முகப்புக் கட்டுரை : நூற்றாண்டு காணும் பகுத்தறிவுப் பேரொளி நாவலர் வாழ்க! வாழ்க!

ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020

நடமாடும் பல்கலைக்கழகம் என்று பாராட்டப்பட்ட நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், திராவிட இயக்கத் தூண்களாய் நின்ற முதன்மையானவர்களுள் ஒருவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை நமது இறுதி மூச்சு வரை பரப்பியவர். பின்பற்றியவர். அரசியல் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், பெரியார் வழியிலிருந்து பிறழாதவர். அவருக்கு இப்பொழுது நூற்றாண்டு. திராவிட இயக்கத்தவருக்கு இது திருவிழா! பெருவிழா!

நாவலரின் சுயமரியாதைக் குடும்பம்:

நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சுயமரியாதைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தையார் இராசகோபால் அவர்கள்  திராவிடர் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக இருந்தவர். சிறந்த பகுத்தறிவாளர் மற்றும் சுயமரியாதை உணர்வுள்ளவர்.

இவரது மூத்த மகன் சவுரிராஜன் – இவர் இங்கர்சால் கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து, பச்சை அட்டைக் ‘குடிஅரசில்’ இடம்பெறச் செய்தவர். இரண்டாவது மகன் தான் நமது நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் மூன்றாவது மகன் சீனிவாசன் தான் இரா.செழியன். அடுத்தவர் இராமதாஸ். இவர்களுக்கு சகோதரிகளும் உண்டு.

இவர்கள் எல்லோரும் அவர்களின் தந்தையாரால் பகுத்தறிவு வழியில் வளர்க்கப்பட்டவர்கள்.

நாவலரும் பகுத்தறிவும்:

                பகுத்தறிவுக் கருத்துகளை பாமர மக்களும் சிந்திக்கும் வகையில், நகைச்சுவை உணர்வோடும் நறுக்கென்று பதியும் வகையிலும் எடுத்துக் கூறுவதில் வல்லவர்.

“மகாவிஷ்ணு 10 அவதாரம் எடுத்தாரே எல்லாம் இந்தியாவுக்குள்தான் எடுக்கவேண்டுமா? ஏன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா முதலிய நாடுகளில் எடுக்கவில்லை.  அமெரிக்க நாடுகளில் ஒரே ஓர் அவதாரமாவது எடுக்கக் கூடாதா? என்று அவர் பேசும்போது கேட்போர் சிரிப்பர், சிந்திப்பர். அவர் விவாத முறையே அலாதியானது.

மக்களைச் சிந்திக்க செய்ய அவர் கேள்வியைக் கேட்பார். எடுத்துக்காட்டாக-”அந்தக் காலத்தில் நெருப்பைப் பற்ற வைக்க தீப்பெட்டி கிடையாது. இறந்தவர்களைச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று கொள்ளி வைக்க நெருப்புத் தேவை – சக்கி முக்கிக் கல்லில்தானே தீப்பற்ற வைப்பார்கள். இந்த நிலையில்,  பிணத்தைத் தூக்கிச் செல்லும்பொழுது வீட்டிலேயே ஒரு கலயத்தில்  மரத்துண்டுகளைக் கொண்டு நெருப்புத் தயாரித்து, அதை எடுத்துச் செல்லுவார்கள். கலயம் கையைச் சுடாமல் இருக்க வாழைப் பட்டையை அதன் கீழே வைத்து எடுத்துச் செல்லுவார்கள். அந்தக் காலத்துக்கு அது சரி – இப்பொழுதுதான் தீப்பெட்டி எல்லாம் கண்டு பிடித்தாயிற்றே  – இப்பொழுதும் கலயத்தில் நெருப்பை எடுத்துச் செல்லுகிறானே – அதுவும் மின்சார சுடுகாடு எல்லாம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் – இப்படி  இருக்கிறானே  – இவன் எப்படி   உருப்படுவான்?’’ என்று கேட்பார்.

அரசியலில் நாவலர், தி.மு.க., அ.தி.மு.க. என்றெல்லாம் மாறினாலும் அவர் அடிப்படையில் மாறாத, மாற்றப்பட முடியாத ஒப்பற்ற பகுத்தறிவாளராகவே தனது இறுதி மூச்சடங்கும் வரை திகழ்ந்தவர்.

திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்த காலம் முதற்கொண்டு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியவர்களது நட்புக்கும், நல்லுறவுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்ட கொள்கையாளர்; தலைசிறந்த பேச்சாளர்; புரட்சிக்கவிஞரின் கவிதைகளை மேடைதோறும் உயிர்த் துடிப்புடன் முழங்கி, இளைஞர்கள் உள்ளத்தில் ‘இளந்தாடி நெடுஞ்செழியனாக’ வலம் வந்த காலந்தொட்டே கொள்கைப் பாய்ச்சலை ஏற்படுத்தத் தவறாதவர்!

நாவலர் அவர்கள் அமைச்சராக இருந்த நிலையிலும்கூட, தனது பகுத்தறிவுக் கொள்கை யைச் சிறிதும் விட்டுக் கொடுக்காதவர். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே அவரிடம் இடம் கிடையாது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் அமைச்சர வையில் நிதியமைச்சர் என்பதோடு – இந்து அற நிலையத் துறையையும் நாவலர் அவர்களுக்கு முதலமைச்சர் அண்ணா அவர்கள் ஒதுக்கியிருந்தார்.

அத்துறை அமைச்சர் என்ற முறையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அவர் சென்ற போது, அமைச்சரை வரவேற்று பிரசாதம் கொடுத்தனர் தீட்சதர்கள். அவற்றைப் பெற்றுக் கொண்ட நாவலர், திருநீரை நெற்றியில் பூசிக் கொள்ளவில்லை.

இது அப்பொழுது பிரச்சினையாக்கப்பட்டது. அதற்கு நாவலர் சொன்ன பதில், அறநிலையத் துறை அமைச்சராகத்தான் இங்கே வந்தேன் – வழிபட அல்ல – நெடுஞ்செழியனுக்கு என்று தனித்த கொள்கை உண்டு. இந்து அறநிலையத் துறை அமைச்சரின் கடமை என்பது அய்ந்து மரக்கால் அரிசி என்றால், அது சரியாக அளந்து போடப்படுகிறதா என்று பார்ப்பதுதான் அமைச்சரின் வேலையே தவிர,  மற்றபடி விழுந்து வழிபடுவது அல்ல என்று கூறினார்.

அதுகுறித்து ‘‘சபாஷ்! சபாஷ்!! நெடுஞ்செழியன்!!!’’ என்று தந்தை பெரியார் அவர்கள் பாராட்டி ‘விடுதலை’யில் எழுதினார்.

                1971 இல் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. -அதில் தி.மு.க. 184 இடங்களை வென்றது.

                தேர்தல் முடிந்த நிலையில் ராஜாஜி, ‘கல்கி’யில் எழுதினார். ‘‘இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதியிழந்து விட்டது. இந்த நாட்டைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்று சில மகாபுருஷர்கள் உள்பட பலர் எண்ணத் தொடங்கிவிட்டார்கள்’’ என்று எழுதினார்.                                 அதற்குப் பதில் அளித்த நாவலர் “உங்களுக்குக் கனிவான வேண்டுகோள். எந்தத் தேதியில், எத்தனை மணிக்குப் புறப்படப் போகிறீர்கள் என்று தெரிவித்தால், உங்களை எல்லாம் வழியனுப்பி வைக்க எங்களுக்கு வசதியாக இருக்கும்’’ என்று நாவலர் குறிப்பிட்டார்.

நாவலரின் நாவன்மை

சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டுவார் நாவலர். மனப்பாடம் எப்படி செய்வது என்பது பற்றி கேட்டால் முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் எல்லாம் வரும் என்று சொல்லி அதற்குத் துணையாக சங்க இலக்கியப் பாடலொன்றைக் கூறுவார்.

நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அவர் பேசாத ஊர் இல்லை. அந்தந்த ஊருக்கேற்ப, மக்களின் மனநிலையறிந்து பேசி அடுத்த ஊர் சென்றவுடன் அவர் பேசியது நகர் முழுவதும் பிரபலமாகி இருக்கும்.

“சும்மா”என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார். இது சும்மா பேசியது அல்ல நீங்கள் சிந்திக்கப் பேசியது என்று இறுதியில் ஓர் அழுத்தம் கொடுப்பார்.

நமது வெளியீட்டில் நாவலர் நூல்கள்

¨           மொழிப் போராட்டம்

¨           மதமும் மூடநம்பிக்கையும்

¨           சமூகநீதிப் போர்

¨           சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்

¨           பகுத்தறிவு முழக்கம்

¨           திருக்குறளும் மனுதர்மமும்

¨           பகவத் கீதை & ஏன்? எதற்காக?

¨           நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

நாவலர் எழுதிய நூல்களில் “மதமும் மூடநம்பிக்கையும்” என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை “என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் “ என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றி வித்தியாசமாகக் குறிப்பில்லாமல் பேசமாட்டார். அவர் எழுதிய திருக்குறள் உரை திராவிடர் கழகத்தால் பெரிதும் பாராட்டி பரப்பப்பட்டது.

நாவலரும் திருக்குறள் மாநாடும்

தந்தை பெரியாரால் நடத்தப்பட்ட திருக்குறள் மாநாட்டில் நாவலரின் பங்கு முதன்மையானது. அந்த மாநாடு பற்றி நாவலர் கூறியவை,

“தமிழகத்தில், மக்கள் நல்வாழ்வு வாழ நன்னெறி காட்டவந்த சான்றோர்களில் தலைசிறந்து விளங்குபவர் திருவள்ளுவப் பெருந்தகையார் ஆவார். அவர் இயற்றிய திருக்குறள், உலகம் உய்யும் பொருட்டு உயர்நெறி காட்ட வந்த ஒரு பெரும் அறநூல்.

திருக்குறள் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமுதாயப் பொது வாழ்க்கைக்கும் நல்ல வழிகாட்டும் நூல்; அது நல்லன எவை, அல்லன எவை என்பதைச் சுட்டிக்காட்டும் நூல்; தனிமனிதனுக்கும் சமுதாயத் திற்கும் ஆன கடமைகளை வலியுறுத்தும் நூல்; அறத்திற்கு விளக்கந்தந்து அதற்கு ஆக்கம் பயக்கும் நூல்; நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறுத்துக் கூறும் நூல்; தீய பண்புகளையும், தீய செயல்களையும் சுட்டிக் காட்டி அவற்றை வெறுத்து ஒதுக்கும் படிகூறும் நூல்; சால்பினை வற்புறுத் தும் நூல்; ஒழுக்கத்திற்கும், ஒப்புர விற்கும் உயர்வு தரும் நூல்; அறிவுக்கும், ஆற்றலுக்கும் மதிப்பு அளிக்கும் நூல்; முயற்சிக்கும், ஊக்கத்திற்கும் ஆக்கம் பயக்கும் நூல்; உழைப்பையும்  உற்பத்திப் பெருக்கத்தையும் வலியுறுத்தும் நூல்; மனித குலம் முழுவதும் ஒன்றே என்பதனை வலியுறுத்தும் சிறந்த காதலின்ப வாழ்வைப் போற்றும் நூல்; கற்பனைக் கடவுட் கொள்கைகளையும், அவை தொடர்பான கட்டுக் கதைகளையும் ஏற்காத நூல்; மூடநம்பிக்கைகள், குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் போற்றாத நூல்; ஆரியக் கொள்கைகள் பலவற்றையும் மறுக்கும் நூல்; உலகியல் வாழ்வுக்கு அப்பாற்பட்ட எதனையும் வலியுறுத்தாத நூல்.

மேற்கண்ட இந்தக்காரணங்களுக்காகப் பெரியாரும், பகுத்தறிவாளர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும், திராவிடர் கழகத்தினரும் திருக்குறளைப் போற்றி வந்தனர். திருக்குறளின் சிறப்பை உலகுக்கு உணர்த்தவேண்டி, திராவிடர் கழகத்தின் சார்பாக 1949 ஜனவரி 15,16 நாட்களில் பொங்கல் பெருவிழாவையொட்டிச் சென்னையில், ‘திருக்குறள் மாநாடு’ ஒன்று கூட்டப்பெற்றது. மாநாட்டிற்கு நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமை தாங்கினார். ஏ. சக்ரவர்த்தி நயினார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பெரியார், திரு.வி. கலியாணசுந்தரனார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், அறிஞர் அண்ணா, நான், திருக்குறள் முனிசாமி, விருதுநகர் வெள்ளைச்சாமி, டாக்டர்  மு.வரதராசனார் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டோம்.

திருக்குறளை நாட்டுக்குரிய நூலாக ஆக்கவேண்டும் என்றும், பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளைத் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடவேண்டும் என்றும், திருவள்ளுவர் ஆண்டை நடை முறைக்குக்கொண்டு வர வேண்டும் என்றும், ஊர்தோறும் திருக்குறள் வகுப்பு நடத்தப்பெறவேண்டும் என்றும், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னையிலிருந்த கழகத் தோழர்கள் பலரின் சிறந்த ஒத்துழைப்போடு, இரண்டு நாட்கள் மாநாட்டை நான் மிகச் சிறப்பாகவும் செம்மையாகவும் நடத்துவதில் வெற்றி கண்டேன். மாநாட்டில் தமிழறிஞர்கள் பலரும் ஆற்றிய உரைகள் மிகவும் பயன் தருவனவாக அமைந்திருந்தன’’.

நாவலரும் தந்தை பெரியாரும்:

நூற்றாண்டு நாயகர் நாவலர் எழுதுகிறார்; கற்க!

‘‘திராவிட இயக்கத்தில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வரும் நான், பகுத்தறிவு நெறியோடும், செயலாற்றல் திறனோடும், கடமை உணர்வோடும், கட்டுப்பாட்டு உணர்வோடும், உள்ள ஊக்கத்தோடும், நெஞ்சு உரத்தோடும், தொண்டு உள்ளத்தோடும், தோழமைப் பண்போடும் இருந்து, அஞ்சாமலும், அயராமலும், நேர்மையாகவும், நாணயமாகவும் பாடுபடுவதற்குப் பெரியாரிடம் பெற்ற அறவுரைகளும், அறிவுரைகளும், அவரிடத்தில் கற்றுக்கொண்ட கண்டிப்புத்தன்மையும், கடமையுணர்வும் எனக்கு அடிப்படையாக அமைந்தன என்று கூறிக் கொள்வதில் நான் பூரிப்பும், பெருமையும் கொள்கிறேன்’’.

பெரியார் என்னும் பேருழவன்!

நன்மையைச் செய்வதற்கு எவ்வளவு துணிவு வேண்டுமோ அவ்வளவு துணிவு தீமையைக் களைவதற்கும் வேண்டும், உழவனுக்குப் பயிர் வளர்ப்பதிலே எவ்வளவு ஆர்வம் இருக்கவேண்டுமோ, அவ்வளவு ஆர்வம் களையெடுப்பதிலும் இருக்க வேண்டும். பெரியார் அவர்கள் சென்ற நாற்பத்தைந்து ஆண்டு காலமாகத் தமிழகத்தில் பகுத்தறிவுப் பயிரையும் வளர்க்கிறார்; அதேநேரத்தில் சமூகத்தில் முளைத்துவிட்ட மூடக்களைகளையும் வெட்டி யெறிகிறார். ‘தீமையை வெறுக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான்’ என்ற பொன்மொழியைத்தான் பெரியார் அவர்கள் பல்லாண்டு காலமாகக் கூறி வருகிறார்கள்.

‘‘இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும், தமிழ்நாட்டில் ஓரளவுக்கு சமுதாய மறுமலர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருப்பதற்குப் பெரியார் அவர்களின் பகுத்தறிவு நெறித்தொண்டுதான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை’’.

– நாவலர், தந்தை பெரியார் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்

பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி!

‘‘பகுத்தறிவு நெறியறிந்து நடக்கத் தெரியாத காரணத்தால் கோடானு கோடி மக்களின் நேரம்,- நினைப்பு,- உடமை,- உழைப்பு,- அறிவு,- ஆற்றல் எல்லாம் குருட்டு நம்பிக்கைக்கும், மூடப்பழக்க வழக்கத்திற்கும் இரையாகிப் பாழாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வாழ்வதற்குரிய வகையான நெறி பகுத்தறிவு நெறிதான் என்பதை பெரியார் அவர்கள் தமிழகத்தில் நிலை நாட்டிக் காட்டி விட்டார்கள்’’.

– நாவலர்,  93ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் மலர்.

திருக்குறள் மாநாட்டின் ஏற்பாடுகள் அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்பைப் பெரியார் அவர்கள் என்னிடத்தில் விட்டிருந்தார். அதனைச் சிறப்பாக நடத்திக் காட்டி பெரியாரிடம் பாராட்டு பெற்றேன்.

‘சிக்கனவாதி’ என்று தந்தை பெரியா ராலேயே பாராட்டப்பட்டவர் நமது நாவலர்.

பெரியாரிடமிருந்து பகுத்தறிவுக் கொள்கையை மட்டுமல்ல, சிக்கனத்தையும் சிக்கெனப் பிடித்துக் கொண்டவர்.

பகுத்தறிவாளர் நாவலர் என்பதில் தந்தை பெரியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாவலருக்கு முது முனைவர் பட்டம் (டாக்டர்) – பல்கலைக் கழகம் வழங்கியதற்காக நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, நாவலரை மிகவும் பெருமைப் படுத்தினார் தந்தை பெரியார்!

தந்தை பெரியாருக்கும் தனக்கும் உள்ள தொடர்பை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார். “1946 ஜூலை 31 முதல் ஆகஸ்டு 8ஆம் நாள் வரை, பெரியார் அவர்களும், நானும் இணைந்து தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டோம்.

சீர்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம் பட்டினம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அறந்தாங்கி, தஞ்சாவூர், மன்னார்குடி, கும்ப கோணம், பாபநாசம், அய்யம்பேட்டை ஆகிய ஊர்களில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டோம். சில நாட்களில் இரண்டு மூன்று ஊர்களில் கூடப் பேசினோம். கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைத் திருவாரூர் வி.எஸ்.பி. யாகூப் செய்திருந்தார்.

வெண் தாடியோடு இருந்த முதியவர் பெரியாரையும், கறுந்தாடியோடு இருந்த இளையவன் என்னையும் பல ஊர்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏராளமான கழகத் தோழர்களும், பொது மக்களும் கூடியிருந்து, எங்கள் பேச்சுகளைக் கேட்டு மகிழ்ச்சியும், எழுச்சியும் பெற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மேற்கொண்டதைப் போலவே, பெரியாரும் நானும் சேர்ந்து, திருச்சி,  கோவை, மதுரை, நெல்லை, சேலம், வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கை ஆகிய மாவட் டங்களிலும், பல நாட்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்கள், திருமண விழாக்கள், ஆண்டு விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டோம்.’’

ஆதாரம்: நாவலர் எழுதிய ‘வாழ்வில் நான் கண்டதும் – கேட்டதும்’ நூல்

அண்ணாவும் நாவலரும்

அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி ‘தம்பி வா’ தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார். தம்பிக்கு எழுதிய பல கடிதங்களில் நாவலரின் பெருமைகளைப் பல படப் புகழ்ந்திருப்பார். 1957இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் 207 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாவலர். நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா “ஒரு தங்கத்தை உங்களுக்கு அளித்தேன் அதைப் பயன்படுத்தாமல் என்னைப் பங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று வருத்தப்பட்டுப் பேசினார்.

புரட்சிக் கவிஞரும் – நாவலரும்

புரட்சிக் கவிஞரிடம் அளவற்ற பற்றும், மதிப்பும் கொண்டவர் நாவலர் அவர்கள் புரட்சிக்கவிஞர் எழுதியதை நாவலர் பேசும் போதுதான் அதன் வீரம், வீரியம், உணர்ச்சியின் அருமை புரியும்.

வறியோர்க்கெல்லாம்  கல்வியின் வாடை

வரவிடவில்லை குருக்களின் மேடை

நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை

நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீர் ஓடை

இந்தப் பாடல் வரிகளை நமது நாவலர் கழக மேடைகளில் பேசுவதைக் கேட்கும் எவரும் சுவைத்துக் கரவொலி எழுப்புவர்.

நாவலரும் ஆசிரியரும்:

ஆசிரியருக்கும் நாவலருக்கும் உள்ள தொடர்பை ஆசிரியரை கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.               

“என்னைப் பொறுத்தவரை எனது 11 வயது முதல் நாவலரையும், பேராசிரியர் அன்பழகன் அவர்களையும் அறிவேன். அவர்கள் எல்லாம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவர்களை எல்லாம் கடலூருக்கு அழைத்து வந்து அடிக்கடி கூட்டங்களை நடத்துவோம்; அவர்களை வரவேற்று தங்க வைத்து வழியனுப்பி வைக்கும் வேலை எங்கள் மாணவர் பட்டாளத்தைச் சேர்ந்தது – எங்கள் ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்கள் எங்களுக்குப் பணித்த வேலை அது.

அப்பொழுதெல்லாம் இளந்தாடி நெடுஞ்செழியன் என்று பெயர். அவர் உரை கேட்போர் எவரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும். கூனனையும் நிமிரச் செய்யும். புரட்சிக்கவிஞர் பாடல்களை  அவர் பொதுக் கூட்டங்களில் பயன்படுத்தியதுபோல், வேறு யாரும் பயன்படுத்தியது கிடையாது. அவற்றை உணர்ச்சிகரமாக அவர் குரலில் கேட்கவேண்டுமே – கேட்போரிடம் வெப்பம் ஏறச் செய்யும்.’’ உணர்வு மிக்க கொள்கையாளர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக மீட்டெடுத்து புதிய வரலாறு படைத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர், நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்பட்ட நாவலர் அவர்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நம் தி.மு. கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு வழங்கிய அரிய படைக்கலன்களில் ஒருவராக நாவலர் திகழ்ந்தார். இனமானப் பேராசிரியர் அவர்களும், கே.ஏ.மதியழகன் அவர்களும் அதே பல்கலைக்கழகம் வழங்கிய படைக்கலன்கள்.

1949இல் தொடங்கப்பட்ட திராவிட முன் னேற்றக் கழகத்தின் வலிமை மிகுந்த தூண்களில் ஒருவராக விளங்கியவர் நாவலர்.

1955இல் அண்ணாவின் அன்புக் கட்டளைக் கேற்ப, சொல்லின் செல்வர் ஈ.வெ.கி.சம்பத் அவர் கள் முன்மொழிய, தலைவர் கலைஞர் உள்ளிட் டோர் வழிமொழிய, கழகத்தின் பொதுச்செயலாளராக ஒருமனதாக நாவலர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956இல் திருச்சியில் நடந்த கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டிற்குத் தலைமை வகித்த நாவலரை, “தம்பி வா.. தலைமையேற்க வா.. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்று அண்ணா அவர்கள் அழைத்தது, கழக வரலாற்றிலும் நாவலர் அவர்களின் வாழ்க்கையிலும் புதிய பொன்னான அத்தியாயமானது.

மதுரையில் நடைபெற்ற அய்ந்தாம் உலகத் தமிழ் மாநாடு, வைக்கத்தில் நடைபெற்ற பெரியார் சிலை மற்றும் அருங்காட்சியகம் திறப்புவிழா, புத்தாயிரம் ஆண்டில் பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய இறுதிப் பேருரை என அனைத்திலும் பெரியாரின் மாணவராக-அண்ணாவின் தம்பியாக அவர் முழங்கியது எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

அம்மையார் ஜெயலலிதாவும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றபோது, திராவிட இயக்கக் கொள்கைகளுக்கு மாறாக மற்றவர்கள் உறுதிமொழி ஏற்ற நிலையில், அறிஞர் அண்ணா காட்டிய வழியில்-தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து பின் பற்றிவந்த முறையில் – உளச்சான்றின்படி உறுதிகூறி’ பதவியேற்றுக் கொண்டவர் நாவலர். தடம்மாறாத இத்தகைய கொள்கைப் பற்றினால், எந்நாளும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் அளப்பரிய அன்புக்குரியவராக அவர் திகழ்ந்தார். மாற்றுக் கட்சியில் அவர் இருந்த போதும் ‘நாவலர்’ என்றே அவரை அன்புடன் அழைப்பார் நம் தலைவர்.

2000ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் நாள் நாவலர் அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து வேதனையுற்ற கழகத்தலைவரும் அன்றைய தமிழக முதல்வருமான கலைஞர் அவர்கள் நேரடியாகச் சென்று, தன் கொள்கைச் சகோதரருக்கு இறுதி வணக்கம் செலுத்தினார்.

நாவலருக்கு முழு உருவச் சிலை

தமிழக அரசு அறிவிப்பு

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவில் அவருக்கு சென்னையில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும், அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பாராட்டத்தக்க நல்ல அறிவிப்பாக ஏற்று திராவிடர் கழகம் மகிழ்கிறது.

கனடா பல்கலைக் கழகத்தில்

நாவலர் ஆய்வு இருக்கை

கனடா நாட்டுப் பல்கலைக் கழகம் ஒன்றில் – நாவலர் நூற்றாண்டையொட்டி – அவர் பெயரால் ஓர் ஆய்வு இருக்கை (சிலீணீவீக்ஷீ) அமைத்து, ஆய்வுகள் நடத்த நன்கொடைகள் வழங்கி ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஏற்பாட்டாளர் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பாராட்டத்தக்க பயனுள்ள பணியை பலரும் தொடரலாம்!

நாவலர் வழியில் பகுத்தறிவுப் பரப்புவதே அவரது நூற்றாண்டில் அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *