பேராசிரியர் சோனாஜரியா மின்ஸ்… பழங்குடி சமூகத்தில் பிறந்து, தடைகளையெல்லாம் கடந்து ஜார்க்கண்ட் மாநிலம், டும்கா பகுதியில் அமைந்துள்ள சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தின் (எஸ்.கே.எம்.யூ) துணைவேந்தராக உயர்ந்திருக்கிறார்.
டெல்லி ஜே.என்.யுவில் உள்ள கணினி மற்றும் கணினி அறிவியல் துறையில் 28 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். ஜே.என்.யூ.வின் ஆசிரியர் சங்கத்தின் (JNUTA) தலைவராகச் செயல்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் ஆதிவாசி இன மக்களின் உரிமைக் குரலாக ஒலிப்பவர். அவரின் வெற்றி பயணம் குறித்து கூறுகையில்.
“மத்திய இந்தியாவில், பீகார் மாநிலத்திலுள்ள ஓரான்தான் என் சொந்த கிராமம். என் அப்பா நிமல் மின்ஸ் ஜார்க்கண்டின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரர். நாங்கள் பேசும் மொழி ‘குறுக்’ (Kurukh). தமிழுக்கும் எங்கள் மொழிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. கண், உட்காரு போன்ற தமிழ் வார்த்தைகளின் பொருள் எங்கள் மொழியிலும் ஒன்றுதான். ஊர் முழுக்கவும் திராவிட முகங்களே தென்படும்.
ராஞ்சியிலுள்ள ஒரு தனியார் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னையும் சேர்த்து நிறைய ஆதிவாசி மாணவர்கள் பயின்று வந்தார்கள். என்னதான் நான் எப்போதும் நன்கு படித்து நல்ல ‘ரேங்க்’ வாங்கினாலும் நான் ஆதிவாசிப் பெண் என்பதால் என் ஆசிரியர்களே எனக்கு மிகவும் தொல்லை கொடுப்பார்கள். ஆனால், பள்ளிப் படிப்பை முடித்த பின் கல்லூரி பற்றிய பேச்சு வந்தபோது, ‘ஒப்பீட்டளவில் வடஇநதியாவைவிடத் தென்னிந்தியாவில பாகுபாடு பார்க்கும் மனோபாவம் குறைவு’ என்று என் அப்பா சொன்னார்.
“முதன்முதலில் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தேன். 10 மாதங்களுக்குப் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பிரிவில் பணிபுரிந்தேன். 1992இல் ஜே.என்.யூ.வில் துணைப் பேராசிரியை… 2005 முதல் பேராசிரியை… 1992இல் நான் ஜே.என்.யூ.வில் பேராசிரியராகப் பணியில் சேரும்போதுகூட ஆதிவாசிகளுக்கான ஒதுக்கீடு என்பது வரவில்லை. அன்ரிசர்வ்டு (unreserved) கோட்டாவில்தான் நான் பணியில் சேர்ந்தேன்.
நமது நாட்டின் கல்வி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சமமாக மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், எதற்கு அந்தக் கல்வி என்ற கேள்வியே இங்கே எழுகிறது. அது தனிமனித வாழ்க்கையை மட்டுமே முன்னேற்றுகிறது. ஆதிவாசி சமூகத்தினர் கல்வி பயின்று பொருளாதார ரீதியாக வளர்ந்தாலும் சமூகத்தின் பார்வையில் அவர்கள் வித்தியாசமாகவே பார்க்கப்படுகின்றனர். எங்கள் திறன்கள் சமூக அடையாளங்களால் எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
“ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவந்த என்னை முதன்முதலில் தமிழகம்தான் சரிசமமாகப் பார்த்தது. உண்மையில் தமிழ்நாட்டில்தான் நிறைய கற்றுக்கொண்டேன். வட இந்தியாவில என் குடும்பப் பெயரைப் பார்த்த உடனே ஆதிவாசி என்று கண்டுபிடித்துவிடுவார்கள் ஆனால், இங்கு அது நடக்கவில்லை. சுதந்திரப் பறவையாக இருந்தேன். தமிழகத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.’’
சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தை நம்பிதான் நிறைய ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
“முதலில் அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய மனிதர்களின் நோக்கத்தையும் லட்சியத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அவர்களின் கனவை, லட்சியங்களை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தயத்தில் அவர்களோடு சேர்ந்து நானும் ஓட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அங்கு படிக்கும் ஆதிவாசி மாணவர்களுக்கு அவர்கள் அடையாளத்தை நினைத்துப் பெருமைப்படும் வகையில் அவர்தம் கலாச்சாரங்கள், அவர்கள் சமூகத்தின் உயர்ந்த மனிதர்கள், அழிக்கப்பட்ட வரலாறுகள், அவர்களின் மண் சார்ந்த ஆய்வுகள், தற்காலக் கோட்பாடுகள், கருத்துகள், பருவநிலை மாற்றங்கள் போன்ற ‘பழங்குடிகள்’ (Tribal) பற்றி மட்டுமே படிக்க தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பது பெரும் கனவு உள்ளது. எங்கள் ஊரின் பாரம்பரிய முரசைப் பெண்கள் இசைக்கக் கூடாது என்பதுபோன்ற அய்திகங்கள் முன்பு நிலவி வந்தன. இப்போது பெண்கள் முரசு கொட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆண்கள் ஆட ஆரம்பித்து விட்டனர். காலம் மாறி வருகிறதல்லவா… நான் மாற்றத்தை ஏற்படுத்த முயல்வேன்.’’ என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
(தகவல் : சந்தோஷ்)