பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் (பக்கம் 10) பள்ளிப் பாடத் திட்டத்தில் தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் சொல்லிக் கொடுக்கப்படுமாம்.
அப்படியென்றால் தேவாரத்தில் இடம்பெறும் இந்தப் பாடலும் இடம் பெறுமோ?
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலவா யருள்
பெண்ணாகத் தெழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!
மதுரைவாழ் சிவனை நோக்கி திருஞானசம்பந்தன் என்னும் சின்ன பையன் (வயது 18இல் மரணம் அடைந்து விடுகிறான்) தேவாரத்தில் என்ன பாடுகிறான்?
பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரிவாயாக என்பதுதான் இந்தப் பாடல். இதனைச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்களா?
நாலாயிரம் திவ்யப் பிரபந்தமும் சொல்லிக் கொடுக்கப்படுமாம்.
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள்
நின்பால் பொறுப்பரியனகள்பேசில் போவதே நோயாகி
குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகருளானே!
– பாடல் எண் 879
“திருவரங்கப் பெரும் கோயிலில் அருள்கின்ற பெருமானே! உனது பெருமையை மற்றவர்கள் கூறுவதைப் பொறுக்காமல், அதை வெறுத்து இந்த மொட்டை அடித்த சமணர்களும், உனது அருளை அறியாத பாக்கியமில்லாத பவுத்தர்களும், உன்னைப் பற்றி பொறுக்க முடியாத பல வார்த்தைகளைத் தொடர்ந்து கூறுவாராகில் _ ஒன்று, அந்தச் சொற்களைக் கேட்டு நான் உயிர் விட வேண்டும், அல்லது, உன்னை அவதூறு பேசுவார்களின் தலையை அப்போதே அறுத்துத் தள்ளுவதே தர்மம்.’’
இந்தப் பாட்டைப் பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
இவற்றை எல்லாம் பள்ளிப் பாடங்களில் சொல்லிக் கொடுத்தால் பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை ஊட்டுவது ஆகாதா? சிந்திப்பீர்!