சமூகநீதி என்பது சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளை வழங்கி, அவன் மாண்புடன் வாழ வழி அமைத்தல் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூகநீதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு முதன்மையான கடமைகளில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக நமது மக்களில் பெரும்பான்மையினருக்கு வாய்ப்புகளும், பயன்களும் மறுக்கப்பட்டுள்ளன.
அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள இடஒதுக்கீடு நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப் பட்டிருக்கும் சலுகை அல்ல. அவை அரசமைப்பு சட்டப்படி அளிக்கப்பட்டுள்ள அவர்களது உரிமையாகும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தின் தனித்த அடையாளமாக 2021ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17அய் ‘சமூகநீதி நாள்’ என அறிவித்து, இந்தியாவுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதையும் கடந்து உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 20ஆம் தேதி ‘உலக சமூகநீதி தினமாக’ அய்க்கிய நாடுகளின் அமைப்பால் 2009ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் வாழும் மக்கள் அனைவரும் பொருளாதாரம், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு, பாலியல், ஜாதி, இனம், மதம், மொழி, கலாச்சாரம், என எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் ஒரே சமூகமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற பரந்த நோக்கில் இந்த நாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
உலக அமைப்பு இத்தகைய சிந்தனைகளை தற்போதுதான் உணர்ந்துள்ளது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே இத்தகைய சிந்தனைகளை, சமூகநீதியை மக்களிடம் பிரச்சாரம் மற்றும் போராட்டங்கள் வழியே கொண்டு சேர்த்தவர் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஆவார். ‘பேதமில்லா வாழ்வே, பெருவாழ்வு’ என்றார் தந்தை பெரியார். இதில் உலக அமைப்பு இன்று கூறும் அத்தனை பாகுபாடுகளும் உள்ளடக்கம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, சமூகநீதி என்ற கொள்கைக்காகப் பாடுபட்ட பல தலைவர்கள் உள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தில் பிறந்த ஜோதிராவ் பூலே, அவரது மனைவி சாவித்திரி பூலே, அரசமைப்புச் சட்டம் தந்த பாபாசாகிப் அம்பேத்கர், கோலாப்பூர் மன்னர் சாகு மகராஜ், கேரளத்தில் நாராயணகுரு ஆகியோர் சமூக மாற்றத்திற்குப் போராடியுள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தந்தை பெரியாரே சமூகநீதியின் வேராகவும், அவர் கண்ட இயக்கமே அதன் விழுதாகவும் விளங்குகிறது. சமூகநீதிக்காகவே தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்தார். அது நிறைவேறாது என்று தெரிந்தவுடன், அதற்காகவே அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார் என்பது வரலாறு.
தந்தை பெரியார் 1925லேயே, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நாட்டு மக்களிடையே, ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், பெரும்பான்மை மக்கள் படும் அவலத்தையும், இழிவையும் தோலுரித்துக் காட்டினார். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கோட்பாட்டில் தொடங்கப் பட்டதுதான், ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ எனும் நீதிக்கட்சி.
இதன் விளைவாகத்தான், அனைத்து வகுப்பு மக்களுக்கும் வகுப்புரிமை எனும் இடஒதுக்கீடு முறை தமிழ்நாட்டில் 1928ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. பெண்களுக்கு வாக்குரிமை, கல்வியுரிமை, சொத்துரிமை போன்ற உரிமைகளை வழங்கி, தமிழ்நாடு ஏனைய மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது.
1947இல் சுதந்திரம் அடைந்த இந்தியாவிலும், வகுப்புரிமைப் போராட்டம், சமூகநீதிப் போராட்டமாக தந்தை பெரியாரால் நடத்தப்பட்டது. அரசியல் களத்தில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் என தொடர்ச்சியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும், உயர்வுக்கும், வளர்ச்சிக்குமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2021 ஜூன் மாதம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றது முதல் சமூகநீதியில் அளப்பரிய பல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவை இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
– மகிழ்