இரா.முல்லைக்கோ, பெங்களூரு.
உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்திய ஆன்றோர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்களுக்கு அவர்களின் சாதனைகளைப் பாராட்டி மகிழ்வுறும் வகையில் பரிசும் விருதும் வழங்கிச் சிறப்பிப்பதை மரபாகக் கொண்டுள்ளனர்.
விருதுகளின் வகை: அரிய பெரும் விருதுகளாக நோபல் விருது, கின்னஸ் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்மசிறீ, பத்மபூசன் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விருதின் நோக்கம்: கலை, அறிவியல், இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச் சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களுக்கும் இவ்விருதை வழங்கும் வகையில் நவம்பர் 2011இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ‘பாரத ரத்னா’ என்பது ‘இந்தியாவின் இரத்தினம்’ எனப் பொருள்படும்.
விருதின் வடிவமைப்பு: 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய விருதின் பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் “பாரத ரத்னா’’ என்கிற சொல் தேவநாகரி எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கும்.
முதல் விருதாளர்கள்: 1954ஆம் ஆண்டு சட்டப்படி இவ்விருதை இறந்தவர்களுக்கு வழங்க இயலாது. இதனால்தான் அண்ணல் காந்தி அவர்களுக்கு வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
விருதும் விதியும்: 1955ஆம் ஆண்டு சட்டப்படி இறந்தவர்களுக்கும் இவ்விருதினை வழங்க வழிவகை செய்யப்பட்டது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற அன்னை தெரசாவுக்கு 1980 ஆண்டு விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியரல்லாதவர்களான கான் அப்துல் கபார்கானுக்கு 1987ஆம் ஆண்டிலும், மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கு 1990ஆம் ஆண்டிலும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
விருதாளர்கள்: ‘பாரத ரத்னா’ விருதை சி.இராசகோபாலாச்சாரியார், சி.வி.இராமன், சர்வபள்ளி இராதாகிருட்டினன், பகவான்தாஸ் விசுவேசுவரய்யா, ஜவகர்லால் நேரு, கோவிந்த் வல்லப் பந்த், தோண்டோ கேசவ் கார்வே, பிதான் சந்திர ராய், புருசோத்தம் தாசு தாண்டன், இராஜேந்திரப் பிரசாத், காதர் உசேன், பாண்டு ரவ்சாவாமன் காணே, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, வி.வி.கிரி, காமராசர், அன்னை தெரசா, வினோபாபாவே, கான் அப்துல்கபார்கான், எம்.ஜி.இராமச்சந்திரன், பி.ஆர்.அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, ராஜீவ்காந்தி, வல்லபபாய் பட்டேல், மொரார்ஜி தேசாய், அபுல்கலாம் ஆசாத், ஜே.ஆர்.டி.டாட்டா, சத்தியஜித்ரே, குல்சாரிலால் நந்தா, அருணா ஆசஃப் அலி, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, சி.சுப்பிரமணியம், ஜெயபிரகாஷ் நாராயண், இரவிசங்கர், அமர்த்தியா சென், கோபிநாத் போர்டோலாய், லதா மங்கேஷ்கர், பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி, சி.என்.ஆர்.ராவ், சச்சின் டெண்டுல்கர், மதன்மோகன் மாளவியா, அடல்பிகாரி வாஜ்பேயி, பிரணாப் முகர்ஜி, பூபேன் ஹஸரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர்கள் ஆவர். மேற்காணும் விருதாளர்களில் பெரும் பகுதியினர் விடுதலைப் போராளிகள், முதல்வர்கள், குடியரசுத் தலைவர், பாடகர்கள், திரைப்பட பின்னணியாளர் எனப் பலர் பெற்றுள்ளனர்.
இதழியல் கண்ணோட்டம்: ‘பாரத ரத்னா’ விருது எப்படி பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுகிறது என்பது குறித்து ‘தி பிரிண்ட்’ இணைய இதழின் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.
பிற்படுத்தப்பட்டோர்: பி.வி.நரசிம்மராவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கும் பின்னணியை ஆராய்வோம். பாரத ரத்னா விருது இதுவரை 46 இந்தியர்களுக்கும், 2 வெளிநாட்டினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த 46 இந்தியர்களில் பெரும்பாலோனவர்கள் பார்ப்பனர்கள். விருது வழங்கப்பட்ட 4 பேர்களில் 29 பேர்கள் பார்ப்பனர்கள், 5 பேர்கள் முஸ்லிம்கள், 4 பேர்கள் காயஸ்தர்கள், 3 பேர்கள் சூத்திரர்கள், தலித், பனியா, கட்ரி, பார்சி, கிறித்துவர் ஆகிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் தலா ஓரிரு விருதினைப் பெற்றுள்ளனர். கடைசியாக இந்த விருதைப் பெற்ற பூபேன் ஹஸரிகாவின் ஜாதி தெரியவில்லை.
பெண் விருதாளர்கள்: இந்த விருதைப் பெற்றிருக்கும் 4 பெண்களில் 3 பேர் பார்ப்பனர்கள். ஒருவர் கிறித்துவர். அதாவது, இந்திய மக்கள் தொகையில் நான்கு விழுக்காடுள்ள பார்ப்பனர்கள் இல்லாவிட்டால் இத்தனை பாரத ரத்னா விருது வழங்கியிருக்க முடியாது.
பார்ப்பனர் ஆதிக்கம்: இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் சூத்திரர்கள், தலித்துகள், ஆதிவாசிகள். ஆனால், 66 ஆண்டுகளில் இதுவரை மூன்று பேர்கள் மட்டுமே அந்த விருதினைப் பெற்றுள்ளனர். 18 விழுக்காடு தலித் மக்கள் தொகையில் சட்டம் இயற்றிய மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற ஒருவர் மட்டுமே அந்த விருதைப் பெற்றுள்ளார். ஆதிவாசி குடிமக்களில் ஒருவரும் அந்த விருதைப் பெற்றதில்லை. 1991இல் வல்லபாய் பட்டேலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக காமராசர், எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகிய இருவரும் சூத்திரர்கள் அந்த விருதைப் பெற்றனர். 1954இல் பாரத ரத்னா விருது வழங்கப்படுவது துவங்கியது. இராஜகோபாலாச்சாரியார், சி.வி.இராமன், சர்வபள்ளி இராதாகிருட்டினன் ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர்கள்.
மறைவுக்குப் பின் விருது: இந்த விருதை வழங்க எந்த வரைமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜவகர்லால் நேருவும், இந்திராகாந்தியும் தாங்கள் பிரதமராக இருக்கும் போதே விருதைப் பெற்றுக்கொண்டார்கள். அம்பேத்கருக்கும், வல்லபாய் பட்டேலுக்கும் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது வழங்கப்பட்டது.
‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றவர்களில் பலர் ஒரு புத்தகத்தைக் கூட எழுதியதில்லை. அந்த நேரத்தில் மத்தியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் நினைத்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதில் பாகுபாடு: அண்ணல் அம்பேத்கரும், நெல்சன் மண்டேலாவும் தீண்டாமையையும் ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடிய தலைவர்கள். சமூகநீதியில் நம்பிக்கை கொண்டிருந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் இருந்தபோதுதான் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரால் இயக்கப்படும் பா.ஜ.க. 1999, 2014இல் ஆட்சியில் இருந்த காலங்களில் பிஸ்மில்லாகான், பூபேன் ஹஸரிகா தவிர விருதைப் பெற்ற அனைவருமே பார்ப்பனர்கள். இதுவரை பொதுவுடைமை சித்தாந்தங்களைக் கொண்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு விருது வழங்கப்படவே யில்லை. காங்கிரஸ் கட்சி மதச்சார் பற்றவர்களுக்கு இந்த விருதை வழங்கி மகிழ்கிறதென்றால், பா.ஜ.க. பார்ப்பனர்களுக்கு வழங்கி மகிழ்கிறது. இதுபோல ஒரு ஜாதி மனப்பான்மையோடு செயல்படும் ஒரு நாடு முன்னேறவே முடியாது என்பது உறுதி. அரசு விருது வழங்குவதிலும் இத்தனை வேறுபாடுகளா?
தந்தை பெரியார் இந்தியாவுக்கு மட்டுமல்லாது உலகளாவிய பெரும் தலைவர். அவர் ஆற்றிய பணி உலகில் எவரும் ஆற்றவில்லை. பிரச்சார நேரமானாலும் பிரச்சாரப் பயணமானாலும், பல்துறைச் சிந்தனை வழங்கிய திறத்தினாலும் நுட்பத்தினாலும், இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றி திறத்தினாலும், தொண்டினாலும், புரட்சியாலும் என எல்லாவற்றிலும் பெரியாருக்கு நிகராக எவரும் சாதித்ததில்லை. ஆனால், அப்படிப்பட்டவருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படவில்லை. அடுத்தது அண்ணா, அவரது சாதனைகள் _ ஆட்சியில் மக்களுக்குச் செய்த தொண்டு ஏராளம். அண்ணாவைத் தலைவராகக் கொண்ட எம்.ஜி.ஆருக்குப் பாரத ரத்னா கொடுக்கப்பட்ட நிலையில் அண்ணாவுக்கு அளிக்கப்படவில்லை. கலைஞர் எழுத்து, பேச்சு, அரசியல், இலக்கியம், திரைத்துறை, ஆட்சித்துறை, இந்திய அரசியல் பங்களிப்பு என எத்தனையோ தகுதிகள் பெற்றிருந்த நிலையில் அவருக்கும் பாரத் ரத்னா கொடுக்கப்படவில்லை. பாரத ரத்னா விருதுக்கு என்ன அளவுகோல்? ஒன்று, பார்ப்பனராக இருக்க வேண்டும் அல்லது அரசியல் ஆதாயமிருக்க வேண்டும். விதிவிலக்காக சில தகுதியானவர்களுக்கு விருது வழங்கப்பட்டு இருக்கலாம். இப்படி அளிக்கப்படும் விருதுதான் இந்தியாவின் உயரிய விருது என்றால் வரலாறு பழிக்கும்! நகைக்கும்!