முனைவர் வா.நேரு
திராவிட மாடல் என்பது இன்று தமிழ்நாடு தாண்டி, இந்திய அளவிலும் உலக அளவிலும் பேசப்படும் ஒரு கருத்தியலாக மாறியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அடைய முடியாத உயர் கல்வி சதவிகிதத்தை (50 சதவிகிதம்) தமிழ்நாடு அடைந்ததும் அதிலும் பெண்களின் உயர் கல்வி 50 சதவிகிதத்தைத் தொட்டிருப்பதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதைப்போல திராவிட மாடலில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள், உள்ளாட்சிப் பதவிகளிலும் 50 சதவிகிதத்தைப் பெற்றிருக்-கிறார்கள். இது வேறு எந்த நாட்டிலும், எங்கும் நிகழாத நிகழ்வாகும்.
காலையில் படி, கடும்பகல் படி, மாலை இரவு முழுவதும் படி படி என்னும் முழக்கம் திராவிடர் இயக்கத்தின் முழக்கமாகும்.படிப்பினால் உயர்வுபெற்ற இந்தத் தலைமுறை, தங்களது பிள்ளைகளின் படிப்பிற்கு கழுத்தில் கத்தியாகத் தொங்கி நிற்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டு மிரண்டு நிற்கும் வேளையில், இருட்டைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல, இருட்டை எதிர்ப்பது மட்டுமல்ல, நாங்கள் இருட்டுக்கு மாற்றாக வெளிச்சத்தைக் காட்டும் விளக்குகளை ஏற்றுபவர்கள் என்ற வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ் நாட்டிற்கென புதிய கல்விக் கொள்கையை வகுப்பதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி கடந்த ஆண்டு அமைந்து இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பொழுதே மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும். அதற்காக குழு ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்-பட்டது.
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்-பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்டக்-கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய அறிவோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும் என்றார் பெரியார். தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவினரைப் பார்க்கும்போது நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராக முன்னால் தலைமை நீதிபதி த.முருகேசன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தக் குழுவில் வெறுமனே கல்வியாளர்கள் மட்டும் இல்லாமல் எழுத்தாளர்கள், இசைக் கலைஞர், விளையாட்டு வீரர் எனப் பலரும் இடம் பெற்றிருக்கிறனர். எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், முன்னால் பேராசிரியரும் எழுத்தாளருமான ச.மாடசாமி, முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவஹர் நேசன், கணினி இயல் பேரா.இராமானுஜம், பேரா.சுல்தான் இஸ்மாயில், பேரா.இராம. சீனுவாசன், யூனிசெப்பின் முன்னாள் கல்வி அலுவலர் அருணா ரத்னம், கல்வியாளர் துளசிதாஸ், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, அகரம் ஜெயஸ்ரீ தாமோதரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் பாலு என இந்தக் குழுவின் பட்டியல் நமக்கு ஆர்வம் ஊட்டுகிறது.
‘டோட்டோசான் ஜன்னலில் ஒரு சிறுமி’ என்ற புத்தகம் மிகப் புகழ் பெற்ற புத்தகம். தான் சிறுவயதில் படித்த ‘டோமாயி’ என்னும் பள்ளி பற்றிய அனுபவத்தை டெட்சுகோ குரோயா நாகி என்பவர் ஜப்பானிய மொழியில் எழுதிய புத்தகம். தந்தை பெரியார் சொன்னதைப் போல சுதந்திரத்தோடு – சுய அறிவோடு வாழ்வதற்கான களப்பணிக் கல்வியைக் கொடுத்த பள்ளிக்கூடமாக ‘டோமாயி’ என்னும் அந்தப் பள்ளியைப் படிப்பவர் யாரும் உணரமுடியும்.
கூடாரம் அமைத்துப் பள்ளியில் தங்கியது, விளையாட்டின் மூலமாக கல்வியைக் கற்றது, விரும்பிய கதையை ஒரு மாணவனோ, மாணவியோ எவ்வளவு நேரம் சொன்னாலும் அதைப் பொறுமையாக ஆசிரியரும் மற்ற குழந்தைகளும் கேட்பது, விரும்புவதைப் பாடுவது, விரும்பிய பாடத்தை அதிக நேரம் படிப்பது, இசையோடு கூடிய உடற்பயிற்சி, புதுமையான விளையாட்டுகள் என்று கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டதை டெட்சுகோ குரோயாநாகி விவரித்திருப்பார். விடுமுறை விட்டு விட்டால் பள்ளிக்கூடம் எப்போது திறக்கும், நாம் பள்ளிக்குச் செல்ல எனக் குழந்தைகள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருப்பதையெல்லாம் அந்த நூலாசிரியர் எழுதியிருப்பார்.
தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கை குழுவில் இடம் பெற்றுள்ள இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா,’’ கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் இல்லை. அது ஒரு முழுமையை நோக்கிய நகர்வு. அதில் எல்லா விஷயங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். அது கலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம். இவையெல்லாம் கல்விக்குள் இருக்க வேண்டுமென பல கல்வியாளர்கள் நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார்கள். படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் ஆகியவை வேண்டு-மென்றால், சமத்துவம், சமூகத்தை ஏற்றத் தாழ்வின்றிப் பார்க்கும் பார்வை ஆகியவை வேண்டுமென்றால் இம்மாதிரியான பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய குழு முக்கியம். இந்தக் குழுவில் கலை, விளையாட்டு ஆகியவற்றுக்கு இடம் கொடுத்திருப்பது மிக முக்கியமான நகர்வு’’ என்று குறிப்-பிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு என்ற நோக்கங்களை முன்வைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள், தனது 89-ஆம் வயதில், கடும் வெயிலில் கன்னியாகுமரி தொடங்கி சென்னைவரை பரப்புரை செய்யும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டு அரசின் இந்தப் புதிய கல்விக்கொள்கை குழு அமைப்பு அறிவிப்பு நமக்கு உற்சாகம் அளிக்கிறது. திராவிட மாடலுக்கு அடிப்படை கல்வியும் சுகாதாரமும்தான். அந்த வகையில் இன்னும் வலுவாக கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் அமைய இந்தப் புதிய குழு அறிக்கையை அளிக்கட்டும். மேலும் பகுத்தறிவும் பண்பு நலனும் பெற்ற மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் கற்று, உலகம் முழுவதும் பரவி, திராவிட மாடலைப் பறைசாற்ற இக்குழு வழிவகை செய்யட்டும்.