நேயன்
உடனே, பெரியாரின் மனைவி நாகம்மையார், தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் வைக்கம் வந்து சேர்ந்து, போராட்டத்திற்குத் தலைமை தாங்கி தொடர்ந்து நடத்தினர். தொடர்ந்து தமிழகத்திலிருந்தும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பெண்கள் இக்கிளர்ச்சியில் பங்கு கொண்டனர்.
ஒருமாத சிறைத்தண்டனைக்குப் பின் விடுதலை செய்யப்பட்ட பெரியார், மீண்டும் போராட்டம் நடத்தினார். எனவே, அரசு இதைக் கடுமையாகக் கருதி அவரைக் கைது செய்து ஆறுமாத சிறைத் தண்டனை விதித்துச் சிறையிலடைத்தது. வைக்கத்தில் தீவிரப் போராட்டத்தில் இருந்த பெரியாருக்கு ராஜாஜி ஒரு கடிதம் எழுதினார்.
“நம் இடத்தை விட்டுவிட்டு இன்னொரு இடத்திற்குப் போய் ஏன் ரகளை செய்கிறீர்? அதை விட்டுவிட்டு நீங்கள் இங்கு வந்து, விட்டுச்சென்ற வேலைகளைக் கவனியுங்கள்’’ என்று அக்கடிதத்தில் ராஜாஜி எழுதியிருந்தார்.
நாயினும் பன்றியினும் கேவலமாய் ஈழவமக்கள் வைக்கத்தில் நடத்தப்பட்டதைக் கண்டித்து, கொதித்தெழுந்து பெரியார் நடத்திய மனித உரிமைப் போராட்டம் ராஜாஜிக்கு ரகளையாகப் பட்டிருக்கிறது! இவர்தான் இராஜகோபாலாச்சாரியார். இவரைத்தான் ராஜாஜி என்ற சிறப்போடு பாசத்தோடு அழைக்கிறார் ஜெயமோகன்.
பெரியார் யார்? ராஜாஜி யார்? என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய நிகழ்வு இது.
ராஜாஜி கூறியபடி பெரியாரைக் கையோடு அழைத்துச் செல்ல காங்கிரசுக் கட்சித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்கார் வைக்கத்துக்கு நேரடியாக வந்துவிட்டார். ஆனால், முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன். இது மனிதஉரிமைப் போராட்டம். தீர்வு கிடைக்கும் வரை தமிழகம் திரும்ப மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார் பெரியார்.
சிறையிலுள்ள பெரியார் மாண்டுபோக வேண்டும் என்று அரண்மனையில் யாகம் நடத்தினர். ஆனால், மறுநாள் காலையில் அரசர் செத்துப்போனார் என்று செய்தி வந்தது. வரலாற்றில் இது ஒரு வேடிக்கையான நிகழ்வு. மன்னர் மரணமடைந்ததால் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெரியாரும் விடுதலை செய்யப்பட்டார். வைக்கம் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன், ஈரோட்டில் உள்ள தன் தாயாரைக் காண அங்குச் சென்றார் பெரியார்.
ஆனால், ஈரோடு வந்ததும் பெரியார் கைது செய்யப்பட்டார். 7 மாதங்களுக்கு முன் அரசுக்கு எதிராகச் சென்னையில் பேசினார் என்று அதற்குக் காரணம் சொல்லப்பட்டது என்றாலும், மீண்டும் வைக்கம் சென்று பெரியார் போராட்டம் நடத்துவதைத் தடுக்க திருவாங்கூர் திவான் ராகவய்யாவின் வேண்டுகோள்படி சென்னை மாகாண சட்ட அமைச்சர் சர்.சி.பி.ராமசாமி அவர்கள் இப்படியொரு கைது நடவடிக்கையை மேற்கொண்டார் என்பதே உண்மை.
கைது செய்யப்பட்ட பெரியார் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். பொய்யாகப் புனையப்பட்ட வழக்கு என்பதால், வழக்கு தள்ளுபடியாகி, பெரியார் விடுதலை செய்யப்பட்டார். பெரியாரின் சிந்தனை முழுதாக வைக்கம் போராட்டம் குறித்தே இருந்ததால் விடுதலையான உடனே மீண்டும் வைக்கம் சென்றார்.
பெரியாரின் போராட்டம் தீவிரமடைந்ததால், ராஜாஜி காந்திக்குக் கடிதம் எழுதி திருவாங்கூர் வரச்செய்தார். காந்தியாருக்கும், ராஜாஜிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால், பெரியார் அதில் கலந்து கொள்ளவில்லை. காரணம், தெருக்களில் நுழைவது மட்டும் பெரியார் நோக்கமல்ல; கோயிலுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட மக்கள் செல்ல வேண்டும் என்பதே ஆகும். எனவே, தொடர்ந்து போராடுவதற்கு வாய்ப்பாய் பேச்சுவார்த்தையில் பெரியார் கலந்து கொள்ளவில்லை.
காந்தி-_ராணி பேச்சுவார்த்தையில், தெருக்களில் எல்லோரும் செல்ல அனுமதி வழங்கலாம். ஆனால், கோயிலுக்குள்ளும் போக வேண்டும் என்று ஈ.வெ.ரா பிடிவாதம் பிடிப்பாரே; அதனால் தயங்குகிறோம் என்றார் ராணியார். காந்திஜி உடனே பெரியார் தங்கியிருந்த இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை விவரத்தைக்கூறி தற்போதைக்கு வீதியில் நடக்க அனுமதி கிடைப்பதை ஒத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
எனது இலட்சியம் கோயிலுக்குள்ளும் செல்ல வேண்டும் என்பதே; எனவே, தற்போதைக்கு இதை ஏற்றுக்கொள்கின்றேன். கொஞ்ச காலத்திற்கு கிளர்ச்சியை ஒத்திவைக்கிறேன். அமைதியான முறையில் பிரச்சாரம் மட்டும் நடக்கும் என்று ராணியிடம் சொல்லுங்கள் என்று காந்தியிடம் பதிலளித்தார். காந்தியார் ராணியிடம் சென்று பெரியாரின் பதிலைக் கூறினார். ராணி அதை ஏற்றுக்கொண்டார். தீண்டப்படாத மக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடக்க அனுமதி அளிக்கப்பட்டனர்: தடை தகர்க்கப்பட்டது.
(ஆதாரம்: பெரியார் வாழ்வும் பணியும் -_ என்.இராமகிருஷ்ணன்)
ஏனய்யா ஜெயமோகன்! இப்போது சொல்லுங்கள். வைக்கம் வீரர் யார்?
ஓர் அரசாங்கமே பெரியார் என்ன சொல்கிறார்? என்ன செய்வார் என்று கேட்கிறது, அஞ்சுகிறது. காந்தியார் ஓடோடி வந்து பெரியாரைச் சமாதானப்படுத்துகிறார். பெரியார் தலையசைப்பில் தடைத் தகர்ப்பு ஆணை வெளிவருகிறது. இவ்வளவு பெரிய நெடிய போராட்டம் நடத்தி, நான்கு மாதங்களுக்கு மேல் சிறையில் வாடி, தடைகளைத் தகர்த்து, தாழ்த்தப்பட்டோர் வீதியில் நடக்க வழி கண்டார். அதுவும் வேறு மாநிலத்தவராய் இருந்தும் அடுத்த மாநிலத்திற்குச் சென்று இந்தப் போராட்டங்களைச் செய்து வென்றார். உண்மை இப்படியிருக்க ‘வைக்கம் போராட்டத்தில் ஈ.வெ.ரா.வும் கலந்துகொண்டார்; அவ்வளவே!’ என்று முழுப் பூசணிக்காயைப் பிடிசோற்றில் மறைக்கிறீரே… வெட்கமாக இல்லை! அதுவும் இருபது பக்கக் கட்டுரையில் பெரியாரின் இவ்வளவு பெரிய போராட்டத்தைப் பற்றி ஒருவரி கூடக் கூறாமல் மறைக்கிறீரே… கேவலமாக இல்லை!
வரலாறு தெரியாமல் அரைகுறையாய் அறிந்து, அதிமேதாவிபோல் காட்டிக் கொள்பவர் நீர் என்று முதலில் கூறினேனே அதற்கு ஒரு சான்றை உங்களுக்குத் தருகிறேன்.
“1924 ஏப்ரல் 14ஆம் தேதி ஈ.வெ.ரா. தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்… அவர் (ஈ.வெ.ரா.) தமிழ்நாட்டில் எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்குத் தொண்டர் பின்புலமும் இல்லை… வைக்கம் போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களைக் கைதாக்கி, அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.
ஈ.வெ.ரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே; அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராகக் கருதப்படவில்லை. அப்போது அவருக்கு வயது 45தான். தமிழக அரசியலிலும்கூட அவருக்கு இடம் ஏதும் இருக்கவில்லை’’ என்ற எழுதியுள்ளீர். வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் சென்றபோது, அவர் தமிழ் மாநில காங்கிரசுக் கமிட்டித் தலைவர் என்னும் உயர் உதவியில் இருந்தார். போராட்டத்திற்குச் செல்லும்போது, அப்பொறுப்பை இராஜாஜியிடம் விட்டுச் சென்றார். இது வரலாறு, இதைக்கூட அறியாத உங்களுக்கெல்லாம் இணையதளம் எதற்கு?
பெரியார் கைது செய்யப்பட்டபின், போராட்டத்தைத் தலைமைதாங்க ஆள் இல்லாமல், நாகம்மையார் சென்று போராட்டம் நடத்தினார். இது வரலாறு. அப்படியிருக்க, ஏதோ ஒருநாள் மனைவியோடு கேரளாவுக்கு ‘பிக்னிக்’ போய் கலந்துகொண்டது போல் கதை விட்டிருக்கிறீரே… இது எந்த வகையில் யோக்கியமான செயல்?
போராட்டத் தளகர்த்தர்கள் 19 பேரும் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆளே இல்லை என்கிற நிலையில், போராட்டமே பிசுபிசுத்து நீர்த்துவிடும் என்கிற நிலையில், பெரியார் வந்தால்தான் போராட்டம் உயிர்பிழைக்கும் என்று உயிர்ப்பிச்சை கேட்டுக் கடிதம் எழுதியுள்ளனர் போராட்டக் குழுவினர். பெரியார் வரவில்லையென்றால் மன்னிப்புக் கடிதம் கொடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டிவரும் என்கிற ஒரு வீழ்ச்சி நிலையில், பெரியார் சென்று போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, காந்தியாரும் ராணியும் பேசும் நிலையை உருவாக்கி, பெரியார் சம்மதித்தால்தான் சட்டம் வரும் என்று ராணியே சொல்ல காந்தியார் பெரியாரைச் சந்தித்து சமாதானப்படுத்தி, வைக்கத்தில் வழி திறக்கப்பட்ட வரலாற்றை மறைத்து, மாற்றி, பெரியார் போராட்டத்தில் கைதானவர்களில் ஒருவர் என்று எழுதுகிறீரே!… உங்களுக்கெல்லாம் உள்ளமே இல்லையா? அது உறுத்தாதா?
கேரள நாளிதழ்களில், ஆவணங்களில், அனேகமாக எங்கும் பெரியார் பெயர் இல்லை என்கிறீர், பத்திரிகை முழுக்க பார்ப்பனர் கையில்… எந்தப் பத்திரிகை பெரியாரை எழுதும்? போராட்டம் சார்ந்த இதழ்களில்தானே பார்க்க முடியும்? என் போன்றோர் உங்கள் கட்டுரைக்கு மறுப்புச் சொல்லாமல் போனால் நீங்கள் எழுதியதைத்தான் எதிர்கால வரலாறாக இளைஞர்கள் எடுத்துக் கொள்வர். இதுதானே இந்த நாட்டில் நடக்கும் ஊடகத் தர்மம்?
வைக்கம் போராட்டத்திற்குச் சென்றவர், வழி திறக்கப்பட்ட பின்புதான் போராட்டத்தை நிறுத்தினார். போராட்டம் இனி உயிர்பிழைக்காது என்கிற நிலையில் உயிர்கொடுத்துப் போராடியவர் பெரியார். ராணியாரே பெரியாரை முதன்மைப்படுத்திப் பேசியுள்ளார். காந்தியாரே பெரியாரை முதன்மைப்படுத்திச் சந்தித்துள்ளார். பெரியார் சம்மதம் பெற்றே சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதனால்தான் “வைக்கம் வீரர் பெரியார்’’ என்று திரு.வி.க. அழைத்தார். அதை வரலாறும் ஏற்று 85 ஆண்டுகள் ஆகிவிட்டபின் இணையதள இடுக்கில் ஒளிந்துகொண்டு இளைஞர்களின் மத்தியில் பெரியாரின் மதிப்பீட்டைக் குறைக்க _ மறைக்கப் பார்க்கிறீர். இவையெல்லாம் அயோக்கியத்தனமான செயல்கள் என்று உங்களுக்குப் படவில்லையா?
டி.கே.மாதவன் போன்றோர் கேரளா தழுவிய போராளிகள். அவர்களது போராட்டத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் போராடிய போராட்டங்களில் வைக்கம் போராட்டமும் ஒன்று. அவர்கள் வெறும் வைக்கம் போராளிகள் மட்டுமல்லர்; ஆனால், பெரியார் வேற்று மாநிலத்திலிருந்து சென்று, விடாப்பிடியாகப் போராடி, அரசின் பிடியைத் தளர்த்தி வீதியில் செல்ல வழிகண்டவர். அவர் வரவில்லையென்றால் போராட்ட உயிர் நிலைக்காது என்கிற நிலையில் போராட்டத்தைக் கையிலெடுத்து வென்றவர், அவர்கள் அழைப்பை ஏற்றுச் சென்றவர். எனவேதான் வைக்கம் வீரர் என்று பெரியார் பாராட்டப்பட்டார். பெரியார் பாராட்டப்படுவதால் டி.கே.மாதவன் போன்றோர் போராளிகள் அல்லர், வீரர்கள் அல்லர் என்று அர்த்தமல்ல; அவர்கள் வீரர்கள், போராளிகள் _ வைக்கத்திற்கு மட்டுமல்ல; கேரளா முழுமைக்கும்.
வைக்கம் என்று வரும்போது பெரியார் சாதனை பெரிதாகக் கருதப்படுகிறது. பாராட்டப்பட்டார்; அவ்வளவே!
1925க்குப் பிறகு நடந்த ஆலயப் பிரவேசங்களையெல்லாம் இக்கட்டுரையில் எழுதி வாசகர்களைக் குழப்ப நினைப்பது குறுகிய மனதின் வெளிப்பாடு. பிந்நாளைய வரலாறுகளைப் பெருமைப்படுத்திக் காட்டுவதன்மூலம் பெரியாரைச் சிறுமைப்படுத்தும் முயற்சி இது!
இப்போதைக்கு இத்துடன் நிறைவு செய்கிறேன்.
ஜெயமோகன்களுக்கு ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!
எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணாதீர்! என் போன்றோர் விழிப்போடு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இளைஞர்களுக்கு நாங்கள் விளக்குவோம்; விழிப்பூட்டுவோம்; உங்கள் சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்குவோம்!
(தொடரும்…)