பன்முகத் திறன்மிகக் கொண்ட தலைவர்
பெரியார் இட்ட பெரும்பணி முடிக்க
சரியாய்த் தேர்ந்த நம்பக மணியாய்,
அடுபகை அழித்திடும் வாளா யிருந்து
தொடுபகை தடுக்கும் கேடய முமாகி
அடிமைத் தளையை உடைத்து நொறுக்கிடும்
‘விடுதலை’ ஏட்டின் ஆசிரி யராக
அய்ம்பத் தெட்டாண் டுகளைக் கடந்தும்,
பொய்த்திரை பொய்முகங் கிழித்தே அகவை
அய்ம்பதைத் தாண்டி மெய்ம்மை உணர்த்திடும்
‘உண்மை’ இதழை வளர்த்திடும் உரமாய்,
நுண்ணிய நூல்பல நுழைபுலம் அடையப்
பண்ணிடும் பதிப்பகப் பாங்கிலே செம்மலாய்,
திண்ணிய ராகித் திராவிடர் கழகம்
வண்மை வலிமை பெற்றிடச் செய்திடும்
பன்முகத் திறன்மிகக் கொண்ட தலைவராய்,
அய்யா அம்மா அறப்பணிக் கழகம்
தொய்விலா தியங்கச் செய்வதன் சிறப்பால்
பல்களம் இருப்பினும் கருமமே கண்ணாய்
கல்வித் தொண்டிலும் கடமை யாற்றிட
கல்லூ ரிகல்விக் கூடங் கள்என
எல்லாம் சிறப்புற இயங்கிட அரணாய்,
இத்துணைப் பணிகளும் மொத்தமாய் ஏற்று
முத்திரை பதித்திடும் வித்தகக் கலனாய்,
தந்தை தொட்டு விட்ட பணிகளை
சிந்தை யிலேற்றிச் செவ்வனே முடிக்கும்
கருப்பு மெழுகு வத்திகள் தம்மை
இருப்பாய்க் கொண்டே இயக்கிடும் திறனால்
போர்க்களம் சாக்களம் எதுவா யிருப்பினும்
ஆர்ப்பரித் தெழுந்தே அறப்போர் செய்திடும்
தந்நலங் கருதாத் தகைமை யினாலே
இந்நில மாந்தர் ஏற்ற முற்றிட
மாயா தொளிரும் கதிரோன் போல
ஓயாத் தொண்டறப் பிரச்சா ரத்தால்
மானமும் அறிவும் பெற்றே வனப்புறல்
காண வேண்டிக் கருத்துகள் பொழிந்து,
ஆரியச் சூழ்ச்சியி னின்றும் மீட்டிடும்
காரிய மாற்றிக் களப்பணி முடித்திட –
எண்பத் தெட்டில் எழுபத் தெட்டை
தன்னிக ரில்லாப் பெரியார்க் களித்து,
எண்பத் தெட்டில் அய்ம்பத் தெட்டை
கண்போல் காக்கும் ‘விடுதலை’க் களித்து
எண்பத் தெட்டில் இருபத் தாறை
‘உண்மை’ இதழின் உயர்வுக் களித்து
– வீரியம் கொண்டு விரைந்திடும்
வீர மணியார் வாழிய நீடே!
– பெரு.இளங்கோவன்