Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : நற்றமிழாய் வாழ்க நம் முதல்வர்!

முனைவர் கடவூர் மணிமாறன்

உழைப்பேநம் மூலதனம் என்பர் ஆன்றோர்!

               உண்மையினை நேர்மையினைத் தெருவில் வீசிப்

பிழைத்தோரோ பத்தாண்டாய்த் தமிழர் நாட்டைப்

               பெருங்குழியில் பள்ளத்தில் அமிழ்த்து விட்டார்!

தழைக்கின்ற செடிமலர்ந்த மலரைப் போலத்

               தளபதியார் தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார்!

இழைத்திட்ட கேடுகளை நீக்கு தற்கே

               இரவுபகல் பாராமல் இயங்கு கின்றார்!

 

அய்யாவின் அண்ணாவின் கலைஞர் தம்மின்

               அடிச்சுவட்டில் அரசியலைத் தொடரு கின்ற

மெய்யான தன்மதிப்பாம் இயக்க வீரர்;

               மேலான பகுத்தறிவை உயிர்மூச் சாக

அய்யத்திற் கிடமின்றி நெஞ்சில் போற்றி

               அருந்தமிழை முன்னெடுத்துத் தமிழர் வாழ்வில்

உய்ந்திடவே பலநூறு நலத்திட் டங்கள்

               ஒவ்வொன்றாய் நடைமுறையில் கொணரு கின்றார்!

 

நெருக்கடியில் மிசாவினிலே விழுப்புண் ஏற்று

               நெருப்பாற்றில் நீந்தியவர் எழுபத் தாறில்!

திராவிடத்தின் அடையாள ஆட்சி நல்கித்

               தியாகத்தின் முகவரியாய்த் திகழு கின்றார்!

கரவுடையார் வஞ்சகத்தை வீழ்த்தி நாட்டைக்

               காப்பாற்றி வருகின்றார்; நாளும் பொய்யில்

புரட்டினிலே புரள்கின்ற புல்லர் கூட்டம்

               புலம்புவதை, கலங்குவதை அறியார் உண்டோ?

 

ஒன்றியத்தார் ஆட்டத்தை அடக்கு தற்கே

               உரிமையினை நிலைநாட்டும் உணர்வைக் கொண்டார்!

அன்றாடம் மக்களையே ஏய்ப்போர் நாளும்

               அல்லவற்றை அரங்கேற்றிக் களிக்கும் போதும்

பண்பட்ட ஆளுமையால் அய்ம்ப தாண்டின்

               பட்டறிவால் அவற்றையெலாம் தகர்த்து வெல்லும்

நன்னெஞ்சர் தளபதியார் பிறந்த நாளில்

               நற்றமிழாய் வாழ்கவென வாழ்த்து வோமே!ஸீ