ஆசிரியர் பதில்கள்: மில்லியன் டாலர் கேள்வி!

அக்டோபர் 01-15, 2020

கே: நாடாளுமன்ற நடைமுறை மற்றும் விதிகளுக்குப் புறம்பாக, வேளாண் மசோதாக்களை மத்திய பா.ஜ.க அரசு நிறை வேற்றியுள்ளதை நீதிமன்றம் மூலம் ரத்து செய்யமுடியுமா? குடியரசுத் தலைவரிடம் நீதி கிடைக்காதே?

– அன்பு, மதுரை.

ப: அதுவும் கூட தற்போதுள்ள சூழலில் சந்தேகமே! மக்கள் மன்றம் தவிர வேறு வழியில்லை – நுகத்தடியைக் கழற்ற.

கே: விவசாயிகளுக்கு விரோதமான மசோதாக்களை அ.தி.மு.க அரசு ஆதரிப்பதன் உண்மைக் காரணம் என்ன?

-வேலன்,வேலூர்.

ப: மடியில் கனம் – வழியில் பயம். எந்த நேரமும் ‘டெல்லி’ என்ன செய்யுமோ என்கிற பயம். மரணத்தை விட மோசமானது மரண பயம்!

கே: “ஸ்டாலின் விவசாயி அல்ல. நான் விவசாயி. எனவே, நன்கு தெரிந்து, நன்மை என்பதால் ஆதரிக்கிறேன்!’’ என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பற்றித் தங்கள் கருத்து என்ன?

– மகிழ், சைதை.

ப: எட்டு வழிச்சாலை ஒன்றே போதும், யார் உண்மையில் விவசாயிகள் பக்கம் நிற்பவர்கள் – என்பதற்கு! ‘விவசாயியாகவே’ இருந்து கொண்டு அவர்களின் நலனுக்கு எதிரானதை ஆதரிப்பதும் – அதுவும் அவர்களுக்கு நேரவிருக்கும் தீமையை ஆதரிப்பதும் தீமையைவிட மோசமானது. யார் சொன்னால் என்ன? மசோதாவுக்குக் காரணமான அரசின் தலைமை அமைச்சர் — விவசாயி.

எதை கேட்பது போல உள்ளது? விசித்திரம், வேடிக்கை!

கே: டாக்டர் இராமதாஸ், தொல்.திருமாவளவன் இருவரும் இணைந்து செயல்பட்டால் நல்லது என்று கருதுகிறீர்களா? ஆம், எனில் அவர்களுக்கு நீங்கள் கூறக்கூடியது என்ன?

– ரவிச்சந்திரன், தருமபுரி.

ப: ஏற்கெனவே ஒருமுறை இதே நிகழ்வு நடந்து எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை என்பது கடந்தகால அனுபவம். தலைவர்களை விட சமுதாய மக்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு ஏற்பட்டால், பிறகு தலைவர்களின் கூட்டு முழுப்பயன் தரும்.

கே: ‘நீட்’ தேர்வு குறித்த முதன்மை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை விரைந்து முடித்து தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

– பிரகாஷ், சென்னை.

ப: மனு போடலாம்; வேறு வழியில்லையே! நாட்டின் சூழ்நிலை வேதனையானது.

கே: மத்திய அரசின் முடிவுக்கு எதிராய், தமிழக அரசு இருமொழிக் கொள்கையை உறுதியுடன் நடைமுறைப்படுத்த சட்டப்படி என்ன செய்யவேண்டும்?

– சிவக்குமார், மணலி.

ப:  அண்ணா செய்த சட்டம் உள்ளது.  அதை அமல்படுத்த முழுஉரிமை மாநில அரசுக்கு உண்டு. அதைச் செய்தால் போதுமானது.

கே: வேளாண் மசோதாவை ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பது நாடகமா? அதன் அனுமதியில்லாமலா பா.ஜ.க அரசு செயல்பட முடியும்?

– முத்துச்செல்வன், காஞ்சி.

ப: இரட்டை வேடம்; ஏமாற்று வித்தை; ஒரு கபட நாடகம்!

கே: ஸ்டாலின் அவர்கள் தனது ஆளுமையை, சாதனைகளை பலமுறை நிரூபித்துள்ள நிலையிலும் வெற்றிடம் என்பது அயோக்கியத்தனம் தானே?

– சோமசுந்தரம், தஞ்சை.

ப:  இது மிலியன் டாலர் கேள்வி! நன்றி.

கே: இயக்க எழுத்தாளர்களை இன்னும் அதிகப்படுத்த பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்துவீர்களா?

– தமிழ்மணி, குன்றத்தூர்.

ப: கொரோனா காலம் முடிவுக்கு வந்தால்தான் பல பணிகளை வேகப்படுத்த முடியும்; அதுவரை காணொலிகள் மூலம் முடிந்ததைச் செய்யலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *