தாழ்த்தப்பட்டோர் _மலை வாழ் மக்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி.) பதவி உயர்விலும் இடஒதுக்கீடு உண்டு என்னும் சட்டத் திருத்தமும், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பும் உள்ள நிலையில், இரு நீதிபதிகள் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு அளித்திருப்பது சட்டப்படி தவறானதாகும்.
மத்திய அரசு தலையிட வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்றத்தில் 1995இல் தாழ்த்தப்பட்ட _ மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்திருத்தம் (77ஆவது சட்டத் திருத்தம்) நிறை வேற்றப்பட்டது. 1992இல் மண்டல் குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, தாழ்த்தப்பட்ட _ மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இன்னும் அய்ந்து ஆண்டுகள் மட்டுமே இடஒதுக்கீடு தர முடியும் என தீர்ப்பளித்ததையடுத்து 77ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
THE CONSTITUTION (SEVENTY SEVENTH AMENDMENT) ACT, 1995
Amendment of article 16 -In article 16 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-
“(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.”.
இந்த சட்டத்தின் மீதும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு (எம்.நாகராஜ் எதிர் மத்திய அரசு), நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், கே.ஜி.பாலகிருஷ்ணன், எஸ்.எச்.கபாடியா, சி.கே.தாகூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 77ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்று 19.10.2006இல் தீர்ப்பளித்துள்ளது.
மீண்டும் 8.1.2016இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் (சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எதிர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா தாழ்த்தப்பட்ட _ மலைவாழ் இன நலச் சங்கம்) அரசு வங்கிகளில் அதிகாரிகள் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் தங்களது தீர்ப்பில் “பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது கட்டாயம் அல்ல” என்று தீர்ப்பளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட _ மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) உயர் பதவிகளில் போதுமான அளவு இடங்கள் இல்லை என்கிற நிலையில்தான் நாடாளுமன்றம் 1995இல் சட்டத்திருத்தம் நிறைவேற்றியுள்ளது. இதனை மறுதலிக்கின்ற வகையில் தீர்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில்தான் மத்திய அரசு தலையிட்டு, 1995இல் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டப்படி சரியானதல்ல. 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை _ இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரிப்பது சட்டப்படி தவறானதாகும்.மத்திய அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தட்டும்!
– கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.