கொரோனா!
இது பற்றி ஊரில் பேசாதவர்களே யாரும் இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே ஒருவரையொருவர் சந்திக்கும்போது கொரோனா பற்றி பேசாமல் செல்வதில்லை.
“சீனாவில இந்த நோய் தோன்றுச்சாமே! சீனாக்காரன் தான் இதுக்கெல்லாம் காரணமா?’’ என்று பலரும் தங்களுக்குத் தெரிந்ததை தேனீர் கடைகள் உட்பட பல இடங்களிலும் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
அவ்வூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் செல்வநாதனும் அந்த நோயைப் பற்றி கவலைப்பட்டார். சீனாவின் வூகான் நகரில் தோன்றிப் பரவிய அந்த வைரசைப் பற்றியும் அதைத் தடுக்க சீன அரசு கையாளும் நடவடிக்கைகள் பற்றியும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். தொலைக்காட்சிகளில் காட்டப்படும் புராணக் குப்பைகளையெல்லாம் பார்க்காமல் இது பற்றிய செய்திகளைக் கேட்டறிந்தார். செய்தித்தாள்களையும் விரிவாகப் படித்தார்.
ஆசிரியர் செல்வநாதன் ஒரு புத்தகப் பிரியர். அதனால் அவர் அறிவியல் சம்பந்தப்பட்ட பல புத்தகங்களைப் படித்து கொரோனா வைரஸ் பற்றிய நல்ல புரிதலை அடைந்தார்.
மக்களுக்கு அதைப் பற்றிய புரிதல் இல்லையே என வருந்திய அவர் முடிந்தவரை தான் அறிந்த செய்திகளை மக்களிடம் தெரிவித்தார்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த அதே நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அவருடைய மகன் வசந்தன் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தான். கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் பரவத் தொடங்கிய நிலையில் தொடர்ந்து தேர்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. எந்த நேரத்திலும் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் என்கிற அறிவிப்பு வரும் நிலையில் எது பற்றியும் கவலை கொள்ளாமல் படிப்பதிலேயே கவனமாக இருந்தான் வசந்தன்.
கடைசி தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பேச்சாகவே இருந்தது. “எல்லாத் தேர்வையும் நல்லா எழுதி முடிச்சுட்டேன். இன்னும் ஒரே தேர்வு. அதையும் நல்லா எழுதி பாஸ் பண்ணி நெறைய மார்க் வாங்கணும். அடுத்த வருஷமும் நல்லா படிச்சி நெறைய மார்க் வாங்கணும். அப்புறம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராகணும்’’ என்று நாள்தோறும் மனதுக்குள் சொல்லிக் கொள்வான் வசந்தன். தன்னை ஒரு மருத்துவராகவே அடிக்கடி கற்பனை செய்து கொள்வான்.
“டேய், இந்தப் பரீட்சையில் அதிக மார்க் வாங்கினா மட்டும போதாதுடா! “நீட்’’ பரிட்சையிலும் பாஸ் பண்ணி மார்க் வாங்கணும். அப்பதான் மெடிக்கல் காலேஜில் இடம் கெடைக்கும்’’ – அவனது நண்பர்கள் இப்படியெல்லாம் அவனிடம் சொல்லி அவனை கிண்டலடிக்கும்போது அவன் மிகவும் வருத்தப்படுவான்.
“நீட்’’ தேர்வைக் கொண்டு வந்து இந்த அயோக்கியர்கள் நம் போன்ற ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே. இந்த நிலை எப்போது மாறுமோ?’’ என அடிக்கடி மனதுக்குள் நொந்து கொள்வான் வசந்தன்.
“நீட்’’ தேர்வ எழுத பணம் கட்டி பயிற்சிக்கெல்லாம் அனுப்பும் நிலையில் அப்பா இல்லை. மருத்துவராக வேண்டும். வேறு வழியில்லை. அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதித்தான் ஆக வேண்டும்.’’ இன்னும் இருக்கும் ஒரு தேர்வையும் சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்று எண்ணியவாறே புத்தகத்தை கையில் எடுத்தான் வசந்தன்.
வசந்தனுடைய தந்தை செல்வநாதன் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். உழைத்துப் படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தார். மாணவர்களிடையே சீர்திருத்தக் கருத்துகளை தக்க சூழ்நிலை அமையும்போதெல்லாம் எடுத்துரைப்பார். கல்வியில் பெரிய மாற்றங்கள் வரவேண்டுமென விரும்புபவர். ‘நீட்’ தேர்வு என்னும் கொடுஞ்செயலை கடுமையாக எதிர்த்து மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பேசுவார். ஆனால் இவ்வாண்டு முதலாமாண்டு தேர்வு முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதும் நிலயில் அவர் மகனே உள்ளான். இந்த நிலையை எண்ணி அவர் மிகவும் வருந்தினார்.
மறுநாள் தேர்வு. தொலைக்காட்சியில் தற்செயலாகக் கேட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தான் வசந்தன்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவுவதால் நடைபெற இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இந்த செய்திதான் தொலைக்காட்சியில் சொல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த வசந்தன் புத்தகத்தை மூடிவிட்டு வெளியே வந்தான்.
ஊர் மக்கள் அனைவரும் இதுபற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
“தேர்வு ரத்தாகி விட்டது. பிறகு எப்போது நடக்குமோ? நல்லா படிச்சிருந்தேன். இப்படி ஆயிடுச்சே’’. என எண்ணி வருந்தினான் வசந்தன்.
நண்பர்கள் அனைவரும் ஒருவரையொருவர் செல்லில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசித் தீர்த்தனர்.
வசந்தனும் அவன் அம்மா, அப்பா அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். அதே வீட்டில் வேறு பகுதியில் குடியிருக்கும் வசந்தனின் சிற்றப்பா வீட்டுப் பிள்ளைகள் இருவர் மட்டும் வசந்தனுடன் பேச வருவார்கள். அவர்களையும் இடைவெளி விட்டு தள்ளி இருக்கச் செய்தார் செல்வநாதன்.
பெரும்பாலான இடங்களில் ஊரடங்கை முறையாகக் கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதாகவும் சில இடங்களில் யாகங்கள் நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கப்பட்டது. இதையெல்லாம் அறிந்த செல்வநாதன் மக்களின் அறியாமையை எண்ணி வருந்தினார். வசந்தனும் அவனது தம்பிகள் அதாவது சிற்றப்பா பிள்ளைகள் அனைவரும் மிகவும் பயந்தனர்.
“அப்பா, பயமாயிருக்குப்பா. கொரோனா வைரஸ் பயங்கரமா பரவுதாமே! என்னப்பா ஆகும்?’’ என்று தந்தையிடம் கேட்டான் வசந்தன்.
“கவனமாக இருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை,’’ என்றார் செந்தில்நாதன்.
“என்னோட படிக்கிற பசங்க நிறைய பேர் எனக்கு போன் பண்ணி பேசினாங்க. நெறைய பேர் மந்திரிச்சி கையில் கயிறு கட்டிகிட்டாங்களாம். அப்படி செஞ்சா நோய் வராதாப்பா.’’ “அதெல்லாம் ரொம்பத் தவறு. சொல்லப்போனா அவங்களைத் தான் நோய் முதலில் தாக்கும்.’’
“எப்படிப்பா?’’
“இந்த வைரஸ் நோயிலிருந்து விடுபட முதலில் கைகளை சுத்தமா வைச்சுக்கணும். கையில் கயிறு கட்டிகிட்டா எப்படி சுத்தமா வைச்சுக்க முடியும்? அந்தக் கயிற்றிலேயே எண்ணற்ற கிருமிகள் தங்கியிருக்கும். நகங்களைக்கூட சுத்தமாக வெட்டிவிட வேண்டும்.’’
“பெரிய பதவியில் இருக்கிறவங்க கூட கையில் கயிறு கட்டியிருக்காங்களே அப்பா!’’
“அது முட்டாள்தனமான செயல். மக்களை மூடர்கள் ஆக்குகிறார்கள்.’’
இவ்வாறு அவர் கூறியவுடன் வசந்தனின் தம்பிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். காரணம் அவர்கள் கையில் அவர்களின் அம்மா கயிறு கட்டிவிட்டிருந்தார்கள். செல்வநாதன் கூறிய விளக்கத்தைக் கேட்டதும் இருவரும் தங்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகளை பிய்த்து எறிந்தனர். செல்வநாதன் அவைகளை பத்திரமாக குப்பைத் தொட்டியில் போடச் சொன்னார்.
“நாளை உங்களுக்கு மேலும் பல செய்திகளைச் சொல்கிறேன்,’’ என்று கூறி பிள்ளைகளை அனுப்பிய செல்வநாதன் பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்தார்.
இந்த நேரத்தில் சிலர் பிரார்த்தனை, யாகம் நடத்துதல் போன்ற இழிவான செயல்கள் செய்வதை எண்ணி கோபம் கொண்டார். பள்ளி திறந்தபின் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் மேலும் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்க்க முடிவு செய்து கொண்டார்.
நாள் முழுவதும் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். மறுநாள் வசந்தனும் அவன் தம்பிகளும் வீட்டின் கூடத்திற்கு வந்தனர். செல்வநாதன் அவர்களை இடைவெளி விட்டு தனித்தனியே அமரச் செய்தார். வைரசைப் பற்றி தெளிவான செய்திகளை அவர்கள் அறிய வேண்டுமென விரும்பினார். அவரது துணைவியாரையும் அங்கு அழைத்து உட்கார வைத்தார்.
“அப்பா, வைரசைப் பற்றி சொல்லுங்கப்பா.’’ எனக் கேள்வி கேட்டு பேச்சைத் தொடங்கினான் வசந்தன்.
“நூறு ஆண்டுகளுக்கு முன்பே புகையிலைப் பயிரில் இலைகள் நோயால் பாதிக்கப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டனர். அதற்குக் காரணம் பாக்டீரியாக்கள் எனக் கண்டறிந்தனர். பிறகு ஒரு காலகட்டத்தில் பாக்டீரியா தொற்று இல்லாமலேயே புகையிலைகள் அழுகுவதைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்தனர். பாதிக்கப்பட்ட பயிரை எலக்ட்ரான் நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்த போது பாக்டீரியாவை விட சிறியதும் அதையே அழிக்கக் கூடியதுமான நுண்கிருமி வைரசை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்,’’ என்று கூறிவிட்டு ஒரு கணம் அனைவரையும் உற்று நோக்கினார். அனைவரும் ஆர்வமுடன் கேட்பதை அறிந்தார்.
“அப்பா, நன்மை செய்கிற பாக்டீரியாக்கள் இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன். அதுபோல நன்மை செய்ற வைரஸ் இருந்தா,’’ என வினவினான் வசந்தன்.
“இல்லை. இல்லவே இல்லை. விலங்குகளைத் தாக்கிய வைரஸ் மனிதனையும் தாக்க ஆரம்பிச்சுடுச்சி. தொடுதல் மூலமாக இது பரவும். மலேரியா, பெரியம்மை, போலியோ போன்ற மனித குலத்திற்கே எதிரிகளான நோய்கள் எல்லாம் பரவிடுச்சி. எல்லாவற்றுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிச்சி அறவே அவைகளை ஒழிச்சாச்சு.’’
“அப்பா, அதுக்கெல்லாம் மருந்து கண்டு பிடிக்கலைன்னா என்னாயிருக்கும்?’’
“உலகத்தில் பாதி பேர் ஊனமாகியிருப்பாங்க. இறப்புகள் தொடர்ந்திருக்கும். வைரஸ் என்பது மிகச் சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களைக் கொண்டதாகும். இது உலகம் முழுவதும் பரவலா இருக்கும்.’’
“அப்பா, வைரசில் நெறைய வைரஸ் இருக்குதாமே?’’
“ஆமாம். 1950ஆம் ஆண்டு முதலாக வைரஸ் கண்டுபிடிச்சாச்சு. இதுவரை ஆறு கொடிய கொரோனா வைரசுகள் தோன்றி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. கடைசி இரண்டு வைரசுகள் மெர்ஸ் வைரஸ், சார்ஸ் வைரஸ் ஆகும். இதில் சார்ஸ் வைரஸ் 2002ஆம் ஆண்டில் சீனாவில் குவாங்டாங்க் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்டது. அதேபோல் இப்போது சீனாவில் உபே மாகாணத்தில் வூகான் நகரில் இந்த ஏழாவது வைரசான கோவிட்-19 கண்டறியப்பட்டுள்ளது.’’
“அப்பா, வைரசைப் பார்த்து ரொம்ப பயப்படணுமா?’’
“பயப்பட வேண்டாம். ஆனா கவனமா இருக்கணும்.’’
“இதுக்கு என்னதான் அப்பா தீர்வு?’’
“பகுத்தறிவோடு செயல்படுவதுதான் தீர்வு. நோயைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தனித்திருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றபடி மூடநம்பிக்கையிலே ஈடுபடுவது தவறு. இப்ப உங்களுக்கு புரிந்ததா?’’ என்று அனைவரையும் பார்த்துக் கேட்டார் செல்வநாதன்.
“புரிந்தது’’ என்று தலையாட்டிய வண்ணம் அனைவரும் தனித்தனியே எழுந்து சென்றனர்.
– ஆறு.கலைச்செல்வன்