஆஸ்திரேலியா ஆய்வாளர் சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் அவர்கள் கூறும் தடயங்கள் (ஆதாரங்கள்) தான் முதன்மையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர்கள் எந்த நாட்டினர் என்று பார்ப்பது சரியல்ல.
அப்படி இதுவரை பலராலும் நடத்தப்பட்ட அகழ் ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, மரபணு ஆய்வு, எலும்புக் கூடு ஆய்வு அனைத்துமே, தமிழர்களே இந்தியாவின் ஆதிக்குடிகள்; ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.
அப்படியிருக்க, எதையெதையோ பிதற்றி இந்தியா ஆரிய பூமி என்று இவர் கூறுவது மோசடிக் கருத்தாகும்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
“வேத இலக்கியங்களை, அய்ரோப்பியர்கள் அணுகிய ஒவ்வொரு கணத்திலும், அவர்கள் தங்கள் மனச்சிக்கலுடன் மோத வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் மனநிலைகள், நம்பிக்கைகளைக் கொண்டே அவற்றை அணுகினர்’’ என்றும், “ஹிந்து நூல்களின் பழைமையை அவர்கள் ஏற்றுக் கொண்டால் பைபிள் வெறும் கதையென்றே கருத வேண்டியிருக்கும் என்று அவர்கள் கருதினர்’’ என்றும் இந்தப் பார்ப்பனர் அரவிந்தன் நீலகண்டன் கூறுகிறார்.
வேதங்கள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட ஒருவரால் எழுதப்பட்டவை அல்ல. அவை, ஆரிய வந்தேறிகள், மண்ணின் மக்களான தமிழர்கள் (திராவிடர்கள்) அழிந்து போக வேண்டும் என்று தங்களின் கடவுளான இந்திரன், அக்கினி, வாயு, வருணன் போன்றவர்களை பிரார்த்திப்பவையே! இது பல்வேறு காலக்கட்டத்தில் பலரால் பாடப்பட்டு செவிவழியாக மனத்தில் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. வேத-மொழியே சமஸ்கிருதம் அல்ல. அது ‘சந்தஸ்’ என்னும் மொழி என்கிறார் காஞ்சிபுரத்து பெரிய சங்கராச்சாரி. அந்த வேதங்கள் காழ்ப்புணர்வின் கதம்பமாலையே யன்றி அதில் எந்த வரலாற்றுப் பதிவுகளும் இல்லை.
ஆரியரின் குறைந்த எண்ணிக்கை, அவர்களின் நிறம், வாழ்வியல் முறை, நில உரிமை இல்லா நிலை, பிச்சையெடுத்து வாழ்ந்த வாழ்க்கை முறை இவை எல்லாம் அவர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றன.
தமிழரின் நில உரிமை, அவர்களின் நிறம், உடல் அமைப்பு, அவர்கள் தெற்காசிய பகுதி முழுவதும் பரவி வாழ்ந்த தடயங்கள் எல்லாம் அவர்கள் மண்ணின் மக்கள் என்பதை உறுதி செய்கின்றன.
அப்படியிருக்க, எதையெதையோ உளறி இந்தியா ஆரிய நாடு என்று நிலைநாட்ட முற்படுகிறார் இந்தக் கோயபல்ஸ்.
இந்தியா ஆரிய பூமி என்பதற்கு தொல்பொருள் ஆய்வுகள் மூலம் என்ன தடயங்கள் கிடைத்துள்ளன? அகழ் ஆய்வுகள் மூலம் என்ன ஆதாரங்கள் கிடைத்துள்ளன? மரபணு ஆய்வுகள் மூலம் கிடைத்த முடிவுகள் என்ன என்று அரவிந்தன் நீலகண்டன் வரிசையாய் பட்டியல் இட்டுக் காட்டத் தயாரா? அப்படிக் காட்ட முடியவில்லையென்றால் ஆதாரமற்ற, உண்மைக்குப் புறம்பான மோசடிக் கருத்துகளைக் கூறியமைக்கு மன்னிப்புக் கேட்டு, தன் கருத்துகளைத் திருப்பப் பெறவேண்டும்.
இல்லையென்றால், இவர் ஓர் மோசடிப் பேர்வழியென்றே ஆய்வாளர்கள் கண்டிப்பர்; இவர் கருத்துகளைக் குப்பையில் தள்ளுவர்.