ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தாளவாடிக்கு அருகில் இருக்கும் சோளகர்தொட்டி கிராமத்தில் சோளகர் இன மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். வனத்தையும் விவசாயத்தையும் தவிர வெளியுலகமே அறியாத இவர்கள் கல்வி வெளிச்சம் பரவாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அந்தப் பகுதியிலிருந்து நம்பிக்கையுடன் சில பெண்கள் கல்லூரிப் படிப்பு வரை முன்னேறி வந்திருக்கின்றனர். அவர்களில் எம்.ஃபில் முடித்துள்ள மீனாவும், பி.ஹெச்டி படித்துவரும் ரோஜாவும் சோளகர் இனத்தில் நம்பிக்கையூட்டும் அத்திப்பூ அடையாளங்கள். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் எம்.ஃபில் படிப்பை முடித்துள்ள மீனா கூறுகையில்,
“என் அம்மா காலத்துல பருவத்துக்கு வரும் முன்பே பெண்களுக்குக் கல்யாணம் பண்ணிடுவாங்க. அந்த நிலை இப்போ ஓரளவுக்கு மாறியிருக்கு. இந்த நிலைமையை மாற்ற நல்லா படிச்சு எங்க சமூக முன்னேற்றத்துக்கு உதவணும்னு நினைச்சேன். என் பெற்றோரும் நிறைய பொருளாதாரச் சிரமங்களுக்கு இடையே கூலி வேலை செஞ்சுதான் மூணு மகள்களையும் படிக்க வைத்தார்கள், எங்களை வெளிவேலைக்கு அனுப்புனதில்லை, படிக்கிறது மட்டுமே உங்க வேலை அதைச் சரியா செஞ்சு ஒசத்தியான வேலைக்குப் போங்கன்னுதான் சொல்வாங்க.
பொட்ட பிள்ளைங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திடுங்கன்னு சொல்லும் ஊர்க்காரங்க பேச்சைக் கண்டுக்காம, எங்க விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தினார்கள். எங்க சோளகர்தொட்டி கிராமத்திலிருந்து மூணு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியிலதான் பத்தாவது வரைபடித்தேன். பிறகு ஊட்டியில் ப்ளஸ்டூ, ஈரோடு மற்றும் உடுமலையில் எம்.எஸ்ஸி முடிச்சேன். பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் படிச்சேன் ஹாங்காங்ல பி.ஹெச்டி பண்ண வாய்ப்புக் கிடைச்சது. கொரோனாவால் அந்த முடிவை மாத்திட்டு, இந்தியாவிலேயே படிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.
எங்க சமூக மக்கள் பொருளாதார ரீதியாக ரொம்பவே சிரமத்துலதான் இருக்காங்க. ஆடு, மாடு வளர்ப்புலதான் குடும்பம் நடக்குது. என்னைப் பார்த்து தங்கைகளும் காலேஜ் படிச்சாங்க, பெரிய தங்கச்சி எம்.ஏ., முடிச்சிட்டு, பி.ஹெச்டி. படிக்கப் போறா, சின்ன தங்கச்சி எம்.எஸ்ஸி படிக்கிறா, வெளியுலகமே தெரியாத எங்க இன மக்களிலிருந்து எங்க பெற்றோர் மூணு பெண் பிள்ளைகளையும் படிக்க வைக்கிறது பெரிய விஷயம். நாங்க நல்ல வேலைக்குப் போய் மதிப்புடன் இருக்கணும்ங்கிறதுதான் அவங்க ஆசை. அதை நிறைவேத்துறதுதான் எங்க கடமை’’ என வைராக்கியத்துடன் கூறிய மீனா, தங்கை ரோஜாவை அறிமுகப்படுத்தினார்.
ரோஜா கூறுகையில், “இப்ப வரை ரேஷன் அரிசி சாப்பாடுதான், விவசாயக் கூலி வேலையில் நிரந்தர வருமானம் இல்லாமல் சிரமப்பட்டாலும் எங்க பெற்றோர்கள் கல்விச் செலவுக்காக எப்படியாவது பணத்தைத் திரட்டிப் படிக்க வைத்து விடுகின்றனர். சத்தியமங்கலத்துல ப்ளஸ்டூ முடிச்சேன். ஈரோடு அரசு கல்லூரியில் எம்.ஏ. முடிச்சுட்டு, பேராசிரியர் மணி சார் ஊக்கத்தால் அங்கேயே ரெகுலர்ல பி.ஹெச்டி பண்றேன். எங்க சமூகத்துல பசங்க யாரும் காலேஜ் முடிக்கலை. மீனாவும் என்னையும் தவிர, இன்னும் சிலர் இப்போதான் படிக்கத் துவங்கியுள்ளனர். என்னுடைய ஆய்வுத் தலைப்பும் எங்கள் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக, ‘தமிழக – கர்நாடக அதிரடிப் படையினரின் வருகைக்கு முன்பும் பின்பும் சோளக மக்களின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்’ பத்தி ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் முடிப்பேன். எங்கள் குடும்ப நிலையையும், எங்கள் மக்களின் நிலையையும் உயர்த்தணும்’’ என நம்பிக்கை உறுதியுடன் கூறுகிறார் ரோஜா.