நூல் மதிப்புரை : பெரியார் பார்வையில் கடவுள்

பிப்ரவரி 01-15 2021

பொன்னீலன்

நூல்: பெரியார் பார்வையில் கடவுள்

ஆசிரியர்:  முனைவர் கருவூர் கன்னல்

வெளியீடு:  நாம் தமிழர் பதிப்பகம்,

 6ஏ-4, பார்த்தசாரதி கோயில் தெரு,

 திருவல்லிக்கேணி, சென்னை – 5.

 

பெரியார், தன் குடும்பத்தார் கட்டிய கோயிலின் தர்ம கர்த்தாவாகக் காலம் முழுதும் பதவி வகித்தவர். அவர் வசதிமிக்க குடும்பத்தைச் சார்ந்தவர். கோயில் தர்மகர்த்தா பதவி அவருக்கு வாரிசுரிமை முறையில் வந்து சேர்ந்த சொத்து.

ஆனால், அவர் பெரும் சிந்தனையாளர். எதையும் ஏன், எதற்காக, எனச் சிந்தித்துச் சீர்தூக்கி, உண்மையை நோக்கி அடி எடுத்து வைப்பவர். ‘அவர் பார்வையில் கடவுள்’ என்று சிறு நூலை முனைவர் கருவூர் கன்னல் அருமையாக எழுதியுள்ளார். அதில் பகுத்தறிவு, கல்வி, ஒற்றுமை, மனிதநேயம், சுய ஒழுக்கம் ஆகிய விழுமியங்களை மய்யக் கருத்துகளாகப் பதிவு செய்திருக்கிறார்.

1984இல் கிழக்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக அறிஞர்களின் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல நாட்டு அறிஞர்கள் அதில் கலந்து கொண்டார்கள். மதிய நேரம். அந்த மாநாட்டுக்கு வருகை புரிந்த அறிஞர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த இந்திய அறிஞர்களிடம் வால்டர் ரூபன் என்னும் மார்க்சியப் பேரறிஞர் ஒரு கேள்வி கேட்டார். இன்றைய இந்தியாவின் முன் உதாரணம் இல்லாத பேராளுமையாளர் யார்? என்பது கேள்வி. அதற்கு காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் என பல பதில்கள் சொல்லப்பட்டன. வால்டர் ரூபன் எந்தப் பதிலிலும் திருப்தியடையவில்லை. நீங்களே பதில் சொல்லுங்கள் என்றனர் இந்திய அறிஞர்கள்.

வால்டர் ரூபன் சொன்னார்: இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளாக ஒடுக்கி, அதன் வளர்ச்சியை முடக்கிவரும் வருணாசிரமம் என்னும் பெரு நோயைத் தன்னந்தனியாக எதிர்த்துப் போராடும் வீரர் பெரியார் ஒருவரே! அவர் முயற்சி இல்லையெனில், தமிழ்நாட்டிலும் வருணாசிரம தர்மம் பரவிவிடும். அதைப் பரவாமல் தடுத்த பெரும் வீரர் பெரியாரே! இந்த வகையில் அவருக்கு முன் உதாரணம் இல்லை. எனவேதான் அவரை முன் உதாரணம் இல்லாத பேராளுமை என்றார் வால்டர் ரூபன்.

அந்தப் பெரியார் கடவுளை எப்படிப் பார்க்கிறார் என்று முனைவர் கருவூர் கன்னல் ஒரு நூலை எழுதியிருக்கிறார். பார்ப்பனர்களின் வாக்கு வேத வாக்கு எனும் மூடமை ஒழிய வேண்டும் என்றும் பார்ப்பனர்களுக்குப் பொய்யே மூலதனம். கடவுளே வங்கி. சரடு விடுவதே தொழில் என்ற கண்டிக்கிறார் கருவூரார். ஜாதி ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கு ஆதாரமான இந்து மதம், இந்து மதக் கடவுள்கள், சாத்திர வேத இதிகாச புராணங்கள், இந்து மதப் பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும் என்று 1944 திசம்பரில் நடந்த அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் முழங்கினார் பெரியார் என்கிறார் கருவூரார்.

அது மட்டுமல்ல. தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளுக்குக் கோயில் எதற்கு? வாகனம்  எதற்கு? எனக் கேட்டுப் பல மேடைகளில் பேசினார் அவர் என்றும் விளக்குகிறார் கருவூரார்.

அவர் சொல்லுகிறார்; பெரியார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர். பிறர் மனம் புண்படவும் பேசமாட்டார். தன்மானம் இழந்து வாழும் தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டினார்.

வடகலை _ தென்கலை ஜீயர்கள் இடையே நடந்த கருத்து மோதலை வெளிநாட்டு நீதிபதி முன் கொண்டு சென்றனர் ஜீயர்கள். நீதிபதி இதை அறிந்தார். பிரச்சினை என்ன? கோயிலிலிருந்து வெளியே வரும் புனித நீரை யார் முதலில் பெற்றுக்கொள்ளுவது என்பதே! ஆங்கிலேயே நீதிபதிக்கு இந்தப் புனிதம் புரியவில்லை. “இரண்டு மடைகள் அமைத்து இரு குழுவினரும் பிடித்துக் குடியுங்கள்’’ என்று சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார் கருவூரார்.

இவ்வாறு பல செய்திகளைச் சொல்லி பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை அவருடைய தத்துவார்த்தச் சிந்தனையின் வெளிப்பாடே! அது அவருடைய முதன்மைக் குறிக்கோள் அல்ல என்கிறார் கருவூரார். அவருடைய முதன்மையான குறிக்கோள் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே என்கிறார் அவர்.

இந்து மதம் பிறவி சார்ந்த ஏற்றத்தாழ்வைச் சொல்வதால் இந்து மதத்தை அவர் எதிர்த்தார். ஆனாலும் அவர் ஒருபோதும் மதம் மாறவில்லை.

இம்மாதிரியான செய்திகளை ஆழமாகப் பரிசீலித்துப் பெரியார் பார்வையில் கடவுள் என்னும் நூலை உருவாக்கியுள்ளார் கருவூரார். நல்ல நூல். தமிழர்கள் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். இதைப் புதிய சிந்தனை விரும்பும் இளைஞர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *