“பெரியார் நம்மைத் திட்டுவதைப் பற்றியோ எழுதுவதைப் பற்றியோ, நாம் சிறிதும் வருத்தம் கொள்ளக் கூடாது.
காட்டில் யானை தன் குட்டிகளுக்கு – இடையூறுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பயிற்சி அளிக்கும். எப்படிப்பட்ட பயிற்சி தெரியுமா? குட்டிகளை தன் துதிக்கையால் அடித்து, கீழே தள்ளி, பள்ளத்திலும், மேட்டிலும் உருட்டிப் புரட்டி எடுக்கும். அந்த யானைப்போன்ற நிலையில், பெரியார் நமக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பயிற்சி வீண்போகப்போவதில்லை’’.
அறிஞர் அண்ணா
65-இல் பேசியது.
பாவலர் பாலசுந்தரம்
பிறப்பு: 15.9.1907
1933 இல் இயக்கத்தில் இணைந்து சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறந்த களப் பணியாளராகவும் விளங்கியவர் பாவலர் பாலசுந்தரம்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தந்தை பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 6 மாதமாக குறைக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். 1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய ‘பிராமணாள்’ அழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்.
‘தமிழ் அரசு’ என்னும் இயக்கத் பத்திரிகையையும், ‘தென்சேனை’, ‘வாழ்வு’ போன்ற இதழ்களையும் நடத்தியவர். ‘முரளிஸ் கபே’ உரிமையாளர் தந்தை பெரியாரை சந்தித்து மன்னிப்புக் கேட்ட தகவலை தமது எட்டில் பதிவு செய்துள்ளவர்.
இவரது துணைவியார் பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களும் இந்தி எதிர்ப்பில் தொடங்கி எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சட்ட எரிப்பு போரில் ஈடுபட்டு சிறை சென்றவர். பெரியார் திடலில் தங்கி இறுதி காலம் வரை பணியாற்றியவர்.