மஞ்சை வசந்தன்
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அய்.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது இந்திய பா.ஜ.க அரசு.
அய்.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
கடந்த 2009ஆ-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு.
இந்தப் போரை இலங்கையின் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் ஆதரவும் பங்களிப்பும் செய்தனர்.
இந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் தமிழ்த் தேசியவாதிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை.
இலங்கை பூகோள ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு செக் வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஓர் அவசியம் இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன?
இந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு இந்த நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன.
இலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஓர் இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும்! அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும்.
இந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான்.
அந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம்.
இந்த தீர்மானம் அய்.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும், இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்றும் குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக அதிமுக கூட்டணிக்கே அய்.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது.
இலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு.
தமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி பற்றும் வெளிப்பட்டது.
‘இலங்கைக்கு காலக்கெடு வழங்கப்படும்’
அய்.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மூத்த சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவாவிடம், பிபிசி தமிழ் வினவியது.
இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் காணப்படுகின்ற பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு காலக்கெடு வழங்கப்படும் என அவர் கூறுகிறார்.
இவ்வாறு வழங்கப்படும் கால எல்லைக்குள், இலங்கை அரசாங்கம் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத பட்சத்திலேயே, குறித்த தீர்மானம் பாதுகாப்பு சபை வரை செல்லும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த தீர்மானம் பாதுகாப்பு சபைக்கு செல்லுமாக இருந்தால், அதன் பின்னர் இலங்கைக்கு பெரியப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என பிரதீபா மஹனாமஹேவா கூறுகின்றார்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது, எதிர்காலத்தில் இலங்கைக்கு இருள் சூழ்ந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிடுகின்றார்.
அதேபோன்று, எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாட்டிற்கு எதிராக பாதுகாப்பு சபையின் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கை அரசின் நிலைப்பாடு
அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பாடு செய்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
அய்க்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மாறாக, மனித உரிமைகள் பேரவை செயல்பட முடியாது. குறிப்பிட்ட நாட்டை இலக்கு வைத்து அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டன், மலாவி, ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாகவும், காலனித்துவத்திலிருந்து விடுப்பட்ட நாடுகளை ஆட்சி செய்வதற்காக சிந்திக்கும் எண்ணத்தை நிராகரிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத முடிகிறது என்றும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
இந்திய அரசுக்கு தலைவர்கள் கண்டனம்
தமிழர் தலைவர் கி.வீரமணி கண்டனம்:
”இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு எதிராக, அங்கு 2009 இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கும், போர்க் குற்றங்களுக்கும் இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும், முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் அய்.நா. மனித உரிமை அவையில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் அய்.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேறியுள்ளது ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமாகும்.
ஆனால், இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசோ எதிலும் இரட்டைப் போக்கு, இரட்டை நாக்கு என்னும் வகையில் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததன் மூலம் பா.ஜ.க.வின் தமிழர் விரோதப் போக்கும் துரோகமும் உலக அரங்கில் அம்பலப்பட்டுவிட்டது. தமிழர்கள் புரிந்துகொள்ளட்டும்!’’ என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் தீர்மானத்தை ஆதரிக்காமல், நடுநிலை வகித்த இந்தியஅரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அய்.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. இது தமிழ் இனத்துக்கு எதிரானது. தமிழகத்தில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்புசெய்து நடித்துள்ளனர். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என இலங்கைவெளி விவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே 4 நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்தார். தமிழகத்தில் தேர்தல் நடக்காவிட்டால், ஆதரவாகவே ஓட்டு போட்டிருப்பார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட விசாரணைக்கு இலங்கை அரசை உட்படுத்தும் விதத்தில், இந்திய அரசின் நிலைப்பாடு அமையவில்லை.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக மக்களின் உணர்வை மதிக்காமல், இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இலங்கை அரசுக்கு மறைமுகஆதரவை இந்தியா வழங்கியுள்ளது. இந்த துரோகத்துக்கு தமிழக மக்கள், பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சரியான பாடத்தை இந்தத் தேர்தலில் புகட்டுவார்கள்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று உதட்டளவில் பேசி, உள்ளுக்குள் வஞ்சகம் வைத்து தமிழர்களை, தமிழ் நாட்டை, தமிழ் மக்களை வஞ்சிக்கும் பா.ஜ.க மோடி அரசு, ஈழத்தமிழர் பிரச்சினையிலும் பச்சைத் துரோகம் இழைத்துள்ளது. 22 நாடுகள் ஆதரித்த நிலையில், அருகில் உள்ள இந்தியநாடு; தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழர்களை உள்ளாடக்கிய நாடு இந்தியா என்ற பதற்றம், பொறுப்புணர்ச்சி இல்லாமல், கார்ப்பரேட்டுகளின் கண்ணசைவுக்கு ஏற்ப, அவர்களின் நலன் காக்க, தமிழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது பா.ஜ.க அரசு. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாஸ் இந்தியாவின் பச்சைத் துரோகத்தைக் கண்டிக்காமல் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு ஆறுதல் தருகிறது என்று கூறியிருப்பது அவர் அரசியல் ஆதாயத்திற்குத் தமிழர் நலத்தைத் தாராளமாய் பலிக்கொடுப்பார் என்பதை வெளிப்படையாக்கியுள்ளது.
எனவே, தமிழ் மக்கள் அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளைப் படுதோல்வி அடையச் செய்வதன் மூலம், தமிழர்களுக்கு எதிராய் எதிர் காலத்தில் எவரும் செயல்படாத நிலையை உருவாக்க வேண்டும். பா.ஜ.கவின் வீழ்ச்சி தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும். பச்சைத் துரோகத்திற்கு அதுவே சரியானத் தண்டனை!