“சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதிய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார்.
அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார்.
1. ஜாதிக் கொடுமைகளை – உணர்வு களை மக்கள் மத்தியிலிருந்து களைதல்.
2. அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்றுதல்.
நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழிவாக, தீண்டத்தகாதவர்களாக நடத்து கிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, “முதலில் நீங்கள் உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர் களைச் சமமாக நடத்துங்கள்; உங்களோடு அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார்.
தீண்டாமையிலிருந்து, ஜாதி அழிவிலிருந்து தங்களைக் கீழ் ஜாதியார் உயர்த்திக் கொள்ள, இக்கொடுமைகளை ஒழிக்க ஒரே வழி, அம்மக்கள் தங்களையும் கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்வதும், ஆதிக்கச் சக்திகளைவிட கல்வி, செல்வம், ஆன்மிகம் வல்லமை மிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதுமேயாகும் என்பது நாராயண குருவின் கொள்கையாக இருந்தது.
உயர்ஜாதியினர் வணங்கும் பொதுக் கோவில் களில் இவர்களை விடமாட்டார்கள். எனவே, இவரே பொதுக் கோவில்களை உருவாக்கினார்.
1888ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் அருகிலுள்ள அருவிபுரம் என்னும் சிற்றூரில், ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, சிவலிங்கமாக (பிரதிஷ்டை) பிரதிட்டை செய்தார். ஈழவர் களுக்குப் பிரதிட்டை செய்ய உரிமை இல்லையே என்று உயர்ஜாதியார் உரிமைக்குரல் எழுப்பியபோது, ‘‘நான் நிறுவியது (பிரதிஷ்டை செய்தது) நம்பூதிரிகளின் சிவன் அல்ல’’ என்று அவர்கள் வாயை அடைத்தார். கோவிலின் முன், ‘‘ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வழிபடலாம்’’ என்று அறிவிப்பு எழுதி வைத்தார்.