இயக்க வரலாறான தன் வரலாறு (251) – தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

கி.வீரமணி

11.03.1994 தஞ்சை வல்லத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கழக விழா நடந்தது. அங்கு சமூக நீதிக் கொள்கையில் சாதனையை நிகழ்த்திய முதலமைச்சருக்கு பாராட்டு விழாவும், ரூ60 லட்சம் செலவில் தஞ்சை வல்லத்தில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரிகள் முதல் கட்டமாக கட்டி முடிக்கப்பட்டது. அன்னை நாகம்மையார் பெயரில் அமைந்துள்ள மாணவியர் விடுதி திறப்பு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் தந்தை பெரியார் பெயரில் பல்கலைக் கழகமாக உயர மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக அறிவித்தார்.

முன்னதாக விழா நடைபெறும் இடத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அமரும் வகையில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் முற்பகல் 11.30 மணி அளவில் எலிகாப்டர் மூலம் தஞ்சைக்கு வருகை தந்தார். அவரை நானும், கழகப் பொறுப்பாளர்களும்  வரவேற்றோம்.

தந்தை பெரியார் பல்கலைக்கழக கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் முதல்வர் ஜெ.ஜெயலலிதா
அவர்களுடன் ஆசிரியர் மற்றும் விழா அழைப்பாளர்கள்

விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் மாணவிகளின் என்.சி.சி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அடுத்து வளாகத்தில் மரக்கன்றுகளை முதலமைச்சர் நட்டார். கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் கழக பொறுப்பாளர்களையும் நான் முதல்வருக்கு அறிமுகப்படுத்தினேன். மாலை 4.30 மணி அளவில் மொழி வாழ்த்துடன் விழா துவங்கியது. அங்கு பாடப்பட்ட வரவேற்புப் பாடல் அனைவரின் காதுகளிலும், நெஞ்சிலும் தேனலைகளைப் பாய்ச்சியது.

விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் உளம் நெகிழ்ந்த உரையின் சில பகுதி இதோ சுட்டிக் காட்டுகிறோம்.

“எத்தனையோ பாராட்டு விழாக்களை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் இதுவரை நான் சந்தித்த பாராட்டு விழாக்களிலேயே என் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டது இந்த இனிமையான பாராட்டு விழா தான். ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்தப் பெருமை எவருக்கும் கிடைக்குமா என்பது கேள்விக் குறியே. எனக்கு முன்னால் இங்கே அமர்ந்திருக்கும் மாணவச் செல்வங்களைப் பார்க்கின்ற போது உண்மையிலே என் நெஞ்சம் நெகிழ்கிறது என்பதைத் தான் இந்த நேரத்தில் என்னால் சொல்லமுடியும். நான் இங்கே வந்த போது ஹெலிகாப்டர் இறங்கிய தளத்திலிருந்து இந்த மேடை வரை வழி முழுவதும் சாலையில் இரு மருங்கிலும் மாணவச் செல்வங்கள் நின்று எனக்கு அளித்த வரவேற்பினை நான் என்றைக்குமே மறக்க முடியாது. நான் ஹெலிகாப்டரில் வந்திறங்கி இந்த மேடையில் வந்து அமர்வதற்குள் எத்தனை கலைகளில் நீங்கள் வல்லவர்கள் என்பதை நீங்கள்   எடுத்துக்காட்டி விட்டீர்கள். வருகின்ற வழியில் சில மாணவ மாணவிகள் கராத்தே செய்து காண்பித்தார்கள். இன்னும் சிலர் மிக அருமையாக இங்கே ஒரு வரவேற்பு பாடலைப் பாடி இசையிலும் அவர்கள் வல்லவர்கள் என்பதை அனைவருக்கும் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். உண்மையிலேயே இதுவரை எனக்கு நடைபெற்ற பாராட்டு விழாக்களில் எல்லாம் தலை சிறந்த பாராட்டு விழா, நான் என்றைக்குமே கடைசி வரை மறக்க முடியாத பாராட்டு விழா இது தான் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பெரும் மதிப்புக்கும் உரியவரான ஜஸ்டிஸ் திரு.வேணுகோபால் அவர்கள், இப்படிப்பட்ட பெரியவர்கள் எல்லாம் இன்று என்னை பாராட்டுகிறார்கள் என்று சொன்னால், இந்த பெருமையை என்னவென்று சொல்லுவது! ஆயிரம் கோடிகள் கொடுத்தாலும் இந்த பெருமை எவருக்கு கிடைக்கும்?

நாளை முதல் இந்த இடத்திற்கு நீங்கள் எந்த பணத்தையும் கட்ட வேண்டியதில்லை. இந்த இடத்திற்கான ‘லீஸ் அமவுண்ட் முழுவதுமாக வேய்வ் (ரத்து) செய்கிறோம் எனவே, இனிமேல் நீங்கள் எந்த கட்டணமும் செலுத்தாமல், இந்த இடத்தை, இந்த கல்லூரி இருக்கின்ற நாள்கள் வரை, எத்தனை காலம் இருந்தாலும், நீங்கள் அனுபவிக்கலாம் என்பதை இந்த நேரத்தில் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புச் சகோதரர் திரு.கி.வீரமணி அவர்கள் இன்னொரு கருத்தையும் சொன்னார்கள். தமிழகத்தில் மற்ற பெரிய தலைவர்கள் பெயர்களில் எல்லாம் பல்கலைக் கழகங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான தந்தை பெரியார் அவர்களின் பெயரில் ஒரு பல்கலைக் கழகம் இல்லையே என்று குறைபட்டுக் கொண்டார்கள். அந்த குறையைப் போக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எங்கள் அரசு எடுத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசின் பதிலை விரைவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் இந்தப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். அது தந்தை பெரியாரின் பெயரிலேயே அமைக்கப்படும் என்பதையும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை கடமை உணர்வோடு செயல்படுத்தும். சகோதரர் கி.வீரமணி அவர்கள் என்னை அழைத்தால், அந்தப் பல்கலைக் கழகத்தின் திறப்பு விழாவிற்கும் நான் வந்து “உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பேன்’’ என உணர்வுப் பொங்க  தனது உரையில் குறிப்பிட்டார்.

விழாவிற்கு தலைமை வகித்து நான் உரையாற்றுகையில், “முதலமைச்சர் அம்மையாரின் அரிய பல சாதனைகளைப் பாராட்டி பேசியதோடு, தந்தை பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் அமைய துணை நிற்கும் அம்மையாருக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறினேன்.

12.3.1994 சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பண்டரிநாதன் அய்.ஏ.எஸ். தமது 77 ஆம் வயதில் மறைந்தார் என செய்திக் கேட்டு மிகவும் வருந்தினோம்.! அவர் மாணவர் பருவந்தொட்டு, தந்தை பெரியார் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, கடைசி மூச்சு அடங்கும்வரை தூய தன்மான இயக்க வீரராக வாழ்ந்துகாட்டியவர் ஆர்.பண்டரிநாதன் அய்.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் ஆவார் “ஆர்.பண்டரிநாதன் அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவராக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக, அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தி.மு.க. ஆட்சியில் டாக்டர் நாவலர் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கெசட் பதிவு பெற்ற தனி செயலாளராகப் பணியாற்றியவர். ஓய்வுக்குப் பின் சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநராகவும் பணியாற்றினார்.’’ என இரங்கல் செய்தியும் அனுப்பினேன். நான் வெளியூர் சுற்றுப் பயணம் சென்றிருந்ததால் மறுநாள் அவர் இல்லத்திற்கு சென்றேன் என்னுடன் என் துணைவியாரும் வந்தார் அவரது பிரிவால் வருந்தும் அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினேன்.

ஆர்.பண்டரிநாதன்

19.3.1994 புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் – அனைத்துத் துறைகளும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றன; அரசின் பொதுத்துறை. நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுவதோடு – பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தாராளமாக நுழைய கதவு திறந்துவிடப் பட்டுள்ளது. எனவே, வேலைவாய்ப்புகள் – அரசு சர்வீசுகளில் மிகவும் குறைந்துபோய் – தனியார் துறைகளில்தான் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகள் தனியார் துறையிலும் வரவேண்டும்; அப்போதுதான் இடஒதுக்கீட்டின் நோக்கமே வெற்றிபெற முடியும்.

திராவிடர் கழகம் – தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கோரும் இயக்கத்தை வலிமையாக துவங்க இருக்கிறது; என அறிக்கை மூலம் தெரிவித்தேன். அதோடு – தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவதற்கு -அரசியல் சட்டம் திருத்தப்படுமேயானால் தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் – அந்தத் திருத்தம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுனேன். இந்த நிலையில், தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று இந்திய அளவிலும் எழத்தொடங்கியது.

தனியார் துறைகளிலும், – இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படவேண்டுமென்றும், இதை நீதி மன்றத்தில் வழக்குக்கு ஆட்படுத்தாத வகையில் அரசியல் சட்டத்தின் 9ஆ-வது அட்டவணையில் இட ஒதுக்கீடு சேர்க்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும்  ஆதிவாசிகள் அமைப்பு கோரியுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் ஒரு குழுவினர் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இக்குழுவின் தலைவர்களாகச் சென்ற ராம்விலாஸ் பஸ்வான் (ஜனதாதளம்) மற்றும் திலீப் சிங்பூரியா (காங்) ஆகியோர் பின்னர் நிருபர்களிடம் பேசினர். இட ஒதுக்கீட்டை தனியார் துறைக்கு விஸ்தரிப்பது முக்கியமான பிரச்சினை என்றும், அது பற்றி பிரதமருக்குத் தான் கடிதம் எழுதுவதாகவும் சர்மா உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தனியார் துறைக்கு ஆதரவாக பொதுத்துறை தாரைவார்த்து வரப்படுவதால் இச்சமுதாய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு தனியார் துறைக்கும் கட்டாய மாக்கப்படவேண்டும் என்று அவர்கள் கூறினர்.

அவர்கள் குறிப்பிட்ட பல விஷயங்களை எனது அறிக்கையில் முழுமையாகச் சுட்டிக் காட்டியிருந்தேன்.

20.3.1994 கடலூர் நகர திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர்  கோ. குப்புசாமி இல்ல மணவிழா என் தலைமையில் டி.வி.எம். திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் தேவனாம்பட்டினம் கோ.குப்புசாமி – பூரணி குப்புசாமி ஆகியோரின் மகன் அருணாசலம், பொம்மையார் பாளையம் ராஜுவேல் – மல்லிகா ஆகியோரின் மகள், மஞ்சுளா ஆகியோர்க்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

மணமக்கள் இரா.தாமோதரன் – மகேஷ்வரி மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்தும் ஆசிரியர்

அங்கு எனக்கு மணமகனின் தந்தையார் கோ.குப்புசாமி அவர்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து சிறப்பித்தார். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாநில திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் துரை.சந்திரசேகரன் வரவேற்றார்.

முடிவில் நகர திராவிடர் கழக தலைவர் கோ.குப்புசாமி நன்றி கூறினார்.

23.3.1994 எனது உதவியாளராகப் பணிபுரியும் உதகை இரா.தாமோதரன் மணவிழா மேட்டுப்பாளையம் ஈஸ்வரியம்மாள் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ரங்கசாமி – திருவேங்கிடம்மாள் ஆகியோரின் மகன் தாமோதரனுக்கும், ராமசாமி – சுலோச்சனா ஆகியோரின் மகள் மகேசுவரிக்கும் நடைபெற்ற மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கோவை மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். கழக சட்டத்துறை செயலாளர் செ.துரைசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் பேராசிரியர் கி.கு.வெ.ஆசான், கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் கு.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

முடிவில் உ.பொன்னுசாமி நன்றி கூறினார்.

24.3.1994 கோயம்புத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும், சமூகநீதி மாநாடும் கோவை புலியகுளம் பெரியார் திடலில் மாவட்ட தி.க.தலைவர் வசந்தம் கு.ராமசந்திரன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அய்.பெரியசாமி வரவேற்புரை ஆற்ற, தர்மலிங்கம், பிரபாகரன். க.வீரமணி உடையாளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூகநீதி மாநாட்டில் சென்னை தாம்பரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமகள் இறையன் மாநில மகளிரணி செயலாளர்கள்  ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், க.பார்வதி மற்றும் தி.க.செல்வம், க.ப.கந்தசாமி, புலவர் மருதவண்ணார், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் கு.வெ.கி.ஆசான், திராவிடர் தொழிலாளர் கழக செயலாளர் கே.ஜி.சுப்பிரமணியன், திராவிடர் கழக தலைமை நிலைய செயலாளர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

முன்னதாக, மாலை 5 மணிக்கு சிங்கை ஆறுமுகம் தலைமையில், ரகுநாத் முன்னிலையில், நஞ்சை சாலை மார்க்கெட்டிலிருந்து மாபெரும் மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி மாநாடு நடைபெற்ற புலிய குளத்தில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் கொள்கை முழக்கங்களை முழங்கி மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் முதுகில் அலகு குத்தி அம்பாசிடர்கார் இழுத்துவந்தனர். கழகத் தோழர்கள் மற்றும் மகளிரணியினர் தீச்சட்டி எடுத்துவந்தனர். ஆணிப்படுக்கையில் கழகத் தோழர் படுத்துவந்தது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கழகத் தோழர்கள் பலர் உடல் முழுவதும் எலுமிச்சை பழம், தேங்காய் ஆகியவற்றை குத்திக்கொண்டு ஊர்வலத்தில் வந்தனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில்  இருபக்கமும் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்ற புலியகுளம் பெரியார் திடலில் ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், தாய்மார்களும் கூட்டம் முடிவடையும் வரை அமைதியாக ஒரு மணி நாற்பது நிமிடம் நான் ஆற்றிய உரையை கேட்டுச் சென்றனர்.

27.3.1994 சென்னையில் உள்ள, தென் மாநிலங்களுக்கான அமெரிக்க கான்சலேட்  ஜெனரல் திரு டிமோத்தி பி.அவுசர் அவர்களும், அவரது துணைவியார் திருமதி டிமோத்தி அவுசர் அவர்களும் காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து என்னை சந்தித்தனர்.

அமெரிக்க கான்சலேட் ஜெனரல் திரு.டிமோத்தி பி.அவுசர், திருமதி.டிமோத்தி அவுசர் அவர்களுடன் உரையாடும் ஆசிரியர்

பெரியார் திடலில் இயங்கும் – தந்தை பெரியார் நினைவிடம், மருத்துவமனை, நூலகம், கலையகம் மற்றும் அய்.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டனர்.. பின்னர் அவர்கள் என்னிடம் உரையாடுகையில் தந்தை பெரியாரின் சமூகப் பணியினையும், அவரின் தொலைநோக்கு சிந்தனையும் பற்றி எடுத்துக் கூறினேன். பின்னர் அவர்கள் விடைபெற்று சென்றனர்.

30.3.1994 மருத்துவ மேல்பட்டப் படிப்பிலும், இடஒதுகீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டமான தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதனை வரவேற்று அறிக்கை வெளியிட்டேன் அதில்               

“1992 ஆம் ஆண்டு, பீகாரில் உள்ள லல்லு பிரசாத் அரசு மருத்துவ மேல் பட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி ஆணை பிறப்பித்தது அதன்படி, தாழ்த்தப்பட்டோர் – 14 சதவிகிதம், மலைவாழ் மக்கள் – 10 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 14 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் – 9 சதவிகிதம் பெண்கள் – 3 சதவிகிதம் இதை எதிர்த்து, இப்படி மருத்துவ மேல் பட்டப்படிப்பிற்கு இடஒதுக்கீடு செய்தது அரசியல் சட்ட விரோதம். இது தகுதி, திறமையைப் பாதிக்கும் என்று கூறியதோடு, இந்திய மெடிக்கல் கவுன்சில் தங்களது வாதங்களையே ஏற்று, இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்து அந்த ஆணையைச் செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்று சில உயர் ஜாதியினர் வாதாடினர்.

பாட்னா உயர் நீதி மன்றத்தில் இவ்வழக்குகளை இருவர் போட்டனர், அவர்களது ‘ரிட்’ மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் மீது மனுதாரர்கள் மேல் முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் செய்ததையொட்டியே இந்த தீர்ப்பு வெளி வந்தது இத்தீர்ப்பு இனி பல்வேறு மாநில அரசுகளின் கண்களை வெகுவாகத் “திறக்க வைக்கும் என்பது உறுதி’’ இத்தீர்ப்புக்காக நீதிபதியை பாராட்டி. தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டேன்.

கோ.இமயவரம்பன்

1.4.1994  திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில், பெரியார் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாவும், பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி விடுதி அடிக்கல் நாட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது அதில் பெரியார் நூற்றாண்டு – கல்வி ‘வளாக செயலாளர் புலவர் கோ. இமயவரம்பன் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின.

துவாக்குடிமலை தொழில் அதிபர் கல்விவள்ளல் ‘வீ.கே.யென்’ கண்ணப்பன் முன்னிலை வகித்தார். நான் தலைமையேற்று நடத்திய அவ்விழாவில் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் எம்.கோ.பாலகிருஷ்ணன், இரண்டு கோடியே முப்பது லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி- விடுதிக்கு அடிக்கல்லைத் திறந்து வைத்து சிறப்புச் சொற்பொழிவாற்றினார். நான் உரையாற்றுகையில்

“ரூபாய் 2 கோடியே 30 லட்சம் செலவில் கட்டப்படவுள்ள பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி விடுதியைக் கட்டும் திட்டத்திற்கு “கல்வி வள்ளல் கண்ணப்பன் கூடம்’’ என்று பெயரிடப்படும் என்றும், மேலும், இருபத்தைந்தாயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கும் கல்விப் புரவலர்களின் பெயர்கள் ஒவ்வொரு அறைக்கும் வைக்கப்படும் என்றும் பலத்த கைத்தட்டலுக்கிடையே அறிவித்தேன்.’’ முதலில் தொழிலதிபர் கல்வி வள்ளல் வீகேயென் கண்ணப்பன் ரூபாய் இருபத்தைந்தாயிரத்துக்கான காசோலையை என்னிடம் வழங்கினார். விழாவில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை, சிங்கப்பூர் தொழிலதிபர் எம்.ஆர்.சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் முடிவில் பெரியார் மகளிர் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞான.செபஸ்தியான் நன்றியுரை ஆற்றினார்.

3.4.1994 நாகை பெரியார் பெருந்தொண்டர் பி.சண்முகம் இல்ல மணவிழா,

நாகப்பட்டினம் பி. சண்முகம் – அமிர்தம் ஆகியோரின் மகன் இந்திரஜித்துக்கும், எடையூர் என்.செல்லப் பிள்ளை – நந்தீஸ்வரி ஆகியோரின் மகள் வெற்றிச் செல்விக்கும் பக்தர்களால் கெட்டகாலம் என்று சொல்லப்படும் ராகுகால வேளையில், நான் தலைமையேற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து-மணமக்களை மோதிரத்தை அணிவிக்கச் செய்து மணவிழாவை நடத்தினேன்.

எனது திருமணம் ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில் ராகு காலத்தில் நடைபெற்றது. நாங்களெல்லாம் நல்ல முறையில்தான் இருக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறி, மணமக்கள் தெளிவும் துணிவும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற வேளையில் மணவிழாவை நடத்தி வைக்கிறோம்.

ஆகவே, தந்தை பெரியாரும் – பொதுத் தொண்டும் போல இணைபிரியாது வாழ வேண்டும்.’’ என்று வாழ்த்துரை வழங்கினேன். ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஜி.சக்தி வேலு வரவேற்புரையாற்ற, மாவட்ட மகளிரணி தலைவர் ராசலட்சுமி மணியம் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

4.4.1994 தமிழ்நாடு தேர்வாணையக் குழுமம் சார்பாக இளநிலை உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு – தட்டச்சுப் பயிற்சியும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அரசின் ஆணை ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று கழகத்தின் சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதினேன் அதற்கு வெற்றியும் கிடைத்தது அந்த அறிக்கையின் சில பகுதி “தமிழ்நாடு அரசின் பொதுப்பணி தேர்வாணையத்தின் நான்காம் பிரிவு (Group IV Services) பணிகளான எழுத்தர் போன்ற பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முன்கூட்டியே தட்டச்சுப் பயிற்சியில் வெற்றிபெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று புதிதாக வற்புறுத்தும் தமிழக அரசு ஆணையின் நடைமுறையினால், பல்லாயிரக்கணக்கில் எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நமது தாழ்த்தப்பட்ட மலைவாழ் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த கிராமப் புறங்களில் கல்வி கற்று தேர்ந்து நான்காம் பிரிவு பணிக்கு மனுச் செய்வோர் (இரு பாலரும்) வரவே இயலாத கொடுமையே ஏற்படும்.

இதனால் ஏற்படும் ஆபத்தை விளக்கி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசு வேலை வாய்ப்பு தேர்வாணையத் தலைவர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும் கடிதங்கள் எழுதி  இவ்வாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம் எழுத்தர் தேர்வுக்கு தட்டச்சு தேர்வை முன் நிபந்தனையாகக் கொள்ளாமல் அதற்கு முன் நடந்த முறையிலேயே நான்காம் பிரிவுக்கான மாணவர்கள் தேர்வு நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்தினோம்.

நமது கோரிக்கையை முழுமையாக தமிழக முதலமைச்சர் அவர்கள் ஏற்பார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம் நியாயம் இருக்கிறது என்ற காரணத்தால், இதனைப் புரிந்து இந்த சமூக அநீதியைக் களைய முன் வந்த தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தலைவர் உறுப்பினர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும் தமது நன்றி உரித்தாகுக’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆ.மா.தருமலிங்கம்

9.4.1994 தந்தை பெரியாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவரும், திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக மாநாடுகள் பலவற்றில் பங்கேற்று உரையாற்றியவரும், கருநாடகப் பகுத்தறிவாளர் கழகத்தைத் தோற்றுவித் தவருமான பேராசிரியர் ஆ.மா.தருமலிங்கம் அவர்கள் காலமானார். என செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

“16.3.1908 இல் தோன்றிய பேராசிரியர், கருநாடக அரசியல் – சட்டம் – சமூகம் – இதழியல் -தமிழர் நலன் ஆகிய துறைகளில் பல்வேறு சிறப்புகளை எய்திப் பலருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சட்டப்பேராசிரியரான அவர், தந்தை பெரியார் நடத்திய – மாநாடுகளைப்பற்றியும் MYSINDIA   எனும் ஆங்கில இதழில் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். 1949லேயே – பகுத்தறிவு வகுப்புகளையும், திருக்குறள் வகுப்புகளையும் நடத்தித் தந்தை – பெரியாரையும், மேலைநாட்டுப் பகுத்தறிவாளர்களையும் பெங்களூர்வாழ் தமிழர்களுக்கு நன்முறையில் அறிமுகப்படுத்தினார். கருநாடகத்துப் பல்துறை அறிஞர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மொழிச் சிறுபான்மையோர் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றியவர். கருநாடக மாநிலத்தின் இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் குழுவில் (வெங்கட்டசாமி குழு) உறுப்பினராக இருந்து பணியாற்றினார். வழக்கறிஞர் ஆவனூர் தலைமையில் அமைந்த குழுவிற்கும் பெரிதும் துணையாக இருந்தார்.

கருநாடகத்துத் தமிழர்களுக்கு அரசியல் சட்டத்தில் மொழிச் சிறுப்பான்மையோருக்கு கிடைக்கவேண்டிய உரிமைகள் கிடைக்கப் போராடி வந்தார். கருநாடகத் தமிழர் பேரவைத் தலைவராக இறுதிவரை இருந்தார். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்திலும் தலையாயப் பங்கேற்றார்.

               மண்டல் குழு நாடுதழுவிய ஆய்வினை மேற்கொண்டபோது, மிக்க உறுதுணையாக இருந்தார். பெங்களூரில் ‘தந்தை பெரியார் அறக்கட்டளை’யை நிறுவிட முதற்காரணமாக இருந்தார். மறைந்த பூ.ஆ.கொடையராசனுடன் பலரையும் அணுகி அறக்கட்டளைக்குப் பொருள் திரட்டினார். பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் ‘தந்தை பெரியார் அறக்கட்டளை’யை அமைத்தார். நான் தலைமையேற்று தொடக்க விழாவை நடத்தினேன்.

கருநாடகப் பகுத்தறிவாளர் கழகத்தின் வழி தந்தை பெரியார், கோரா, கோவூர் போன்றவர்களைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்தியதுடன் கருநாடகத்தின் பல பகுதிகளிலும் பகுத்தறிவாளர்களாக இருந்து வெளியில் தெரியாமல் இருந்தோரை எல்லாம் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்தார்.

தந்தை பெரியாருடைய கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். பெங்களூரிலும் மற்ற பகுதிகளிலும் தமிழ் சீர்திருத்த திருமணத்தை அறிமுகப்படுத்தி, நூற்றுக்கணக்கில் திருமணங்களை நடத்தி வந்துள்ளார்.’’ அவரது மறைவுக்கு மனவருத்தத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன்.

அன்னாருடைய இறுதி நிகழ்ச்சியில் கருநாடகத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியப்பா, அண்ணாமலை, பாண்டியன், பூ.சி.இளங்கோவன், முத்துசெல்வன், வி.சி.கிருட்டிணன் மற்றும் பலரும் கலந்து கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர்.

திருமதி.மீனாட்சி, சின்னய்யா அவர்கள் கல்வி அறப்பணிக்கு காசோலையை ஆசிரியரிடம் வழங்க உடன் கழகத்தினர்

10.4.1994 மலேசியா நாட்டின் ஜோகூர் திரு.சின்னய்யா அவர்களின் கம்பெனி சார்பாக திருமதி மீனாட்சி சின்னைய்யா அவர்கள் பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிகளை பாராட்டி கழகத்துக்கு ரூபாய். ஒரு லட்சத்துக்கான காசோலையை பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக்கு என்னிடம் வழங்கினார். அப்போது அன்பழகன், திருமதி இந்திராணி ஆதி அம்மாள் காசிம், சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பினேன்.

17.4.1994 தமிழகத்தில் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைகோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் – அது ஆளும் கட்சியின் அரசியல் எதிரிகளுக்குத்தான் லாபமாகும் என்று நான் எழுதிய அறிக்கையின் முக்கிய பகுதிகள்.

“தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இருக்கிறது என்று சில எதிர்க்கட்சியிலிருந்து அரசியல் நடத்துகிறவர்கள் சொல்வதும் அக்குற்றச்சாட்டில் கடுகளவு உண்மை இல்லை என்று ஆளுங்கட்சியினர் சட்டசபையில் மறுப்பதும், ஒரு வாடிக்கையாகிவிட்டது. நேற்று தமிழக வருவாய்த்துறை அமைச்சரும். அ.இ.அ.திமு.க. மூத்த துணைப் பொதுச் செயலாளருமான திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள், சில குறுகிய அரசியல் லாபநோக்கத்திற்காக இல்லாத விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருப்பதாக காங்கிரஸ்காரர்கள் கடந்த ஓர் ஆண்டுகாலமாக பேசிக் கொண்டு வருகிறார்கள் எங்கே நடமாட்டம் இருக்கிறது என்ற தகவல் அவர்களிடம் இருந்தால், அதை ஏன் மாநில அரசுக்குத்தர மறுக்கிறார்கள்? அத்தத் தகவலை அவர்கள் தந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் விடுதலைப்புலிகளை வைத்து இவர்கள் அரசியல் வியாபாரம் நடத்திக் கொண்டு இருப்பார்கள்?’’ என்று மிக ஆணித்தரமாக காங்கிரஸ்காரர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார்!

தமிழ்நாட்டில் பொறுப்பற்ற முறையில் பேசுவதையே தனது அரசியலாக நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் தரகரான சுப்பிரமணிய சாமிகள் கூட புதிதாக ஒரு சரடு விட்டிருக்கிறார். அதாவது, “கடந்த 3 வாரத்துக்கு முன்பு சென்னை திருவான்மியூருக்கு படகில் 300 விடுதலைப்புலிகள் வந்து இறங்கி உள்ளனர் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். காங்கிரஸ்காரர்களும், சுப்பிரமணிய சாமிகளும் இணைந்து விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்களே! அவர்கள் பொது மக்களுடைய நியாயமான சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? விடுதலைப்புலிகள் வெளிநாட்டில் இருந்து கடல் வழியாகத்தானே வரமுடியும்? அவர்களைப் பிடிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திற்கா? அல்லது மாநில அரசாங்கத்திற்கா? இவர்கள் கூறுவதுபோல், வெளிநாட்டினர் கடல்வழியாகவோ, வேறு வழியாகவோ தமிழ் நாட்டிற்குள் நுழைந்தால் அதற்கு முழு பொறுப்பு ஏற்கவேண்டியது மத்திய அரசும், மத்திய ஆளும் கட்சியும்தானே! அதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பு ஏற்க முடியும்?

விடுதலைப்புலிகள் இயக்கத்தை, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தடைசெய்த போதே நாம்; இங்கு இல்லாத ஓர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கேட்டோம் அதற்காக நம்மீது பாய்ந்தவர்கள் பலரும் உண்டு ஆனால் இப்போது விடுதலைப்புலிகள் பிரச்சினை என்பது அரசியலுக்குப் பயன்படும் ஓர் ஆதாயம் சரக்கு என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நேரத்தில் தமிழ்நாட்டில் அது பயன்படுகிறது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கு விதித்துள்ள தடை ஆணை இரண்டு ஆண்டுகளில் காலாவதியாகும் நிலையில் மீண்டும் அதை புதுப்பிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் தற்போது கொண்டுவர யோசிக்கப்படுகிறது என்று சில நாள்களுக்கு முன்னால் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. நேற்று வருவாய்த்துறை அமைச்சர் திரு.எஸ்.டி.எஸ் அவர்கள் விடுத்துள்ள அறிக்கைப்படி தமிழ்நாட்டில் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் தடையை நீடிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டுவருவது என்பதேகூட தேவையற்ற அரசியல் முரண்பாடு ஆகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை எவ்வித வன்முறையையும், பயங்கரவாதத்தையும் யார் செய்தாலும் அதை ஆதரிப்பவர்கள் அல்ல நாம் இல்லாத பேர்வழிகளைக்காட்டி, அவர்கள் செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை என்பது போல் நடக்கிறது இலங்கையில் இனப்படுகொலை தங்குதடையில்லாமல் நடைபெறுவது சிங்கள இனத்தவருக்குத்தான் லாபம்.

எத்தனை முறை தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தும் இலங்கை அருகில் சென்று மீன்பிடித் தொழிலை நடத்தும் தமிழக மீனவர் பாதுகாப்பற்று கொல்லப்படுவதும், தாக்கப்படுவதுமான பயங்கர நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது அவர்கள், எப்போதாவது மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டார்கள் என்றால் அதற்கு அங்குள்ள விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று அவர்களே பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எனவே, இப்பிரச்சினையில் தமிழக அரசு அவசரப்பட்டு சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது அவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தும் அரசியல் எதிரிகளுக்குதான் லாபமே தவிர தமிழக அரசுக்கு எவ்வித லாபமும் கிடையாது.

இவைகளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.’’ என அந்த அறிக்கையில் விபரமாக சுட்டிக்காட்டினேன்.

18.4.1994 ‘குமுதம்’ ஆசிரியர் மறைவுக்கு  கழகத்தின் சார்பில் இரங்கல் செய்தி வெளியிட்டேன். அதில்,

“குமுதத்தின் நிறுவன ஆசிரியர், அருமை நண்பர் திரு. எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் அமெரிக்காவில் இருதய அறுவை சிகிச்சைக்கு ஆளானபோது மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.

தமிழ்ப் பத்திரிகை உலகில் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக்கொண்டு, தமிழ் வார ஏடுகளிலேயே மிக அதிகமான அளவில் ஆசியாவிலேயே விற்பனையில் சாதனை புரிந்த ஓர் ஏட்டினை தனது கனிந்த அனுபவத்தால் வளர்த்தவர் அவர். அவர் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கும் – பத்திரிகை உலகிற்கும் மாபெரும் இழப்பாகும்.

அவரது மறைவால் துயரத்துக்கு ஆளாகி உள்ள அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், ‘குமுதம்’ பத்திரிகை தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’ அந்த என இரங்கல் செய்தியில் தெரிவித்தேன்.

2.5.1994 தமிழ் நாடு தொழிநுட்பக் கல்லூரியின் முன்னாள் இயக்குநரான வி.சீனிவாசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன்.

தலைசிறந்த தொழில் நுட்பக்கல்வி நிபுணரான அவருடைய மறைவு தமிழகத்திற்கு பெரும் இழப்பாகும்.

நான் கழகத்தாருடன் அவருடைய இல்லத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். உடன் விடுதலை ராதா நீதியரசர் பி.வேணுகோபால் வந்திருந்தனர். அவருடைய மனைவி, மகள்களுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.

5.5.1994 தமிழ்நாட்டின் மூத்த கல்வி வள்ளல் பச்சையப்பனாரின் அறக்கட்டளையின் முன்னோடிக் கல்லூரியான பச்சையப்பன் கல்லூரிக்கு 150 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்ற பெருமகிழ்ச்சியுடன் அதன் 150ஆவது ஆண்டு விழாவை, தமிழக முதலமைச்சர் அவர்களை அழைத்துக் கொண்டாடும் அந்த அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கும். அதன் முதல்வர், பேராசிரியர், மாணவ மணிகள் அத்துணைப்பேருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன். அதில்,

“பச்சையப்பன் கல்லூரியில் 1928 வரை, தாழ்த்தப்பட்டோர் – இஸ்லாமியர், கிறித்துவர் சேர்க்கப்படாமல் – அனுமதிக்கப்படாமல் இருந்துவந்தனர். பிறகு தந்தை பெரியார் அவர்கள் 1928-ல் சென்னையில் நடத்திய பார்ப்பனரல்லாத மாநாட்டுத் தீர்மான வேண்டுகோள் மூலம்தான் அத்தடை தகர்த்தெறியப்பட்டது என்ற பழைய வரலாறு இன்றைய விழாக் கொண்டாடுபவர்கள் பலருக்கும், இளைய தலைமுறையினருக்கும் கூட தெரிந்திருக்காது!! ‘

பச்சையப்பர் ஓர் இந்து; ஆதிதிராவிட சமுதாயத்து சகோதரர்களும், இஸ்லாமிய- கிறிஸ்துவர்களும் இந்து ஒருவரின் அறப்பணியால் நடத்தப்பெறும் கல்லூரியில் சேருவதற்கு உரிமை உடையவர்கள் அல்ல; ஆதி திராவிடர் “அவர்ணஸ்தர்கள்’’ (out castes) ஆனபடியால் அவர்கள் ஒருபோதும் இந்து மதத்தோடு சேர்த்து எண்ணப்பட கூடியவர்கள் அல்ல என்று ஒரு தகர்க்கமான விளக்கம் கூறப்பட்டு அந்த நடைமுறை அப்போது செயல்பட்டுவந்தது.

அந்தக் கல்லூரிதான் பிறகு அனைத்து வகை மக்களுக்கும் பெரிதும் பயன்பட்ட கல்லூரி!

அண்ணாமலைப் பல்கலைக் கழகமும், பச்சையப்பன் கல்லூரியும் தான் தமிழர்களுக்கு பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி நீரோடையைத் திருப்பிவிட்ட கல்விக் கழகங்களாகும்.

அவை இன்று நல்லவண்ணம் இயங்குகின்றன.

இக்கல்லூரியின் தொண்டு தமிழ்நாட்டுக் கல்வி வரலாற்றில் ஒரு சீரிய சாதனைத் தொண்டாகும். உலக முழுவதிலும் அதன் பழைய மாணவர்கள் ‘அங்கிங்கு எனாதபடி’, எங்கும் நிறைந்துள்ளனர். அக்கல்லூரி மேலும் பெருகி, தமிழ்நாட்டில் ‘நாடெலாம் பாய்ந்தது கல்வி நீரோடை’ என்று காட்டும்வண்ணம் – முதலைகள் இல்லாத கல்வி நீரோடையாக அவை திகழ்ந்து வளரவேண்டுமென தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பில் வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறோம்.’’ என அறிக்கை வெளியிட்டேன்.

7.5.1994 தமிழகத்தில் மண்டல் குழுப் பரிந்துரை அமலாக்கம் நடைமுறையில் வந்துள்ள இக்கால கட்டத்தில், “பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பிரச்சினைகளுக்காக அனைத்து மத்திய அரசுத்துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் முதலியவற்றில் உடனடியாகப் பிற்படுத்தப்பட்டோர் நலசங்கத்தைத் துவக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏற்கெனவே, அவ்வலுவலகங்களில் செயல்பட்டுவரும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் நலசங்க அமைப்புகளுடன் இணக்கமாக ஒருவருக்கொருவர் துணையாகப் பலமாக இருந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.’’ என அறிக்கை மூலம் நலச் சங்கம் அமைக்க வேண்டுகோள் விடுத்தேன்.

8.5.1994 சென்னை திருவொற்றியூர், பொது வர்த்தகர் சங்க மாளிகையில் மா.ஏழுமலை – லட்சுமி ஆகியோரின் மகன் பார்த்தசாரதிக்கும்,  பொன்னேரி வட்டம் தமிழ் என் கொரஞ்சூர் பி.சிவலிங்கம், -பாளையம் ஆகியோரின் மகள் ஜெயாவுக்கும், தலைமையில் வாழ்க்கைத் துணை – நல ஒப்பந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் திருவொற்றியூர் நகர திராவிடர்

கழக தலைவர் பெ.செல்வராசு வரவேற்றார்.

வட சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.குணசீலன், மாவட்ட-திராவிடர் கழக தலைவர் க.பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள். நான் மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து மணவிழாவை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தி அறிவுரை வழங்கினேன்.

11.5.1994 பேரறிஞர் அண்ணாவுக்கு மிக நெருக்கமானவராக விளங்கிய சாதிக்பாட்சா பொது வாழ்க்கையில் எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்குப் பிறகும், கட்சிப் பணிகளைத் தொடர்ந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

எளிமை நேர்மை கொள்கை உறுதியின் சின்னமாக இருந்த தி.மு.க. பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ஜே.சாதிக்பாட்சா முடிவெய்தினர் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன்.

எஸ்.ஜே.சாதிக்பாட்சா

தஞ்சையில் சுற்றுப்பயணத்திலிருந்த நான் மனம் வருந்தி இரங்கல் செய்தி வெளியிட்டேன். அதில்,

“மறைந்த முதல்வர் அண்ணா தலைமையில், செயல்பட்ட தி.மு.கழக ஆட்சியிலும், அதன் பிறகு டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர். சாதிக்பாட்சா தி.மு.கழக முன்னணி தலைவர்களுள் குறிப்பிடத்தக்க இடத்தில் சாதிக்பாட்சா இருந்தார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு தி.மு.கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். – நீக்கப்பட்டதும், தி.மு.கழக பொருளாளராக நியமிக்கப்பட்ட சாதிக்பாட்சா இறுதிவரை அதே பொறுப்பில் நீடித்தார். –

அமைதி, அடக்கம்: கொள்கை உறுதி; சீரிய பண்பாடு ஆகியவைகளின் முழு உருவமாகத் – திகழ்ந்தவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் அவரது வாழ்வின் செயலாக்கிக் காட்டியவர் அந்தப் பெருமகன்.

அவாது பேரிழப்பு தி.மு.க.வுக்கும், அவரது குடும்பத்துக்கும் மட்டுமல்லாது தமிழ்ச் சமுதாயத்துக்கும். – தமிழ்நாட்டு – பொது வாழ்க்கைக்கும் கூட பேரிழப்பாகும்.

அவருக்கு திராவிடர் கழகம் தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது மறைவால் அவதியுறும் அவரது துணைவியார், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கும் நமது இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’ என குறிப்பிட்டிருந்தேன்.

கழகத்தின் சார்பில் சட்டத்துறை செயலாளர் எஸ்.துரைசாமி, ஆனூர் ஜெகதீசன், எம்.பி.பாலு ஆகியோர் இறுதி மரியாதைச் செலுத்தினர்.

 (நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *