சிறுகதை : ம(வி)ந்தை மனிதர்கள்

மார்ச் 1-15 2022

அய்.கிருத்திகா

(பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

புடவை கிழிந்திருந்த இடத்தை கொசுவ மடிப்புக்குள் மறைத்து லாவகமாக இடுப்பில் சொருகி, முந்தானையில் விசிறி மடிப்புகள் செய்து ரவிக்கையில் பின் குத்தி கொத்தாக அள்ளி அதையும் சொருகி செண்பகம் நிமிர்ந்தபோது மணி ஆறாகியிருந்தது.

செண்பகம், மூன்று பக்கம் இரண்டிரண்டு செங்கல் வைத்து உருவாக்கிய அடுப்பைப் பற்ற வைத்து டீ தயாரித்து தூக்கில் ஊற்றியபோது கனகவல்லியின் குரல் கேட்டது.

“செம்பா, இங்கே கொஞ்சம் வா…”

“இதோ வந்துட்டேனுங்க…..”

தூக்கை வைத்துவிட்டு வெளியே வந்தவளை கனகவல்லியின் முகம் திகைப்புறச் செய்தது.

“ஏனுங்க, மேலுக்கு சொகமில்லீங்களா….?”

“ராவுலேருந்து வயித்துவலி புடுங்கி திங்குதுடி. அந்த மூணு நாளும் நான் படறபாடு ஆண்டவனுக்கே வெளிச்சம்….. அது கெடக்கு, உன்னைய எதுக்கு கூப்புட்டேன்னா, பசுமாட்ட நவத்திக் கட்டி பாலைக் கறக்கணும்.

என்னால குத்துக்காலு வச்சு ஒக்காந்து கறக்க முடியாது. வழக்கமா வர்ற முத்துப்பேச்சியும் நாலு நாளைக்கு வர மாட்டேன்னுட்டா. நீ கொஞ்சம் கறந்து குடுத்துட்டுப் போடிம்மா.”

கனகவல்லி கேட்டதை செண்பகத்தால் மறுக்க முடியவில்லை. டீ ஆடை கட்டி ஆறிக் கொண்டிருக்கிறதே என்கிற கவலையை ஒதுக்கிவிட்டு பசுமாட்டை அவிழ்த்து வெளியில் கட்டி இதமாய் அதன் மடிதடவி தன் கை சூட்டுக்கு அதைப் பழக்கப்படுத்தி, மூன்று லிட்டர் பாலைக் கறந்து முடித்தபோது டீ சுத்தமாக ஆறிப்போயிருந்தது.

எவர்சில்வர் தூக்கில் கழுத்துவரை நிறைந்திருந்த பசும்பால் புதுவெள்ளம் போல நுங்கும், நுரையுமாக பூரித்திருக்க, பத்திரமாகக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு நகர்ந்தவளுக்கு வாய் வார்த்தையாக ஒரு நன்றியைக்கூட உதிர்க்கத் தெரியவில்லை கனகவல்லிக்கு.

“மொதல்ல காபி வச்சுக் குடிக்கணும். அப்பதான் சித்த எதவா இருக்கும்” என்றபடியே உள்ளே சென்றவளை ஆச்சர்யம் விலகாத கண்களோடு ஒருநொடி பார்த்த செண்-பகத்துக்கு, வந்த அன்று அவள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ” தெனப்படி கால் லிட்டர் பால் கெடைக்குங்களா…….?

செண்பகம் தயங்கி, தயங்கித்தான் கேட்டாள். உடனே கனகவல்லியிடமிருந்து பட்டு கத்தரித்தாற்போல் பதில் வந்தது. “வீட்டுத் தேவைக்குப் போவ மிச்சத்தை வாடிக்கைக்கு விட்டாச்சு. இதுல எங்கிருந்து ஒனக்குத் தர….”

“பரவாயில்லீங்க. நான் வெளில வாங்கிக்கறேன்” என்றவள் அதற்குபிறகு அவளிடம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. அவளாக எப்போதாவது கொல்லைப்புறம் வந்து கூப்பிடுவாள். “செம்பா, சோறும், கொழம்பும் வச்சிருக்கேன். வந்து எடுத்துட்டுப் போ….” என்றோ, அதிகாரமான குரலில் அழைப்பு வரும்.

“வேணாம்னு சொல்லிர வேண்டியதுதான். அவுங்களுக்கு விருப்பப்பட்டா குடுக்கறது இல்லீன்னா மொகத்துல அடிச்சாப்ல பேசுறது. இது என்னா நியாயம்” என்பான் மாரிமுத்து சற்று கோபமாக. “அய்ய, அவுங்க மேல கோவப்பட்டு சோத்த ஒதுக்க முடியுமா. இந்தச் சோறு அதுக்காவதான ஊருவுட்டு ஊருவந்து குடிசை போட்டு பொழப்ப ஓட்டறோம்.” “ஒருபுடி சோத்தப் போட்டா வயிறு அடங்கிடுது. ஆனா நம்மள ஒதுக்கற சனங்கள நெனச்சு மனசுல மூளுற கோவத்த அடக்க வழி வௌங்கலியே” என்று ஒருமுறை கூறிய மாரிமுத்துவின் குரல் தீனமாக ஒலித்தது. “அட வுடுய்யா…..மேல அடிக்கிற வீச்சத்தப் பாத்து வெலகுற மனுச சென்மங்களுக்கு உள்ளாற இருக்க மனச பாக்கத் தெரியறதில்ல. அம்புட்டுதான் எனக்குத் தோணுது” என்ற செண்பகம் தூக்கிலிருந்த பழைய சோற்றை அவனிடம் தந்தாள். வெங்காயத்தை ஒரு கடியும், பழைய சோற்றை ஒரு பிடியும் உள்ளே தள்ளியவனின் கண்கள் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மேல் நிலைத்திருந்தன. அவனுடைய கிடைப்பட்டியில் மொத்தம் இருநூறு ஆடுகள். கிடா பத்து, பெட்டை ஆடுகள் நூற்றி எழுபது, குட்டிகள் இருபது. காலம், காலமாய் கிடைபோட்டு பிழைப்பு நடத்திவரும் பரம்பரையில் உதித்த அவனுக்கும் அதே தொழில் இலகுவாகிப்போனது. பழகிய பாதையில் நடக்கும்போது கிடைக்கும் மன தைரியம் புதிய பாதையில் கிடைப்பதில்லை. ஆனால், அதிலும் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்தன. ஊர், ஊராக ஆடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். கையிலுள்ள கம்பைக் கொண்டு இருநூறு ஆடுகளையும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் போல் ஒழுங்காக வழிநடத்திச் செல்லவேண்டும். இல்லையேல் சாலையில் விரையும் வாகனங்களுக்கு பலியாகக்கூடும். ஒரு ஆடு போனாலும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பு. அடுத்ததாக வயலில் கிடைபோடும்-போது ஆடுகளை கண்கொத்திப் பாம்பாக பாதுகாக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் நரியோ, கள்ளனோ கொண்டுபோய் விடக்கூடும்.

சுற்றிலும் நைலான் கயிறுவலை கட்டப்-பட்டிருக்க வயலுக்குள் ஆடுகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தன. அருகிலேயே மடக்கு கட்டில் போட்டு படுத்திருந்த மாரிமுத்து கொட்டக் கொட்ட விழித்திருந்தான். அவன் எப்போது தலையெடுத்தானோ அன்றிலிருந்து இரவுத் தூக்கம் இல்லாது போயிற்று. அதை ஈடு செய்ய பகலில் படுத்தாலும் சட்டென உறக்கம் வந்து விடுவதில்லை. ஏதேதோ கவலைகள் மனதை ஆக்கிரமிக்க வெகு-நேரத்துக்குப் பிறகே உறங்கிப்போவான். ஸ்திரமற்ற வருமானம். அதை நம்பி அய்ந்து ஜீவன்கள். பெண்ணும், பிள்ளையும் ஆத்தாளின் பொறுப்பில் ஊரிலிருக்க, ஊர், ஊராகச் சென்று கிடைபோடும் மாரிமுத்துவுக்குத் துணையாக செண்பகம். வரவேண்டாமென்றாலும் அவள் கேட்பதில்லை. “என் வயித்துப்பாட்ட நான் பாத்துக்கறேன். நீ புள்ளைங்களுக்கு தொணையா இரு” என்று அவனும் பலமுறை சொல்லி அலுத்து விட்டான். செண்பகம் கேட்டாளில்லை. “நீ இல்லாம, உன்னைய பாக்காம ஒரு பருக்கைகூட தொண்டையில எறங்காதுய்யா. காலம் முச்சூடும் நீ ஊரூரா போய்கிட்டிருப்ப. நான் இங்க கெடந்து வெந்து தணியவா? அதான் புள்ளைங்களுக்கு ஒங்காத்தா தொணையிருக்கே. பொறவென்ன’’  என்று அடித்து சொல்லிவிட்டாள்.

வயலுக்குச் சொந்தக்காரர்கள் அவனை கிடைபோட அழைப்பு விடுப்பார்கள். முதல் ஆளாக செண்பகம் கிளம்பி நிற்பாள். ஒரு பையில் இரண்டு புடவை, இரண்டு வேட்டி, நாலு அலுமினியப் பாத்திரம். அதுபோதும் குடும்பம் நடத்த. வயலும் அதைச் சார்ந்த புல்வெளிகளிலும் மாரிமுத்துவின் பொழுதுகள் கழியும். பகலில் பட்டியைத் திறந்து ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுபவன் ஒருநொடி விட்டு விலகமாட்டான். செண்பகம் வயலுக்குச் சொந்தக்காரரின் அனுமதியோடு அவருடைய கொல்லையிலோ அல்லது அருகிலேயோ சிறுகுடிசை போட்டு தங்கிக்கொள்வாள். இப்போதுகூட தங்கராசு அய்யாவின் வீட்டுக் கொல்லையில்தான் குடிசை போட்டிருக்கிறாள். தூங்கவும், சோறாக்கவும் மட்டுமே அந்தக் குடிசை. மற்ற நேரங்களில் மாரிமுத்துவைவிட்டு பிரியமாட்டாள். சரியாக ஏழுமணிக்கெல்லாம் மாரிமுத்து ஆடுகளைப் பட்டியில் அடைத்து விடுவான். பட்டியில் இரவு தங்கவைக்கப்படும் ஆடுகளின் சிறுநீரும், புழுக்கையும் வயலுக்கு மிகச் சிறந்த உரம். பத்திலிருந்து இருபது நாட்கள்வரை கிடைப்பட்டியில் ஆடுகளை அடைக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு இருநூறிலிருந்து முன்னூறுவரை வருமானம் வரும். அதை வைத்துதான் காலம் ஓடுகிறது. அதைத் தவிர ஆடுகள் போடும் குட்டிகளை விற்று வரும் தொகை தீபாவளி, பொங்கல் செலவுக்கு கைகொடுக்கிறது. மாரிமுத்து நிலவை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான்.

மாரிமுத்துவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது. காலை ஆத்தா அலைபேசியில் அழைத்துப் பேசியதை எண்ணியவனுக்கு பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை எழும்பிற்று. “பொட்டச்சி(பேத்தி) கால சுத்துற நாய்க்குட்டி கணக்கா என்னைய வுட்டு வெலகறதில்ல. ஆனா இந்தப்பய சொன்ன பேச்ச கேக்க மாட்டேங்கிறான். வயசுக் கோளாறுங்கறாங்க. லேசா மீசை மொளைக்குது குரலும் நெல்லால கீறிவுட்டாப்ல கரகரங்குது. அதுக்கெல்லாம் ஏதோ காருமென்னு (ஹார்மோன்) தான் காரணம்னு டீச்சரம்மா சொல்லுறாங்க. எனக்கென்னா தெரியிது. ஆட்டப்பத்தி கேட்டா சொல்லுவேன். சோறாக்கி வெப்பேன். அம்புட்டுதான் என் சாமர்த்தியம்” என்று புலம்பிய ஆத்தா இறுதியாக, “நீயும், செம்பாவும் வூட்ட வுட்டு போயி நாலு மாசமாவுது. ஒரு எட்டு வந்துட்டுப் போனாத் தேவலாம்” என்று கூற, “செம்பாவ அனுப்பி வெக்கிறேன். அம்மாக்காரி கூட இருந்தா புள்ளைங்களுக்கு ஆறுதலா இருக்கும்” என்றான் சமாதானமாக. ஆனா செண்பகம் ஒத்துக் கொள்ளவில்லை. “போயி ஒருவாரம் தங்கிட்டு வா. அதுங்களுக்கும் ஒன்னைய பாக்கணும் போலிருக்குமில்ல” என்றபோது மறுத்துவிட்டாள். “ஏன் செம்பா புடிவாதம் புடிக்கிற…?” “நான் போயிட்டா நீ சோத்துக்கு என்னா பண்ணுவ…?”

“கடையில வாங்கி தின்னுக்கறேன்.” என்று மாரிமுத்து பட்டென்று சொன்னான். அவன் அப்படி செய்கிறவனில்லை. ஒருவேளை சாப்பிட்டு இருவேளை பட்டினி கிடப்பான். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் மூன்று-வேளை கடையில் சாப்பிட முடியுமா. அதனா-லேயே செண்பகம் அவனை ஒட்டிக்-கொண்டே திரிந்தாள். “நான் போயி பாத்தா பய சரியாயிடுவானா…. இது வெடல வயசு. கோளாறான பருவம். அப்புடி, இப்புடி போக்கு காட்டத்தான் செய்யும். கொஞ்ச நாள்ல தன்னால அடங்கிரும்.” “இருந்தாலும் நீ பக்கத்துல இருந்தா….”

மாரிமுத்து முடிக்கவில்லை. “நீயும் ஒங்கப்-பத்தாகிட்ட வளந்த ஆளுதான. கெட்டாப்-போயிட்ட. வுடுய்யா என அவன் வாயை அடைத்துவிட்டாள்.

காலை எழுந்ததிலிருந்தே செண்பகத்துக்கு தலையை வலித்தது. நல்லெண்ணெய் எடுத்து இரு நெற்றிப்பொட்டிலும் நன்றாகத் தேய்த்து விட்டுக்கொண்டு பால் வாங்க தெருவில் நடந்தவளைப் பார்த்தவர்கள் முகம் சுளித்தனர். ஆட்டுமந்தையை ஓட்டிக்கொண்டு ஊரூராகத் திரிபவர்களை யாருக்கும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. ஆட்டின் வாசம் அவர்கள் மேலும் அடிப்பதும் ஒரு காரணமோ என்னவோ. அவர்களுக்கே வெளிச்சம். செண்பகத்துக்கு மனிதர்களின் எண்ண ஓட்டம் புரியாமலில்லை. அதைக் கடந்து போக அவள் பிரயாசைப்பட்டதுமில்லை. மனதின் ஓரத்தில் உண்டாகும் வலியை ஒதுக்கி இயல்பானதொரு பாவனையை முகத்தில் ஒட்ட வைத்துக்-கொண்டு அவள் சகஜமாக மனிதர்களைக் கடந்து போனாள். மேலத் தெருவின் கடைசிவீட்டு வாசலில் நின்று, “யம்மா, பால் வாங்க வந்திருக்கேன்” என்று செண்பகம் குரல் கொடுக்க, உள்ளிருந்து வந்தவள் பாலை செண்பகத்தின் கையிலிருந்த லோட்டாவில் படாமல் ஊற்றினாள். அவளுக்கும் ஆட்டுக்-காரிக்குப் பால் விற்க விருப்பமில்லை தான். மற்றவர்கள் பாதிக்குப் பாதி தண்ணீர் ஊற்றினால் ஒரு பிடி, பிடித்துவிடுவார்கள். இவள் வாயைத் திறக்காமல் வாங்கிக்கொள்வது அவளுக்கு வசதியாகப் போய்விட்டது. செண்பகம் பத்து ரூபாயை நீட்ட, பார்த்தவளுக்கு முகம் கடுகடுத்தது.

“இந்தா… குடுக்கறத சில்லறையா குடு. இப்புடி நோட்டா குடுத்தா நான் என்னா செய்யிறது.”

“ஏ….ஏம்மா….?”

“காசுன்னா கழுவி எடுத்துக்கலாம். பணத்த கழுவ முடியுமா…?” செண்பகம் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள். கண்களின் விளிம்பில் நீர் எட்டிப் பார்க்க, சடுதியில் துடைத்துக் கொண்டவள் முந்தானையில் முடிந்து வைத்திருந்த சில்லறைகளை எண்ணி திண்ணை-யில் வைத்தாள். திரும்ப நடக்க முடியாமல் கால்கள் பின்னின. ஒவ்வொரு முறையும் அவமானத்திற்குள்ளாகி நிற்கும்போது துவண்டுபோகும் மனசு சமாதானமாக ஓரிரு நாள்கள் பிடிக்கும். “வுடு செம்பா… இதுக்-கெல்லாம் யாராச்சும் கண்ணு தண்ணி வுடுவாங்களா. நாம என்னா கெட்ட தொழிலா பண்ணுறோம். அவுங்கவுங்களுக்கு செய்யிற தொழிலுதான் குலதெய்வம். அதப்பத்தி யாரு என்னா நெனச்சாலும் நெனச்சிட்டு போவட்டும். நீ இனிமே அந்த வூட்டுக்குப்போயி பால் வாங்க வேணாம். பால் இல்லாத கடுங்காப்பியும் நல்லாத்தானிருக்கும்” என்ற மாரிமுத்துவை வயலுக்குச் சொந்தக்கார தங்கராசு அய்யா உரக்க கூப்பிட்டார். “எலே மாரி, இங்க வா….”

வரப்பில் நடந்து வந்துகொண்டிருந்தவர் கையசைத்துக் கூப்பிட, “இதோ வந்துட்-டேனுங்க…” என்றவன் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து கையில் வைத்துக்கொண்டு அவர் முன்னே போய் சற்று முதுகை வளைத்து பணிவாக நின்றான். “சொல்லுங்கய்யா…” “கெடை போட்டு ரெண்டு வாரமிருக்குமா…?” “பதினஞ்சு நாளாச்சுங்க. இன்னும் ஒருவாரம் இப்புடியே வுட்டா மண்ணு நல்ல ஒரமாயிரும். அத உழுது கொண்டுபோயி மத்த வயலுங்களுக்கும் ஒரமா பயன்படுத்திக்கலாம்.” “அதெல்லாம் சரி. இன்னும் அஞ்சுநாள் போதும். அதுக்கப்புறம் நீ கெடையை அப்புறப்படுத்திடு” என்றவர், “வெவசாயத்துக்கு அழுவுற காசை பேங்க்குல போட்டா வட்டியாவது வரும்” என்று முணுமுணுத்துவிட்டு, “அஞ்சுநாள் காசை மொத்தமா சேர்த்து வாங்கிக்கலாம், சரியா…?” என்றார் வேகமாக. மாரிமுத்து மையமாக தலையாட்டிவைத்தான். அவர் போனபிறகு அருகில் வந்த செண்பகம், “என்னாய்யா சொன்னாரு…?” என்றாள் ஆவலாக. மாரிமுத்து விவரம் சொல்ல அவள் முகம் விழுந்து போனது.

“ஆரு கேக்கறது. வுடு புள்ள.. நம்ம பொழப்பே கையக்கட்டி நிக்கிற பொழப்புதான். அவுங்க சொன்னா நாம கேட்டுக்கிடணும். இல்லீன்னா வெறும் பயலுக்கு உள்ள வீராப்பப் பாருன்னு பேசுவாங்க… நம்ம புள்ளைங்களாவது நல்லபடியா பொழைக்கணும்.” மாரிமுத்து வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆடு தொண்டை கிழியக் கத்திற்று. “அய்யோ, ஆடு வேலியில மாட்டிக்கிச்சோ, என்னாவோ. இரு, நான் பாத்துட்டு வாரேன்” என்று பதறி ஓடியவனை செண்பகம் வேதனையோடு பார்த்தபடி நின்றிருந்தாள். ஆடுகள் தன் தொழிலுக்கான மூலதனம் என்பதையும் தாண்டி சக உயிராய் அவைகளின் மேல் அவனுக்கு அளவற்ற பாசம் உண்டு. “எனக்கு எம்புள்ளைங்களும் ஒண்ணுதான், இதுங்களும் ஒண்ணுதான்” என்பான் அடிக்கடி. கை பாசமாக குட்டிகளின் தலை வருடும். அவனுக்கிருக்கும் பரந்த எண்ணம் மற்றவர்-களுக்கு இல்லையே என்று செண்பகத்துக்குத் தோன்றும். பார்க்கும் பார்வையில், ஒரு நொடி முகச்சுணுங்கலில் தங்களை அதல-பாதாளத்துக்குத் தள்ளி விடுபவர்களை அலட்சியப்-படுத்தி விலகிப்போக எண்ணினாலும் பல நேரங்கள் மனசு முரண்டுபிடித்து சோர்வடைந்து போகிறது. “இந்தப் பொழப்பு எங்களோட போவட்டும். நீங்களாவது நல்லாப் படிச்சு சுதாரிச்சிக்குங்க. இல்லீன்னா காலத்துக்கும் அவமானப்பட்டு சோறு திங்கவேண்டியதுதான்” என்று செண்பகம் பிள்ளைகளைப் பார்த்து அடிக்கடி சொல்லுவாள்.

திடீரென இடி, இடித்து பேய் மழை கொட்டிற்று. மாரிமுத்து மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அந்த அடர்ந்த மரத்தினடியில் கொண்டுபோய் சேர்ப்பதற்குள் முழுக்க நனைந்துவிட்டான். கோடைமழை. முன்னறிவிப்பின்றிதான் வரும். சடசடவென்று கொட்டிவிட்டு வந்த சுவடு தெரியாமல் போகும். அன்றும் அப்படித்தான். ஒருமணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்து விட்டது. செண்பகம் குடிசையிலிருந்து துணிமணி, சாமான்களை பைக்குள் போட்டு கட்டி எடுத்துகொண்டு பக்கவாட்டு சந்து வழியாக தங்கராசு அய்யா வீட்டு திண்ணைக்கு வந்து சேர்வதற்குள் தெப்பலாய் நனைந்துவிட்டாள். மாரிமுத்து எங்கிருக்கிறானோ என்று கவலையாக இருந்தது. யோசனையோடு மழையை வெறித்தவள் கதவு திறக்கப்பட திரும்பிப் பார்த்தாள். “ஏன்டி….மழையில நனைஞ்சிட்டியா….?”

கனகவல்லி தலையை மட்டும் கதவுக்கு வெளியே நீட்டி கேட்டாள். “ஆமாங்கம்மா. கொல்லையிலேருந்து ஓடியாரதுக்குள்ள மொத்தமா நனைஞ்சிட்டேன்” என்றவள் உடம்போடு ஒட்டிக்கொண்ட புடவையை விலக்கி சரிசெய்து கொண்டாள். “சரி, சரி போறப்ப உன் காலுக்கு கீழே தேங்கி கெடக்கற தண்ணிய அந்த வௌக்கமாத்தால கூட்டி-விட்டுட்டு போ.” கனகவல்லி அதிகாரமாக சொல்லிவிட்டு கதவைச் சார்த்திக்கொள்ள, செண்பகத்துக்கு ஆயாசமாக இருந்தது.

உன்னால் இடம் பாழாகிவிட்டது, அதை நீதான் சரிசெய்ய வேண்டும் என்பதை மட்டும் அழுத்திச் சொல்லி கதவடைத்துக் கொண்டாள்.

காலை பத்துமணி சுமாருக்கு கனகவல்லி _ தங்கராசு அய்யாவின் ஒரே மகன் லாரியில் அடிபட்டுவிட்டான் என்னும் செய்தி வர, தெருவே அல்லோலகல்லோலப்பட்டது. சென்னையில் தங்கி படித்துக் கொண்டிருந்தவன் விடுமுறைக்காக ஊருக்கு வர, வந்த இடத்தில் இப்படியொரு அசம்பாவிதம். “பக்கத்து டவுன்ல இருக்க ப்ரெண்டப் பாக்க வண்டியில போச்சாம். போன எடத்துல இப்புடி….”

யாரோ, யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்க, கனகவல்லி நெஞ்சிலடித்துக் கொண்டு கதறினாள். “எம்புள்ள…. எம்புள்ளைக்கு என்னாச்சு… கடவுளே…. நான் என்னா பண்ணுவேன்…”

அவளின் அழுகை செண்பகத்தை உலுக்கிற்று. “யாராச்சும் வயலுக்குப் போயிருக்க எம்புருசனைக் கூட்டியாங்க. அவரு கையில செல்போனு இல்ல. சீக்கிரம் போய் கூட்டியாங்க…….”

கனகவல்லி அலற, செண்பகம் தலைதெறிக்க வயலை நோக்கி ஓடினாள். ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அருகிலிருந்த மரத்தினடியில் துண்டை விரித்துப் படுத்திருந்த மாரிமுத்து ஓடிவந்த செண்பகத்தைப் பார்த்து அதிர்ந்து எழுந்தான். “என்னாச்சு செம்பா, ஏன் ஓடியாற….?”

அவனுடைய கேள்விக்குப் பதிலளிக்காமல் போர்செட்டில் நின்றிருந்த தங்கராசு அய்யாவை நோக்கி ஓடியவள் மூச்சிறைக்க விஷயத்தைச் சொல்லி முடித்தாள். அதற்குள் அங்கு வந்த மாரிமுத்து விஷயமறிந்து பதறிப்போனான். “புள்ளைய டவுனாஸ்பத்திரியில அவுங்க பிரெண்டு சேத்துருக்காங்களாம். நீங்க சீக்கிரம் போங்கய்யா….” என்று தங்கராசுவை துரிதப்படுத்திய செண்பகம், “கூட நீயும் போய்யா. இந்த நெலமையில அய்யாவ தனியா வுடக் கூடாது என்று கிசுகிசுக்க, மாரிமுத்து ஓட்டமாய் ஓடிய அய்யாவின் பின்னால் இரண்டடி விட்டு ஓடினான். கனகவல்லி கணவனைப் பார்த்ததும் எழுந்தோடி வந்தாள்.

“என்னாங்க, நம்ம புள்ளைக்கு அடி-பட்டுடுச்சாம். எனக்கு ஒண்ணும் புரியல. நான் என்னாங்க பண்ணுவேன்.”

ஓங்கி அழத் துவங்கினாள். “உசிருக்கு ஒரு ஆபத்துமில்லியாம். இப்பதான் நம்ம புள்ளையோட பிரெண்டு போன்ல தகவல் சொல்லிச்சு. அடிபட்டதுல கொஞ்சம் ரத்தம் போயிடுச்சாம். ரத்தம் ஏத்தணுமாம். நம்மாளுக அத்தினி பேரும் போவோம். யாரோட ரத்தம் பொருந்துதோ எடுத்துக்கட்டும்” என்று ஒரு பெரிசு சொல்ல, அடுத்த நிமிடமே ஒரு வேன் வந்து நின்றது. கனகவல்லி, தங்கராசு அய்யாவோடு பத்து பேர் ஏறிக்கொள்ள, முதல் ஆளாய் மாரிமுத்து ஏறி அமர்ந்தான். ஒருவரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் செண்பகம் மாரிமுத்துவுக்காக வயல்வெளியில் காத்துக் கிடந்தாள். அய்யாவின் மகனுக்கு என்னவாயிற்றோ என்ற கவலை மனதை அரிக்க,  மாரிமுத்து சோர்வாய் வருவது கண்டு திகைத்துப் போனாள். சொல்லக் கூடாததைச் சொல்லி விடுவானோ என்ற பயத்தில் குரல் மேலெழும்ப மறுக்க, தொண்டையைக் கனைத்துக் கொண்டவள் அருகில் வந்தவனிடம், “எ…… என்னாச்சுய்யா…. புள்ள…. உசிருக்கு ஆபத்தில்லையே…?” என்றாள் தனக்கே கேட்காத குரலில். “அதெல்லாம் ஒண்ணுமில்ல செம்பா… புள்ள பொழைச்சிக்கிடுச்சு.” செம்பா முகத்தில் சட்டென ஒரு பிரகாசம். யார் பிள்ளையாக இருந்தாலென்ன. தாய்க்கு ஒரே மனசுதான். மாரிமுத்து அயர்வாய் அமர்ந்தான்.

“ஒனக்கு என்னாச்சுய்யா…. ஏன் என்னவோ போலிருக்க….?”

“அடிபட்டதுல ரத்தம் போயிடுச்சு, ரத்தம் செலுத்தணும்னு சொன்னாங்க. மனசு கேக்காம நானும் ஓடிட்டேன். ஒரு உசிருக்கு ஆபத்துன்னா மனசு பதை, பதைச்சு போயிடுதில்ல” என்றவன், “பத்துபேர் போனதுல நாலு பேரோட ரத்தம்தான் அந்தப் புள்ளைக்குப் பொருந்துச்சு. அதுல நானும் ஒருத்தன்.” “என்னாய்யா சொல்ற?” “ஆமா புள்ள. பரிசோதனை பண்ணி பாத்ததுல என்னோட ரத்தம் எல்லாருக்கும் பொருந்தற வகைன்னு தெரிஞ்சிது. எம்புட்டு வேணுமோ எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டேன்.” “அ…. அப்புறம்….?” “என்கிட்டேயிருந்து ரத்தம் எடுத்து அந்தப் புள்ளைக்கு செலுத்துனாங்க. அந்தம்மா என்னையப் பாத்து கையெடுத்து கும்புட்டாங்க. அய்யா ஒருபடி மேலபோயி கையப்புடிச்சிகிட்டு அழுதாரு.”

மாரிமுத்து கண்ணீரோடு கைகளைக் காட்ட, செண்பகம் நடுக்கத்தோடு அவன் விரல்களைப் பற்றிக் கொண்டாள். “இப்ப மூணுபேரோட நாலாவதா என் ரத்தமும் அந்தப் புள்ள ஒடம்புல ஓடுது. அதுல என் ரத்தத்த தனியா இனம் கண்டிகிட முடியுமா செம்பா…?”

செண்பகம் அழுகையோடு தலையை ஆட்டினாள். “மேலுக்கு வீச்சமடிச்சாலும் உள்ளுக்குள்ள ஓடுற ரத்தத்தோட வாடை ஒண்ணுதான். இது புரியாமதான இம்புட்டு நாளும் எல்லா சனமும் நம்மளை ஒதுக்கி வச்சுது.” மாரிமுத்து கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தான். பின்,

“அந்தப்புள்ள பொழைச்சது சந்தோசம்னா அதுக்கு நானும் ஒரு காரணங்கறது ரொம்ப பெரிய சந்தோசம். இந்த சந்தோசத்தோட இங்கேயிருந்து கௌம்பிடலாம் வா” என்றபடி வேகமாக எழுந்தான். “இன்னியோட அஞ்சுநாள் முடியுது. அதுக்கு கூலி….”

செண்பகம் இழுக்க, “அவுங்கெல்லாம் ஆஸ்பத்திரியில இருக்காங்க. புள்ளைய தேத்தி என்னிக்கு வூட்டுக்கு அழைச்சிக்கிட்டு வருவாங்களோ தெரியாது. அதுவுமில்லாம அந்தக் காச வாங்கிக்க எனக்கு விருப்பமேயில்ல.” “ஏன்யா…. சொளையா ஆயிரம் ரூவாயாச்சே…” “அடக் கழுத…. கணக்கெல்லாம் நல்லா வேகமாத்தான் போடுற. அதே வேகத்தோட ஓடிப் போயி சாமானை மூட்டை கட்டு. அதுக்குள்ள நான் இதுங்கள ஒழுங்கு பண்ணி ரோட்டுக்கு கூட்டியாந்துடறேன்.”

செண்பகம் பேசாமல் நிற்க, மாரிமுத்து செல்லமாய் அவள் கன்னம் திருகினான். “இத்தினி நாளும் கூலி வாங்கித்தான் பழக்கம். இன்னிக்குதான் மொத, மொதலா குடுத்திருக்கேன். அதுவும் நம்மளை கொறைவா பாக்குறவங்களுக்கு. ரொம்ப சந்தோசமா இருக்கு. இந்த சந்தோசத்துக்கு அஞ்சுநாள் காசு தூசு செம்பா…….. பக்கத்தூர்ல கெடைபோட சொல்லி ஆள் வந்துச்சு. வா, போவோம்” என்றவன் “தே…தே…போ, போ….” என்று ஆடுகளைச் சேர்க்கத் தொடங்கினான்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *