1928_-1929-இல் லண்டனில்நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு, இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கரையும், இவரையும் இந்திய அரசு தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுபற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகள்பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே விளக்குகிறார்.
‘‘சர்வ கட்சி மகாசபை என்னும் வட்டமேஜை மாநாட்டிற்கு என்னையும், டாக்டர் அம்பேத்கரையும் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் நகமும், சதையுமாக இருந்து உழைத்தோம். 1928-_1929ஆம் ஆண்டுகளில் நடந்த மகாசபைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். 1930ஆம் ஆண்டு டாக்டர் மட்டும் மகாசபைக்குப் போனார். என் ஆலோசனையைக் கேட்க இந்தியா ராஜப் பிரதிநிதி கமிட்டிக்கு (Viceroy’s consulative Committee) என்னை அழைத்துக் கொண்டார்கள்’’ என்று கூறும் அவர், அங்கு நடந்த நிகழ்வு ஒன்றையும் விளக்குகிறார்.
‘‘ஜார்ஜ் மன்னரையும், இராணியையும் காணும் பொருட்டு, வின்சர் காஸ்சல் (windsor castle) என்னும் ராஜ மாளிகைச் சபைக்கு இந்தியப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். என்னுடன் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி இருவரும் கைகுலுக்கி உபசரித்தார்கள். இப்படியாக மூன்று தடவை நடந்தது. ராஜா மாளிகையில் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. பின்னுமோர் தடவை மன்னரிடம் சம்பாஷிக்க (பேச) நேர்ந்தது. தீண்டாமை என்றால் என்னவென்று மன்னர் வினவினார். ‘மேல்ஜாதியான் என்போன் கீழ்ஜாதியான் தெருவில் விழுந்துவிட்டால் மேல்ஜாதியான் தூக்கிவிட மாட்டான்’ என்று நான் கூறியபோது, மன்னர் திடுக்கிட்டு அசந்து நின்று, ‘‘அவ்விதம் நடக்க என் ராஜ்ஜியத்தில் விடவே மாட்டேன்’’ என்றார். மன்னர் மாளிகைக்-குள் பிரவேசிக்கவும் மன்னரோடு கைகுலுக்கிப் பேசவுமுண்டான பாக்கியம் நமது சமூகத்தைப் பொருந்திய தல்லவா? இதர சமூகத்தோடு நம்மையும் சமமாக மன்னவர் நடத்தியதனால் ஆங்கிலேய அரசாட்சி எவ்வளவு அன்பும், அருமையான தென்றும் நம் இனம் முன்னேறவுஞ் செய்ததென்றும் விளங்குகிறது’’ என்று வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வை பாமரத் தமிழில் விளக்கியுள்ளார்.
அந்த மாநாட்டில் இவர் கலந்துகொண்ட-போது, ‘‘ராவ் சாகிப் ஆர்.சீனிவாசன் பறையர். நான் ஒரு தீண்டப்-படாதவன்’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையொன்றை தன் மேலாடையில் மாட்டியிருந்தார். இதைப் பார்த்துத்தான் மன்னர் அக்கேள்வியைக் கேட்டார். ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியைவிட ஜாதி இந்துக்களின் கொடுமையான ஆதிக்கம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்ற உண்மையும், ஆங்கில ஆட்சி வந்திராவிட்டால், இந்த விடிவுகூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்ற உண்மையும் இவற்றால் விளங்குகின்றன.
‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால்தான் தீண்டாமை என்னும் கொடிய பழக்கம் ஒழியும். சட்டசபையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தால்தான் எங்கள் இலட்சியங்களை அடைய நாங்கள் போராட முடியும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை’’ என்று அந்த மாநாட்டில் தன் சமூகத்திற்-குரிய கோரிக்கைகளை முன்வைத்தார். சொத்துள்ளவருக்கும், படிப்புள்ளவருக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற அந்தக் காலத்தில், தன் இனம் முன்னுக்கு வரவேண்டும் என்றால், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று ஆணையிடப்படவேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்து அவர் கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது இதன்மூலம் விளங்குகிறது.
அரசியல் அதிகாரத்தைப் பெறாத எந்தச் சமுதாயமும் முன்னுக்கு வர இயலாது என்பது ஆழமான உண்மை. அதை நுட்பமாக அறிந்து, அதைக் கோரிக்கையாக வைத்தார். அக்காலத்தில் இந்த அளவிற்கு விழிப்போடு சிந்திப்பது என்பதும், சிந்தித்து எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவது என்பதும், அதுவும் அயல்நாட்டிற்குச் சென்று உலகையே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களிடம் அது குறித்துக் கோரிக்கை வைப்பது என்பதும் வியப்புக்குரிய அரிய செயல்களாகும். அவற்றை ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட தமிழர் செய்திருக்கிறார் என்பது தமிழர்க்குப் பெருமை, தாழ்த்தப்பட்டோர்க்கு அதனிலும் பெருமை.