மஞ்சை வசந்தன்
உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தொன்மையான இனம் தமிழ் இனம். உலக மொழிகள் பலவற்றுக்கும் மூலமொழி தமிழ். உலகின் தொன்மையான பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் உரியவர்கள் தமிழர்களே!
தமிழர்களிடம் ஜாதியில்லை, மதம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை, பகுத்தறிவின் பாற்பட்ட பண்பாட்டுடன் கூடிய சிறப்பான, செம்மையான வாழ்வை வாழ்ந்தார்கள்.
ஆரியர் நுழைவால் அனைத்தும் பாழ்
கலப்பின்றி ஒரே இனமாய் தமிழினம் வாழ்ந்த பகுதியில், பிழைப்புக்காக ஆரியர்கள் நுழைந்து பரவிய பின், தமிழரின் அனைத்தும் அழிக்கப்பட்டு, ஆரிய ஆதிக்கத்திற்கு உரியவை நடப்புக்கு வந்தன.
தமிழனின் மொழியான தமிழ், அவர்களின் வாழ்க்கை முறை, அறிவு, கலை, பண்பாடு, நாகரிகம் என எல்லாம் கெட்டன. ஜாதியும், கடவுளும், மூடநம்பிக்கைகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும், புராணப் பண்டிகைகளும் சமஸ்கிருதமும் புகுத்தப்பட்டன.
தமிழர்களின் மீது ஆரிய பார்ப்பனர்களின் மேலாதிக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து, ஆட்சியிலிருந்த மன்னர்களின் ஆதரவோடு, அனைத்திலும் அவர்களின் ஆதிக்கம் நடைமுறைக்கு வந்தது.
அதன் விளைவாய் அறிவார்ந்த தமிழர் விழாக்கள் வழக்கொழிய, மூடப் புராணக் கதைகளின் அடிப்படையிலான அறிவுக் கொவ்வாத பண்டிகைகளை மக்கள் கொண்டாடத் தொடங்கி, அவை ஆழப் பதிந்து வளர்ந்தன.
தீபாவளி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூசை, விஜயதசமி, நவராத்திரிப் பண்டிகை என்று வருடம் முழுதும் மூடப் பண்டிகைகளை மக்கள் கொண்டாடும் அவலம் வந்தது.
ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தப்பிப் பிழைத்தது பொங்கல் பண்டிகை மட்டுமே! அதையும் மகரசங்கராந்தி என்று மாற்றி மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர்.
மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர். போகி என்பதை காலப்போக்கில் போக்குதல் என்று பொருள் கொண்டு, வீட்டிலுள்ள பழைய பொருள்களைக் போக்குதல் என்று முடிவு செய்து, பழைய நூல்கள் உள்பட எல்லாவற்றையும் தெருவிலிட்டுத் தீ வைத்தனர். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொளுத்தப்படுவதால் காற்று மண்டலமே கரும்புகை மண்டலமாக மாறி, மூச்சுக் கோளாறுகளையும், மற்றக் கேடுகளையும் உருவாக்கி வருகிறது.
ஆரியப் புரட்டுகள்
தமிழர்களின் தலையாய தொழில் வேளாண்மை. ஆடியில் உழவைத் தொடங்கி, விதை விதைத்து, நாற்று நட்டு, ஆறு மாதங்கள் பயிர் வளர்த்து தை மாதத்தில் நெல் அறுவடை செய்து பயன் பெறுவர். அப்போது அந்த விளைவுக்குக் காரணமான காரணிகளை நன்றியுடன் கொண்டாடினர்.
விளைவுக்குக் காரணமான மழை, சூரியன், மாடுகள், உழைப்பாளர்கள் ஆகிய நான்கு காரணிகளுக்கும் நன்றி காட்டும் விழாக்களை நான்கு நாள்கள் கொண்டாடினர்.
மழைக்கான நாளை போகி ஆக்கினர்
மழைத் திருநாள் கொண்டாடும் அன்றைய தினம் மழை பொழியாது என்பதால், மழையின் அடையாளமாக ஒரு செம்பில் தண்ணீர் வைத்து அதற்கு மரியாதை செலுத்தினர் தமிழர்கள்.
ஆனால், ஆரியப் பார்ப்பனர்கள் இந்த அர்த்தமுள்ள விழாவில் தங்கள் பண்பாட்டை நுழைத்தனர். மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்கு போகி என்று ஒரு பெயர் உண்டு. எனவே, மழைக்குக் காரணமான இந்திரனைக் குறிக்கும் போகி என்ற பெயரை மழைத் திருநாளுக்கு மாற்றாக நுழைத்து, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
மழைக்கதிபதியாக இந்திரன் இருக்க, கரிய மாலை (திருமாலை), மழையின் பலன் பெற்றதற்காக வழிபட மக்களுக்குக் கட்டளை யிட்டதால், வருணன் கோபம் கொண்டு பெரும் மழையைப் பெய்யச் செய்ய, இதனால் உயிரினங்கள் மழையால் பாதிக்கப்பட, கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய் பிடித்துக் காக்க, இந்திரன் தன் தோல்வியை ஒப்பி வெட்கிக் குனிந்து நிற்க, இந்திரனை மன்னித்து அவனுக்கும் சிறப்பு செய்ய, சங்கராந்திக்கு முதல் நாள் இந்திரன் என்கிற போகிக்கு போகிப் பண்டிகை கொண்டாட கிருஷ்ணன் கட்டளையிட்டான். இதுவே போகி என்று புராணக் கதையைக் கூறி, மழைத் திருநாளை போகிப் பண்டிகையாக்கினர்.
ஆக, ஆரியப் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பால், அர்த்தமுள்ள மழைப் பண்டிகை, போகிப் பண்டிகையாக மாற்றப்பட்டு, புகைப் பண்டிகையாகி கேடு பயக்கிறது.
சூரியத் திருநாளை மகர சங்கராந்தியாக மாற்றிய சதி:
பொங்கல் திருநாள், “பெரும் பொங்கல்’’ என்று தமிழர்களால் அழைக்கப்படும். இந்த நாள் தமிழரின் முதன்மையான திருநாளும் ஆகும்.
காரணம், அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகிறது. தமிழர்கள் நாள், மாதம் ஆண்டுக் கணக்கீட்டை உலகுக்கு முதன்முதலில் இயற்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டுக் கொடுத்தவர்கள்.
காலையில் சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற ஆகும் காலம் ஒரு நாள்.
மாதம் என்பதற்குத் திங்கள் என்று ஒரு சொல் உண்டு. திங்கள் என்றால் நிலவு. நிலவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் திங்கள் என்ற பெயர் மாதத்திற்கு வந்தது.
முழுநிலவு தோன்றி மீண்டும் முழு நிலவு தோன்ற ஆகும் காலம் ஒரு மாதம்.
அதேபோல் ஆண்டு என்பது சூரியன் இருப்பை வைத்துத் தமிழர்களால் கணக்கிடப்பட்டது. சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடகோடி முனைக்குச் செல்ல ஆறு மாதம். அது மீண்டும் தென்கோடி முனைக்கு வர ஆறுமாதம். ஆக, தென்கோடி முனையில் தோன்றும் சூரியன் மீண்டும் தென்கோடி முனையை அடைய ஆகும் காலம் ஓர் ஆண்டு என்று கணக்கிட்டனர். (சூரியன் நிலையாகவுள்ளது என்பது அறிவியல் உண்மை. ஆனால் பார்வைக்கு அது இடம் மாறுவதாய்த் தோன்றுவதை வைத்துக் கணக்கிட்டனர்.)
உலகில் முதன்முதலில் ஆண்டுக் கணக்கீட்டை சூரியன் இருப்பை வைத்துக் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். பின் இதனைப் பின்பற்றியே ஆங்கிலேயர்கள் ஆங்கில ஆண்டை அமைத்தனர்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.
ஆனால், இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய இத்தமிழ்ப் புத்தாண்டை சித்திரை முதல்நாள் என்று மாற்றி, அதற்கு ஒரு புராணக் கதையை எழுதிச் சேர்த்து, தமிழ்ப் பண்பாட்டை ஒழித்து, ஆரியப் பண்பாட்டை, தமிழ்ப் புத்தாண்டிலும் புகுத்தினர்.
அதாவது, நாரதர் கிருஷ்ணனைப் பார்த்து, “நீர் அறுபதினாயிரம் கோபிகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’’ என்று கேட்டார். அதற்கு கண்ணன், “நான் இல்லாப் பெண்ணை உனக்கு உரியதாக்கிக் கொள்’’ என்று கூற, நாரதர் எல்லா வீடுகளிலும் சென்று பார்த்தபோது, கண்ணன் இல்லாத வீடு கிடைக்காததால், கண்ணன் மீதே காமங்கொண்டு, “நான் பெண்ணாய் மாறி உங்களைப் புணர வேண்டும்’’ என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்த, “யமுனையில் குளித்துவிட்டு வாருங்கள்’’ என்று நாரதரைப் பார்த்து கண்ணன் கூற, யமுனையில் குளித்த நாரதர் அழகிய பெண்ணாக மாறினார். அந்த அழகில் மயங்கிய கண்ணன், பெண்ணாயிருந்த நாரதரை அறுபது ஆண்டுகள் புணர்ந்து, அறுபது பிள்ளைகளைப் பெற்றார். அவர்களே, பிரபவ தொடங்கி அட்சய முடிய அறுபது ஆண்டுகள் என்று ஆபாசமான அருவருப்பான ஒரு புராணக்கதையைச் சொல்லி, இவற்றைத் தமிழாண்டுகள் என்றனர். தமிழே இல்லாத இந்த அறுபது ஆண்டுகளைத் தமிழ் ஆண்டு என்று திணித்தனர்.
அடுத்து, அறிவியல் அடிப்படையில், வேளாண் விளைச்சலுக்கு முதன்மைக் காரணமாய் இருக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பொங்கல் திருநாளை மகரசங்கராந்தி என்று மாற்றினர் ஆரியப் பார்ப்பனர்கள்.
“சூரியன் தனுசு இராசியில் சஞ்சரிக்கும் காலம். இது தேவர்களுக்கு விடியற்காலம். மகா சங்கிரமே சக்தி எனும் சக்தி தட்சிணாயணம் ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த நிலையில், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கியதனால், தை மாதம் முதல் நாள், அக்காலத்து விளைந்த பொருள்களைக் கொண்டு சூரியனை வழிபட்டனர். இதுவே மகர சங்கராந்தி என்று கூறி, பொங்கல் திருநாளை மகா சங்கராந்தி யென்று மாற்றினர்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்
வேளாண் உற்பத்திக்கு மழை, சூரியன் இவற்றிற்கு அடுத்தது மாடுகள் கட்டாயம்.
காரணம், ஏர் உழப் பயன்படுவதோடு, வேளாண்மைக்குத் தேவையான உரம் கிடைக்கவும் மாட்டுக் கழிவுகள் பயன் படுகின்றன என்பதாலும், மாடுகள் உழவனின் தோழன் என்பதாலும், உழவனின் செல்வம் என்கிற சிறப்பாலும் மாடுகளுக்கு ஒரு திருநாள் கொண்டாடினர் தமிழர். இது பண்பாட்டின் அடிப்படையில் நன்றி செலுத்தும் நோக்கில், உதவியாய் அமைந்தவற்றிற்கு உரிய சிறப்புச் செய்யும் உணர்வில் உருவாக்கப்பட்டது. மாட்டுப் பொங்கல் தமிழரின் நன்றி கூறும் பண்பாட்டின் அடையாளம். மாடுகளிலே குறிப்பாக கருப்பு நிற எருமை மாடுகள் தான் மிகவும் பயன் தருபவை.
ஆனால், இதையும் புராணக் கதையைப் புகுத்தி புரட்டு வேலை செய்து மாற்றினர். இந்திரன் கோபத்தால் கடும் மழை பெய்யச் செய்ததால் மாடுகள் மிகவும் சிரமப்பட்டதாகவும், பின்னர் மனம் மாறி இந்திரன் மழையை நிற்கச் செய்ததால், மறுநாள் மாடுகள் கட்டு அவிழ்த்து விடப்பட்ட மகிழ்ச்சியில் துள்ளிப் பாய்ந்து ஓடினவென்றும், அதுவே மாட்டுப் பொங்கல் ஆனது என்றும் மாட்டுப் பொங்கலின் மாண்பிலும் மடமையைப் புகுத்தினர். தமிழர் பண்பாட்டில் ஆரியப் பண்பாட்டைத் திணித்தனர்.
அடுத்த நாள் கொண்டாடப்படும் காணும் பொங்கல் என்பது வேளாண் உற்பத்திக்காக உழைக்கின்ற உழைப்பாளர்களுக்கு நன்றி சொல்லவும், அவர்களைச் சிறப்பிக்கவும் தமிழர்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படுவதாகும்.
அன்று உழைப்பாளிகள், நில உரிமையாளர்களைச் சென்று கண்டு, நெல், காய்கறி, துணி போன்றவற்றைப் பெறுவர். நிலத்தின் உரிமையாளர்களும் உழைத்து உற்பத்தியைப் பெருக்கும் உழைப்பாளிகளை மகிழ்விக்க புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, கரும்பு என்று பலதும் வழங்கிச் சிறப்பிப்பர்.
இப்படி உழைப்பாளிகளைச் சிறப்பிக்கத் தமிழர்கள் உருவாக்கிய உழைப்பாளிப் பொங்கல் என்னும் காணும் பொங்கலையும் புராணக் கதைப்புக் கூறிப் புரட்டினர்; தங்கள் பண்பாட்டைப் புகுத்தினர்.
கோபங் கொண்டு இந்திரன் பொழியச் செய்த பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை நின்ற பின் ஒருவரையொருவர் கண்டு பாதிப்பு பற்றி விசாரித்தனர். அதுவே காணும் பொங்கல் என்று கதை கட்டி, காரணம் கூறினர். காணும் பொங்கலிலும் ஆரியப் பண்பாட்டை, புராண மடமையைப் புகுத்தினர்.
ஆண்-பெண் உறுப்பு வழிபாட்டை சிவ வழிபாடாக்க லிங்க புராணம் புனைந்ததுபோல, உற்பத்திக் காரணிகளான மழை, சூரியன், மாடு, உழைப்பாளர் என்ற நான்கு காரணிகளுக்கு நன்றி கூறி, அவற்றைச் சிறப்பிக்கக் கொண்டாடப்பட்ட பகுத்தறிவின் பாற்பட்ட தமிழரின் பண்பாட்டு விழாவை, புராணக் கதைகளைக் கூறி தங்கள் பண்பாட்டுப் பண்டிகையாகத் திரித்து, தமிழர் பண்பாட்டைச் சீரழித்தனர்.
சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் நாளே தமிழ் ஆண்டின் பிறப்பு. தமிழரின் புத்தாண்டு அன்றுதான். அந்த நாளே பெரும் பொங்கல் எனப்படும் சூரியத் திருநாள்.
புரட்டுகளைப் புறந்தள்ளி புத்தியுடன் கொண்டாடுவோம்!
மழை, சூரியன், மாடுகள், உழைப்பாளர்கள் ஆகிய இந்த நான்கு காரணிகளுக்கு நன்றி சொல்ல கொண்டாடப்படும் விழாவை இப்படி மூடப் பண்டிகைகள் ஆக்கி நம் பண்பாட்டை ஆரியப் பார்ப்பனர்கள் அழித்தனர்.
தந்தை பெரியாரின் திராவிட இயக்கம் தொடங்கப்பட்ட பின் தமிழ் உணர்வும், தமிழர் உணர்வும் ஊட்டப்பட்டதன் விளைவாகவும், பொங்கல் பண்டிகையின் உண்மையான தத்துவங்கள் விளங்கிவிட்டதாலும் தமிழர்கள் விழிப்புப் பெற்றனர். பொங்கலை நம் பண்பாட்டு விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர்.
பொங்கலை நன்றி விழாவாக மட்டுமல்லாமல் அதை ஆக்கபூர்வமான விழாவாகவும் நாம் கொண்டாட வேண்டும்.
மழைத் திருநாள்:
மழைத் திருநாள் கொண்டாடுகையில், மழைவளம் பெருக்க என்ன செய்யலாம்; மரங்கள் வளர்க்க என்ன செய்யலாம்; அணைகள் எங்கு கட்டலாம், ஏரிகள், குளங்கள் எங்கு வெட்டலாம், இருக்கும் நீர்நிலைகளை எப்படி தூர்வாரி சீர் செய்யலாம்? என்பன குறித்த கருத்தரங்குகள், குளம் வெட்டும், தூர்வாரும் பணிகள், மரம் நடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.
சூரியத் திருநாள்
சூரியனுக்குப் பொங்கல் வைப்பதோடு நின்று விடாமல், சூரிய சக்தியை எப்படியெல்லாம் பயன்படுத்தி உலக மாசைக் கட்டுப்படுத்தலாம்; சூரிய சக்தியால் மின் உற்பத்தி பெருக்குதல்; வாகனங்கள் ஓட்டுதல் போன்ற புதிய ஆய்வு அரங்குகளை அன்று நடத்தலாம். சூரிய சக்தியைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரப்பலாம்.
மாட்டுப் பொங்கல்
மாடுகளைக் குளிப்பாட்டி, உணவு ஊட்டுவதோடு நில்லாமல், கால்நடை வளம் பெருக்குவது, கால்நடை பாதுகாப்பு, பால் வளம் பெருக்குதல் போன்ற முயற்சிகளை, திட்டங்களை, கருத்தரங்குகளை அன்று நடத்தலாம். அதன்வழி நடக்கலாம்.
உழைப்பாளர் திருநாள்
மே தினம் கொண்டாடப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே உழைப்பாளர் விழாக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். காணும் பொங்கல் என்னும் பெயரில் உழைப்பாளர்களுக்குச் சிறப்புச் செய்தனர். இந்த நாளில் உழைப்பாளிகளின் நலம், அவர்களின் வருவாய் மேம்பாடு, வேலை நேரம் வரையறுத்தல், சம்பள நிர்ணயம், தொழிலாளர் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு, வாழ்க்கைத் தர மேம்பாடு இவற்றிற்கான திட்டங்கள், செயல்கள் பற்றி அன்று கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொழிலாளர் நலம் காக்கலாம். இப்படியாக, புரட்டுகளைப் புறந்தள்ளி பொருள் பொதிந்த விழாவாகப் பொங்கலைக் கொண்டாட வேண்டும்.
திராவிடர் திருநாள்
திராவிடர் திருநாள் என்று நாம் கூறும்போது தமிழர் திருநாள் என்று ஏன் கூறக் கூடாது என்கின்றனர் சிலர். தமிழர் என்று சொல்லும்போது தமிழ் இனத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் நம்மை விட்டு விலக்கப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக இன்றைய கேரளா அன்றைய சேரநாடு. அங்கு வாழ்பவர்கள் தூய தமிழர்கள். ஆனால், தமிழ் சமஸ்கிருதத்தோடு பின்னாளில் கலந்து மலையாளம் உருவான பின் அவர்களை மலையாளி என்று அழைக்கிறோம். மொழி திரிந்து மாறினாலும் அவர்கள் தமிழர்கள்தானே! அப்படித்தான் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களும் தூய தமிழர்களே! ஆரியம் போன்ற பிற மொழிக் கலப்பால் தமிழ் தெலுங்காக, கன்னடமாகத் திரிந்தது. மொழி மாறினாலும் அவர்கள் தமிழர்கள்தானே!
நதிநீர்ச் சிக்கல்களை வைத்து நம் இனத்தவரை ஒதுக்கக் கூடாது. வாய்க்கால் தகராறு உடன் பிறந்தோரிடமும் உண்டு. அதனால் அவர்கள் அண்ணன் தம்பி இல்லை என்றாகி விடுமா?
ஆக, தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் நம் இன மக்கள். அவர்களையும் நாம் கோத்துச், சேர்த்து ஒரே இனம் என்று காட்டவே, நம் இனத்தின் வலுவை சிதையாது காக்கவே திராவிடர் என்று அழைக்கிறோம். திராவிடர் என்னும்போது அவர்கள் நம்மோடு சேர்க்கப்படுகிறார்கள். எனவேதான் பொங்கலைத் திராவிடர் திருநாள் என்கிறோம். திராவிடர்கள் அனைவரும் அக்காலத்தில் பொங்கலைக் கொண்டாடிய தமிழர்கள்தானே! எனவே, இனத்தைக் குறிக்கும்போது திராவிடர் என்று கூறுவதும், சேருவதுமே அறிவின் பாற்பட்ட செயல் ஆகும். எனவே, பொங்கல் திருநாளை திராவிடர் திருநாளாகக் கொண்டாடி, சிறப்பும் பெருமையும் மகிழ்வும் கொள்வோம்! இன ஒற்றுமையை, இனத்தின் பண்பாட்டைக் காப்போம்!
பொங்கல் விழாவான திராவிடர் திருநாளை ஒரு சம்பிரதாய விழாவாகக் கொண்டாடாமல், தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை மீட்டு எடுக்கின்ற கலாச்சார விழாவாக, மூடநம்பிக்கை ஒழிந்த பகுத்தறிவு விழாவாகக் கொண்டாடி மகிழ்வோம்!