தலையங்கம்: பெரியார் – எப்போதும் தேவைப்படும் போர்க்கருவி!

செப்டம்பர் 16-30, 2020

நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர், வழி நடத்திட்ட வையகம் காணா வள்ளல், நம் அறிவாசான் 142ஆம் ஆண்டு பிறந்தாள் பெருவிழாவை, தமிழ்நாடு மாத்திரமல்ல;- இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சுயமரியாதைத் திருவிழாவாகக் -கொண்டாடி மகிழ அருமையான ஏற்பாடுகளைச் செய்து வருவதில், கழகத் தோழர்கள் மாத்திரமல்ல; அனைத்து முற்போக்கான கட்சிகளும் இயக்கங்களும் துடிப்போடு செயல்படுவது இவ்வாண்டின் புதிய திருப்பமாகும்.

காரணம் என்ன? பெரியார் விழா என்பது நமக்கு வெறும் வேடிக்கை _ கேளிக்கை விழா அல்ல. பொட்டுப்பூச்சிகளாய் புன்மைத் தேரைகளாய், புழுக்களாக இருந்த நம்மை மனிதர்கள் என்று உணர்த்தி, உயரவைக்கும் மகத்தான தலைவரின் கொள்கை பரப்புத் திருவிழா என்ற உணர்வு பொங்கி வழிவதே காரணம்!

எதிர்ப்பில்தான் தந்தை பெரியாரும் அவர்தம் இயக்கமும் வளர்ந்தோங்கும் என்பது வரலாறு. அவர்தம் வாழ்நாளில் மட்டுமல்ல; அய்யா உடலால் மறைந்து உள்ளத்து உணர்வாகி, தத்துவஒளி பரப்பும் நிலையில் இன எதிரிகள் அவர்களை தாறுமாறாக தறுதலைத்தனத்தோடு பொய்த் தகவல்களைப் பரப்புவது கண்டு, கட்சி, மதம், ஜாதி, மாநில எல்லைகளைத் தாண்டி மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியோடு ‘பெருஉரு’ – (விஸ்வரூபம்) எடுத்து பெரியார் என்பவர் எங்களுக்கு அறிவூட்டும் தலைவரும் தத்துவமுமானவர் மட்டுமல்ல; எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான வாழ்வுரிமைப் போரில் சக்திவாய்ந்த படைக்கலன் _ பாடி வீடு-_பயிற்சிகளைத் தளராமல் தரும் ஊற்று என்று உணர்ந்து ‘அய்யிரண்டு திசை முகத்தும்’ அவர்தம் கொள்கை ஒளியைப் பாய்ச்சுகின்றனர்!

சமூகநீதிக்குச் சவால், ‘நீட்’தேர்வு என்ற பலிபீடத்தில் நம் இளந் தளிர்கள் ‘காவு’ கொடுக்கப்படுவதைத் தடுக்கும் _  ‘நீட்’ விஷத்தை முறிக்கும் மாமருந்து தந்தை பெரியார்!

பெண்ணடிமை என்ற பெயரில் அவர்களின் உரிமை பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தி, பெண்ணே! நீ மண்ணில் மானுடத்தின் சரிபகுதி; உன் உரிமைகளை மறந்து ஊமையாய், ஆமையாய் ஒரு போதும் வாழாதே என்று உசுப்பி எழுப்பி, உரிமைக்களத்தில் வெற்றிப்பதாகை ஏந்தி வீறுநடைபோடவைப்பதற்கு வழிகாட்டும்  ‘கலங்கரை வெளிச்சம்’ தான் தந்தை பெரியார்!

ஆரிய _ திராவிடப் போராட்டம் வெறும் இரத்தப் பரிசோதனை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பை உணர்த்திய சரியான அடையாளம் என்பதை உணரச் செய்த அந்த மகத்தான தலைவரின் தத்துவத்தை உலகறியச் செய்யும் விழா தான் தந்தை பெரியார் கொள்கை முழக்கமான இப்பெருவிழா!  முன்பு _ ஏன் பெரியார் தேவைப்பட்டார்; இனி தேவையில்லை என்று ஒதுக்கிட முடியாத மகத்தான சக்தி வாய்ந்த சமூக விஞ்ஞானம் தந்தை பெரியார்!]

எப்போதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் கொடுமைகள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அதனை முறியடிக்க நமக்குள்ள ஒரே போர்க்கருவி பெரியார் என்ற தத்துவம்தான்!

எனவே, பெரியார் என்பது லட்சியம், கொள்கை நெறி, போராட்ட வடிவம் என்பதால், தயார் நிலையில் என்றும் போராடக் காத்திருக்கும். உரிமைப் பட்டாளத்திற்கான அந்த உயர்தனி படைக்கலனைப் பாதுகாப்போம்; விழிப்போடு இருந்து இன எதிரிகளை, மானுட உரிமையைப் பறிக்கத் துடிக்கும் மதவெறித்தனத்தை, சமூகநீதியை விழுங்கி ஏப்பமிடத் திட்டமிடும் கழுகுகளை விரட்டியடிக்க கூர்த்த மதியினராக உள்ள மக்களுக்கு என்றும் தேவைப்படும் அறப்போராயுதம் _ நம் அய்யா தத்துவங்களே!

எனவே, பெரியார் அன்றும் இன்றும் என்றும் தேவை! விழா எடுப்பது _ சூளுரைத்து சுயமரியாதை உணர்வைப் புதுப்பித்துக் கொள்ளுவதற்கேயாகும்.

வாழ்க பெரியார்! வருக புது உலகம்!

– கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *