பெரியார் தந்த ‘சிவாஜி’தான் பெரிய விருது!
கி.வீரமணி
திராவிடர் கழகச் சொற்-பொழிவாளரும், பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் இனமானக் கவிஞர் செ.வை.ர.சிகாமணி _ பவளக் கண்மணி ஆகியோரின் மகள் இர.கவிதா _ சு.அன்பழகன் ஆகியோருக்கு திருமண வரவேற்பு சென்னை சிறீலேகா ஓட்டலில் 9.6.1997 அன்று நடைபெற்றது. இதில் எனது இணையர் மோகனா அவர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். கழகத்தின் முன்னணித் தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் பொத்தனூர் ஆர்.கே.திருமண மண்டபத்தில் நெய்வேலி நா.கு.இராசாராமன் _இரா.சீனியம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.அண்ணா துரைக்கும், திருச்சி மாவட்டம் தொட்டியம் து.பழனிவேலு _ பூங்கோதை ஆகியோரின் செல்வி ப.சாந்திக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 11.6.1997 அன்று மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தேன். மணவிழாவிற்கு பல்வேறு பகுதியிலிருந்து கழகப் பொறுப்பாளர்களும், உறவினர்-களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்புரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணத்தின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினேன்.
இந்திய அளவில் புதிய மாற்றமாக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக 12.6.1997 அன்று நண்பர் சீதாராம் கேசரி அவர்கள் தலைவராக வெற்றி பெற்றதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் கழகத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினோம். அதன் தமிழாக்கம்:
“அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தாங்கள் பெற்றுள்ள வெற்றியானது _ காங்கிரஸ் வரலாற்றில் மட்டுமல்ல; சமூகநீதி இயக்கத்திற்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க _ புதிய திருப்பத்தைத் தரும் வெற்றியாகும்’’ என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
கள்ளக்குறிச்சியில் உலகங்காத்தான் இரா.சீராளன் _ தங்கம்மாள் ஆகியோரின் செல்வன் சீ.துரைராஜு, சேலம் மாவட்டம் குள்ளம்பட்டி ச.பழனிமுத்து _ திலகம் ஆகியோரின் செல்வி ப.அருண்மொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை 15.6.1997 அன்று தலைமை«ய்று மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து நடத்திவைத்தேன். கிராமப் பிரச்சார நிதிக்கு கழகத் தோழர்கள் மணமக்களிடம் கேட்க அவர்கள் ரூபாய் நோட்டுகளைப் போட்டனர். மணவிழாவில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன்.
தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எஸ்.கே.சின்னப்பன் _ லெட்சுமி ஆகியோரின் செல்வன் சி.தென்னரசுக்கும், அன்னாலம்-பட்டி சம்பத் _ இராணி ஆகியோரின் செல்வி மைதிலிக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா 16.6.1997 அன்று காலை மொரப்பூர் சிறீராமக் கவுண்டர் திருமண மண்டபத்தில் தலைமையேற்று மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து நடத்தி வைத்தேன். சிறப்புரையும் ஆற்றினேன். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கழகப் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், பொது-மக்களும் வந்திருந்தனர்.
பிற்பகல், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் _ திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த வேப்பிலைப்பட்டி கே.செழியன் _ அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வேப்பிலைப்பட்டி கிராமத்திற்குச் சென்றேன்.
என்னைக் கண்டவுடன் அக்கிராமத்தில் பெருங்கூட்டம் கூடியது. மறைந்த வேப்பிலைச் செழியன் இல்லத்திற்குச் சென்றேன். செழியன் அவர்களின் துணைவியார் ஜீவா அவர்களுக்கும், அவரது பிள்ளைகள் வெற்றிவேந்தன், தமிழ்ப் பாவை, பெரியார்தாசன், நாத்திகமணி ஆகியோருக்கு மிகுந்த ஆறுதலையும், தேறுதலையும் கூறினேன்.
செழியன் அவர்களது பெயரால் நிறுவப்-பட்டுள்ள கல்வெட்டைத் திறந்து வைத்து உரையாற்றுகையில்,
“நண்பர் வேப்பிலைப்பட்டி செழியன் அவர்கள் ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி-யாக இந்த வட்டாரத்திலே திகழ்ந்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லாக் கட்சிக்காரர்களாலும் மதிக்கப்பட்டவர். அவருடைய அகால மரணம் நம்மை எல்லாம் மிகுந்த வேதனையடையச் செய்திருக்கின்றது.
அவர் தலைசிறந்த பகுத்தறிவாளராக இந்தப் பகுதியிலே இருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சீரிய செயல்வீரராக இருந்தாலும், திராவிடர் கழகப் பணி என்பது தாய்க் கழகத்தினுடைய பணி _ அடித்தளமான பணி என்பதை உணர்ந்து _ எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் உற்சாகத்தோடு பணியாற்றினார்.
பொதுத் தொண்டு செய்யக் கூடியவர்கள் எப்பொழுதும் உடலால் மறைந்தாலும், உள்ளத்தால் நம் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்திருக்கக் கூடியவர்கள். எனவே, இந்த வட்டாரத்தில் உள்ள எல்லா மக்களும் கதறு-கிறார்கள்; பதறுகிறார்கள். தங்களுடைய சொந்தப் பிள்ளையை _ சகோதரனை இழந்த உணர்வைப் பெற்றிருக்கிறார்கள்.
கட்சிக்கு அப்பாற்பட்டு, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு, அவருடைய தொண்டு எப்படிப்பட்ட தன்னல மறுப்புத் தொண்டு என்பதற்கு இதுதான் ஆதாரம்.
நான் இங்கு வந்தது பேசுவதற்காக அல்ல; இந்தக் குடும்பத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன். நான் பேசக் கூடிய மனநிலையிலும் இல்லை.
அவர் படத்தைத் திறக்கும்பொழுதுகூட நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள். இத்தனை மாதங்கள் ஆகியும் அந்தத் துன்பம் ஆறாமல் இருக்கின்றதே என்பதைப் பார்க்கிறேன். அது அவர்களுடைய தொண்டினுடைய சிறப்பு. ஒரு நல்ல மாவீரன் இன்றைக்குப் படமாகவும் ஆகிவிட்டார்; பாடமாகவும் ஆகிவிட்டார்.
செழியன் அவர்களை இழந்து வாடிக் கொண்டிருக்கிற அவரது குடும்பத்தாருக்கும், பிள்ளைகளுக்கெல்லாம் உறுதுணையாக இருப்போம். திராவிடர் கழகம் மட்டுமல்ல; தமிழின மக்கள் எல்லோருமே உறுதுணையாக இருப்பார்கள்’’ என உரையாற்றி மக்களை ஆறுதல்படுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து, அரூரில், கழகத்தின் முக்கியப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின்னாலே அரூரிலே பேச வாய்ப்பு அமைந்திருந்தது. கழகப் பொறுப்பாளர்கள் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அனைத்துக் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்கள். கூட்டத்தில் நிறைவுரை யாற்றுகையில், ஜாதி ஒழிப்பு என்பது திராவிடர் கழகத்தினுடைய மூச்சு, ஜாதி ஒழிப்பு என்பது “சீசன் சரக்கு’’ அல்ல. இப்பொழுது அரசியல்வாதிகளுக்கு ஏதாவது சிக்கல் வந்தால், “அய்யோ! ஜாதியை ஒழிக்க வேண்டும்!’’ என்று சொல்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததே _ பிறவி பேதம் கூடாது என்பதற்காகத்தான். திராவிடர் கழகத்தின் முதல் கொள்கை _ ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்குவதுதான்.
மேலும், இந்த அரூர் பகுதியிலே “பெரியார் பூங்கா’’ என்று ஒரு பகுதிக்குப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அரூரிலே வாழக்கூடிய அத்துணைக் கட்சி நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். இந்த அரூர் பேருந்து நிலையத்திற்காகவாவது “பெரியார் ஈ.வெ.ரா. பேருந்து நிலையம்’’ என்று பெயர் வையுங்கள். அல்லது பெரியார் பூங்கா என்று இருந்த பெயரையாவது மீண்டும் அதே இடத்திற்கு வையுங்கள். ஏனென்றால், பாரம்பரியமாக நீண்டகாலமாக இருந்த ஒன்றை மறைத்து விடக் கூடாது. அனைத்துக் கட்சி நண்பர்களுக்கும் இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்’’ என வரலாற்றை நினைவூட்டி பல தகவலை எடுத்துக் கூறினேன்.
மதுரையில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் தமிழர் கலை பண்பாட்டு விழாவாக 21.6.1997 அன்று சிறப்பான ஏற்பாட்டோடு நடத்தப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டேன். தமிழ்க் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பு செய்த தமிழ்ச் சான்றோர், ஆன்றோர் பெருமக்களுக்கு விருது வழங்கினேன். ‘புரட்சிக்கவிஞர் ஆய்வாளர்’ பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ந.இராமநாதனார், தமிழறிஞர் புலவரேறு இளங்குமரனார், தமிழிசை அறிஞர் வி.ப.கா.சுந்தரம், சிறந்த வெளியீட்டாளர் கவிஞர் மீரா, நாடகக் கலையில் புரவலர் அங்கமுத்து, நடிப்பிசையில் மா.வீ.முத்து, தடகள வீராங்கனை வளரும் வீரர் பாண்டீசுவரி, சிறந்த சதுரங்க வீராங்கனை ம.பிரியதரிசினி, குருதிக் கொடையாளர் ம.சோசுமா, மதுரை கல்வி வள்ளல் பே.தேவசகாயம் ஆகியோருக்கு பெரியார் விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி கவுரவித்தேன்.
அங்கு உரையாற்றுகையில், “கானாடு காத்தானில் நாதசுர மேதை சிவக்கொழுந்து நாதஸ்வரம் வாசிக்கும்பொழுது தோளில் துண்டு போட்டு வாசிக்கக் கூடாது என்று அங்குள்ளவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை பட்டுக்கோட்டை அழகிரியும், தந்தை பெரியார் அவர்களும் எப்படி முறியடித்தார்கள் என்பதையும், பிறிதொரு முறை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களையும், ராஜா சர்.ஏ.முத்தையா செட்டியார் அவர்களையும் இருவரையும் தனக்கு இரு பக்கத்தில் அமர்த்தி சமத்துவத்தை ஓர் அமைதிப் புரட்சியை தந்தை பெரியார் அவர்கள் எப்படி உருவாக்கினார் என்பதையும், தமிழர் கலை பண்பாட்டுத் துறையில் சிறந்து பங்காற்றும் தமிழர்களை இனம் கண்டு திராவிடர் கழகம் தொடர்ந்து அவர்களை கவுரவிப்பதையும் விளக்கிக் கூறினேன். விழாவில் மாணவர்களுக்காக “பெரியார் வாழ்க்கை வரலாறு’’ நூலினை எழுதிய கவிஞர் நாரா.நாச்சியப்பனுக்கு கழகத்தின் சார்பில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
சென்னை பெரியார் திடலுக்கு 27.6.1997 அன்று அமெரிக்கத் துணை கான்சல் ராபர்ட் சில்வர் ஸ்டெயின் வந்திருந்தார். அவரை அன்புடன் வரவேற்றோம். திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம், பெரியார் கணினிக் கல்வி ஆய்வகம், பெரியார் மருத்துவமனை ஆகியவற்றைச் சுற்றிப் பார்த்து மிகுந்த வியப்பினைத் தெரிவித்தார். அவருக்கு தந்தை பெரியார் அவர்களின் ஆங்கில நூல்களை வழங்கி மகிழ்ந்தேன். அவருடன் அரசியல் அலுவலர் ஃபின்னி ஜாக்கர் வந்திருந்தார். பின்பு, சிறிது நேரம் உரையாடுகையில் பெரியாரின் சமூக நீதிக் கருத்துகளை எடுத்துக் கூறினேன். மகிழ்வோடு விடைபெற்றார்.
பெரியார் திடலில் பணிபுரிந்தவரும், எனது கார் ஓட்டுநராக சிறப்பாகப் பணியாற்றிய சாதிக் அன்வர் அவர்கள் மணமகளுடன் திடலுக்கு வந்து 28.6.1997 அன்று வாழ்த்துப் பெற்றார். மணமக்கள் சாதிக் அன்வர் _ பாத்திமா ஜெஸிலா ஆகியோரை கழகத்தின் சார்பில் வாழ்த்தி அனுப்பினேன்.
தருமபுரி மாவட்டம் ஊற்றங்கரையில் பாலியல் நீதி (பெண்ணுரிமை) மாநாடு திராவிடர் கழக மகளிரணியின் சார்பாக 29.6.1997 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டினை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. மகளிர் அணியினரின் கருத்தரங்கம் பல்வேறு தலைப்புகளில் பெண் விடுதலையை மய்யப்படுத்தி நடத்தப்பட்டது. இரா.மலர்விழி திராவிடர் கழகக் கொடி ஏற்றிய பின், மாநாட்டிற்கு கல்யாணி துக்காராம் முன்னிலை வகித்துப் பேசினார். மாநாட்டில் மகளிரணி சார்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுக, துணைக் குடியரசுத் தலைவராகப் பெண்களைத் தேர்ந்தெடுப்பீர் என்பனவாகும்.
மாநாட்டு மேடையில் சில குழந்தை-களுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில், எம்.நிர்மலா அவர்களின் ஆண் குழந்தைக்கு அறிவுச்-செல்வம், சகுந்தலா_சகாதேவன் ஆகியோரின் பெண் மகவுக்கு மணியம்மை எனவும், கலா _ தமிழரசன் ஆகியோரின் பெண் மகவுக்கு அன்புச்செல்வி எனவும், முல்லை _ குணா ஆகியோரின் பெண் மகவுக்கு முல்லைமணி, சரிதா _ சர்க்கரை ஆகியோரின் ஆண் மகவுக்கு கொள்கைமணி என்றும் பெயர் சூட்டினேன்.
மாநாட்டிற்கு ஒசூர், தருமபுரி, ஊற்றங்கரை என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கழக மகளிர் வந்து கலந்து கொண்டனர். அனைத்திடங்களிலும் கழகக் கொடிகள், தட்டி விளம்பரங்கள் சிறப்பாக அமைக்கப் பட்டிருந்தன. பல்வேறு கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மாநாட்டினை சிறப்பாக வடிவமைத்திருந்த விழாக் குழுவினரை கைத்தறி ஆடைகள் அணிவித்துப் பாராட்டினேன். தருமபுரி மாவட்ட மகளிர் அணியினர் விழா மேடையில் வீரவாள் ஒன்றை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினர். சுயமரியாதைச் சுடரொளிகள் ஊற்றங்கரை பழனியப்பன், கி.சிதம்பரம் ஆகியோரின் எண்ணப்படி கழக மகளிர் சார்பில் அந்த வீரவாள் அளிக்கப்பட்டது.
முன்னதாக, அந்தப் பகுதியில் நீண்ட நாளாக கழகத்திற்காகப் பணியாற்றிவரும் சுயமரியாதைச் சுடர் கி.சிதம்பரம் இல்ல மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தேன். மணமக்கள் சி.அருள் _வெ.பானுமதி ஆகியோரை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து, மாலை மாற்றி மணவிழாவை நடத்தி வைத்து, உரையாற்றினேன். மணவிழாவிற்கு அப்பகுதி கழகப் பொறுப்பாளர்கள் பெரும் அளவுக்குக் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் கெங்கலாபுரத்தில் பெரியார் தொண்டர்களின் பிள்ளைகளும், கழகப் பொறுப்பாளர்களுமான இருவருக்கு வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவை 30.6.1997 அன்று நடத்தி வைத்தேன். மறைந்த முனுசாமி _ சின்னப்பிள்ளை ஆகியோரின் செல்வன் ஒன்றிய தி.க. தலைவர் மு.ராசா, கெங்கலாபுரம் மறைந்த சுந்தர்ராஜ் _ காத்தாயி ஆகியோரின் செல்வி சு.சுமதி மற்றும் மறைந்த பெரியண்ணன் _ கோவிந்தம்மாள் ஆகியோரின் செல்வனும் _ தருமபுரி ஒன்றிய தி.க. தலைவருமான பெ.வடிவேல், அதியமான்கோட்டை புறவடை கிராமத்தைச் சார்ந்த எம்.தனபால் _ தனபாக்கியம் ஆகியோரின் செல்வி மகேசுவரி ஆகிய இரு ஜோடி மணமக்-களையும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மண விழாவினை நடத்தி வைத்து, சிறப்புரையாற்றினேன். முன்னதாக மணமக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வாய் கழகக் கொடியினை, தோழர்-களுடைய வாழ்த்தொலியுடன் ஏற்றி வைத்தேன். தருமபுரி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 1996ஆம் ஆண்டுக்கான, “தாதாசாகேப் பால்கே’’ விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விழுப்புரம் சின்னையா கணேசன் (வி.சி.கணேசன்) என்ற பெயரில் இளம் வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தவர். அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் ‘சிவாஜி’ வேடம் ஏற்று மிகச் சிறப்பாக நடித்தார். அந்த நாடகத்தைப் பார்த்த தந்தை பெரியார் கணேசனைப் பாராட்டி, இனி உங்களை “சிவாஜி கணேசன்’’ என்று அழைக்கலாம் என அறிவித்தார். தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அவர் கண்ட விருதுகள் எண்ணில் அடங்கா. ‘தாதா சாகேப் பால்கே’ விருதைப் பெறும் முதல் தமிழர் ‘சிவாஜி’ என்ற பெருமையும் இப்போது பெற்றுவிட்டார்.
அவரை வாழ்த்த அவரது இல்லத்திற்குக் கழகப் பொறுப்பாளர்களுடன் 7.7.1997 அன்று சென்றோம். அவருக்கு சால்வை போர்த்தி வாழ்த்துகளையும், பாராட்டு-களையும் தெரிவித்தோம்.
“இது தாய் வீட்டுச் சீதனம்’’ என்று கூறி நன்றி தெரிவித்தார் சிவாஜி கணேசன். தந்தை பெரியார் வேடந்தாங்கி நடிப்பதே இனி என் குறிக்கோள்; சதா அதையேதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வாழ்வு, பெருமை எல்லாவற்றிற்கும் அடிப்படை தந்தை பெரியார் எனக்கு அளித்த ‘சிவாஜி’ என்ற பட்டம்தான். மற்ற பட்டங்கள் எல்லாம் இதற்குப் பிறகுதான். நான்தான் பெரியாராக நடிக்க வேண்டும்; நடிப்பேன்; அது எனக்கு மட்டுமே உள்ள தனி உரிமை என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்’’ சிவாஜி. திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் இதனைக் கேட்டு அகம் மகிழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம் எஸ்.ஜி.அரசங்கோவன்_ ஹேமா ஆகியோரின் செல்வன் எஸ்.ஏ.சிங்கர், அசாம் மாநிலம் கவுகாத்தி டாக்டர்கள் சோபன் சந்திர கட்டானியார் _ஹிரண்ய பிரபா ஆகியோரின் செல்வி தேவயானிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 11.7.1997 அன்று கோவை கல்பனா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோவை தமிழ்ப் புலவர் பி.சுந்தரராசனார் தமிழ் முறைப்படி மணவிழாவினை நடத்தி வைத்தார். மணவிழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையில், “அய்யா அரசங்கோவன் ஒரு சீரிய பகுத்தறிவாளர், நீண்ட நெடுங்காலமாக எங்களுக்கெல்லாம் அறிமுகமான குடும்ப நண்பர். அவருடைய செல்வன் சிங்கர் மொழியியல் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குச் சென்று அங்கே மேல் பட்டப் படிப்பை முடித்திருக்கிறார். அங்கே மணமகள் தேவயானியை சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவரும் வாழ்விணையராக இணைவது பாராட்டத்தக்கது. மனிதன் செவ்வாய்க் கிரகத்தில் போய் இறங்க இருக்கிற காலத்திலே நம்முடைய நாட்டிலே செவ்வாய் தோசம் என்று பல பேருக்குத் திருமணம் ஆகாத நிலை இருப்பது என்ன நியாயம்? “யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற பரந்த எண்ணத்தோடு இணைந்திருக்கும் இந்த மணமக்கள் பழமையான முறைகளுக்கு விடை கொடுத்து, புதிய முறைகளை ஏற்றுக் கொள்கிறோம் என இரு வீட்டாரும் இணைந்திருப்பது சிறப்பானதொன்று ஆகும்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினேன். மணவிழாவில் அனைத்து கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும், கழகப் பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(நினைவுகள் நீளும்…)