அவனும் இவனும்
ஆண்டுக்காண்டு அகலமும் விரிந்தார்
அய்யன் அருள் என
அய்யர் வாய்மலர்ந்தார்
மாடிமேல் மாடியாய்
மவுசும் கூடினார்
வெள்ளியும் தங்கமும்
வகையாய் தேடினார்
மாற்றுக் கோவணம்
முருகனுக் கில்லை!
வீற்றிருந்தானே
மலையதன் மேலே!!
– மா.கண்ணன், திருநெல்வேலி
காதல்
அன்பை கீதை, குரான், பைபிள்
என மதம் கு(பி)றித்து
போதிப்பதில்லை
காதல்!
– வளியன், திண்டுக்கல்
அப்பனும் ஆத்தாளும்!
பார்வதியின் உடம்பிலிருந்து திரட்டிய
அழுக்கிலிருந்து பிறந்தவன்தான்
ஆனைமுகக் கடவுளென்றால்
அவனுக்குப்
பரமசிவன் எப்படி
அப்பன் ஆவான்?
பரமசிவனின்
இந்திரியம்
ஆறாய்ப் பெருகிஓடி
ஆறுகிளைகளாய்ப் பிரிந்து
அதிலிருந்து பிறந்தவன்தான்
ஆறுமுகக் கடவுளென்றால்
அவனுக்குப்
பார்வதி எப்படி
ஆத்தாள் ஆவாள்?
*******
வயிற்றில் பசியோடு
கையில் திருவோடு
ஏந்தியபோது…
சில்லரைக் காசுகளே
விழுந்தன!
காவி கட்டி
கமண்டலத்தோடு
ஆசிரமம் அமைத்து
அமர்ந்த பின்பு..
கோடி கோடியாய் காலடியில்!
-காழி கு.நா. இராமண்ணா, சென்னை
இதயத்தில் இன்றும்
சலவைத் தொழிலாளி
வாழ்க்கை மட்டும்
சுருக்கம் நிறைந்த
அழுக்கோடு
*******
மிதக்கும் காகிதக் கப்பல்
மகிழ்ச்சியற்ற சிறுமி
குடிசைக்குள் மழைநீர்
புயல் அறிவிப்பு
பதறும் விவசாயி
விதைத்த மறுநாள்
*******
சாலை விபத்து
வேடிக்கை பார்க்கும் விழிகள்
பார்த்துக் கிடக்கிறது
மனிதம்
*******
ஊரெங்கும்
சிலை திருட்டு
கடத்தல் பயமோ
அரிவாளுடன் அய்யனார்
*******
பசியால்
அழும் குழந்தை
வருத்தமாய் மீனவன்
புயல் எச்சரிக்கை
*******
சரஸ்வதி பூஜை
அறிவியல் புத்தகத்திலும்
குங்குமப் பொட்டு
*******
பற்று மிக்கவர்கள்
தமிழர்கள்
வளர்கிறது தாய்மொழி
தமிழ் பேசும்
ஆங்கிலப் படம்
*******
ஒற்றை நூலில்
வாழ்க்கை தொடங்கும்
சிலந்தி
*******
இறந்த உடல்
அடக்கம் செய்வது யார்?
எரியாத
தெரு விளக்கு
*******
அன்பைப் போதிக்கும்
மதம்
ஆயுத மேந்தி ஆண்டவன்
*******
இதற்கும் ஆஸ்துமாவோ
இப்படி மூச்சு விடுகிறதே
தெருக்குழாய்
*******
ஊமையும்
அழகாய்ப் பேசினாள்
விழிகளால்
*******
கிணற்றுத் தவளைதான்
நம்பிக்கையிருக்கிறது
வாழ்வில் நிமிர்ந்தால் தெரியும் வானம்
– பா. ஸ்டாலின், மேட்டூர்