நூல்: தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
ஆசிரியர்: முனைவர் கருவூர் கன்னல்
வெளியீடு: குறள்வீடு,3/3,பாரதிதாசன்நகர்,
கரூர்-639007.கரூர் மாவட்டம். பேசி:9952380033
விலை: ரூபாய் 80/- பக்கம்: 104
ஒரு புத்தகத்தில் தந்தை பெரியாரின் ஒட்டுமொத்தக் கருத்துகளையும், சிந்தனைகளையும் அடக்கிவிட முடியாது. தந்தை பெரியார் பற்றிய தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து புத்தக வடிவில் கொடுத்துள்ள ஆசிரியர் கருவூர் கன்னல் அவர்களின் அரும்பணி பாராட்டத்தக்கதாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகளின் மொத்த சாரத்தையும் அய்ந்து இயலுக்குள் ஓரளவுக்கு அடக்கியுள்ளார்.
ஒவ்வொரு இயலும் இன்றைக்கும் என்றைக்கும் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வியலைப் போதிக்கவல்லது. பெரியாரைப் பற்றி அவரே எழுதிய ‘நான் யார்?’ என்னும் ஒரு பகுதி மட்டுமே போதும் -_ அவரை இன்றைய இளைய சமுதாயம் புரிந்துகொள்ளவும், உள்வாங்கிச் செயல்படவும். அடித்தளமிடக்கூடிய சொற்பொழிவுகள் இதில் அடங்கி உள்ளன.
இந்தப் புத்தகத்தின் தலைப்பு ஒன்றே போதும் – புத்தகத்தின் அருமைகளை தமிழர்கள் உணர்ந்துகொள்ள. திராவிடத்தின் சுற்றுவட்டப் பாதை என்பது எப்போதும் தந்தை பெரியாரை மய்யமாகக் கொண்டது. இன்று நாட்டில் நிகழ்ந்துவரும் ஆணவக் கொலை, ஜாதி வெறிச் செயல், மதவாதப் போக்கு, பார்ப்பனர்களின் ஆதிக்கச் செயல்கள் போன்றவை தமிழ்நாட்டில் அடங்கி ஒடுங்கி இருப்பதற்கு தமிழ்நாடு பெரியாரைச் சுற்றிச் சுழல்கிறது என்பதுதான் உண்மை.
“புத்தருக்குப் பின்னர் ஜாதிகளை அழிக்கப் பாடுபட்ட ஒரே ஒருவர் நான்தானே எனப் பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார் தந்தை பெரியார்.’’ (பக்.94) இந்தப் பேட்டி ஒன்று மட்டுமே போதுமானது _ பெரியார், தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத கொள்கைப் பிடிப்பை உணர. புத்தக ஆசிரியர் ஆய்வுச் சொற்பொழிவுக்குப் பயன்பட்ட அறிஞர்களின் நூல் பட்டியலை பின் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வாசகர்களுக்கு மேலும் விரிவான வாசிப்புக்கு வழிவகுக்கும்.
– ச.குமார்