முனைவர் வா.நேரு
அண்ணல் அம்பேத்கரையும், திராவிட இயக்கத்தையும் புரிந்து கொள்வது என்பது இந்த நாட்டில் இருந்த _ இருக்கும் ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்துகொள்வது; பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்ட, நாடாண்ட மன்னர்களால் கடைப்பிடிக்கப்பட்ட வர்ணாசிரமத்தைப் புரிந்து கொள்வது; பிறப்பின் அடிப்படையில் நமக்கு ஏன் கல்வி மறுக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஆகும்.
நம் முன்னோர்களை ஏமாற்றியதைப் போலவே நம்மையும் ஏமாற்ற ஆரியம் துணிகிறது. அப்படித் துணியும் ஆரியத்தை எதிர்ப்பதற்கு கருத்துரீதியான ஆயுதங்களாக, நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளும் திராவிட இயக்கத்தின் கருத்து-களும் அமைகின்றன.
அண்ணல் அம்பேத்கர் ஒரு பிறவிப் போராளி. இந்திய மக்களுக்கு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் வேண்டும் என்று விரும்பியவர். அதற்காகத் தன் வாழ்வை ஒப்படைத்தவர் அண்ணல் அம்பேத்கர். இளம் வயதிலேயே தீண்டாமைக் கொடுமைகளை முழுமையாக அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், ஜாதியைப் பற்றியும், வருணாசிரமம், இந்து மதம் பற்றியும் ஆராய்ந்து உண்மை-களைக் கண்டறிந்து இந்திய மக்கள் மத்தியில் எடுத்துவைத்தார்.
இந்திய சமூகம் ஜாதிகளால் பிளவுண்டு கிடக்கக் காரணம் ஆரியப் பார்ப்பனர்கள் என்பதை தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் புரிந்து கொண்டனர்.
பொது உரிமைக்கான களத்தில் திராவிட இயக்கம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதே திராவிட இயக்கத்தின் தத்துவம். வருணாசிரம அடிப்படை-யில் அவரவர் குலத்தொழிலே அவரவர்க்கு என்பது சனாதன தத்துவம். பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஆரியர் திராவிடர் போராட்டத்தில் திராவிடர்களின் வெற்றியைப் பதிவு செய்த இயக்கம் திராவிட இயக்கம்.
பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துவது ஆரியம். ஆனால், பெண்ணுரிமைக்கு முன்னுரிமை தந்தது நீதிக்கட்சி ஆட்சி. 1920களிலேயே பிரிட்டன் போன்ற நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலத்திலேயே, மெட்ராஸ் மாகாணத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சி ஆட்சி. எம்.சி.இராஜா அவர்கள் கொண்டுவந்த சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆதிதிராவிடர்கள் என்று அனைத்து ஆவணங்களிலும் பதியவேண்டும் என்று 1922இல் நடைமுறைப்படுத்தியது நீதிக்கட்சி. ஆதிதிராவிடர் பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க ஆணை பிறப்பித்தது. ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கிப் படிக்க ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று ஆணை பிறப்பித்தது நீதிக்கட்சி ஆட்சி. அதைப் போலவே கள்ளர் சீரமைப்புப் பள்ளி பிற்படுத்தப் பட்டவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டதும் நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
வெறுமனே ஜாதி ஒழிப்பைப் பேசாமல் அதற்கான களங்களை அமைத்தது திராவிட இயக்கம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், தமிழ்-நாட்டில் இருப்பவர்களின் பெயருக்குப் பின்னால் ஜாதி ஒட்டு இல்லை. ஒருவரின் பெயரைப் பார்த்தவுடன், இவர் இந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொள்ள முடியாது. 1929இல் செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில், ஜாதிப் பட்டத்தை விட்டுவிடவேண்டும் என்று தீர்மானித்து அதன் அடிப்படையில் மேடையிலேயே தங்கள் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி ஒட்டை விட்டுவிட்டு, தலைவர்கள் தங்கள் பெயரை அழைத்துக் கொண்டதன் விளைவுதான் இன்றுவரை பெயருக்குப் பின்னால் ஜாதி ஒட்டு இல்லாமல் இருக்கிறது.
ஜாதி ஒழிப்பில், ஜாதி மறுப்புத் திருமணங்-கள் ஒரு முக்கியமான பங்காற்றும் என்றார் அண்ணல் அம்பேத்கர். அவரின் கருத்துப்படி ஜாதி மறுப்பு, சுயமரியாதைத் திருமணங்களை நடத்திக் காட்டியது திராவிட இயக்கம். 1967இல் சுயமரியாதைத் திருமணச் சட்டம், முன் தேதியிட்டு செல்லும் என்று நடைமுறைப்-படுத்தியது திராவிட இயக்கம்.
பெண்களுக்கான சொத்துரிமையைச் சட்டமாக்கியது திராவிட இயக்கம். பெண்-களுக்கான சொத்துரிமை மற்றும் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்-படாத காரணத்தால்தான், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காங்கிரசு அமைச்சரவை-யிலிருந்து விலகினார் என்பது வரலாறு. பின்னர் காங்கிரசு அரசால் 1956ஆம் ஆண்டு வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதில் பரம்பரைச் சொத்து மற்றும் கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்கள் உரிமை கோர முடியாத நிலை இருந்தது. 1989ஆ-ம் ஆண்டு, இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தம், டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டில் கொண்டு-வரப்பட்டது. இதன்படி பரம்பரைச் சொத்துகளில் பெண்களுக்கு உரிமை வழங்கப்-பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தின்படி உரிமை பெற மார்ச் 25, 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடக்காதவராக இருக்க வேண்டும். பிறகு 2005ஆ-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், `ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என திருத்தம் செய்யப்பட்டது.
1927இல் அம்பேத்கர், மகத் பொதுக் குளத்தில் தீண்டப்படாத மக்களைத் திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்திய-போது, 1924இல் பெரியார் வைக்கத்தில் நடத்திய சத்தியாகிரகம் தான் மகத் போராட்டத்துக்கு உந்து சக்தியாக விளங்கியது என்று, அவரால் நடத்தப்பட்ட “ஊமையர்களின் குரல்’’ பத்திரிகை-யின் தலையங்கத்தில் பதிவு செய்ததாக அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கருத்து ரீதியாக ஒற்றுமை வாய்ந்தவர்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகத் திகழ்ந்தவர்கள்.
தந்தை பெரியார் மட்டுமல்ல, அவரின் தளபதியாக இருந்த அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும் தந்தை பெரியாரைப் பின்பற்றி, அவரது கொள்கை-களைச் சொன்னது போலவே அண்ணல் அம்பேத்கரின் கொள்கை-களைப் பின்பற்றி, அவரது கொள்கைகளைச் சொன்னார்கள். அண்ணல் அவர்களின் புகழ் பாடினார்கள். எந்த ஒரு தலைவரையும் தந்தை பெரியார் இவ்வளவு உயரத்துக்குப் பாராட்டியதாக வரலாறு கிடையாது. அண்ணல் அம்பேத்கரைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்தது கிடையாது! அதேபோல, அதற்கு இணையான பாசத்தையும் அன்பையும் தந்தை பெரியார் மீதும் அம்பேத்கர் வைத்திருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் அளிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் விருதைப் பெற்றுக்கொண்டு இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியதில் மனித சமத்துவம், மனித உரிமை பற்றி பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றிற்கான சட்டங்களை இயற்றக் காத்திருக்கிறது, தயாராக இருக்கிறது என்றார். மேலும், தொழிலதிபர்கள் மாநாட்டில் சமூக வளர்ச்சியை வலியுறுத்தி அவர் பேசி வருகிறார். “சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும். ஒழிக்க முடியாவிட்டால் அதைப் புறந்தள்ளும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு முக்கியத்துவம் தராத சூழலை – மனநிலையை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்-கின்றார்.
1927இல் மனுதர்மத்தைக் கொளுத்தியவர் அண்ணல் அம்பேத்கர். 1935இல் “நான் இந்து-வாகப் பிறந்தேன். ஆனால், இறக்கும் போது இந்துவாகச் சாகமாட்டேன்” என்று அறிவித்த அண்ணல் 1954ஆம் ஆண்டு இந்து மதத்தைத் துறந்து பவுத்த நெறியைத் தழுவினார். ஆனால், ஆரியம் இந்து மதத்தின் ஒரு பிரிவாக பவுத்தத்தை ஆக்கி வைத்திருக்கிறது. புத்தரையே விஷ்ணுவின் 9ஆவது அவதாரம் என்று சொல்லி வைத்திருக்கிறது. சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களே இன்றைக்கு ஒன்றிய அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். நம் கழுத்துக்கு மேலே மதவாத, ஜாதியவாதக் கத்தி தொங்குகிறது. “தந்தை பெரியாரும், அம்பேத்கரும் லட்சியப் பயணத்தில், கொள்கைப் போராட்டங்களில் இரு இணைகோடுகள்!” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுவதைப் போலவே அவர்களது லட்சியப் பயணத்தில் நாம் இணைந்து, ஜாதி ஒழிப்புக்குப் போராட வேண்டியது இன்றைய தேவையாகும்.ஸீ