அய்யாவின் அடிச்சுவட்டில் … : இயக்க வரலாறான தன் வரலாறு (251) வைக்கத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தந்தை பெரியாரின் சிலைத் திறப்பு விழா

ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020

கி.வீரமணி

 

1994 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் ஜனவரி இறுதிக்குள் முதன்மையான கழகத் தொண்டர்கள் சிலரை அடுத்தடுத்து இழக்க நேர்ந்தது.

திருக்குறளார் வி.முனுசாமி

4.01.1994 திருக்குறளார் வி.முனுசாமி அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். “திருக்குறளார் அவர்கள் தமிழ்நாட்டின் சீரிய தமிழறிஞர். குறளை குவலயம் முழுவதும் பரப்புவதில் மிகப்பெரும் தொண்டு புரிந்தத் தமிழறிஞர் ஆவார். அவரது நகைச்சுவைப் பேச்சும், நா நயமும் எவரையும் ஈர்க்கச் செய்யும். எந்நாளும் நினைவில் நிற்கும். குறள் நெறி பரப்பிய அக்கோமான் தந்தை பெரியார் அவர்களது பெருமைபற்றி ‘வள்ளுவர் குறளும் ஈ.வெ.ரா. வாழ்க்கையும்’ என்று சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே நூல் எழுதியவர். அவரது இழப்பு தமிழ் கூறும் நல் உலகத்திற்குப் பேரிழப்பு ஆகும். அண்ணா மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும்’’ அவரது குடும்பத்திற்கு தெரிவித்தேன் எனக்கு மிகவும் நெருக்கமானவர்.

12.01.1994 திரு.நடேசன் லண்டனில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். “மறைந்த திரு.நடேசன் நடுத்தர வயதுள்ள கம்ப்யூட்டர் எஞ்ஜினீயர் ஆவார். எல்லோரிடமும் நன்கு பழகக்கூடிய இனிய சுபாவம் உள்ளவர். ‘விடுதலை’ வாசகர் ஆவார். சொந்த ஊர் யாழ்ப்பாணம். இவர் இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தவர். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் தந்தி’’ அனுப்பினேன்.


என்.பி.காளியப்பன்

18.01.1994 நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கிய அந்த நாள் முதல் இந்த நாள் வரை அவ்வியக்கத்தின் ஒப்பற்ற தளபதியாக விளங்கிய பாசத்திற்குரிய அண்ணன் மானமிகு என்.பி.காளியப்பன் அவர்கள் பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகில் உள்ள அவரது கிராமமான படப்பைக்காட்டில் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் கீழ்கண்ட அறிக்கை மூலம் தெரிவித்தேன்.

“அய்யா அவர்களிடம் அவர்கள் வாலிபராக இருந்த காலத்தில் சேர்ந்தார் அணுக்கத் தொண்டர் அய்யா அவர்களை விட்டு என்றும் நீங்கவில்லை, அய்யாவின் மறைவுக்குப் பின்னரும் கூட அவர் கண்ட இயக்கத்தில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் கட்டுப்பாடுக் காத்துக் கடமை ஆற்றும் இராணுவத் தளபதி போல் வாழ்ந்த கருஞ்சட்டை சிங்கம் அவர்!.

எளிமை அவரது இலக்கணம். முதுமை வாட்டிய போதெல்லாம்கூட அவர் கொள்கை, லட்சியத்திற்கு உழைக்கும் ஓர் இளங்காளைபோல் செயல்பட்ட மாவீரர்!

இயக்கத்திற்கும் தலைமைக்கும் அய்யா அவர்கள் காலத்திலிருந்து ஏற்பட்ட சோதனைகளின்போது சபலத்திற்கும், சஞ்சலத்திற்கும் ஆளாகியவர்களையும், தடம் புரண்டவர்களையும், புரள முயன்றவர்களையும் நெறிப்படுத்திய கொள்கைக் கோமான்; லட்சிய முதிர்ச்சிப் பழம் அவர்!

அன்னை நாகம்மையாரின் செல்லப்பிள்ளை; 1929இல் அய்யா அவர்கள் மலாயா (அப்போது அதற்குப் பெயர் அதுதான்) சென்றபோது முதலிலேயே சென்று சுற்றுப் பயணத் திட்டத்தினை முறைப்படுத்த அய்யா அவர்களால் அனுப்பப்பட்டவர்.

லட்சியத் தொண்டன் என்பவன் தேவையற்ற, அன்றாட வாழ்க்கை வசதிகளில் அதிகம் தன்காலத்தை வீணாக்கக்கூடாது என்பதை அய்யாவிடமிருந்து அப்படியே கற்றவர் மறைந்த அண்ணன் அவர்கள்.

நாகை தொழிலாளர் இயக்கப் போராட்ட காலந்தொட்டு அவர் ‘நாகை என்.பி.காளியப்பன்’  என்றே அழைக்கப்பட்டார். தளபதி அண்ணன் அழகிரியின் உற்றத் தோழர், பட்டுக்கோட்டை சுயமரியாதைக் கோட்டையைக் காத்த சிங்கங்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்!

அய்யா! அன்னை நாகம்மையார். அன்னை மணியம்மையார் போன்றவர்களிடம் காட்டிய அதே அன்பை எம்மைப் போன்ற எளிய தொண்டர்க்குத் தொண்டனிடம் காட்டிய பெருந்தன்மையின் பேருருவம் அவர்!

அவர் மறைந்தாரா? இல்லை இல்லை; சுயமரியாதைத் தோழர்களின் உள்ளங்களில் நிறைந்தார்!

அவரது பிரிவால் வாடும் அவரது செல்வங்களுக்கு நமது சகோதர சகோதரிகளுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து’’ என அறிக்கை வெளியிட்டு வேதனைகளை தீர்த்துக் கொண்டோம்.

26.1.1994 வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந் தொண்டருமான மானமிகு கருஞ்சட்டை தளபதி நண்பர் கே.கே. சின்னராசு அவர்கள் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் காலமானார் என்பதை அறிந்து சொல்லொணாத் துன்பமும், துயரமும், வேதனையும் அடைந்தேன்.

கே.கே. சின்னராசு

இரண்டு நாள்களுக்குமுன் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று அறிந்தவுடன், தலைமை நிலையச் செயலாளர்கள் – கவிஞர் கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோருடன் நான் தாம்பரம் மருத்துவமனை சென்று அவரைக் கண்டு பேசினேன். அவரும் சிறிதளவு தெம்பு பெற்றார்.

“தோழர் கே.கே.சி. அவர்கள் உழைப்பால் உயர்ந்த ஒரு பெருமகன். அவரது அண்ணார் திரு.கே.கே. தங்கவேலு அவர்களைப் பின்பற்றி, தந்தை பெரியார் தலைமையை ஏற்ற நாள் முதல் இறுதி மூச்சு அடங்கும் வரை இந்த கொள்கையிலிருந்து இம்மியளவும் வழுவாத, பிறழாத ஒரு கொள்கைக் குன்றம் அவர்!

அவர் வேறு எதையும் விட்டுக்கொடுப்பார்; ஆனால், கொள்கை என்று வந்துவிட்டால் துளிகூட விட்டுக்கொடுக்காத ‘‘முரட்டு சுயமரியாதைக்காரர்’ ஆவார்!

இயக்கத்திற்கு ஒரு வள்ளலாக இருந்து பல பணிகளை அவ்வப்போது தயங்காது செய்துவந்தவர்!

சோலையார்பேட்டையில் இயக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இடத்தையும், கட்டடத்தினையும் நன்கொடையாக அளித்து பராமரித்துவந்தவர்.

எந்த போராட்டம் ஆனாலும், மாநாடு ஆனாலும் அதில் குடும்பத்தோடு கலந்து கொள்ள அவர் ஒருநாளும் தவறியதே கிடையாது!

கட்டுப்பாடு காப்பதில் அவர்கள் எடுத்துக்காட்டான இலட்சிய இராணுவ வீரர் ஆவார்!

அவருக்கு ஏற்பட்ட ஒரு நோயினை

1976 – இல் மருத்துவர்கள் சரியாக கணிக்காமல் சிகிச்சை அளித்ததின் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது; என்றாலும் அத்துடன் அவர் சுழன்று சுழன்று கழகப் பணிகளை ஆற்றத் தவறவே இல்லை.

அவரது துணைவியர், அவரது செல்வங்களும், பேரன், பேத்தி, மருமகள்கள் உட்பட அனைவரும் இயக்கத்தின்பால் காட்டிவரும் அன்பை இயக்கம் மறக்க இயலாது!’’

மறைந்த அந்த கருஞ்சட்டை இராணுவத் தளபதிக்கு வீரவணக்கத்தினை செலுத்தி – குடும்பத்தாருக்குக் கழகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டோம்.

27.01.1994 தருமபுரி மாவட்டம் பண்ட அள்ளி வனத்துறையைச் சேர்ந்த வெ.வேணுகோபால்   – செயக்கொடி ஆகியோரின் மகள் வே.வாணி என்கிற கனிமொழிக்கும், அரூர் வட்டம் பொ.பள்ளிப்பட்டி, கா.இராமலிங்கம் – திருமலை ஆகியோரின் மகன் இரா.ரவிக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவில் தலைமை ஏற்று உறுதிமொழியை, கூறச்செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன்.

வைக்கம் விழா அழைப்பிதழ்

31.01.1994 கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் ‘வைக்கம் வீரர்’ எனபோற்றப்பட்டு நடைபெற்ற சிலை திறப்பு விழா திராவிட கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதால், அப்போது ஆற்றிய தலைமை உரையில்.

 

 
நினைவிட வளாகத்தை திறந்து வைக்கும் நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் உடன் தமிழர் தலைவர் ஆசிரியர்.

“இந்தியாவின் சமூக நீதிக்களத்தில் நடைபெற்ற முதல் மனித உரிமை போரான வைக்கம் சத்தியாகிரகத்தில் போராடி அவ்வறப்போர் முழு வெற்றிபெறுவதற்கு உழைத்த வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களுக்கு தக்கதோர் நினைவுச் சின்னத் திறப்பு விழாவாகிய இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் இந்த அரிய வாய்ப்பினை தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பெற்ற சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டனான எனக்கு அளித்த தமிழக அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலைவெளியிட்டு அவர்களைச் சிறப்புச் செய்தது மாண்புமிகு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு அதனை ஓர் ஆண்டு முமுவதும் கொண்டாடி பல்வேறு வகையில் அவர்களுக்கு வரலாற்று பெருமை மிக்க சிறப்புகளைச் செய்தது.

அப்போது தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழாக்குழுவினர் முடிவுக்கேற்ப இந்த நினைவுச் சின்னம் சிலை பூங்கா ஏற்பாடுகள் உருவாகின.

அதன்படி 3.11.1985 அன்று வைக்கம் நகரில் வைக்கம் வீரருக்கு நினைவகம் அடிக்கல் நாட்டு விழா தமிழக அரசு சார்பில், கேரள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் சீரிய பகுத்தறிவுச் செம்மல் தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களுக்கு, கேரள அரசின் சார்பில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் அவர்களும் முக்கிய பங்கேற்று விழா நடத்தினார்.


நினைவிட வளாகத்தின் குறிப்பேட்டில் கையெழுத்திடம் நாவலர் இரா.நெடுஞ்செழியன்,
ஆசிரியர் மற்றும் விழாச்சிறப்பு அழைப்பாளர்கள்

மீண்டும், இன்று எழிலுடனும் ஏற்றத்துடனும் சிறப்பு விழா நிகழ்ச்சி அதே நிதியமைச்சர். அதே அ.தி.மு.க. அரசின் சார்பில் நடைபெறுகிறது. அமைச்சர் தென்னவன் வரவேற்றார்.

வைக்கம் போராட்டத்தின் வரலாறு எப்படிப்பட்ட தலைச் சிறந்த மனித உரிமைப் போரின் வரலாறு என்பது பலருக்கும் தெரியாது!

கேரளத்தில் தலைசிறந்த, சமூகநீதிப் புரட்சியினை உருவாக்கிய பெருமைக்குரிய ஸ்ரீ நாராயணகுருவின் தொண்டாலும் மற்றும் பல்வேறு காலகட்ட எழுச்சிகளாலும் இன்று சமூக நிலைமை பெரிதும் மாறிவிட்டதால், இளைய தலைமுறைக்கும் இனிவரக்கூடிய தலைமுறைக்கும் எப்படிப்பட்ட நெருப்பாற்றை “கீழ் ஜாதி மக்கள்’’ நீந்தினர் என்பது புரியாது!

மலபார் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசித்த கள்ளிறக்குவோர், ஈழவர்கள், “சாணார்’’, குடை எடுத்துக் கொண்டு செல்லக்கூடாது; செருப்பு அணியவோ, தங்க நகைகளை அணியவோ கூடாது.

பசு மாடுகளைக் கறக்க உரிமையற்றவர்கள், சாதாரண மொழியைக்கூட அவர்கள் பயன்படுத்தக்கூடாது.

உயர் ஜாதி ஒரு பார்ப்பனர்முன்பு 24 அடிகளுக்குள் சென்னையைச் சேர்ந்த கள்ளிறக்கும் சாணார் வந்தால், அவரைத் தீட்டாக்கி விடுகிறார்!

நம்பூதிரிப் பார்ப்பனர் அருகில் நாயர் வரலாம்; தொடக்கூடாது. ஆனால் அந்த பார்ப்பனரிடமிருந்து தீயன் 36 அடி தள்ளியே நிற்கவேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி நிற்கவேண்டும்.

நாயரிடமிருந்து தீயன் 12 அடிகள் தள்ளி நிற்க வேண்டும். மற்ற  ஜாதிக்காரர்களை நெருங்காலாம்; ஆனால் தொடக்கூடாது. இப்படிப்பட்ட கொடுமை இந்த வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழவர்கள், நாடார்கள், தீயவர்கள் நடந்து செல்லவும் உரிமையற்றவர்கள் என்ற நிலை இருந்தது! இது சிணீstமீ ஜிஷீபீணீஹ் என்ற நூலில் தயா சின்கின் (ஜிணீஹ்ணீ ஞீவீஸீளீவீஸீ) என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர் எழுதியுள்ளார்.

தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, டி.கே.மாதவன், ஜார்ஜ்சோசப், குரூர், நீலகண்டன், கே.பி.கேசவமேனன் போன்ற தலைவர்கள் அதனை துவக்கி உரிமைக் குரல் கொடுத்ததை நசுக்கும் வகையில் அவர்களை சிறையில் அடைத்துவிட்டது. அன்றைய அரசு.

போராட்டம் பிசுபிசுத்து விடும் என்று நம்பிய நேரத்தில்தான் தந்தை பெரியார் “இராமசாமி நாயக்கர்’’ என்று அன்று கேரள மக்களால் அழைக்கப்பட்டவர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஒரு புதுத் திருப்பத்தை அந்த சத்தியா கிரகத்திற்கு உருவாக்கி தந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்களோடு முதல் முறையாக மகளிர் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் சகோதரியார். எஸ்.ஆர்.கண்ணம்மாளும் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை அப்புறப்படுத்தியது.

இருமுறை சிறை சென்ற தந்தை பெரியார் அவர்கள் இரண்டாவது ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை எப்படி அனுபவித்தார் என்பதை திரு. கே.பி.கேசவ மேனன் அவர்கள் அவரது சுயசரிதையில் வர்ணித்துள்ளார்.

வைக்கம் சத்தியாகிரகம் இதுபோன்ற உணர்வுகளை மடைதிறந்த வெள்ளமாக ஆக்கிவிட்டதற்கும் பயன் பட்ட ஒரு முன்னோடி சமூக நீதிப் போராட்டமாகும்! சாதி ஒழியும் வரை ஜாதியால் ஏற்பட்ட கல்விக் கேடு பாடுகளை அகற்ற சமூக ரீதியான இடஒதுக்கீடுகள் தொடருவதும், மக்களை சமப்படுத்துவதும் முக்கியம்’’ என எனது தலைமை உரையில் எடுத்துரைத்தேன்.

தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து தமிழக நிதிஅமைச்சர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் ஆற்றிய உரையில்:

“வீழ்ச்சியுற்றுக் கிடந்த நாட்டிற்கு எழுச்சியூட்டியவர். விசை ஒடிந்து கிடந்த உள்ளங்களுக்கு எல்லாம் வலிமையை ஊட்டியவர். சூழ்ச்சிதனை – வஞ்சகதனை பொறாமைதனை தொகை தொகையாக எதிர் நிறுத்தி தூள்தூளாக ஆக்கிக் காட்டிய பெருமை பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களுக்கு உண்டு. அவர் 95 ஆண்டு காலம் வரையிலும் தலை தாழாச் சிங்கமாக இருந்து நாடெங்கும் வீறுநடை போட்டு -எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றி காண்கின்ற அளவுக்கு தம்முடைய நேரத்தையும், நினைப்பையும் தம்முடைய உழைப்பையும், அறிவையும், ஆற்றலையும் தம்முடைய செயலாற்றும் திறனையும், செய்து முடிக்கின்ற திறனையும் மிகச் சிறப்பாக செய்துகாட்டினார் என்ற காரணகாரிய சிறப்புகளை நாம் அனைவரும் நன்கு உணர்வோம்.’’ எனப் பல கருத்துகளை நாவலர் தனது உரையில் குறிப்பிட்டார்.

வைக்கம் விழாபற்றி மலையாள ஏடுகள்

தந்தை பெரியார் நினைவிடத்தின் திறப்பு விழாவும், சிலை திறப்பு விழாவும் தமிழ்நாட்டிலிருந்து வந்த திராவிடர் கழகத் தொண்டர்கள் முழங்கிய முழக்கங்களின் உணர்ச்சி போதையோடு நடந்தது. தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியனே சிலையைத் திறந்து வைத்தார்.

ஜாதிக்கெதிராக போராட வேண்டுமென்ற விருப்பமே வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற ஈ.வெ.ரா. வைத்தூண்டியது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் நெடுஞ்செழியன் கூறினார்.

வாழ்நாள் முழுவதும் ஜாதியை ஒழிக்க அவர் முயன்றார். ஆனால், இன்றுவரை அதற்கு முடியவில்லை. இன்றைய தலைமுறை ஈ.வெ.ரா. வின் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவேண்டும்.

எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்த சிலை அமைப்பை இப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்த 15 லட்சத்தை செலவாக்கியே பூர்த்தி செய்ததாக அவர் கூறினார்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, தமிழ்நாடு செய்தி – விளம்பரத் துறை அமைச்சர் மு.தென்னவன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், ரமேஷ் சென்னிதாலா எம்.பி., கே.கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் அய்யேரி கருணாகரன் நாயர், முன்னாள் தலைவர் எஸ்.நரசிம்ம நாயக், வைக்கம் கார்த்திகேயன் நாயர், தமிழ்நாடு, செய்தி – மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் பா.ஜெயப்பிரகாசம், துணை இயக்குநர் ஆர்.அண்ணாதுரை ஆகியோர் உரையாற்றினர்.

ஈ.வெ.ரா. சிலையைத் திறப்பதற்காக சத்தியாக்கிரகம் செய்த பாரதீய சாமுஹ்ய நீதிவேதியின் தலைவர் வைக்கம் கார்த்திகேயன், நாயர் நினைவு ஜோதியை நெடுஞ்செழியனிடம் கொடுத்தார்.

– ‘மலையாள மனோரமா’  நாளேடு – 1.2.1994.

தமிழ்நாடு நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அடிக்கல் நாட்டிய நினைவிடத்தின் திறப்பு விழாவையும் அவரே நடத்தியது யதேச்சையானது.

வைக்கம் வலிய கவலையில் வைக்கம்  சத்தியாக்கிரகத்தின் நினைவை உணர்த்துகின்ற இரண்டாவது சிலையே ஈ.வெ.ரா.வுடையது. சுதந்திரப் போராட்ட வீரரும், வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத் தலைவருமான டி.கே. மாதவனின் சிலை முன்பே இங்கு நிறுவப்பட்டுள்ளது. வைக்கம் சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்ற மன்னத் பத்மனாபனின் சிலை நிறுவுவதற்கான இடம் இதற்கருகே என்.எஸ்.எஸ்.ஸால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனே ஈ.வெ.ரா. நினைவிடம் அமைக்க முதலில் முன் வந்தவர். தமிழ்நாட்டிற்கு வெளியேயுள்ள ஈ.வெ.ரா. நினைவிடம் இது ஒன்றுதான்.

ஈ.வெ.ரா.வின் வெண்கலச் சிலை, நூலகம், குழந்தைகள் பூங்கா, வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்ட வீரர்களின் பெயர்களடங்கிய கல்வெட்டு ஆகியவையே நினைவிட வளாகத்தில் அமைந்துள்ளவை. கல்வெட்டில் கே.பி.கேசவமேனன், தேசாபி மானி டி.கே.மாதவன், ஏ.கே.பிள்ளை, கே.கேளப்பன், கண்ணன் தொடத்து வேலாயுதமேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யர், ஜார்ஜ் ஜோசப், கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், சிற்றேழத்து சங்குபிள்ளை, ராமன் இளயத் ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈ.வெ.ரா.வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படத் தொகுப்புள்ள மண்டபமும் இங்கே உள்ளது. பெரியார் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் முதலிய நிறுவனங்களிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் நாட்டினர் விழாவில் கலந்துகொண்டனர்.

– ‘மங்களம்’ நாளேடு – 1.2.1994

மஞ்சள் நிறப்பட்டால் அலங்கரிக்கப்பட்ட சிலையின் திரைச்சீலை கீழ். நோக்கி வீழ்ந்தபோது தமிழ் மக்கள் தம் நாட்டின் வரலாற்று நாயகனை – உற்சாகத்தோடு வரவேற்றனர். ‘பெரியார் வாழ்க’ என்ற வாழ்த்தொலி காற்று மண்டலத்தில் அலையடித்தது.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழகத்தின் சீருடை அணிந்த பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். வைக்கத்தில் தீண்டாமைக்கும், ஜாதிக்கும், மதத்திற்கும் எதிராக கூட்டுச்சேரா போராட்டம் நடத்திய வரலாற்று நாயகனே பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் இரா.நெடுஞ்செழியன் தமது உரையில் நினைவு கூர்ந்தார்.

நீதிக்காக அன்று நிலவியிருந்த கருப்புச் சட்டங்களை உடைத்து நீக்கிவிடவும், தீண்டாமையையும், நீசத் தன்மையையும் முளையிலேயே ஒழித்து விடுவதும்தான் பெரியாரின் லட்சியம், தொடாமை, தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிரான முதல் போராட்டத்திற்கு துவக்கம் குறித்த வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈ.வெ.ரா.களத்தில் இறங்கியதால் அவருக்கு தமிழ் மக்கள் ‘வைக்கம் வீரர்’ என்று பெயர் சூட்டி ஆதரித்தனர் என்று நெடுஞ்செழியன் தன் உரையில் குறிப்பிட்டார்.

‘மாத்ரு பூமி’ ஆசிரியர் கே.பி.கேசவமேனன், மன்னத் பத்மனாபன், ‘மாத்ரு பூமி’யின் பொறுப்பாசிரியராக இருந்த கரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், கே.கேளப்பன், தேசாபிமானி டி.கே.மாதவன் ஆகியோரின் தீரம்மிக்க தலைமையில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஈ.வெ.ரா. புத்தெழுச்சியை ஊட்டினார்.

மாநாட்டிற்கு திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

கேரளத்தின் பிற பகுதிகளிலிருந்து வந்த தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு அமைச்சர்களுக்கும், கேரளத் தலைவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை காட்டினர். ஜனவரி 30 ஆம் தேதி ஈரோட்டிலுள்ள தந்தை பெரியார் பிறந்த வீட்டிலிருந்து ஆரம்பித்த வைக்கம் கார்த்திகேயன் நாயரின் நினைவுச் சுடர் பயணம் மாநாட்டு மேடையை அடைந்தது. நினைவுச் சுடரை தமிழ்நாட்டு அமைச்சர்களான,- நெடுஞ்செழியனும், மு.தென்னவனும் சேர்ந்து பெற்றுக்கொண்டனர். –

– ‘மாத்ரு பூமி’ நாளேடு – 1.2.1994

ச.க.அரங்கராசன்

1.02.1994 சுயமரியாதைச் சுடரொளி – பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழக மத்திய கமிட்டி உறுப்பினரும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய திராவிடர் – கழக செயலாளரும், திருச்சி (கிழக்கு) மாவட்ட முன்னாள் – செயலாளரும், அறிவு நிலையம் உரிமையாளருமாகிய ச.க.அரங்கராசன் அவர்கள் மரணம் அடைந்தார் எனச் செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

அவரது விருப்பப்படி அவரது கண்கள் திருச்சியிலுள்ள ஜோசப் கண் மருத்துவ வங்கிக்குக் கொடுக்கப்பட்டது. பின் அவரது உடல் வேன் மூலம் கொண்டுவரப்பட்டு, மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது இல்லமான அறிவு இல்லத்தில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் மற்றும் பொதுமக்களும் அவருக்கு இறுதிமரியாதை செலுத்தினர். அனைத்துக் கட்சியினரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல்  ஒப்படைக்கப்பட்டது.

13.2.1994 திருவாரூர் அடுத்த அவிவலம் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.முத்துகிருட்டினன் – எம்.அமிர்தவல்லி ஆகியோரின் மகளும் தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கில் பணிபுரிபவருமான செல்வி எம்.தமிழ்ச்செல்விக்கும் கூடூர் வேதாசலம் – தேவகி ஆகியோரின் மகன் சுந்தரவடிவேலுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்தினேன். மணமக்களுக்கு ஒப்பந்த உறுதிமொழி கூறச் செய்து வாழ்த்தினேன். மணவிழாவில் மாவட்ட மகளிரணி தலைவர் எஸ்.எஸ்.ராசலெட்சுமி, ஏ.அய்.டி.யூ.சி மாவட்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராசு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

14.2.1994 திருச்சி பெரியார் பெருந்தொண்டர் இ.திருப்பாற்கடல்  தனலெட்சுமி ஆகியோரின் மகன் செல்வன் சித்தார்த்தனுக்கும், தஞ்சாவூர் ஜானகிராமன்  தையல் நாயகி ஆகியோரின் மகள் பூங்குழலிக்கும் திருச்சியில் உள்ள எஸ்.பி.கல்யாண மண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மண விழாவை நடத்தி வைத்தேன். மணமக்களை வாழ்த்தி, அறிவுரையும் வழங்கினேன்.

 

மகளிரணிக்கிடையே உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்

17.2.1994 பெண்கள் வேதம் ஓத உரிமை கிடையாது என்று கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை, வேதத்தைக் கூறவிடாமல் பூரி சங்கராச்சாரி மேடையிலிருந்து திருப்பி அனுப்பினார். இதற்கு கல்கத்தாவில் பெண்கள் உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன.

வருணாஸ்ரம – வெறிபிடித்த இந்த பூரி சங்கராச்சாரியின் கொடும்பாவியை தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எரித்தார்கள். கழக மகளிரணியினர் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் – கழகத் தோழர்களும் ஏராளமாகக் கலந்து கொண்டனர். காலை சென்னை பெரியார் திடலில் கழக மகளிரணியினரும், தோழர்களும் ஏராளமாகத் திரண்டனர். அவர்களிடையே உரையாற்றி வழியனுப்பிவைத்தேன்.

மாநில மகளிரணி செயலாளர் க.பார்வதி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்.

அதன்பிறகு பூரி சங்கராச்சாரி எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலம் பெரியார் திடலில் இருந்து பூரி சங்கராச்சாரி கொடும்பாவியோடு புறப்பட்டது.

ஊர்வலத்தில் – கலந்து கொண்ட மகளிரணியினர் – ஊர்வலத்தினர் பெரியார் திடலை விட்டு வெளியேவந்தபோது – போலீசார் ‘தினத் தந்தி’ அலுவலகத்துக்கு எதிரே ஊர்வலத்தினரைத்தடுத்து நிறுத்தினர். உடனே பூரி -சங்கராச்சாரியின் கொடும்பாவியை  கழகத் தோழர்கள் – எரித்தனர். “பார்ப்பன திமிர்கொண்ட பூரி சங்கராச்சாரி – ஒழிக’’ என்ற முழக்கங்கள் எழுந்தன; போலீசார் தண்ணீரை ஊற்றி – நெருப்பை அணைத்தனர்;  கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

இதற்கிடையே வேப்பேரி காவல் நிலையத்தில் – கடும் பதட்டம் நிலவுவதாகத் தகவல் வந்தது. ஏற்கெனவே மூர்க்கத்தனமாக அடித்து – தனியே ஜீப்பில் ஏற்றிச் சென்ற கழகத் தோழரை காவல் நிலையத்துக்குள் வைத்து போலீசார் மூர்க்கத்தனமாகத்தாக்கினர்; அங்கே காவலில் வைக்கப்பட்டிருந்த கழகத் தோழர்கள்- இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்த பிறகுதான் போலீசார் தாக்குதல் நின்றது.

போலீசாரின் இந்த அத்து மீறல் பற்றி காவல் துறை உயர் அதிகாரியிடம் கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நிலைய செயலாளர்கள் – கலி. பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் வேப்பேரி காவல் நிலையம் சென்று. கழகத் தோழர்களை அமைதிப்படுத்தினர். மகளிரணியினர் உள்பட 250 தோழர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

கழகத் தோழர்களை கண் மூடித்தனமாக தாக்கியதற்காகவும், கேவலமான முறையில்- திட்டியதற்காகவும் காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை வேப்பேரியில் காவல் நிலையத்தில், திராவிர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கலி.பூங்குன்றன் புகாரை எழுத்து மூலம் கொடுத்தார்.

“அடிப்படை மனித உரிமைக்கே சவால் விடும் பூரி சங்கராச்சாரி கொடும்பாவியை எரிக்க ஏன் காவல் துறை அனுமதி மறுக்க வேண்டும்? அப்படி மறுப்பது அரசியல் சட்டத்துக்கே எதிரானது’’ என நான் எடுத்துக் கூறினேன்.

திருவொற்றியூரில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் விழா அமைப்பாளர்கள்

19.02.1994 சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவும், மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ மிதி நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவொற்றியூர் நகர திராவிடர் கழக தலைவர் பெ.செல்வராசு தலைமை வகித்தார். நகர திராவிடர் கழகப் பொருளாளர் க.இராசேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

க.பலராமன்

வட சென்னை மாவட்ட தலைவர் க.பலராமன், மாவட்ட செயலாளர் அ.குணசீலன், தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.பி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

அ.குணசீலன்

மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில், முதுகில் அலகு குத்தி அம்பாசிடர் காரை இழுத்து வந்த தி.ச. மாவட்டம் செய்யாறை அடுத்த வடமணப்பாக்கம் திராவிடர் கழக இளைஞரணியை சேர்ந்த தோழர்கள் மு.சேகர், க.ஜெயபாலன், பொ.வெங்கடேசன் ஆகியோர்விழாவில் சிறப்பிக்க பெற்றனர்.

எம்.பி.பாலு

கழகத்தினரின் ஆரவாரத்துடன் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தேன்.

இந்தித் திணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியரை வரவேற்கும் கழகத்தினர்

திருவொற்றியூர் பகுதி முழுவதுமே கழகக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட மேடை மிகப்பெரிய அளவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒலி – ஒளி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

21.2.1994 இந்தித் திணிப்பை எதிர்த்தும் – கடுமையான விலை வாசி உயர்வைக் கண்டித்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் மத்திய அரசு அலுவலக முன் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் எனது தலைமையில் பெரியார் திடலிலிருந்து கண்டன ஊர்வலம் புறப்பட்டது.

இருவர் இருவராக அணி வகுத்து, இந்தி எதிர்ப்பு – விலைவாசி உயர்வுக் கண்டன முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், கழகக் கொடியையும் கரங்களில் ஏந்திக்கொண்டு, விண்ணதிர முழக்கங்களை, முழங்கிக் கொண்டு புறப்பட்டனர்.

“திணிக்காதே திணிக்காதே இந்தியைத் திணிக்காதே! இந்தித் திணிப்பா – ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பா? கட்டுப்படுத்து, கட்டுப்படுத்து விலைவாசியைக் கட்டுப்படுத்து’’ என்பது போன்ற முழக்கங்களை முழங்கிக் கொண்டு மகளிரணியினரும், தோழர்களும் அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தோழர்கள் கைது செய்யப்பட்டனர். நான் 35 ஆவது முறையாகக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டேன். “தொலைக் காட்சியில் இந்தித் திணிப்பு, முக்கிய அரசு அலுவலகங்களிலே இந்தியில் கையெழுத்து போடவேண்டும் என ஆணையை எதிர்த்து அனைத்துக் கட்சியையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என பத்திரிகைக்குத் தெரிவித்தேன்.

23.2.1994 திருச்சி பீம் நகர் அமீர் ஆலில் சென்னை பெரியார் இலவச சட்ட உதவி மய்யத்தின் முன்னாள் பொறுப்பாளர் வழக்கறிஞர் சி.தங்கவேல்,  மண்ணச்ச நல்லூர் ரத்தினசாமி – சுகன்யா ஆகியோரின் மகள் இர.தமிழ்மதிக்கும்  வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவிற்கு மாவட்ட நிர்வாகிகளும். முக்கிய தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புச் செய்தனர்.

24.2.1994 சேலம் உடையம்பட்டி வேம்பன் – தங்காயி ஆகியோரின் மகன் வே.செல்லப்பனுக்கும், பொன்னுசாமி  மூத்தம்மாள் ஆகியோரின் மகள் பொன் போதியம்மாள் என்ற கவிதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தோம். இவ்விழாவிற்கு கழகத் துணை பொதுச் செயலாளர் கோ.சாமிதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பொத்தனூர் க.சண்முகம் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.

திருச்சி தந்தை பெரியார் நூற்றாண்டு விழா வளாகத்தில் ஆசிரியருக்கு கார் தரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவுப்பரிசு தரும் வீகேயென்.கண்ணப்பன்
உடன் சிறப்பு அழைப்பாளர்கள்

26.2.1994 தந்தை பெரியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இணைந்து எனக்கு கார் ஒன்றை வழங்க முடிவுச் செய்து, அதற்கு விழாச் செய்தனர். திருச்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. விழாவிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள், கழகத் தோழர்கள் ஆர்வத்தோடு திரண்டு வந்திருந்தனர். விழாவிற்கு புலவர் கோ.இமயவரம்பன் தலைமை வகித்தார். அவ்விழாவில் வீகேயென் கண்ணப்பன், பேராசிரியர் டி.எஸ்.மணிசுந்தரம்  எனக்கு பட்டாடை அணிவித்தார். பெரியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி தலைமைப் பொறுப்பாளர், தாளாளர்கள் பணியாளருக்கு கண்ணப்பன் சிறப்புச் செய்தார் கழகப் பணிக்காக எனக்கு அம்பாசிடர் கார் ஒன்றினை வழங்கி, அதன் சாவியையும் கொடுத்தனர். அங்கு உரையாற்றுகையில் “எனது பொதுத் தொண்டு மேலும் அதிக அளவில் நடைபெற எனக்குச் சாவி கொடுத்துள்ளார்கள்’’ என்று சொன்ன பொழுது மக்கள் வெள்ளம் பலத்த சிரிப்பை  மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர்! நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர்கள் பலரும் கழகத்தின் கல்வி பணியையும், பகுத்தறிவுப் பணியையும் வாழ்த்தி பேசினார்கள்.

27.2.1994 திராவிடர் கழக இளைஞரணியின் செயல் வீரர் ராஜனுக்கும்  திருத்துறைப் பூண்டி அம்பிகாபதி பரமேஸ்வரின் மகள் சுமதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினை ஏற்கச் செய்து மணவிழாவை நடத்தி வைத்தேன். முன்னதாக தஞ்சை சிவ சிதம்பரம்பிள்ளை திருமண மண்டபத்தில் காலை 10 மணியளவில் கழகப் பொருளாளர் குப்புசாமி வரவேற்றார். கழக உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

27.2.1994 எனக்கு உதவியாளராக இருந்த இராசா அவர்களின் மணவிழா தஞ்சை நீடாமங்கலம் உரத்தூரில் மதியம் 12 மணியளவில் நடைபெற்றது. மணமக்கள் உரத்தூர் ராசா – உஷா ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை கூறச் செய்து இணை ஏற்பு விழாவினை தலைமையேற்று நடத்தினேன். அங்கு உரையாற்றுகையில் “பெரியார்  மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் சிறப்பாக இயங்கி வரும் நாட்டு நலப் பணித்திட்ட குழு இந்த உரத்தூர் கிராமத்தில் பத்து அல்லது பதினைந்து நாள்கள் தங்கி வீட்டுக்கு வீடு சென்று அவர்களின் குறைப்பாடுகள் என்ன என்பதை கேட்டறியும். அவை தீர வழி வகைகள் செய்யப்படும்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன்.               

3.3.1994 பட்டாளம் திராவிடர் கழகத்தின் சார்பில் பட்டாளம் மார்க்கெட் ‘கலைஞர் கருணாநிதி பூங்கா’ அருகில் தந்தை பெரியார் – சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தேன்.

சென்னை பட்டாளத்தில் தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் ஆசிரியர்
மற்றும் விழாக்குழுவினர்

விழாவுக்கு பட்டாளம் திராவிடர் கழகத் தலைவர் – சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கழக செயலாளர் மெய்.சேகர், இளைஞரணி செயலாளர் ரெ.பன்னீர் செல்வம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

விழாவில் – சென்னை – மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் எம்.ஏ.கிரிதரன் குடுகுடுப்பை வேடமணிந்து, கடவுளர் கதைகளைத் தோலுரித்துக் காட்டினார். ஈரோடு தியாகராசன் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்ச்சியை பல்வேறு முறைகளிலும் செய்துகாட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்தார்.

பட்டாளம் திராவிடர் கழக செயலாளர் மெய்.சேகர் – தேவி ஆகியோரின் ஆண்குழந்தைக்கு அறிவுச்செல்வன் – என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன்.

விழா சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி கழகக்கொடி தோரணங்களால் அப்பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

10.3.1994 பெரம்பூர் நியூ ஹால் திருமண மண்டபத்தில் அயன்புரம் திராவிடர் கழகச் செயலாளர் சீ.மணிவண்ணன் – கவிதா ஆகியோரின் வாழ்க்கை ஒப்பந்த உறுமொழியை கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவில் கணவனை இழந்த கைம் பெண்ணான மணமகளின் தாயார் அம்சம்மாள் தாலியை எடுத்துக் கொடுத்தார். திருமண மண்டபமே நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமான கழகத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் பெரியார் திடலுக்கு வந்திருந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்; அய்யா, அம்மா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தும் மரியாதைச் செலுத்தினர்.

                                                 (நினைவுகள் நீளும்..)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *