வடலூர் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் (5.10.1823).
இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு – அவற்றினின்று முற்றாக விலகினார்.
தொடக்கத்தில் உருவ வழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி அடைந்த பருவத்தில் உருவ வழிபாட்டை வெறுத்து, தன்னால் வடலூரில் உருவாக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் வெறும் ஜோதியை ஏற்றி வைத்தார். தன்னால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் பெயரில் இடம் பெற்றிருந்த வேத என்ற சொல்லைத் தூக்கி எறிந்தார்.
1873 அக்டோபர் 22இல் சித்தி வளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி உரையாற்றுகையில் தன் உள்ளத்தை முழுமையாகத் திறந்து காட்டினார்.
நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார்கள்… இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம்- என்று வெளிப்படையாகக் கூறிவிட்டாரே!
அவர்தம் மரணம் கூட மர்மமானதுதான் – ஜோதியாகிவிட்டார் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. வள்ளலார் காலத்தில் தென்னார்க்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டியன் என்பவர் புராணம், சாத்திரம் முதலியவற்றை அவர் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூட கிட்டாவண்ணம் எரித்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.