நாடகம்: அதான பார்த்தேன்! (ஒரு குறுநாடக உரையாடல்)

டிசம்பர் 01-15, 2020

பொன்.இராமச்சந்திரன்,பம்மல்

 

(சதாசிவ அய்யர், கோபால், சங்கர், காயத்ரி)

சதாசிவ அய்யர்: (வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு காலையில் வந்த செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறார். கோபால் வருகிறான்) என்னடா கோபால் உன் முகத்துல ஏதோ பரபரப்பு தெரியர்றது. என்ன விஷயம்?

கோபால்: ஒன்னுமில்லே அத்திம்பேர். இன்னிக்கி பெரியார் திடல்ல தாலி அறுப்புப் போராட்டம் நடக்கப் போகுதாம். சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். எல்லாம் அங்கே போய் எதிர்ப்புத் தெரிவிக்கப் போறாள். நானும் அங்க போறேன். உங்ககிட்ட சொல்லிண்டு போக வந்தேன்.

சதாசிவ: முதல்ல உட்காருடா. நோக்கு அறிவே இல்லையாடா? எந்த விஷயத்தையும் நன்னா படிச்சு தெரிஞ்சுண்டுதான் காரியம் செய்யணும். அவா நடத்தறது ‘தாலி அறுப்பு’ இல்லடா. பெண்கள் தாலி அகற்றும் நிகழ்ச்சி. இதுகூட புரியாமே கோஷம் போடப் போறேன்றயே. புத்தியிருக்கா நோக்கு?

கோபால்: அத்திம்பேர் நான் கோஷம் போடப் போகல. வேடிக்கை பார்க்கத்தான் போறேன். நான் கலகம் செய்தேன்னு நீங்களே போலிசுகிட்ட சொல்லிடுவேள் போல இருக்கே.

சதாசிவ: அதான பார்த்தேன்! நம்ம வேல மறைஞ்சிருந்து கலகத்தைத் தூண்டறதுதானே? போராடறதுக்குத்தான் மற்ற ஜாதிக்காரா இருக்காளே.

கோபால்: அது கிடக்கட்டும். எப்படியும் பெண்கள் தாலியை எடுத்துடறதுதானே?

சதாசிவ: அவா இஷ்டப்படறா, எடுத்துடறா. அதனால நோக்கு என்ன வந்தது?

கோபால்: தாலிங்கறது நம்ம சம்பிரதாயமோன்னா. அதை அவா கிண்டல் செய்யறாளே அது நோக்கு தெரியலயோ?

சதாசிவ: புருஷன் செத்தால் நாமதேனேடா அந்த ஸ்திரியோட தாலியை அறுக்கிறோம்,  அவ போட்டிருக்கிற வளையலை உடைக்கிறோம், நெத்திப் பொட்டைக் கலைக்கிறோம், அவ தலையில இருக்கிற பூவை பிச்சிப்புடுங்கறோம், அந்த ஸ்திரியோட தலையை மொட்ட அடிச்சி வெள்ளைப் புடவை கட்டவச்சி மூலைலெ போட்டு அடைக்கிறோம்.

கோபால்: அதெல்லாம் உங்க காலத்துல. இப்படி அப்படி செய்யறதில்லையே!

சதாசிவ: அப்டி வா வழிக்கு! நான் சின்னப் பையனா இருந்தப்போ என் தோப்பனார் செத்துட்டர். என் அம்மாவுக்கு மொட்டை அடிச்சி வெள்ளைச் சேல கொடுத்துட்டா. நான் கொஞ்சம் பெரியவனா ஆனப்போ என் கூடப் பொறந்த சின்னவ ரேணுவுக்கு கலியாணம் நடந்தது. ஒரு வருஷத்திலே அவ புருஷன் செத்துட்டன். ரேணுவுக்கும் மொட்டை அடிச்சி வெள்ளைச் சேலை கொடுத்திட்டா. அவ சின்னப் பொண்ணு. 13_-14 வயதுதான் இருக்கும். எப்பவும் சோகமா முகத்தை வச்சிண்டு அழுதுண்டே இருப்பா. ஆறு மாசத்தில அவளும் செத்துட்டா.

கோபால்: அப்படியா அத்திம்பேர்! பாவம் அவ.

சதாசிவ: ஆமாண்டா! ஆனா இப்ப என்ன நடக்குது? தாலியை அறுக்கிறாங்க. அவ்ளோதான். புருசனைப் பறிகொடுத்த நம்ப பொம்பளைங்க எல்லாம் பொட்டு வச்சிக்கிறா, பட்டு கட்டிக்கிறா, மொட்டை போட்டுக்கிறதில்ல. இதெல்லாம் யாரால வந்தது? எல்லாம் நாஸ்திகப் பிரச்சாரம் பண்ணின ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கட்சிக்காரராலேயும், மத்த இடத்துல இருந்த ஞானவான்கள் இந்த வழக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்ததாலேயும்தான். ஏண்டா, தாலி எதுல கோத்துக்கட்டுவா? சொல்லு.

கோபால்: மஞ்சக் கயித்துல கோத்து கழுத்துல கட்டுவா.

சதாசிவ: இப்ப மஞ்சள் கயிறு நம்ம ஆத்து பொம்மனாட்டிகள் எவ கழுத்திலயாவது இருக்குதாடா? உன் பெண்டாட்டி கழுத்துல மஞ்சள் கயிறா இருக்குது? (வீட்டின் உட்புறம் பார்த்து, “சாவித்திரி இங்கே வா’’ என்று குரல் கொடுக்கிறார். அவருடைய மனைவி மெல்ல நடந்து வருகிறார். அவளைக் காட்டி) “பார்றா, இவ கழுத்துல மஞ்சள் கயிறா இருக்குது? அப்புறம் என்னடா சம்பிரதாயம், மகத்துவம் அப்படி இப்படின்னு உளறிண்டு இருக்கிற?’’

கோபால்: கோல்டு செயின்ல தாலி கோத்து கட்டறது தப்பா? சம்பிரதாயம் இல்லையா?

சதாசிவ: சம்பிரதாயம்னா தாலிய கயித்துல கோத்துக் கட்டறதுக்குப் பதிலா செயின் போடறதுதானே? நீங்கள்லாம் மூடப்பசங்கடா. நம்ம ஆளு ஏதாவது உளறுவான். அதுக்குக் காரணம் அவாளோட சுயநலம்தான். தாலி இல்லைன்னா, நாளை இவன் கலியாணத்துக்கு மந்திரம் சொல்லக் கூப்பிடலேன்னா, ஒன்னரை மணி நேரத்துல ரூ.5000/-_, 6000/_ வருமானம் போயிடுமேன்னுதான் கத்தறான் அதப் புரிஞ்சிக்கோடா!

கோபால்: இதெல்லாம் நேக்கு தோணல அத்திம்பேர். (கோபால் நண்பன் சங்கர் வருகிறான்)

சதாசிவ: வாடா, சங்கர்! நீ ஆஸ்திரேலியாலன்னா இருக்கிறதா நினைச்சிண்டிருந்தேன்.

சங்கர்: முந்தாநாள் தான் வந்தேன் அத்திம்பேர். கோபாலுக்குத் தெரியுமே. அவன் சொல்லலையா?

சதாசிவ: அவன் கலவரம் செய்யப்போற ஜோர்ல மறந்துட்டிருப்பான். உன்னோட ஆத்துக்காரி, பசங்க எல்லாம் «-ஷமமா இருக்காளா? அவாளும் வந்திருக்காளா?

சங்கர்: எல்லாரையும் நாளைக்கு அழைச்சிண்டு வரேன் அத்திம்பேர்.

சதாசிவ: டேய் சங்கர், நீ ஆஸ்திரேலியாக்கு வேலைக்குப் போறப்போ பிராமணாள் கடல் தாண்டக்கூடாது. அது தோஷம். பாற்கடல்ல நாராயணமூர்த்தி தூங்கிண்டிருக்கார். அவரை ‘டிஸ்டர்ப்’ பண்றது தோஷம். அப்படி இப்படின்னு சொல்லி யாராவது தடுத்தாளா?

சங்கர்: வேலைக்கு ‘அப்ளை’ பண்ணச் சொன்னதே என்னோட தோப்பனார்தானே!

சதாசிவ: கேட்டுக்கோடா கோபால். உங்க ரெண்டு பேருக்கும் கணிதமேதை எஸ்.இராமானுஜம் தெரியுமோன்னா?

சங்கர், கோபால்: நன்னா தெரியும்.

சதாசிவ: அவருடைய திறமையைத் தெரிஞ்சுண்டு லண்டனுக்கு அவரை ஆராய்ச்சி செய்ய அழைச்சா. எப்போ? நூறு வருஷத்துக்கு முன்னால. அப்ப அவரு கடல் தாண்டக் கூடாது, தோஷம் அப்படி இப்படின்னு சொல்லி அவரை தடைப்படுத்தப் பார்த்தா. இதைக் கண்ட அவரோட அம்மா கோமளத்தம்மாள் மிகவும் கவலைப்பட்டார். பின்னர் தன் கனவுல நாமகிரித் தாயார் வந்து இராமானுஜன் வெளிநாடு செல்ல உத்தரவு கொடுத்ததாகச் சொன்னார். இராமானுஜனும் கடவுள் நம்பிக்கையில் மூழ்கி இருந்தார். அவர் நாமக்கல் சென்று அங்குள்ள கோயிலில் உள்ள நாமகிரித் தாயாரிடம் வெளிநாடு செல்வதற்கு வேண்டிக் கொண்டார். அவர் கனவுலயும் வந்து _ நேர்ல இல்ல _ கனவுல வந்து உத்தரவு கொடுத்தாராம். அதன் பிறகுதான் இராமானுஜன் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இன்னொரு விஷயமும் உண்டு. பண்டித மதன்மோகன் மாளவியாவைத் தெரியுமோ?

கோபால்: எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குது. சரியா நினைவுக்கு வரல.

சங்கர்: மோடி ‘பாரதரத்னா’ விருது அறிவிச்சாரே அவருதானே?

சதாசிவ: ஆமாடா, அவருதான். அவரப் பத்தி நோக்கு ஏதாவது தெரியுமோ?

சங்கர், கோபால்: (உதட்டைப் பிதுக்குகிறார்கள்.)

சதாசிவ: சுதந்திரத்துக்கு முன்னால லண்டனில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அதில் கலந்துகொள்ள இவரும் போனார். எப்படித் தெரியுமோ? பிராமணாள் கடல் தாண்டக் கூடாதுங்கற அய்தீகத்தை மீறிப் போனார் _ கையில் ஒரு பிடி மண்ணுருண்டையை எடுத்துண்டு. தன்னுடன் அந்த மண்ணுருண்டை இருந்தால், தான் சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்றும் அதற்கு வியாக்கியானமும் சொன்னார். (சங்கரும் கோபாலும் சிரிக்கிறார்கள்.) என்ன சிரிக்கிறிங்க? இதுதான் நம்மவாளோட சாமர்த்தியம். எதையும் திரிச்சிப் பேசுவா. நீங்கள்லாம் கடல் தாண்டறிங்க. ஏன் அர்ச்சகர்கள்கூட வெளிநாட்டுக்கு ‘MONEY’ (பணம்) அடிக்கப் போறாள். மண்ணுருண்டை எடுத்துண்டா? இல்லையே! இதெல்லாம் யாரால? நினைச்சுப் பாருங்க.

கோபால்: அத்திம்பேர் நீங்க கருப்புச் சட்டையை ஏன் போட்டுக்கல?

(சங்கர், கோபால் இருவரும் சிரிக்கிறார்கள்.)

சங்கர்: கடல் தாண்டினா தோஷம் வந்திடும்னு சொன்னாங்களே அது ஏன்?

சதாசிவ: அந்தக் காலத்தில இப்ப இருகிறாப் போல பெரிய கப்பல், விமானம் எல்லாம் கிடையாது. கடலைத் தாண்டிப் போகணும்னா சின்ன கப்பல்லதான் போகணும். வேகமா காத்து வீசினாக்கூட கப்பல் தடுமாறும். கடல்ல மூழ்கும் ஆபத்தும் அதிகம். அதுக்குப் பயந்துண்டுதான் நம்மாள் கடல் தாண்டினா தோஷம்னு போட்டான் ஒரு போடு. அவ்வளவுதான். இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்கங்க. இப்ப நம்மளவா ஆத்துல பொம்மனாட்டிகளுக்கு எந்த வயசுல கல்யாணம் நடக்குது?

சங்கர்: நேக்கு கல்யாணம் நடக்கும்போது 32 வயசு; காயத்திரிக்கு 28 வயசு.

கோபால்: நேக்கும் அப்படித்தான். நேக்கு வயசு 30, ஜானகிக்கு 27 அத்திம்பேர்.

சதாசிவ: அந்தக் காலத்துல பால்ய விவாஹம்னு நடந்தது தெரியுமோ?

சங்கர்: ஆமாம் அத்திம்பேர். 5_6 வயசுலேயே கல்யாணம் செஞ்சுடுவான்னு படிச்சிருக்கேன்.

சதாசிவ: இப்ப அப்படி நடக்குதா? நடத்தினா ஜெயில்தான். சட்டம் போட்டுட்டா. ஆனா பால்ய விவாஹ தடைச் சட்டம் பற்றி திலகர், எம்.கே.ஆச்சார்யா என்ன சொன்னா தெரியுமோ? இந்த தடைச் சட்டத்தை எதிர்ப்போம். இது இந்துமத விரோதச் சட்டம் என்று கூச்சல் போட்டா. இதை எல்லாம் எதிர்த்துப் பேசி மக்கள் மனங்களை சென்னை ராஜ்ஜியத்தில் மாற்றியது ஈ.வெ.ரா.வும் அவருடைய சிஷ்யர்களும்தான். அப்புறம் பால்ய விவாஹம் என்ற பேச்சே இல்லை.

(சங்கர் மனைவி காயத்திரி வருகிறாள்)

சதாசிவ: வாடியம்மா! நன்னா இருக்கிறயா (காயத்திரி கழுத்தைப் பார்த்து) ஏய், என்னடி தாலிக் கயித்தைக் காணோம்?

காயத்திரி: என்ன, இன்னிக்கி என் தாலிக் கயிறுதான் கிடைச்சுதா _ கிண்டல் செய்ய? (என்கிறாள் சிரித்துக்கொண்டே)

சங்கர்: இப்ப தாலிக் கயித்தைப் பத்திதான் பேசிண்டிருந்தோம். அதான்.

சதாசிவ: காயத்ரி நீ எப்பவும் தாலியைப் போட்டுண்டேவா இருப்பே?

சங்கர்: பாத்ரூம்ல அவ குளிக்கும்போது தாலி சங்கிலிய மாட்டறதுக்குன்னே சுவத்துல ஆணி அடிச்சி வச்சிருக்கா. சங்கிலியைக் கழட்டி அதுல மாட்டிடுவா.

காயத்திரி: (வெட்கத்துடன்) சங்கர் நோக்கு என்ன பேசறதுன்னே இல்லையா?

சதாசிவ: நீயேதான் சொல்லுடியம்மா!

காயத்திரி: அதான் சங்கர் சொல்லிட்டாரே. தாலியைக் கழட்டி ஆணியில மாட்டிட்டு குளிச்ச பிறகு எடுத்து கழுத்துல போட்டுப்பேன்.

சங்கர்: சில சமயம் தாலியை ஆணியிலேயே விட்டுட்டு ஆபீசுக்குப் போயிடுவா.

(எல்லோரும் சிரிக்கிறார்கள்.)

சதாசிவ: தாலி புனிதமானது, அதைப் பொம்பளைங்களுக்குக் கட்றது அய்தீகம். அப்படித்தானே? தாலியை யார், யாருடைய கழுத்துல கட்டணும்? கலியாணத்தின்போது விவாஹம் செய்துக்கப் போற பையன் அவனை விவாஹம் செய்துக்கப் போற பெண்ணோட கழுத்துலதான கட்டணும்?

கோபால்: ஆமா!

சதாசிவ: ஆமாம்!

சதாசிவ: நன்னா யோசி. தாலியை மனுஷாளுக்கு மட்டும்தானா கட்டறா?

கோபால்: (முழிக்கிறான்)

சதாசிவ: என்னடா மண்டு முழிக்கிற?

சங்கர்: அத்திம்பேர், கழுதைக்கும் கழுதைக்கும்; நாய்க்கும் நாய்க்கும்; எருமை மாட்டுக்கும் எருமை மாட்டுக்கும்கூட கட்றதா பேப்பர்ல அப்பப்ப வருதே, நீங்க அதைத்தானே சொல்ல வறேள்?

சதாசிவ: ஆமாடா. கழுதைக்கு, நாய்க்கு, எருமை மாட்டுக்கு, தவளைக்கு தாலி கட்றது என்னடா சாஸ்திரம்? மனுஷாளுக்குத் தாலி கட்றது மாதிரி அதுகளுக்கும் அய்யர் மந்திரம் சொல்லித் தாலி கட்றது சரியா? நன்னா யோசிச்சிப் பாரு. எதுக்கு தாலி கட்டச் சொன்னாலும்  பணங் கொடுத்தாப் போதும். அய்யர் மந்திரம் சொல்ல வந்துடறான். ஏன் நம்மவா எதிர்க்கல? சாஸ்திரம், புனிதம், அய்தீகமெல்லாம் எங்க போச்சி?

கோபால்: என்ன சொல்றேள் அத்திம்பேர்?

சதாசிவ: ஆமாண்டா, பிராமணாளுக்குப் பணம் கிடைக்குதுன்னா எதையும் மாத்திடுவா. நம்மவா யாரும் எதிர்க்க மாட்டா.

கோபால்: என்ன இருந்தாலும் அவா கோவில் வேண்டாம், சாமீன்னு ஒன்னு இல்ல, எல்லாம் கல்லுப் பொம்மைகள், கும்பாபிஷேகம், யாகம் எல்லாம் நம்ம பணத்தைப் பார்ப்பானுங்க கொள்ளை அடிக்கறதுக்கான ஏற்பாடு என்றெல்லாம் சொல்றாளே, அதுக்கு என்ன சொல்றேள்?

சதாசிவ: அந்தக் கால ராஜாக்களுக்கு ஆசைகாட்டி, புத்தியைக் கெடுத்து கோயில் கட்ட வச்சோம். கோயில் கட்ட நிலமும் பொன்னும் ராஜாக்கள் கொடுத்தாங்க. கோயில் நன்னா பெருசா நல்ல சிலைகளைச் செய்து அவாளோடு ஆள்கள்தான் கட்டினா. ஆனா, நாம போயி மணியாட்டிச் சம்பாதிக்கிறோம். நல்லா நாலு வேளை தின்றோமா இல்லியோ? அது மட்டுமல்ல, பல ஊர்களை தேவதானம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம், இறையிலி நிலம் அதாவது வரியே இல்லாத ஊர்களைப் பெற்றுக் கொண்டாமா? இல்லையோ?

கோபால்: இனிமே அப்படியெல்லாம் நம்மவாளுக்குக் கிடைக்காது இல்லையா?

சதாசிவ: இப்ப மட்டும் என்ன? நாமா கும்பாபிஷேகத்திற்கும், யாகத்திற்கும் பணம் கொடுக்கிறோம்? அவா கிட்ட போயிதானேடா வசூல் பண்ணி நாம சுருட்டணும்!

கோபால்: இப்படியே போனா நம்மவாளுக்கு கோயில் அர்ச்சகர் வேலையும், கலியாணம், கிரகப் பிரவேஷம், திவசம், திதி போன்றவற்றால் கிடைக்கும் பண வருவாயும் இல்லாமல் போயிடுமே!

சதாசிவ: இதுக்கு விஸ்தாரமா சொல்றேன் கேளு. அவா கிட்டத்தானே டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் எல்லாம் இருக்குது. ஆனா என்ன செய்யறா? அவாள அடிமையா, மடையனா ஆக்குற விஷயத்தை நாம செய்யறதுக்குப் பதிலா அவாளே டி.வி.யில, ரேடியோவுல, பத்திரிகைகளில் நன்னா விளம்பரம் செய்யறாளே, இல்லையா? முன்னாள் எப்படியெல்லாம் பேசிண்டு, எழுதிண்டிருந்தா? இன்னிக்கு வாயை மூடிண்டு இருக்காளே காரணம் தெரியுமோ? பண ஆசை, பதவி ஆசை வந்துட்டுது. நம்ப பக்கம் சாஞ்சிட்டா. எல்லோரும் பொட்டு, பட்டை, கொட்டை கட்டிண்டு பால்குடம் தூக்கறா, மொட்டை போட்டுக்கிறா, தேர் இழுக்கிறா, எல்லா மூடத்தனங்களையும் செய்யறாளோன்னா.

சங்கர்: எப்படி அத்திம்பேர் இப்படிச் சொல்றேள்?

சதாசிவ: எந்த டி.வி.யை வேணும்னாலும் பாரு. காலையில் கோயில் பூசை, பாட்டு, அர்ச்சனை, அபிஷேகம், தீபாராதனை எல்லாம் காட்றாளா இல்லையா? ராசி பலன் சொல்றாளா இல்லையா? நியூஸ் வாசிக்கிறது தவிர மற்ற நேரங்களில் சினிமா படம், சினிமா பாட்டு, குத்துப் பாட்டு, டான்ஸ், மெகா தொடர், அதில் கோயிலில் வேண்டுதல், ஜாதகம் பார்த்தல், பரிகாரம் செய்தல் இப்படியெல்லாம் கதை. ஒரு நாள்ல எப்பவாவது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்றாளா? இல்லையே. பகுத்தறிவைப் பரப்ப பாடுபட்டாளே அவாளைப் பத்தியாவது சொல்றாளா? இல்லையே. அவ்வளவேன், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், சிங்காரவேலர், அண்ணாதுரை, கி.ஆ.பெ.விசுவநாதம், ப.ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி இப்படி எவ்வளவோ பேர் இருக்கா. அவாளப் பத்திகூட ஏதாவது சொல்றாளா? அவா கருத்துகளத்தான் பேசறாளா? இல்லையே. ஆனா, சினிமா நடிகன், நடிகைகளைப் பத்தி தினம் தினம் சொல்றாளே! ஆக, அவா ஜனங்களோடு அறிவை அவாளே கெடுத்துண்டிருக்கா. நாம செய்ததைவிட படுஜோரா செய்துண்டிருக்கா. பிறகு நமக்கு என்ன கஷ்டம். உன் தோப்பனாருக்கு ‘விஷீஸீமீஹ்’ அடிக்கிற வேலையும், மணி ஆட்ற வேலையும் போயிடுமேன்னு பயப்படாதேடா!

சங்கர்: அத்திம்பேர், நன்னா விளக்கமா சொன்னேள். இனி கோபால் பயப்படவே மாட்டான்.

கோபால்: சரி. நாங்க புறப்படறோம் அத்திம்பேர்.

சதாசிவ: எங்கடா?

கோபால்: வீட்டுக்குத்தான்.

சதாசிவ: அதான பார்த்தேன். (எல்லோரும் சிரிக்கிறார்கள்).   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *