தத்துவமேதை டி.கே.சீனிவாசன்
“விடு என் கையை!’’
“என்னம்மா கோபம்?’’
“தனியாப் போற பெண்ணைக் கையைப் பிடிச்சு_’’
“கையைப் பிடிச்சா இழுத்தேன்? காதலைச் சொன்னேன்’’
“தெய்வந்தான் உன்னைக் கேக்கணும்’’
“கேக்காதம்மா… வள்ளி திருமணம் பார்த்திருக்கியா?’’
“கதை பேச இது நேரமில்லை, வழி விடு.’’
“பேச வேண்டாம், கேளு. வள்ளியை முருகர் இப்படித்தானே_’’
“வள்ளிக்கு முருகர்மேலே முன்னமேயே காதல்’’
“முன்னமேயே காதல் சரி. பின்னே வேலன் வேடனாவானேன், வேடன் விருத்தனாவானேன்?’’
“முருகனுக்கு அது தெரியாது.’’
“அதுபோலத்தான் ஒன் மனசு எனக்கும் தெரியலை’’
ராஜு சீமான் வீட்டிலே குலம் விளங்க உதித்த புத்திர பாக்கியம். சரசு ஏழை வீட்டிலே பிறந்த தேவையில்லாத தொல்லை. படிக்க வைக்கும் அளவுக்கு அவள் பெற்றோரிடத்தில் பணம் கிடையாதுதான். ஆனால், இந்தக் ‘கலிகாலத்து’ப் பிள்ளைகளெல்லாம் “பெண் படித்திருக்கிறாளா?’’ என்பதையே முதல் கேள்வியாகக் கேட்பதால் ‘பின்னால் ஏன் தொல்லைப்பட வேண்டும்’ என்ற முன் யோசனையால்தான் பள்ளிக்கூடத்துக்கு அவளை அனுப்பினார்கள்.
பெண்களிலே இரண்டு வகை அழகிகளுண்டு. ஒன்று ரோஜாவைப்போல, மணத்தோடு மயக்கத்தைத் தரும் ரகம். மற்றொன்று மல்லிகை மாதிரி, மணத்தோடு மதிப்பை உண்டாக்கும். சரசு இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவள். இடையில் தூய வெள்ளைப் பருத்திச்சேலை, துவண்டு விழாத தூக்கிக் கட்டிய சடை, இவை இரண்டுக்கும் ஒத்த நடை, அத்தனையுங்கொண்டு அந்த அழகி வகுப்புக்குள் நுழைந்தால் மாணவர்கள் தங்களுக்குள்ளாகவே, ‘வெண்புறா’ எனச் சொல்லிப் புன்னகை புரிவார்கள்.
அன்று தமிழ்ப்பாடம் நடந்துகொண்டிருந்தது. ராஜுவின் மனம் பாடத்தில் இல்லை. எங்கேயோ ஓடித் திரிந்து கொண்டிருந்தது.
“ரா-ஜு’’ என்றழைத்தார் ஆசிரியர். எழுந்து நின்றான்.
“வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப்பனி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள், அவள் யார்?’’ எனக் கேட்டார்.
“நம்ப சரஸ்வதி அய்யா’’ எனப் பதிலளித்தான். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் சிரித்து விட்டார்கள். “சரி உட்கார்’’ எனச் சொல்லிவிட்டுப் பாடத்தைத் தொடங்கினார்.
அந்தக் கண்கள்! கோபக்கனலை அம்பாக்கி அவன் இதயத்தின் ஆழம்வரை பாய்ச்சின. தலையைக் குனிந்து கொண்டான். புத்தகத்தில் கண்ணோட்டம் செலுத்தினான். முடியவில்லை. கண்கள் நிமிர்ந்தன. ‘பாடம் படித்து நிமிர்ந்த விழிதன்னில் பட்டுத் தெறித்தது மானின் விழி.’
வகுப்பு முடிந்ததும் வெளியே வந்த ராஜு வீட்டுக்குப் புறப்பட்ட சரசுவை “சரசு, என்னை மன்னித்துவிடு’’ என்றான். இரத்தமேறிச் சிவந்த விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் பறந்தாள் அந்த ‘வெண்புறா’.
“மன்னிப்பு’’, “மன்னிப்பு’’, “மன்னிப்பு’’ _ இவன் மனதைத் தொல்லைப்படுத்தியது. ஏழை வீட்டுப் பெண் மீது சீமான் வீட்டுப் பிள்ளைக்கு இயற்கையாகவே உண்டாகும் இரக்க உணர்ச்சியின் விளைவுதான் அது. உணர்ச்சியின் உச்சநிலை அவனை ஆட்டிவைத்தது. மனச்சாட்சி அவனைப் படாதபாடு படுத்திற்று.
நிலாவைக் கண்டு “இன்பமெனும் பால் நுரையே, குளிர்விளக்கே’’ எனத் தன்னை மறந்து மகிழ்ந்து மயங்குவோர் எத்தனையோ பேருண்டு இவ்வுலகில். ஆனால், “முகிலைப் பிளந்து வெளிக்கிளம்பும் முழுமதி’’ போலச் சரசு வகுப்பிற்குள் நுழையும்போதெல்லாம் ராஜுவுக்குக் குளிர் விளக்காக இல்லை. அனற்பிழம்பாகத் தானிருந்தது.
அவன் மனதைப் படாதபாடு படுத்திய அவள் அங்கேயே படமாகப் பதிந்துவிட்டாள். படத்தைப் பார்த்து, பச்சாதாபப்பட்டுக் கடைசியில் படத்திலேயே கலந்துவிட்டான். காதல் எனத்தான் அவன் எண்ணினான், உணர்ந்தான், உண்மையிலேயே நம்பினான். கடைசியில் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்ற குறளை நடைமுறைக்குக் கொண்டுவரத் தீர்மானித்தான். அந்தக் தீர்மானத்தை முன்மொழிந்ததுதான் முன்பு அவளோடு நடத்திய இன்ப உரையாடல்!
ராஜு வேடனுமாகவில்லை, விருத்தனுமாகவில்லை. ராஜுவாக இருந்தே அவளைச் சரிப்படுத்திவிட்டான். அவளும் காலப்போக்கில் அவனைத் துணைவனாகவே ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்துவிட்டாள். வீட்டுக் கட்டுப்பாடும் “நாலு பேர் ஏதாவது சொல்லுவார்கள்’’ என்பதும் அவர்களுக்குள் காதல் மொழிகளோ இன்ப உரையாடல்களோ வளர்ந்துகொண்டே போக இடங்கொடுக்க வில்லை.
‘வாழ்க தமிழ்’ ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற ஒலிகள் அந்தக் கடற்கரையில் மோதிய அலைகளைச் சென்று தழுவின. பேரிரைச்சலுக்கிடையே பேச ஆரம்பித்தார் அவர். வெண்ணிறத் தாடி. வீசும் ஒளியோடு கோபத்தைக் கலந்தளிக்கும் கண்கள். உள்ளத்தை ஊடுருவிப் பாயும் முக அமைப்பு. கையிலே ஒரு கோல். கருத்திலே தமிழ் மக்கள் கைவிலங்கைத் திறக்கும் திறவுகோல். உள்ளந் துடிக்க, உதிரங் கொதிக்க, உணர்ச்சி வெள்ளத்தில் பகுத்தறிவுப் படகிலே வேகமாகச் செல்லும் இளைஞர் கூட்டம். அதிலே ராஜுவும் ஒருவன்.
1937! ஆம்! அந்த ஆண்டுதான்! தாலமுத்துவையும், நடராஜனையும் பிணமாக்கிய ஆண்டு. ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் சிறைக்குள்ளே சிக்கிய சிங்கங்களான ஆண்டு! வீட்டைத் துறந்து, உற்றார் உறவினரை மறந்து, கைபிடித்த துணைவனையும் பிரிந்து,
“மாந்தன் ஒருவன் தரும் சுகமும் – எங்கள்
மாந்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்’’
எனச் சிறை சென்றதைச் சிரித்துப் பழித்து “பாலுக்கில்லாமல் பாலனைக் காக்கச் சென்றவர்கள்’’ எனத் தமிழ்ப் பெண்கள் தன்மானத்தைப் பழிவாங்கிய அந்த ஆண்டு! மறக்காதீர்கள்! நெஞ்சு துடிக்காதீர்கள்!
மறுநாள் சிறைக் கூடத்திலே சிக்கியவர்களிலே ராஜுவும் ஒருவன். “வெள்ளம்போல் தமிழர் கூட்டம்’’ கூடி ஆசி கூறி அனுப்பிய தியாகிகளிலே ஒருவன். ஆனால், தனிமை அவனுடைய மறைந்த நினைவுகளைப் புதுப்பித்தது. அவன் இதயத்தைச் சுற்றி வளை ஓசைகள் தாளம் போட்டன. சிரிப்பொலி வீணை வாசித்தது. குரலொலி குயிலிசை எழுப்பிற்று. பூபாளம் பாடுவதிலிருந்து தொடங்கி நீலாம்புரி பாடும்வரை அவள் நினைவாகவே இருப்பான். மறுநாள் காலை பூபாளந் தொடங்கும்வரை அவள் கனவாகவே காண்பான். “மார்புற அணைத்து நாதன் மங்கைக்குத் தந்த இன்பம் சார்புறத் தேகந்தன்னை மனதினைத் தழுவும் நேரம், நேரினில் இருந்த நாதன் மறைந்தது’’ கண்டு மனங்கலங்கும் மங்கையைப் போலானது அவன் மனமும்.
“விடுதலை’’ “விடுதலை’’ எனக் கூவிக்கொண்டே போனான் பத்திரிகைப் பையன். சிறைவாயிற்படியிலே பல மாலைகள் காத்திருந்தன. மாபெரும் ஊர்வலம். கட்டுவிட்டதனால் களைப்பையும் மறந்து களியாட்டம் போட்டனர் காளைகள்.
“மாலைக் கடற்கரையோரம்.’’ அங்கே உரம் பெற்ற மக்கள் கூட்டம். உள்ளத்தில் வாளியை விட்டு அறிவு நீரை வெளியிலெடுத்து வாலிபப் பயிர்களுக்கெல்லாம் பாய்ச்சிக் கொண்டிருந்தார் தலைவரின் இளவல்! ராஜு அங்கேதான் இருந்தான். அவன் மனம் மட்டும் எங்கேயோ, எவளையோ சுற்றி அலைந்து கொண்டிருந்தது.
கூட்டம் கலைந்ததுகூட அவனுக்குத் தெரியவில்லை. அவள்! அவன் இரு கைகளுக்கிடையே பதிந்திருந்தாள். கொடி தன்னைத் தழுவ, உணர்ச்சியற்று நிற்கும் மரம்போல அவன் இல்லை. பரிவும், பார்வையில் கனிவும் நிறைந்து அவளைப் பற்றிக்கொண்டான். “ராஜு’’ என்றாள் அவள். “சரசு’’ என்று சரசத்தைத் துவக்கினான். வெஞ்சிறைக்குள்ளே பட்ட வேதனையை அந்தத் தளிர்க்கொடியாளின் தழுவல் தட்டிக் கொடுத்து தணித்தது. யாரோ எங்கிருந்தோ ஓடி வருவதுபோல அவனுக்குப் பட்டது. கனவு கலைந்தது. சிந்தனை அலைகளுக்கிடையே தனிமையைத் தழுவிக் கொண்டிருந்தது கண்டு வெட்கினான். இரையும் அலைகடல் நோக்கி எவளோ ஒருத்தி ஓடுங் காட்சி அவனை அவளருகே இழுத்தது.
“சரசு’’
“ஆம், நீ இங்கே’’
பெருமூச்சுகளிடையே பொருமிக் கொண்டிருந்த அவள் கண்களில் நீர் வழிந்தது. திகைத்து நிற்கும் இவனுக்கு என்ன என்றே புரியவில்லை. மெள்ள அவள் கையைப் பற்றினான். கொடி துவண்டது, கொம்பைப் பற்றிக் கொள்ளவில்லை.
“நான் விதவை’’
“திருமணம் யாரோடு?’’
“திக்கற்றவளுக்கு வழக்கமாகக் கிடைக்கும் கிழவனோடு’’
“என்ன?’’
“ஆமாம், கம்பிகளுக்கிடையே நீ இருந்தபோது நான் கல்யாணக் கோலத்திலிருந்தேன். ஆனால், நம்பின உன்னை ஏமாற்றியதற்காக இக்கதிக்காளானேன்!’’
“இருந்தால் என்ன? உள்ளம் எனக்குத்தானே சொந்தம்’’
“உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவது? நான் விதவை மட்டுமல்ல, விபசாரியுங்கூட’’
“தெளிவாகச் சொல்.’’
“என்னைக் கைபிடித்துக் கைவிட்டவரின் மூத்த பிள்ளை நேற்று பலவந்தப்படுத்திக் கெடுத்துவிட்டான்.’’
ராஜுவின் உடல் ஒருநிலையிலில்லை. பதறிற்று, உள்ளம் கொதித்தது. நினைவுகள் தடுமாறின. எதிரே விதவை _ விபசாரி. தனக்குச் சொந்தமான சித்திரம். எவனோ சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டான். வெறிகொண்ட இதயத்திலே ஓர் உருவம் படமாகத் தோன்றிற்று. வெண்ணிறத் தாடி. புன்னகை பூத்த முகம். அதன் வாய் ஏதோ சொல்லிற்று. உற்றுக்கேட்டான்.
ராஜு நீ ஒரு சுயமரியாதைக்காரன், பகுத்தறிவுவாதி, உலகத்தின் ஊழல்களை உணர்ந்தவன். அதற்காகவே உழைப்பவன்.
“ஆம், நான் ஒரு பகுத்தறிவுவாதிதான். பைத்தியக்காரி, இதற்காகவா தற்கொலை? உன்னைக் கெடுத்தவனுக்கல்லவா அந்தத் தண்டனை? உன் கழுத்தில் ஒரு கயிறு இருந்திருந்தால் நீ செய்த தவறு மறைந்து போயிருக்கும். ஏன், நீயே அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டாய். உள்ளம் ஒருவனிடம் இருக்க உடலை மட்டும் எவனோ ஒருவனிடம் ஜாதி, சாத்திரங்கள் பேரால் ஒப்படைக்கத் தூண்டும் இந்தச் சமுதாய அமைப்பே விபசாரத்தின் ஊற்றுதானே! அதைத் திருத்துவோம். தோழர்களாக அல்ல, வாழ்க்கைத் துணைவர்களாக!’’ உணர்ச்சி தொனிக்க அவளிடம் பேசினான்.
கவிழ்ந்திருந்த அவள் தலை நிமிர்ந்தது. தளர்ந்திருந்த அவன் கைகள் அவளைப் பற்றின. சந்திரன் அப்போது தான் கண்களைத் துடைத்துக் கொண்டு விழித்தெழுந்தான். இந்தக் காட்சியைக் கண்டான்.
“அய்யோ, சகுனம் சரியில்லையே, அழைத்து வா, குருதேவரை’’ என்றலறினான்.
குரு வந்தார்.
“ஈதென்ன ஸ்வாமி புறப்படும்போது அபசகுனம்’’ என, அழுதான்.
குரு சொன்னார்: “விதவையாகவே இருந்திருந்தால் நீ சொன்னது சரிதான். ஆனால், நீ, விழிப்பதற்கு முன்னாலேயே அவள் விழித்துவிட்டாள். இப்போது அவள் சுமங்கலி. ஆகையால் இது சுபசகுனந்தான்.
கிளம்பினான் சந்திரன் மேலே, மற்ற “தூங்குமூஞ்சி’’களையுந் தட்டி எழுப்பி இன்பத்தை அவர்கள் வாழ்வில் அள்ளித் தெளிக்க!