புரட்ட்சிக் கவிஞர் பாரதிதாசனின் இரணியன் (அல்லது) இணையற்ற வீரன் என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம்)
– எழுதியவர் ; ந.சேதுராமன், திண்டிவனம்
பொன்: அடடே! எப்படி எங்கள் இளவரசர் பேரைத் தெரிஞ்சுக்கிட்டீங்க?
காங்: முக்காலமும் உணர்ந்து சொல்லக்கூடிய ரிஷீஸ்வரர்கள் எங்களிடமுண்டு.
சாத்தப்: முக்காலம்னா?
காங்: கடந்த காலம்! இப்போது நடைபெறுகின்ற காலம். இனி நடக்கப்போற எதிர்காலம். இதை எல்லாம் கணித்துச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவங்க எங்களிடம் உண்டு. இளவரசர் எங்கே வந்திருக்கிறார்? ஏன் வந்திருக்கிறார்? சொல்லட்டுமா?
பொன்: சொல்லுங்க சாமி-
காங்: தேச சஞ்சாரம் செய்ய இரண்ய மகாராஜாவால் அனுப்பப்பட்டு வந்து இருக்கிறார். ஓய்வு பெற்று பயணத்தைத் தொடர இருக்கிறார். பயணம் முடிந்ததும் பட்டாபிஷேகம்.
சாத்தப்: அடடே! அப்படியே சொல்லிட்டீங்களே! உங்க பெயரைத் தெரிஞ்சிக்கலாமா?
காங்: என் நாமம் காங்கேயன். இமயமலைச் சாரலிலிருந்து தென்னாடு நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
பிரக: பயணத்தின் நோக்கம்?
காங்: ஆண்டவன் இட்ட கட்டளை அதை நிறைவேற்ற.
பிரக: ஆண்டவனா? யார் அவன்?
காங்: உன்னையும் என்னையும் _ ஏன் இந்த உலகையே படைத்தவன். கடவுள் என்றும் தெய்வம் என்றும் நாங்கள் வணங்கும் தேவர்கள்.
பிரக: ஆண்டவன் இமய மலையில் இருக்கிறாரா?
காங்: அவர் வானுலகில் இருக்கிறார். அவர் ஆணையில்லாமல் உலகில் எதுவும் நடவாது. சர்வசக்தி படைத்தவர்.
பிரக: எல்லாமும் புதுமை. என் தந்தையும் தாயும் ஏன் என் ஆசிரியர்கூட இதைப்பற்றிச் சொன்னதில்லை. இப்போது தெற்கு நோக்கித்தான் போகின்றீரோ?
காங்: தெய்வ சங்கல்பத்தைக் கேட்டுண்டு சொல்றேன். (கண்மூடி ஏதோ முணுமுணுக் கிறான் பின்) இளவரசே! சந்தோஷ சமாச்சாரம்.
பிரக: என்ன அது!
காங்: எங்கள் தெய்வம் என்னை உங்களுக்குத் துணையாக இருக்கும்படிக் கட்டளை இட்டிருக்கிறது. தங்கள் சித்தம் எப்படியோ? பிரக: தாங்கள் எனக்குத் துணையாக வருவீர்களோ மாட்டீர்களோ என்று இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் தெய்வமும் அப்படியே.
காங்: ஏன் உங்க தெய்வம்னு பிரிச்சுப் பேசுறீர். நம்ம தெய்வம்.
பிரக: ஆரியப் பழக்கவழக்கங்கள் தமிழர்களின் பழக்கவழக்கங்களுக்கு முரணாக உள்ளதே!
காங்: கவலைப்படாதீர்கள். இன்று முதல் நாம் நண்பர்கள்.
பிரக: நண்பா…
காங்: தயக்கம் ஏன்? காங்கேயா என்றே கூப்பிடலாம். நான் உம்மைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?
பிரக: காங்கேயா! நமக்குள் ஏன் வேறுபாடு, பிரகலாதா என்றே கூப்பிடலாம்.
காங்: சரி! பிரகலாதா! நாம் இன்றைக்குப் பிரயாணத்தை மேற்கொள்வது நல்லதல்ல. கிரக பலன் சரியில்லை.
பிரக: கிரக பலனா? அது என்ன?
காங்: உனக்கு ஒன்றும் புரியாது பிரகலாதா. இன்னும் இரண்டு நாள் தங்கிச் செல்வதுதான் நலம்.
பிரக: அப்படியே செய்வோம் காங்கேயா! வீரர்களே! இன்னும் இரண்டு நாள் நாம் இங்கேயே தங்க வேண்டியிருக்கிறது. கூடாரத்தை மீண்டும் அமையுங்கள்.
பொன்: ஆணை இளவரசே.
காட்சி 5 சிங்காரவனம்
உறுப்பினர்கள்: பிரகலாதன், காங்கேயன், சித்ரபானு
சூழ்நிலை: சித்ரபானு பாடியாடியபடி இருக்கிறாள். (பாடலின் இறுதிப்பகுதியில்)
பிரக: காங்கேயா! அதோபார். பொன்மான். பெண் மான் வழிதவறி காட்டுக்குள் வந்துவிட்டதோ?
காங்: எங்கே பிரகலாதா! மானா, இல்லையே.
பிரக: இன்னுமா தெரியவில்லை. அதோ பார் ஆடிப் பாடி வருகிறதே.
காங்: மான் அல்ல பிரகலாதா பெண்.
பிரக: அதைத்தான் நானும் சொல்கிறேன்.
காங்: அந்தப் பெண்ணையா மான் என்று சொன்ன?
பிரக: உனக்கு அழகை ரசிக்கத் தெரியவில்லை காங்கேயா! அவள் யார்? வா அருகில் செல்வோம்.
காங்: வேணாம் பிரகலாதா. அவள் ஆரியப் பெண் போல தெரிகிறாள்.
பிரக: இருக்கட்டுமே! மாலை நேர மஞ்சள் வெயிலில் அவள் பொன்னுடல் எப்படிப் பளபளக்கிறது. வா, அருகில் போவோம்.
காங்: வேணாமென்றால் கேக்கவா போறே. வா.
(சித்ரபானு ஒரு மலர்ச்செடியில் உள்ள மலரைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாள். பின்னால் சென்ற பிரகலாதன்)
பிரக: பெண்ணணங்கே!
சித்ர: (திடுக்கிட்டுத் திரும்பி பிரகலாதனைப் பார்த்து ஓரடி பின்வாங்கி அவன் முகத்தையே இமை கொட்டாமல் பார்க்கிறாள். பிரகலாதனும் தன்னை மறந்து நிற்கிறான். அவளது இமைகள் படபடக்கின்றன. நாணத்தால் தலைதாழ்த்தி நிலம் கீறி நிற்கிறாள்)
பிரக: ஆரணங்கே! நீ யார்? இந்தப் பூங்காவிலே தனியாகவா வந்தாய்?
சித்ர: (மௌனம்)
பிரக: ஏன் மௌனம்? உன் குயிலினும் இனிய குரலைக் கேட்டேன். மயிலினும் அழகிய நடனம் கண்டேன். இப்போது கற்சிலை போல நின்றுவிட்டாயே! பேசு குயிலே பேசு!
காங்: யாரம்மா நீ! இவ்வளவு நேரம் கேட்கிறார் என் நண்பர், பேசாமல் நிற்கிறாயே!
சித்ர: குழம்பிப் போய் நிற்கிறேன்.
காங்: என்ன குழப்பம்.
சித்ர: ஏற்கெனவே ஒருவரை என் உள்ளத்தில் குடிவைத்து விட்டேனே!
காங்: என்னம்மா! குடிவைத்து விட்டாயா? வாடகை ஒன்றும் வாங்கவில்லையே
சித்ர: அவரை நான் கண்ணாலேயே கண்டதில்லையே.
காங்: உனக்கு ஒன்றும் குழப்பமில்லே. எங்களைத்தான் குழப்புகிறாய்.
பிரக: கண்ணாலே கண்டதில்லை. அப்படியென்றால். . .
சித்ர: அவரைப்பற்றி காதால் கேட்டேன். காதல் கொண்டேன்.
காங்: அதிசயமான காதல்! காதால் கேட்டுக் காதலிப்பவளை இப்போதுதான் பார்க்கிறேன். யார்அவர்? அவரைப்பற்றி என்ன கேள்விப்பட்டாய்?
சித்ர: அவர் ஒரு நாட்டின் இளவரசர்.
காங்: ஓ! காதால் கேட்டுக் காதலிக்கத் தெரிந்த உனக்கு, கண்ணால் கண்டு காதலிக்கத் தெரியாதா?
சித்ர: இவரும் அழகாகத்தான் இருக்கிறார். இவர் அவராக இருந்துவிட்டால். . .
காங்: இவர்தான் அவர்! அவர்தான் இவர். இந்நாட்டின் இளவரசர் பிரகலாதன்.
சித்ர: (ஆச்சரியத்துடன்) அப்படியா! இவரா அவர். நான் காதால் கேட்டுக் காதல் கொண்டது இவரைத்தான். இவரேதான். கண்ணாளா காதல் மன்னா? (கட்டியணைத்தல்)
காங்: பிரகலாதா! இனி எனக்கு இங்கே வேலையில்லை. நான் வர்றேன். இல்ல இல்ல. கூடாரத்துக்குப் போறேன். பேசி முடிச்சிண்டு சீக்கிரம் வந்துடு. வரட்டுமா. (போகிறான்)
சித்ர: நான் ஆரியப் பெண் தெரியுமா உங்களுக்கு?
பிரக: சிப்பியிலே பிறந்த முத்து. சேற்றிலே முளைத்த செந்தாமரை. இவற்றை வெறுப்பாருண்டோ!
சித்ர: அழகாகப் பேசுகிறீர் அரசே. என் பெயர் தெரியுமா உங்களுக்கு?
பிரக: ஓ! தெரியுமே. சொல்லட்டுமா?
சித்ர: சொல்லுங்களேன்.
பிரக: குயிலின் குரலையும், மயிலின் சாயலையும், மானின் மருண்ட பார்வையையும் நோக்கும்போது, நீ ஒரு அழகு நிலா.
சித்ர: அந்த நிலவுக்கு ஒளி தருவது எது? அதுதான் நான்.
பிரக: அப்படியானால் ஆதவனா?
சித்ர: ஆம்! அழகுச் சூரியன். அதாவது சித்ரபானு.
பிரக: சித்ரபானு, தித்திக்கிறதே உன் பெயர். (பாடல். இருவரும் பாடியாடுதல்)
(பாடல் முடிவில்)
சித்ர: என் இனிய இளவரசே! வாருங்கள், என் தாய் தந்தையரை அறிமுகப்படுத்துகிறேன்.
பிரக: என்ன? உன் தாய் தந்தையரா! அவர்கள் நம் திருமணத்தை விரும்புவார்களா?
சித்ர: சுரர்கள் நாங்கள். அசுரர்களை மணக்கக்கூடாதுதான். ஆனால், என்னைப் பொருத்தவரை தடை சொல்லமாட்டார்கள்.
பிரக: நாங்கள் தமிழர்கள். எங்களை ஏன் அசுரர்கள் என்கிறீர்கள்.
சித்ர: தவறாக எண்ணாதீர்கள். நீதி என்ற சொல் அநீதி என வருவது போல, லட்சியம் என்ற சொல் அலட்சியம் என்பதுபோல. நாகரிகம் – அநாகரிகம் என்பதுபோல. சுரா என்னும் கள் அருந்துவோர் சுரர். அதை அருந்தாதவர்கள் அசுரர். அவ்வளவுதான்.
பிரக: அப்படியா?
சித்ர: எங்கள் குலதெய்வம் கௌரியம்மன் இட்ட கட்டளை. நான் அசுரனைத்தான் மணக்க வேண்டுமாம். அதனால் உலகம் உயர்வடையுமாம்.
பிரக: அதென்ன குலதெய்வம் – கௌரியம்மன் – வானுலகத்தில்தானே உங்கள் தெய்வங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். அது உங்களுடன் பேசுமா?
சித்ர: இதெல்லாம் உங்களுக்குப் புதுமையாக இருக்கிறதா? எங்கள் ரிஷீஸ்வரர்கள் சாமான்யமானவர்கள் அல்லர். தவவலிமை மிக்கவர்கள். தெய்வங்களை வா என்றால் வருவார்கள்.
பிரக: அப்படியா?
சித்ர: வாருங்கள் போகலாம்.
பிரக: எங்கே? வானுலகுக்கா?
சித்ர: சொர்க்கலோகத்துக்கு.
தொடரும்…