தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியாதது. ஒரு நண்பர் என்னை ‘அண்ணே’ என்று உரிமையோடு அழைத்துப் பேசிப் பழகக்கூடியவர். ஒரே ஊர், உறவினர், தன்வீடு, தன் குடும்பம், சோறு, சம்பாத்தியம் என்று இல்லாமல் அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து, அதற்காக நேரத்தை, உழைப்பைச் செலவழிப்பவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. தான் விற்கக்கூடிய பத்திரிகைகளை என்னிடம் கொடுப்பார். அதற்கு உரிய பணத்தைக் கொடுப்பேன். பெற்றுக்கொள்வார். ஆனால், திராவிடர் கழகத்தில் நான் இருப்பதை ஏதோ பிற்போக்குத்தனம் என்று எண்ணிக்கொண்டு, தான் முற்போக்கு இயக்கத்தில் இருப்பதாக ஒரு உயர்வு நவிற்சியிலேயே எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் வாக்குவாதம் செய்யாமல் விட்டுவிடுவேன். அதனை எளிதாக எடுத்துக்கொண்டு கடந்து வந்து விடுவேன்.
அந்த நண்பர் தேர்தல் நேரத்தில் என்னை மிகவும் வம்புக்கு இழுப்பார். “தேர்தல் பாதை திருடர் பாதை’’ என்பது அவரது கோட்பாடாக இருந்தது. தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் அவரின் பேச்சாக இருக்கும்.
நான் அவரிடம் தேர்தலைப் புறக்கணிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தலைப் புறக்கணிப்பதால் நாம் யார் வரவேண்டாம் என்று நினைக்கின்றோமா அவர்கள் வந்துவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. எங்கள் இயக்கத்திற்கு என்று தனித்தன்மையான பார்வை இருக்கிறது. கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக (இப்போது 75 ஆண்டுகளுக்கு மேலாக) தேர்தலில் போட்டியிடாத இயக்கம் திராவிடர் கழகம். தந்தை பெரியார் அவர்களுக்கு இரண்டு முறை முதலமைச்சர் ஆகும் பொறுப்பு வந்த போதும், பெரும்பதவிகளைத் தருவதாக சிலர் சொன்ன போதும் அதனையெல்லாம் மறுத்தவர். தான் மட்டுமல்ல, தமது இயக்கமான திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் தேர்தலிலே போட்டியிடக் கூடாது என்பதிலே மிகக் கண்டிப்பாக இருந்தவர். பதவி ஆசை இருப்பவர்கள், கட்சியின் பின் வாசல் வழியாகச் சென்று விடலாம் என்று உணர்த்தியவர். ஆனால், தானோ, தனது இயக்கத்தைச் சார்ந்தவர்களோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதிலே உறுதியாக இருந்ததைப் போலவே, ஒவ்வொரு தேர்தலிலும் தன்னுடைய கொள்கைக்கு யார் ஆதரவாக இருப்பார்கள் என்பதனை உணர்ந்து, அந்தக் கட்சிக்கு தன்னுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதைச் சொன்னவர், அது மட்டுமல்ல; தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தவர், தன்னுடைய தொண்டர்களிடம் தான் ஆதரிக்கும் கட்சிக்கு ஏன் ஆதரவளிக்கிறோம் என்பதனைத் தெளிவுபடுத்தி, வழிகாட்டி, பிரச்சாரம் செய்யச் சொன்னவர் என்றெல்லாம் விளக்கியபோது, அவர் நான் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்ல, “தேர்தல் பாதை திருடர் பாதைதான்’’, நான் ஓட்டுப் போடமாட்டேன், மற்றவர்கள் ஓட்டுப் போடுவதையும் பிரச்சாரத்தின் மூலமாகத் தடுப்பேன்’’ என்று அவர் சொன்னது எல்லாம் நினைவில் நிற்கிறது.
அண்மையில் மிக நீண்டகாலம் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தேன்.
கேள்வி: இப்போது இருக்கிற நிலைமையில் தி.மு.க.வால் பாசிசத்திற்கு எதிராக என்ன சாதித்துவிட முடியும் என்பதற்காக தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறீர்கள்?
தோழர் மருதையன்: தி.மு.க.வால் சாதித்து விடமுடியும் என்பதற்காக இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் சொல்லவில்லை. பாசிசம் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க வேண்டும். அவ்வாறு தடுப்பதற்கு நமது கையில் இருக்கிற சாத்தியமான ஒரே மாற்று தி.மு.க.தான். கமலஹாசன் இல்லை, விஜயகாந்தும் இல்லை, வேறு யாரும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணி ஆட்சியில் அமர்வது என்பது நேரடியாக பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவது போன்றதாகும். அப்படி அமைந்தால் நாம் நேரடியாக பாசிசத்தின் கீழ் வந்துவிட்டோம் என்று பொருள். உ.பி.யாக _ குஜராத்தாக நாம் மாறப் போகிறோம் என்று பொருள். இதைத் தடுக்கவேண்டும்.
தோழர் மருதையன் அவர்களின் பேட்டியைப் படித்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. “ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவதுதானே தவிர, தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல’’ என்றார் தந்தை பெரியார். இந்த ஜனநாயகம் என்பது மிக விநோதமானது. தந்தை பெரியார் அளவுக்கு இந்த ஜன நாயகத்தை, தேர்தல் முறையை நார் நாராகக் கிழித்தவர்கள் வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடுவதில்லை. திராவிடர் கழகமாக மாறிய நாளில் இருந்து, கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அதில் எந்த வித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து தொண்டாற்றும் ஒரே இயக்கம் இந்திய அளவில் ஏன் உலக அளவில்கூட திராவிடர் கழகம் ஒன்று மட்டும்தான். தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று சொல்லக்கூடிய இயக்கங்களிலே தனித் தன்மையானது திராவிடர் கழகமாகும். தான் தேர்தலில் போட்டியிடாமல், ஆனால், தேர்தலில் போட்டியிடுபவர்களில் யாரை ஆதரிக்க வேண்டும்? யாரை ஆதரிக்கக் கூடாது? என்பதனை விளக்கமாக எடுத்து வைப்பது தந்தை பெரியார் காலத்திலிருந்து நடைபெறும் நிகழ்வாகும்.
அந்த வழிமுறையில் 13.3.2021 குடந்தையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே முன்மொழிந்த அரசியல் தீர்மானம் ‘நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலும் -நமது கடமையும்!’ என்னும் தலைப்பிலே ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தின் கடைசிப்பகுதி,
“மண்ணின் மைந்தர்களான மக்களை மத ரீதியாக, ஜாதி ரீதியாகப் பிரித்து, சிறுபான்மையினர் குடியுரிமையின்றியும் வாழவேண்டும் என்ற கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ்., -சங் பரிவார், -பா.ஜ.க. உள்ளிட்ட வெறுப்பை வளர்க்கும் சக்திகளான இந்தப் பிற்போக்குச் சக்திகள், கட்சிகள் தமிழ் மண்ணில் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டுமாயும் இவற்றிற்குத் துணை போகும் அ.இ.அ.தி.மு.க.வையும் அதன் கூட்டணியையும் படுதோல்வியுறச் செய்ய வேண்டும். அதற்கு ஆக்கபூர்வ மாற்று, தி.மு.க. கூட்டணியே என்பதற்கு அதன் கொள்கைத் திட்டங்களே சான்றாகும். தி.மு.க. அணியின் வெற்றி என்பது வெகுமக்கள் நல்வாழ்வின் வெற்றி என்பதையும் மனதில் கொண்டு வாக்களிக்குமாறு இப்பொதுக்குழு தமிழக வாக்காளப் பெருமக்களை முக்கியமாகக் கேட்டுக் கொள்கிறது.
ஆட்சி மாற்றம் தேவை என்பது வெறும் காட்சி மாற்றத்திற்காக அல்ல; நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றாக -விடியலாக அமைய வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகவே இந்த வேண்டுகோளை வாக்காளப் பெருமக்கள் முன் வைக்கிறோம். “வெல்லட்டும் திராவிடம்’’ என்ற இந்தத் தீர்மானத்தை திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே முன்மொழிந்தார்கள். திரண்டிருந்த திராவிடர் கழக உறுப்பினர்கள் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பி இந்தத் தீர்மானத்தை வழிமொழிந்த காட்சி அற்புதமாக இருந்தது.
இன்னும் கூட நோட்டாவுக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் ‘”முற்போக்குத் தோழர்கள்’’ இருக்கிறார்கள். ஊழல் அற்றவர்களுக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் “உத்தமர்கள்’’ இருக்கிறார்கள். “திராவிடத்தால் வீழ்ந்து விட்டோம்’’- அதனால் நம்ம ஜாதிக்காரர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும் ‘தமிழர்கள்’ இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழப்ப வாதிகளைப் புரிந்து கொள்ளும் அறிவைப் பெரியாரியல் நமக்கு வழங்கியிருக்கிறது.
தந்தை பெரியார் இயக்கத்தின் இரண்டு கண்கள் போன்ற கொள்கைகள் ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும்தான். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் போராடினார், வாதாடினார், சிறை ஏகினார். ஜாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும் என்று சொன்னார். ஆனால், இந்து மதத்தை விட்டு தந்தை பெரியார் வெளியில் செல்லவில்லை. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு மாறப் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்று சொன்னபோது, தந்தை பெரியார் மறுத்தார். நீங்கள் செல்லுங்கள், சாதாரணமாகச் செல்லாதீர்கள், இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிக் கொண்டு மொத்தமாக வெளியேறுங்கள் என்று சொன்ன தந்தை பெரியார், தான் இந்துமதம் என்னும் அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டுதான் போராடினார். வெற்றி கண்டார்.
இதுவே பெரியாரியல் அணுகுமுறை. இன்றைக்கும் கூட சிலர் கூறுகின்றார்கள். “வாக்கு இயந்திரத்தையே மாற்றி விடுவார்கள், என்ன செய்ய முடியும்?” என்று ஒரு நம்பிக்கை இழப்போடு பேசுகிறார்கள். சுற்றி நடப்பதை முழுவதையும் உள்வாங்கிக்கொண்டு, அதற்கு எதிராக பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதே இன்றைய தேவை. மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், பொய்யும் புரட்டும் தூள் தூளாகும். எப்படிப்பட்ட மோசடியும் அம்பலமாகும்.
இது கரோனா தொற்றுக்காலம். கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது. இவ்வளவுதான் நமது உலக வாழ்க்கையா என்று சிலர் நினைத்துக்கொண்டு நிற்கையில் அறிவியல் அறிஞர்கள் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, மக்களுக்கு கிருமி நாசினியை ஏற்றுவதன் மூலம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒப்பிட்டு “கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமி போல வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ். போன்ற கிருமிகள் நம்மை அழிக்கத் துடிக்கின்றன. இந்தக் கிருமிகளைத் தடுக்கும் தடுப்பூசிதான் தி.மு.க.; அதற்கான கிருமி நாசினிதான் திராவிடர் கழகம்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 18.3.2021 தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது போல (‘விடுதலை’ 19.3.2021), ஆர்.எஸ்.எஸ். கிருமி, என்னென்னவோ வேடமிட்டு தமிழ்நாட்டை அழிக்கப் பார்க்கிறது. விபீடணர்களை வரிசையாக இறக்கி விடுகிறது. விதவிதமாய் ஆள்களைத் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு, ஆளுக்குக் கொஞ்சம் ஓட்டைப் பிரித்தால் தி.மு.க. அணியைத் தோற்கடித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். தமிழ்நாட்டில் உறுதியாக இந்த ஆர்.எஸ்.எஸ். & பி.ஜே.பி. எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. பி.ஜே.பி. மட்டுமல்ல, அதோடு கூட்டணி சேர்ந்துள்ள அ.தி.மு.க,, பா.ம.க.வும் இந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வுவது உறுதி.
நண்பர்களே, ஏப்ரல் 6-ஆம் தேதி மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்படியே ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மறுமலர்ச்சி தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இ.யூ.முஸ்லிம் லீக் உள்ளிட்ட அந்தக் கூட்டணியில் உள்ள அத்தனை வேட்பாளர்களுக்கும் நமது வாக்கினை ஏப்ரல் 6 -அன்று அளிப்போம். அதன் மூலம் ‘திராவிடம் வெல்லும்’ அதனை _ இந்தச் சட்டமன்றத் தேர்தல் முடிவு சொல்லும்!