திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் – வி.பி.சிங்
கி.வீரமணி
அமெரிக்காவிலுள்ள தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு “மாட்சிமைக்குரிய விருது’’ (Tamilnadu Foundation Excellence Award) ) வழங்கினர்.
அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளையின் மாட்சிமைக்குரிய விருதை குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் ஆசிரியரும் அறக்கட்டளை தலைவர் சி.கே.மோகனமும் இணைந்து வழங்குகின்றனர்
இவ்விழா 1.8.1995 அன்று காரைக்குடி செனாய் கலையரங்கில் அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் சி.கே.மோகனம் விருதையும், குன்றக்குடி கிராமத் திட்டத்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினர். இவ்விழாவில் உரையாற்றுகையில்,
“தந்தை பெரியாருடனும், அன்னை மணியம்மையாருடனும், என்னோடும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கொண்டிருந்த நட்பையும், அடிகளார் அவர்கள் தலையெழுத்து, மூடநம்பிக்கை பற்றிக் கூறிய கருத்துகளையும், அய்யா, அம்மா மறைவுக்குப் பிறகு அடிகளார் எங்களுக்கு எப்படி கவசமாக இருந்து செயல்பட்டார் என்பதையும் விளக்கிக் கூறினேன். விழாவில் பசும்பொன் மாவட்ட ஆட்சியர் ப.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் _ முன்னாள் நகர திராவிடர் கழகத் தலைவர் கரூர் வீரண்ணன் 10.8.1995 அன்று இரவு 11:00 மணிக்கு மறைவுற்றார் என்ற செய்தியைக் கேட்டு வருந்தினேன்.
பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு, ராமன் படம் எரிப்பு, தேசப்படம் எரிப்பு, மனுதர்ம சாத்திரம் எரிப்பு, ராவணலீலா உள்பட பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1957 நவம்பர் 26இல் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்தவர் _ முறுக்கிய மீசைக்காரர்!
கட்டுப்பாடும், துணிவும் மிக்க பெரியார் பெருந்தொண்டர், 1980 முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரின் மருத்துவ ஏற்பாட்டை கழகம் மேற்கொண்டிருந்தது.
கரூர் நகரம் பாரம்பரியமிக்க ஓர் இயக்கத் தூணை இழந்துவிட்டது என “விடுதலை’’யில் இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். இரங்கல் செய்தியும் அனுப்பினோம்.
சமூகநீதிப் பயணத்தின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளுவதற்காக டில்லிக்கு 10.8.1995 அன்று பயணம் மேற்கொண்டோம். அங்கு மத்திய நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சீதாராம் கேசரி அவர்களை இருமுறை சந்தித்து இடஒதுக்கீட்டில் விடுபட்டவற்றை செயல்படுத்த வற்புறுத்தினோம். சமூகநீதியில் ஆர்வம் மிகுந்த அமைச்சர் கேசரி அவர்கள் தந்தை பெரியாருக்கு டில்லியில் சிலை வைப்பது தொடர்பாக சமூகநீதி மய்யத் தலைவரும் சமதா கட்சித் தலைவருமான சந்திரஜித் யாதவ் அவர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தியதை எடுத்துக் கூறினார்.
இந்தப் பயணத்தின் அடுத்த சந்திப்பாக சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை அவரது இல்லத்தில் 12.8.1995இல் சந்தித்து ஒரு மணி நேரம் பல்வேறு கட்டப் போராட்டங்களையும், சமூகநீதி இயக்கம் அடுத்து செய்ய வேண்டிய முக்கிய பணிகளைக் குறித்தும் ஆலோசித்தேன். அப்போது வி.பி.சிங் அவர்கள் “சமூகநீதிக்கான இயக்கத்தினை பொதுவில் வளர்த்தாக வேண்டும். திராவிடர் கழகம் போல நானும் இயக்கம் நடத்தி, எல்லோரையும் இணைத்துப் போராடவே’’ விரும்புவதாகக் கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அடுத்ததாக மண்டல்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுவதற்கு முக்கிய பங்காற்றிய மத்திய கல்வி அமைச்சரான திரு.டி.பி.யாதவ் அவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்து, கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டோம்.
இறுதியாக 14.8.1995 அன்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு.கன்சிராம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். தொடர் பயணத்திலிருந்த நிலையிலும் திரு.கன்சிராம் அவர்கள் நான் சந்திப்பதை ஆர்வத்தோடு எதிர்கொண்டார். புதிதாகப் பொறுப்பேற்ற உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். மேலும், ஜூலை மாதம் லக்னோவில் தந்தை பெரியாருக்கு சிலை அமைந்ததற்கு நன்றி தெரிவித்து, சால்வை போர்த்தி, தந்தை பெரியார் பற்றிய ஆங்கில, இந்தி நூல்களை அளித்துப் பாராட்டினேன். அப்போது திரு.கன்சிராம் அவர்கள் செப்டம்பரில் மூன்று நாள்கள் “பெரியார் மேளா’’வை பெரிய அளவில் லக்னோவில் நடத்துவதற்கான திட்டத்தையும், அதில் நானும், கழகத்தினரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டிலிருந்து தனி ரயிலில் தமிழ் மக்களும், கழகத்தவரும் வரவேண்டுமென அன்புடன் அழைப்பு விடுத்தார். இந்த டில்லிப் பயணத்தில் _ சமூகநீதிப் பயணத்தில் அடுத்த கட்டம் குறித்து ஒருங்கிணைந்த தலைவர்களின் சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை திரும்பினோம்.
சென்னை சைதை வர்த்தகர் சங்கக் கட்டடத்தில் 15.8.1995இல் கழகத்தோழர் மு.இரா.இளங்கோ _ சு.கனிமொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவை தலைமையேற்று உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். இந்த மணவிழா ஆடிமாதம், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவாக நடைபெற்றது. அந்தப் பகுதியின் முக்கிய கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரச்சார சுற்றுப் பயணம் செய்தேன். அதன் ஒரு நிகழ்வாக 16.8.1995 அன்று மதுரை சுப.பெரியார்பித்தன் அவர்களின் புதிய இல்லத் திறப்பு விழாவில் கலந்துகொண்டேன். கழகப் பொறுப்பாளர்கள் ரயிலடியில் இருந்து, புதிய இல்லம் வரை சிறப்பான வரவேற்பினை செய்தனர். இல்லத்துக்குச் சென்ற என்னை பேராசிரியர் பெரியார் பித்தன் அன்போடு வரவேற்று ‘பெரியார் இல்லம்’ என்ற அவரது இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கச் செய்தார். அப்போது பெரியார் பித்தன் உரையாற்றுகையில், “தந்தை பெரியார் போட்ட பிச்சைதான் நான் இன்றைக்கு இந்த அளவு வசதியுடன் நல்ல முறையில் வீடு கட்டி சிறப்பாக வாழ்வதற்குக் காரணம். தந்தை பெரியார் இல்லையென்றால் நமக்கெல்லாம் இந்த வாழ்க்கையே இல்லை’’ எனப் பல கருத்துகளை உணர்ச்சி மேலிடப் பேசினார். மதுரை மாவட்ட செயலாளர் அழகர் _ சாந்தி ஆகியோரின் பெண் குழந்தைக்கு அன்புமணி எனப் பெயரிட்டேன். முதல் பையனுக்கு அவர் ‘வீரமணி’ என பெயரிட்டிருந்தார்.
திருச்சி மாவட்டம் காட்டூரில் 17.8.1995 அன்று மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பேரணியும், அறிவாசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. மக்களின் அறியாமையை அகற்றும் வண்ணம் நடைபெற்ற இப்பேரணியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ‘தீச்சட்டி இங்கே மாரியாத்தாள் எங்கே’’, தீச்சட்டி ஏந்துவதில் கடவுள் பக்தி இல்லை என மகளிரணித் தோழியர்களும், இளைஞரணித் தோழர்களும் குரல் எழுப்பி வீறு நடைபோட்டு வந்தனர். மாலையில், கழகத் தோழர்களின் பலத்த கரஒலி, வாழ்த்தொலி முழக்கங்களோடு தந்தை பெரியார் முழு உருவச் சிலையை பொத்தானை அழுத்தித் திறந்துவைத்தேன். சிலை அமைக்க இடம் ஒதுக்கித் தந்த கிராமத் தலைவர் ப.செகநாதன் அவர்களைப் பாராட்டி சால்வை அணிவித்தேன். ரவி _ தாமரைநாயகி ஆகியோருடைய மகனுக்கு பெரியார் செல்வன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தேன். அங்கு உரை நிகழ்த்துகையில்,
திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும்
பெரியார் பெருந்தொண்டர்கள்
“தந்தை பெரியாருடைய தத்துவம் தென்புலத்தைப் போல் வடபுலத்திலும் பின்பற்றப்படுவதையும், அண்மையில் டில்லிப் பயணத்தில் சமூகநீதித் தலைவர்களை சந்தித்ததையும், கழகம் ஆற்ற வேண்டிய பணிகளையும், லக்னோவில் ஒரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பேசுவதற்குச் சென்றபோது, அங்குள்ள பார்ப்பன அமைப்புகள் அய்யாவிற்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற அதே லக்னோவில் இன்றைக்கு அந்த மாநில அரசாங்கமே தந்தை பெரியாருக்கு சிலை அமைக்கப் போவதையும் எடுத்துக் கூறி நீண்டதொரு எழுச்சி உரையாக அமைந்தது.
தஞ்சை திலகர் திடலில் மாநில இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம், பிரச்சார ஊர்தி அளிக்கும் விழா 19.8.1995 அன்று தஞ்சையே அதிரும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளும் மாவட்ட பொறுப்பாளர்களால் சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. பிரச்சார ஊர்தி வழங்கும் நிகழ்வு துவங்குவதற்கு முன் மழையும் துவங்கியது. அப்போது கூடியிருந்த இலட்சோபலட்ச மக்கள் மழையையும் பொருட்படுத்தாது கலையாமல் கூட்டத்தில் கலந்து கொண்டது மிகப்பெரிய வியப்பை அளித்தது.
பிரச்சார ஊர்தியின் தங்கச் சாவியை குன்றக்குடி அடிகளார் வழங்க, பெற்றுக்கொள்கிறார் ஆசிரியர் உடன் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, மற்றும் பொறுப்பாளர்கள்
விழாவில் கலந்துகொண்ட குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளாருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றேன். பிரச்சார வேனுக்குரிய சாவியை தங்கத்தால் செய்து ஓர் அழகிய பேழையில் வைத்து, விழாக்குழுவின் சார்பில் குன்றக்குடி அடிகளாரின் கரத்தால் எனக்கு அளிக்கப்பட்டது. கழகப் பொறுப்பாளர்கள் தந்தை பெரியார் வாழ்க! ஆசிரியர் வாழ்க! என முழக்கங்களை முழங்கினர். விழாவில் உரையாற்றிய பொன்னம்பல அடிகளார்,
சோழங்நல்லூரில் தந்தை பெரியார் மருத்துவமனையை திறந்து வைக்கும் வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், ஆசிரியருடன் மாவட்டப் பொறுப்பாளர்கள்
“மேட்டுக்குடிகளின் கைக்கூலியாக இருந்த தமிழை சிம்மாசனத்தில் உட்கார வைத்துப் பார்த்தவர் தந்தை பெரியார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய செல்வம் ஆசிரியர் கி.வீரமணி’’ என வாழ்த்தினார். விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அமெரிக்க தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் மோகனம் அவர்களது உரையில்,
“ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு தனிப் பிறவி, புதிய விஞ்ஞானக் கல்வி வளர்ச்சிகளை, பெரியார் கல்வி நிறுவனங்களில் செயல்படுத்த அதிகமான முயற்சிகளையும், உழைப்பையும் செயல்படுத்துவதைக் கண்டு நாங்கள் அதிசயிக்கிறோம்’’ என பல கருத்துகளை எடுத்துக் கூறினார்.
நிகழ்வின் இறுதியாக உரையாற்றுகையில், “என் மீது பொழியப்பட்ட அத்துணை சிறப்புகளும் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களுக்கே உரியது. எந்தப் பொது மேடையிலும் என் துணைவியாருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதில்லை. என் பொது வாழ்வு பல வகையிலும் ஒளி விடுவதற்குக் காரணம் என் துணைவியார்தான்’’ என முதன்முதலாக அந்த ஊர்தி வழங்கும் விழாவில் பாராட்டி நன்றி தெரிவித்தேன். விழாவினை சிறப்பாக நடத்திய கழகத்தாருக்கு பாராட்டும், நினைவுப் பரிசையும் வழங்கி பெருமைப்படுத்தினோம்.
திருவாரூர் கழகப் பிரச்சார சுற்றுப் பயணத்தின்போது 19.8.1995 அன்று பி.ஆர்.எம்.வாசு நிவாசு திருமண அரங்கில் வெ.காமராசு _கி.வாசுகி ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினை வாசிக்கச் செய்து நடத்தி வைத்தேன். திருமணத்தின்போது கழகக் குடும்பத்தினர் மதி சித்தார்த்தன் _ சாந்தி ஆகியோரின் மகனுக்கு தமிழ்ச்செல்வன் என பெயர் சூட்டினேன்.
சூளமங்கலத்தில் 20.8.1995 அன்று நடைபெற்ற வேலாயுதம் _ சித்ராதேவி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று மணமக்களை உறுதிமொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன். விழாவில் கழகப் பொறுப்பாளர்களும், முன்னணி நிருவாகிகளும் பலரும் கலந்துகொண்டனர். மணமக்களுக்கு மூடநம்பிக்கையை மறந்து தன்னம்பிக்கையுடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
வேலாயுதம் – சித்ரா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்தி வைக்கும் ஆசிரியர் உடன் கழகப் பொறுப்பாளர்கள்
திருவாரூர் வட்டம் சோழங்கநல்லூர் கிராமத்தில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள “பெரியார் மருத்துவமனை’’ திறப்பு விழா 20.8.1995 அன்று மிகப் சிறப்பாக நடைபெற்றது. சுற்றுவட்டாரத்தில் 15 கி.மீ. தூரத்தில் மருத்துவ உதவி இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதியுறும் பகுதியாக இருந்து வந்த நிலையில், முதற்கட்டமாக ரூபாய் 5 லட்சம் செலவில் மருத்துவமனை கட்டப்பட்டது. தென் மாநிலப் பிரச்சார குழுத் தலைவர் பே.தேவசகாயம் அவர்கள் இம்மருத்துவமனை கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனை திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.மூர்த்தி, வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், பேராசிரியர் பி.சுப்பிரமணியம், பொறியாளர் வெங்கடேசன், டாக்டர் ரொவினா விக்டர் என முக்கிய பங்களிப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சுயமரியாதைச் சுடரொளி அந்தோணிசாமி
இம்மருத்துவமனை மூலம் 15 கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட விவசாய தொழிலாளர்களும், பழங்குடி மக்களும் பயன் பெறுவார்கள். இந்த மருத்துவமனை உருவாகியதில் முயற்சியும் பெரும்பங்கும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சக்கர வண்டியில் சென்ற நிலையிலும் இயக்கப் பணியையே முழு மூச்சாகக் கொண்டு செயல்பட்ட மறைந்த சோழங்கநல்லூர் “சுயமரியாதைச் சுடரொளி அந்தோணிசாமி’’ அவர்களையே சாரும். அவரது நினைவாக இம்மருத்துவமனை வளாகத்திற்கு “சுயமரியாதைச் சுடரொளி அந்தோணிசாமி வளாகம்’’ என பெயர் சூட்டினேன். கழகத்தினரின் சிறுதுளி பெருவெள்ளம் நிதியும் இதற்கு பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.
(நினைவுகள் நீளும்…)