நேயன்
திராவிடன் என்ற சொல்லை விட்டுவிட்டுத் தமிழன் என்று சொல்லியாவது தமிழினத்தைப் பிரிக்கலாம் என்றால், அதுவும் நடவாதபடி பார்ப்பான் (ஆரியன்) நானும் தமிழன் என்று உள்ளே புகுந்துவிடுகிறான்.
(ஆதாரம் : பெரியாரின் 12.10.1955 தேதிய அறிக்கை).
அது மட்டுமல்ல, பார்ப்பனர்களை எதிர்த்த அளவிற்குக் கன்னடர்களையும், மலையாளி களையும் எதிர்த்தார்.
(ஈ.வெ.ரா. சிந்தனைகள், பக்கம் 692)
அது மட்டுமல்ல, பார்ப்பானுக்காகத் தமிழன் என்ற பெயரை விலக்கி திராவிடன் என்று பெயர் வைக்க வேண்டியுள்ளதே! என்று வேதனையும் பட்டுள்ளார்.
(12.10.1955 தேதியிட்ட பெரியார் அறிக்கை)
1954இல் தன் பிறந்த நாள் அறிக்கையில், தோழர்களே, தமிழ்நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங் கொள்ளை யடிப்பதோடு தமிழ்நாட்டைப் பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் மட்டந்தட்டி வருகிறது. இந்தவொரு முக்கியமான காரியத்துக்காகவே, வடநாட்டான், அரசியலிலும் தமிழ்நாட்டைத் தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான்… என்று கொதித்தெழுந்தார்.
1955இல் ‘திராவிடநாடு’ கோரிக்கையும் அதற்கு இணையான தட்சண பிரதேசத் திட்டத்தையும் பெரியார் எதிர்த்தார் என்பதை குறுக்குச்சால் ஒட்டும் எத்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழர் படை, தளபதி பட்டுக்கோட்டை அழகிரி, அய்.குமாரசாமிப் பிள்ளை, ‘நகரதூதன்’ பத்திரிகையின் திருமலைச்சாமி ஆகியோர் தலைமையில் ஒரு படை இந்தியை எதிர்த்து திருச்சியிலிருந்து புறப்பட்டு 234 ஊர்கள் வழியாக 42 நாள்கள் நடந்து, 82 இடங்களில் பொதுக் கூட்டங்களில் பேசி, செப்டம்பர் 11ஆம் நாள் சென்னையை அடைந்தது.
அன்று மாலை (11.9.1938) சென்னை கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மாநாட்டில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னிலையில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார் பெரியார்.
1938இல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய ஒரு தமிழர் தலைவரைப் பார்த்து, தரமிழந்து, அறியாமையின் உச்சத்தில் நின்று கொச்சைப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியத்தைக் கெடுக்கவே பெரியார் திராவிடத்தை எடுத்தார் என்று அபாண்டமாக, பொய்யாக, மோசடியாக ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார்கள் என்றால், அவர் ஆரிய கைக்கூலி என்பதைத் தமிழர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.
அந்த மாநாட்டில் தந்தை பெரியார் முழங்கிய தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமே தமிழ்த் தேசியத்திற்கான முதல் முழக்கம் என்பதை வரலாற்று அறிவுடைய அனைவரும் அறிவர், ஏற்பர். அதனால்தான் தந்தை பெரியார் தமிழ்த் தேசியத்தின் தந்தை என்று நன்றியுள்ள அனைவராலும் அழைக்கப்படுகின்றார்.
அதுமட்டுமல்ல தமிழ்த் தேசியம் உருவாக, பெரியார் ஆற்றிய பணிகள் பல.
1. தனது ஏடுகளில் நாள்தோறும் எழுதினார்.
2. தமிழ்த் தேசியத்தில் ஆற்றலுள்ள ஆர்வம் உள்ள அறிஞர்களை விட்டு எழுதச் செய்தார்.
3. ஊர்தோறும் மேடைதோறும், நாள்தோறும் பேசினார்.
4. தன் தோழர்களை, தமிழ்த் தேசிய பற்றாளர்களைப் பேசச் செய்தார்.
5. கவிஞர்கள் மூலமாகத் தமிழ்த் தேசிய பாடல்களைப் பரவச் செய்தார்.
6. நடிகர்கள் மூலமாக நாடகங்கள் மூலம் தேசிய உணர்வை ஊட்டினார், வளர்த்தார்.
7. திரைப்படங்கள் மூலமாகவும் தமிழ்த் தேசிய உணர்வு பரவ தூண்டினார், உதவினார், ஆதரித்தார்.
8. தமிழ்த் தேசியம் மலர, அதற்குத் தடையாக இருந்த ஜாதி, மதம், மூடநம்பிக்கை, ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கம் இவற்றை எதிர்த்து முடிந்த அளவு ஒழித்தார்.
9. தமிழரிடையே சமத்துவத்தை வளர்த்தார்.
10. தமிழரிடையே ஒற்றுமை வளர ஜாதி மறுப்பு (கலப்பு) மணங்களை நடத்தினார்.
11. தமிழ்த் தேசியத்தின் அடிப்படையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். தமிழ் காலத்திற்கு ஏற்ப கருத்துகளை உள்வாங்கி வளம்பெற வேண்டும். உலக மாற்றத்தின் தேவைக்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் தமிழ் மாற்றமும், ஏற்றமும் பெற்று வளர வேண்டும் என்று பேசினார், அதற்கான செயல்களிலும் இறங்கினார்.
12. தமிழ்த் தேசியத்திற்கான ஆதரவும் அதிகாரமும் பெற அதற்கேற்ற அரசியல் அணுகுமுறைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் ஆதரவையும், அரசியல் பிரச்சாரங்களையும் செய்தார். செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளம் என்று இன்று உள்ளதுபோல ஊடக வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு தகர வண்டியை உருட்டி ஊர் ஊராய் சென்று இவ்வளவும் சாதித்தார். இரவுபகலாய் எழுதியும் அச்சுக் கோத்து அச்சிட்டும், அதை ஊர் ஊராய் அனுப்பியும் இவற்றைச் செய்தார். இன்றைக்கு கணிப் பொறியை எளிமையாகப் பயன்படுத்தி, பீராய்ந்து பெறும் அரைகுறைச் செய்திகளை வைத்துக்கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முனைப்பில் ஓர் மாபெரும் இமயத்தை இடித்துத் தள்ள முயலும் முட்டாள்கள், கயவர்கள் இவற்றை நன்கு சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் ஓர் அடையாளமாகவே பொங்கல் திருநாள் தமிழர் திருநாள் என்று திராவிட இயக்கத்தால் கொண்டாடப் பட்டது. வடமொழியில் இடப்பட்ட பெயர்களையெல்லாம் செந்தமிழில் சூட்ட இந்த இயக்கம் பெரும்பாடுபட்டது. ‘ஸ்ரீ’ என்பது ‘திரு’ என்று மாற்றப்பட்டது. ‘நமஸ்காரம்’ ‘வணக்க’மாக்கப்பட்டது. ‘விவாக சுபமுகூர்த்தம்’ ‘திருமணம்’ என்று அழைக்கப்பட்டது. தெலுங்கு கீர்த்தனையும், கர்னாடக சங்கீதமும் காதுகளில் ஒலித்த நிலைமாற்றி, செந்தமிழ்ப் பாடல்களைத் தேனாகக் காதில் பாய்ச்சிய இயக்கம் திராவிடர் இயக்கம்.
(தொடரும்)