உடல் நலம் : குடல் புண்ணா?

பிப்ரவரி 16-28 2021

பழைய சோறு போதும்.. அறுவை சிகிச்சை வேண்டாம்!

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார்.

பழைய சோறு

குடல் புண்ணாகி (Ulcer) அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குடல் அழற்சி தற்போது பரவலாக 100க்கு 30 பேரிடம் காணப்படுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா நமது உடலின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படுகிறது. விட்டமின் கே, விட்டமின் பி 12 ஆகியவற்றை அளிப்பதோடு, இன்சுலின் சுரப்பையும் சீர்படுத்தும் தன்மை கொண்டவை அந்த பாக்டீரியாக்கள்.

ஆண்டிபயாடிக் பயன்பாடு, குடல் புழு, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை காரணமாக இந்த பாக்டீரியாக்கள் அழிந்து போகலாம். இதனால் வயிற்றுப்போக்கு முதல் தீவிர வயிறு வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படக் கூடும். ஆங்கில மருந்துகள் முதல் அறுவை சிகிச்சை வரை நோயின் தீவிரம் பொருத்து செய்யப்படும்.

பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் முட்டை, சிக்கன் சாப்பிடலாமா..?

குடல் சம்பந்தமான இந்தக் கோளாறுகளுக்கு பழைய சோறு பேருதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார். நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துடன் சேர்த்து பழைய சோறும் கொடுப்பதால் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் தெரிவிக்கிறார்.

பழைய சோறு சுற்றுச்சூழலில் உள்ள பாக்டீரியாவை எடுத்துக் கொள்ளும். அவைதான் உடலுக்கு தேவை. மண் பானையில் பழைய சோறு செய்தால் நல்ல பலன் கொடுக்கும். கடந்த நான்கு வருடங்களாக அல்சர் என வருபவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில்லை. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க மூன்று ஆண்டு கால ஆய்வு 2.7 கோடி செலவில் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நோயாளிகள் மட்டுமல்லாமல் துறையில் உள்ள மருத்துவர்களும் பழைய சோறு சாப்பிட ஆரம்பித்துள்ளனர். ஓராண்டுக்கு மேலாக தானும் தன் குடும்பத்தினரும் தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு வருவதாக மருத்துவர் அமுதன் கூறுகிறார். தன் மனைவிக்கு ஏற்பட்ட குடல் அழற்சி சீராகியிருப்பதாகவும், தனக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும், பழைய சோற்றில் எவ்வளவு பாக்டீரியா உள்ளது என்பதை துல்லியமாகக் கண்டறியும் கருவி கொண்டு இந்த ஆய்வு மார்ச் மாதம் முதல் நடத்தப்படும். கடல் பகுதி, மருத்துவமனை, கிராமப்புறம் என வெவ்வேறு இடங்களில் பழைய சோறு தயாரிக்கும் போது பாக்டீரியா அளவு எவ்வளவு இருக்கும் என கணக்கிடப்படும். வெவ்வேறு வகைகள் அரிசி பயன்படுத்தப்பட்டு அதன் விளைவுகளும் ஆய்வு செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *