உண்மை என்ன?
ஆண் – பெண் சேர்க்கை இல்லாமலே கூட குழந்தைகள் பெறமுடியும் என்று அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
“எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’’ என்று வள்ளுவர் சொன்னார். ஆகையால் சொன்னதையும் அப்படியே நம்பிவிடாதே அதை ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையான பொருளை கண்டறியுங்கள் என்று சொன்னார்.
இந்த ரிஷி சொன்னார். முனிவர் சொன்னார். ஆண்டவன் சொன்னான் புரோகிதர் சொன்னார். மகரிஷி சொன்னார். காவி வேட்டி சாமியார் சொன்னார். வெள்ளை வேட்டி சாமியார் சொன்னார். இதை எல்லாம் அவன் சொன்னால், இவன் சொன்னான் என்று சொல்லாமல் ஒருவன் சொன்னதில் உண்மையான தன்மை என்ன என்பதை கண்டறிய வேண்டும் என்று வள்ளுவர் சொன்னார்.
மெய்ப்பொருள் காணுங்கள்
அடுத்து ‘எப்பொருள் எத்தன்மையாயினும்’ என்று சொன்னார். குரானில் இருப்பதினால் அதை நம்புகிறேன். பைபிளில் இருப்பதினால் அதை நம்புகிறேன். பகவத் கீதையில் இருப்பதால் அப்படியே நம்புகிறேன். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம், பெரிய புராணத்தில் இருப்பதால் அப்படியே நம்பக்கூடாது. ஆகவே எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று சொன்னார்.
‘குடிஅரசை’ பார்க்காதவர்கள்
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுக்க சொன்னார். பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டிலே 1924, 25லே கூட அதில் முதல் பக்கத்தில் ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்ற குறள் தான் இருக்கும் இதை பெரியார் அவர்கள் போட்டு வைத்திருப்பார் பல பேர் ‘குடிஅரசு’ இதழையே பார்த்திருக்கமாட்டார்கள்.
பெரியார் கருத்தை ஏற்கிறார்கள்
ஆனால் தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை அறிந்தோ, அறியாமலோ புரிந்தோ புரியாமலோ விரும்பியோ, விரும்பாமலோ, ஏற்றுக் கொண்டோ, அல்லது ஏற்றுக் கொள்ளாமலோ அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை. (பலத்த கைதட்டல்)
ஒலி பெருக்கியை ஆண்டவனா – கண்டுபிடித்தான்?
ஒலி பெருக்கியை ஆண்டவனா உண்டாக்கினான்? காரை ஆண்டவனா உண்டாக்கினான்? விமானத்தை ஆண்டவனா உண்டாக்கினான்? நாம் பார்க்கின்ற அத்துணை பொருளும் மனிதனுடைய அறிவு ஆற்றல், ஆராய்ச்சி தன்மையினுடைய விளைவாக வந்ததே தவிர, 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் ஒலி பெருக்கி கண்டுபிடிக்கவில்லை.
துப்பாக்கி முனையில் விமானக் கடத்தல்
இன்றைக்கு எவ்வளவோ ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏ.கே.47 என்ற துப்பாக்கியை வைத்துதான் விமானத்தையே கடத்தியிருக்கின்றான் (சிரிப்பு) நல்ல வேளையாக இன்று மாலை. ஒரு செய்தி வந்தது. இந்திய-அரசு மூன்று கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்ததன் காரணமாக 155 பயணிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளி வந்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்
முதலில் கடத்தல்காரர்களை காரில் ஏற்றி அனுப்பிவிட்டார்கள். (சிரிப்பு). அதன் பிறகு பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி, தனி விமானம் மூலம் பயணிகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். ஆக பயணிகளையும், விமானங்களையும் கடத்துவதற்குக்கூட இரண்டு ஆயுதங்கள் பயன்பட்டிருக்கிறது.
கடவுள் கையில் சூலாயுதம்
இன்னமும் நமது பரம சிவன் கடவுள் சூலம் தானே வைத்திருக்கின்றான். (சிரிப்பு- கை தட்டல்) ஏ.கே. 47 வந்து விட்டது. போபர்ஸ் பீரங்கி எல்லாம் வந்துவிட்டது. அணுகுண்டு எல்லாம் வந்து விட்டது. ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு ஏவுகணைகளை விடுகின்றான். நாம் அய்ந்து அணுகுண்டுகளை வெடித்தால், பாகிஸ்தான்காரனும் – மூன்று அணுகுண்டுகளை வெடித்துக் காட்டுகின்றேன் என்று செய்கின்றான்.
இவ்வாறு குண்டுகள் வந்ததற்குப் பிறகும் கடவுள் கைகளில் சூலாயுதமும், வேலாயுதமும் தானே இருக்கின்றது. (சிரிப்பு) கடவுள் சக்ர ஆயுதத்தை இன்னும் வைத்துக் கொண்டிருக்கின்றான். காட்டுமிராண்டி காலத்திலே மனிதன் கண்டுபிடித்து கடவுள் கைகளில் கொடுத்த ஆயுதங்கள் எல்லாம் இவைகள் (சிரிப்பு). அதற்குப் பிறகு ‘கடவுள்கள்’ திருந்தவே இல்லை . (கைதட்டல்). கடவுள் படிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கும் போகவில்லை. கல்லூரிக்கும் போகவில்லை. ஆனால் சூலாயுதத்தை மட்டும் வைத்திருக்கின்றான். சிவபெருமான் புலித்தோலை – இடுப்பிலே கட்டிக்கொண்டு, யானைத்தோலைப் போர்த்திக் கொண்டு – தான் இருக்கின்றான். அன்றைக்கு காட்டுமிராண்டி காலத்தில் வேறு இல்லை. பஞ்சு நூலை கோர்க்கவா கற்றுக் கொண்டான்?
மனிதனானான்
மனிதன் குரங்கு மாதிரி – தான் இருந்தான். டார்வின் தான் கண்டுபிடித்தார். மனிதன் வாலுள்ள குரங்காக இருந்தான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வால் போய், – நாலு காலில் நடந்தவன் பிறகு இரண்டு காலில் நடந்து, பிறகு கூனி நடந்து அதன் – பிறகு நிமிர்ந்து இரண்டு கால்களால் நடந்தான் கொஞ்சம், கொஞ்சமாக சில பழக்கங்களை விட்டு இப்பொழுது மனிதனாகியிருக்கின்றான்.
பென்சிலின் -கண்டுபிடித்தது கடவுளா?
ஒரு மனிதன் பென்சிலின் கண்டுபிடித்து உலகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மைகளை செய்திருக்கின்றான். ஆபரேசன் செய்வதற்கு மயக்க மருந்து கண்டுபிடித்தவன் உலகத்திற்கு எவ்வளவு நன்மை செய்திருக்கின்றான்.
உடலில் ஒரு பகுதியில் ஆபரேசன் செய்ய வேண்டுமென்றால் அந்த இடத்தில் மட்டும் மயக்க ஊசியைப் போட்டு ஆபரேசன் செய்து விடுகின்றான். நாம் முழித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருந்தால் கூட ஊசி போட்டு மறுத்துப் போக வைத்து வலியே இல்லாது ஆபரேசன் செய்துவிடுகிறார்களே (கை தட்டல்) இவைகளை எல்லாம் கடவுளா கண்டுபிடித்தது.
குண்டூசியால் எவ்வளவு பயன்!
ஒன்றுமில்லை. குண்டூசி கண்டுபிடித்தவன் உலகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மைகளை – செய்திருக்-கிறான். இரண்டு தாள்களை ஒன்றோடு ஒன்று சேர்க்க வேண்டுமென்றால் அதை – குண்டூசியால் குத்தி சேர்க்க – முடியும் என்று கண்டுபிடித்தான். அந்த குண்டூசி எவ்வளவு பயன்பட்டிருக்கிறது.
அவன் செய்த நன்மைகளை இந்த காவி வேட்டி கட்டியவன் எவனாவது செய்தானா? ஆனால் அதை அத்துணை பேரும் அனுபவிக்கிறார்கள். (சிரிப்பு).
சிரமங்களைக் குறைத்து
அறிவியல் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர, வளர அதைத் தொழில் நுட்ப இயலாக மாற்றி மனிதன் தன்னுடைய – அறிவுத் திறமையினால் – இப்படிப்பட்ட பயன்படுகின்ற பொருள்களை உள்ள படியே மனித சமுதாயத்திற்குப் பயன்படுகின்ற பொருள்களை, மனித சமுதாயத்தின் நேரத்தைக் குறைத்து, உழைப்பைக் குறைத்து சிரமங்களைக் குறைத்து எளிதான வாழ்வை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
20-ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்ப வளர்ச்சி
அறிவியல் என்பது உள்ள படியே இருக்கின்ற பண்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லும். இருக்கின்ற இரும்புக்கு என்ன பண்பு என்பதை விஞ்ஞானம் (கண்டுபிடித்துச் சொல்லும். செம்புக்கு என்ன பண்புண்டு, மின்சாரத்திற்கு என்ன பண்பு உண்டு என்பதை விஞ்ஞானம் கண்டுபிடித்துச் சொல்லும் அதைப் பொறுத்திப் பார்த்து பொருள்களினுடைய நுட்பத்தோடு சேர்ப்பது டெக்னாலஜிதான். இருபதாம் நூற்றாண்டிலேதான் தொழில் நுட்பம் வளர்ந்து இன்றைக்கு கணினி அளவுக்கு வந்து நின்றிருக்கின்றது.
செவ்வாய்க்கோள் செல்லும் மனிதன்?
விண்வெளியில் உள்ள செவ்வாய்க் கோளுக்கு மனிதன் சொல்லக்கூடிய அளவிற்குக் கண்டுபிடித்திருக்கின்றான். அறிவியலினுடைய அடிப்படைத் தன்மைகளை அய்ன்ஸ்டீன் போன்றவர்கள், கலிலியோ போன்றவர்கள், கோபர்நிகோலஸ் போன்றவர்கள், எல்லாம் கண்டுபிடித்து, கண்டுபிடித்துத்தர அதனை தொழில்நுட்ப அறிஞர்கள் பொருள்களாக மாற்றி, மாற்றிக் கண்டுபிடித்தனர். இப்படித்தான் தொலைபேசி, தொலைக்காட்சி, புகை வண்டி, கார், விமானத்தைக் கண்டுபிடித்தனர்.
11,000 பேர் ஒரிசாவில் இறந்தவர்கள்- நாத்திகர்களா?
எதையும் விரைவாக அறிந்துகொள்ள மனிதனுடைய முயற்சிதான் பயன்பட்டிருக்கின்றது.
ஒரிசாவிலே வெள்ளம் வந்து பதினோராயிரம் பேர் செத்துப் போனார்கள். அவர்கள் அத்துணை பேருமா நாத்திகர்கள்? (சிரிப்பு). அவனவன் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு பிரார்த்தனை செய்யாமலா இருந்தான்?
அமெரிக்காவிற்கு அருகிலே விமானத்தில் சென்றவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விமானம் நொறுங்கி செத்தார்கள் என்று இருக்கின்றது.
பக்தியைவிட புத்தி முக்கியம்
இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். மனிதனுக்கு பக்தியை விட புத்தியே முக்கியம் என்று சொன்னார். பக்தியின் மூலமாக மனிதர்களை மடையர்களாக ஆக்கிவிட்டார்கள் என்று சொன்னார். பக்தி இல்லை என்றால் நான் மட்டும்தான் கெட்டுப்போவேன். ஆக என்ன முக்கியம் என்று சொன்னால் ஒழுக்கம் முக்கியம் என்று சொன்னார்.
ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே கெடும்
ஒழுக்கம் இல்லாவிட்டால் ஊரே கெடும். ஒழுக்கம் – இல்லாவிட்டால் குடும்பமே கெடும் என்று சொன்னார். ஒழுக்கம் இல்லாவிட்டால் உலகமே கெடும் என்று சொன்னார். அய்ந்து பேருக்கு ஒழுக்கம் இல்லாததால் தானே விமானக் கடத்தலே நடைபெற்றது (கை தட்டல்). ஒழுங்கு என்பதில் இருந்து வந்ததுதான் ஒழுக்கம்.
மனித சமுதாயத்திற்கு எது பண்பு என்று கேட்டால் ஒழுக்கம் என்று வள்ளுவர் சொன்னார். ஒருவன் மூன்று எம்.ஏ., படித்திருந்தாலும் அவனுக்கு மனித பண்பு இல்லாவிட்டால், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவன் மரத்திற்குச் சமம் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பெரியார் கருத்துகளை யார் ஏற்கிறார்கள்
தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை ஒரு மனிதன் அறிந்தோ, அறியாமலோ ஏற்றுக் கொள்கின்றான். மனிதன் பண்பட்ட அடிப்படையில், மனிதன் மானமுள்ளவனாக வாழ வேண்டும் என்ற தன்மையில் எடுத்துச் சொன்னார். நம்முடைய நாட்டிலே இருக்கின்ற வேதங்கள், புராணங்கள், -இதிகாசங்கள், கதைகள் எல்லாம் நம்முடைய. மானத்தை, மரியாதையை இழக்கச் செய்து நம்மைக் கூலிகளாய், அடிமைகளாய் இருந்த நிலைமையிலிருந்து மாறி, மானுட சமுதாயத்தை மானமுள்ள சமுதாயமாக மாற்றுவது என்னுடைய வேலை; அறிவுடைய சமுதாயத்தை உருவாக்குவது என்னுடைய கொள்கை என்று, சொன்னார்.
(தொடரும்)