கவிதை: களப்போராளி ஆசிரியர்!

டிசம்பர் 01-15, 2020

அறிவுலகப் பேராசான், ஆன்றோர் போற்றும்

               அய்யாவின் மனம்நிறைந்த அணுக்கத் தொண்டர்;

குறிக்கோளை மறந்திட்ட தமிழர் தம்மின்

               குறைநீக்கி இனமான அறிவை யூட்டி

நரியாரின் வஞ்சகத்தை வீழ்த்தும் ஆற்றல்

               நமக்களிக்கும் ஆசிரியர் அய்யா என்றும்

நெறிபிறழாக் கொள்கையினர்; இழந்த நந்தம்

               நெடும்புகழை மீட்பதற்குத் துடிக்கும் வேழம்!

அன்றாடம் “விடுதலை”யில் அறிவு சார்ந்த

               அனலுமிழும் சிந்தனைகள் பதிவு செய்தே

உண்மையினை நாட்டுக்கே உரக்கச் சொல்லும்

               ஒப்பரிய சீர்திருத்தக் குரிசில்; மக்கள்

நன்மையெலாம் பெறுவதற்கே உழைப்பை நல்கும்

               நயத்தக்க நாகரிகர்; மதங்கள் சாதிப்

புன்மைகளை வேரறுத்துப் புதுமை மேவும்

               பொன்விடியல் சமத்துவத்தை மிளிரச் செய்வார்!

பகுத்தறிவைப் பறைசாற்றும் அரிமா! நாளும்

               பகல்வேடர் முகத்திரையைக் கிழிக்கும் சொற்கோ!

வகுத்துரைத்த பழந்தமிழர் சிறப்பை யெல்லாம்

               வனப்புறவே பலர்வியக்க விளக்கும் ஏந்தல்!

இகழ்வோரை வெகுண்டெழுந்து வீழ்த்திப் பெற்ற

               இடஒதுக்கீட் டுப்பயனும் நிலைத்து நிற்கத்

தகவார்ந்த முற்போக்குக் கனலை மூட்டித்

               தன்மானக் குமுகத்தை அமைக்கும் நல்லார்!

காட்சிக்கு மிகஎளியர், கடுஞ்சொல் பேசார்;

               கழகத்தை வழிநடத்தும் பெரியார் தொண்டர்;

மாட்சிமிகு தமிழினத்தின் தொன்மை மாண்பை

               மறந்தோர்க்கு நினைவூட்டி அவலம் போக்கி

மீட்சிக்கு வழிகாணக் களத்தில் நிற்கும்

               மேன்மைமிகு போராளி! இற்றை நாளின்

ஆட்சியினர் இரண்டகத்தைத் தகர்த்து வெல்ல

               ஆர்ப்பவர்நம் ஆசிரியர் அய்யா அன்றோ!

– முனைவர் கடவூர் மணிமாறன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *