1. மீனவர் நலன் பாதுகாப்புப் பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை பேசுகிறது.
அதானிகளுக்குக் கண்டெய்னர் துறைமுகங்களைத் தாரைவார்த்த பா.ஜ.க. அரசு எந்த முகத்தோடு இந்த வாக்குறுதியைக் கொடுக்கிறது?
நிலைமை என்ன என்றால் ஒரே ஒரு மீனவரைக்கூட பா.ஜ.க. கூட்டணியினர் முகத்துக்கு முகம் கொடுத்துப் பேச முடியாது. அந்த அளவுக்குப் பா.ஜ.க. மீது அடங்காக் கோப வெறியோடு மீனவர்கள் உள்ளனர்.
2. விவசாயிகளின் நலன்களுக்காக மோடி அரசு விடும் கண்ணீர் நாடகத்தன்மையானது. மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிவிட்டு எப்படி விவசாயிகளைச் சந்திக்க முடியும்?
இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட நாடாளுமன்றத்தில் கை உயர்த்திய அ.இ.அ.தி.மு.க. கூட இந்த விடயத்தில் இப்பொழுது கைவிட்டது ஒரு சுவையான கதை.
3. பள்ளிகளில் ஆன்மீகம் கற்பிக்கப்படும். தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் போன்றவை கற்பிக்கப்படுமாம். இதில் கூடப் குறிப்பிட்ட மத சம்பந்தமான நூல்கள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இந்தியா பல மதங்கள், பல மொழிகள், பல இனங்கள் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்துக்களின் நாடு என்ற நோக்கில், போக்கில் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும், சீர்திருத்த உணர்வைப் பரப்ப வேண்டும் என்ற 51A(h) நோக்கம் பற்றி ஒரு வரிகூட பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கிடையவே கிடையாது என்பது கவனிக்கப்பட வேண்டும்.