கே: நீதிமன்றங்கள் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நிலையில், ஆட்சியாளரின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனவே?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: தந்தை பெரியாரின் ‘நீதி கெட்டது யாரால்?’, ‘நீதிப்போக்கு’ ஆகிய நூல்களைப் படித்து, புரிந்துகொள்ளுவோம் _ இன்றைய போக்கை.
கே: நீலகிரி மசினகுடியில் ஒரு பள்ளி மாணவரை, தன் காலில் உள்ள செருப்பைக் கழற்றி எடுத்துப் போடுமாறு செய்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செயல் பற்றி தங்கள் கருத்து என்ன?
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
ப: ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்பதை ஏனோ அமைச்சர் மறந்து _ (மாணவ) மன்னரை, செருப்பு கழற்றிப் போட ஆணையிட்ட மந்திரியாரின் செயல் மிகவும் பரிதாபத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதே!
கே: பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் ‘இஸ்கான்’ அமைப்பின் பங்கு என்பது ஆர்.எஸ்.எஸ்சின் தலையீடு என்றால், விளைவை உணர்ந்து முளையில் கிள்ள என்ன செய்ய வேண்டும்?
– மகிழ், சைதை
ப: ஆங்காங்கே மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் _ அரசியல் கட்சியினர் போராட முன்வர வேண்டும் _ திரும்பப் பெறுகிற வரையில்!
கே: ஒரே குடும்ப அட்டை என்றது போல, அடுத்து ஒரே வாக்காளர் அட்டை என்று ஆக்கி, எங்கு வேண்டுமானாலும் யாருக்கும் வாக்களிக்கலாம் என்று வருமா?
– இளசையான், வேலூர்
ப: நல்ல கேள்வி. பா.ஜ.க._மோடி ஆட்சியில் எதுவும் நடக்கலாம் _ சட்டம் பற்றிக் கவலை இல்லாமலேயே!
கே: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் இந்திய வருகை மதவாத அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அதைத் தீவிரப்படுத்துமா?
– கார்மேகம், வில்லிவாக்கம்
ப: ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகள் _ வீண் ஜம்பத்திற்கான செலவு 125 கோடி _ இருநாள் கூத்துக்கு மீசையை சிரைத்த கதை! பலன் நஹி, நஹி!
கே: மோடி-இராஜபக்சே பேச்சால் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை ஏற்பட வாய்ப்புண்டா? உள்ளுக்குள் திட்டம் வைத்து ஒடுக்கி ஒழிப்பார்களா?
– நடராஜன், திண்டிவனம்
ப: ஓநாய்கள் ஒருபோதும் “சைவமாகா’’ _ புரிந்துகொள்ளுங்கள்!
கே: இராமலீலாவைத் தடைசெய்யாத அரசு இராவண லீலாவைத் தடை செய்வதற்கு சட்டப்படியான நியாயம் உண்டா?
– முருகன், சேலம்
ப: நியாயப்படி செய்யக் கூடாது! சட்டம் இப்போது அவாள் கையில்தானே! எனவேதான் இத்தகைய “திருக்கூத்துகள்!’’
கே: பாட்டாளி மக்கள் கட்சி ரஜினியிடமும் ‘முன்பதிவு’க்கு முற்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
– திருவேங்கடம், வந்தவாசி
ப: ‘முதல் கையெழுத்து’ என்பதற்கு சரியான பொருள் சொன்னதற்குத் தங்களுக்கு நன்றி!
கே: நீதிமன்றம் உள்பட எல்லாவற்றையும் பயன்படுத்தி அ.தி.மு.க. அரசை பிஜேபி மத்திய அரசு காப்பாற்றுகையில், எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியம் என்பது நகைப்புக்குரியதல்லவா?
– ஆறுமுகம், தாம்பரம்
ப: சரணாகதிப்படலமும் சாமர்த்தியங்களில் ஒன்றுதானே! இல்லையா?