சிறுகதை : பகுத்தறிவே துணை!

பிப்ரவரி 01-15 2020

“அப்பா, கார் வாங்கிக் கொடுங்கப்பா’’ என்று அப்பா சுந்தரத்திடம் கேட்டான் ஆனந்தன்.

“ஆனந்தா, நீ படிக்கிற கல்லூரி இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கு. மிதிவண்டியிலேயே போயிட்டு வரலாம். ஆரம்பத்தில் நீ மிதிவண்டியில்தான் போய்வந்தே! ஆனாலும், பின்னாடி அடம்புடிச்சி மோட்டார் சைக்கிள் கேட்ட …… நானும் வாங்கிக் கொடுத்தேன். அதுவும் போதாதுன்னு இப்ப கார் கேட்கிறியே, என்னடா இதெல்லாம்?’’ என்றார் சுந்தரம்.

“அப்பா, என்னோட படிக்கிற பசங்க நெறைய பேர் காரில்தான் காலேஜுக்கு வர்றாங்கப்பா. எனக்கும் காரில் போகணும்னு ஆசையா இருக்கு. அதனால்தான் கேட்கிறேன்’’ என்று மீண்டும் கேட்டான் ஆனந்தன்.

அப்போது அம்மா மணிமொழி அங்கு வந்தார். தந்தைக்கும் மகனுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டார்.

“ஏங்க, அவன் ஆசைப்பட்டுக் கேட்கிறான். வாங்கித்தான் கொடுங்களேன். புள்ள காலேசுக்கு ஜோரா காரில்தான் போயிட்டு வரட்டுமே’’ என்று மகனுக்காகப் பரிந்து பேசினார் மணிமொழி.

“மணிமொழி, அந்தக் காலத்தில் நான் படிக்கிறப்போ நாலு மைல் நடந்தே போய் படிச்சேன் தெரியுமா? மிதிவண்டிகூட இல்லை’’ என்று கூறிய தந்தையை இடைமறித்துப் பேசினான் ஆனந்தன்.

“அப்பா, உங்கப்பா மிதிவண்டிகூட உங்களுக்கு வாங்கித் தராத நிலையில் இருந்திருக்கார். அவர் ஏழை; ஆனா, எங்கப்பா அப்படி இல்லையே’’.

மகன் பேச்சைக் கேட்டு அம்மாவும் அப்பாவும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

“நீ சொல்றது என்னவோ உண்மைதான் ஆனந்தா. ஆனாலும் அந்தக் காலத்தில் நான் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் இன்று வரைக்கும் நான் ஆஸ்பத்திரிப் பக்கமே போனதில்லை. அதோடு நான் கோயிலுக்கும் போறதில்லை. இது உனக்கும் தெரியும். உடம்பு ஆரோக்கியமா இருக்க வேணும்னா மிதிவண்டிதான் நல்லது’’ என்றார் சுந்தரம்.

“அப்பா, நான் கோயிலுக்கும் போறேன். அதோடு ஜிம்முக்கும் போயிகிட்டுத்தானே இருக்கேன். மாசா மாசம் நம்ம குலதெய்வம் கோயிலுக்கும் போய் பூசையெல்லாம் பண்றேன். அப்படியிருக்க மிதிவண்டி ஓட்டினால்தான் உடல்நலன் பாதுகாக்கப்படுமா?’’ என்று தந்தையைக் கேட்டான் ஆனந்தன்.

“மிதி வண்டி ஓட்டறது மிகச் சிறந்த உடற்பயிற்சிதான், சந்தேகமே இல்லை. முன்னேறிய நாடுகளில் எல்லாம் மிதி வண்டி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை அதிகமான கார்கள் தயாரிக்கக்கூடிய ஜெர்மனி நாட்டில்கூட மிதி வண்டிகள் அதிக பயன்பாட்டில் இருக்கு. அதுக்கான தனி பாதையும் உண்டு’’ என்றார் சுந்தரம்.

மீண்டும் அவரே பேசினார்.

“ஜப்பான் நாட்டில் ஒரு குடும்பத்தில் அய்ந்து பேர் இருந்தால் அந்த வீட்டில் அய்ந்து மிதிவண்டிகள் இருக்குமாம். அங்கு சென்று வந்த நண்பர் ஒருவர் சொன்னார். அண்டை நாடு சீனாவிலும் மிதிவண்டி உபயோகம்தான் அதிகம். அதுவும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டுமென்றால் நடந்துதான் செல்ல வேண்டுமாம். இதெல்லாம் உடம்புக்கு நல்லதுதானே? அதோடு இல்லாமல் போக்குவரத்து நெரிசலும் இருக்காது. விபத்துகளுக்கும் அதிக வாய்ப்பில்லை. நமக்கும் பாதுகாப்பு. நீ ஜிம்முக்குப் போறது நல்லதுதான். ஆனால், கோயில் குளத்துக்குப் போறதால உடல்நலம் காக்கப்படாது.’’

“ஏங்க, புள்ள ஆசைப்பட்டு கார் கேட்கிறான். அதுக்கு பதில் சொல்லாம ஏதேதோ சொல்லி அவன் மனதை ஏன் நோகடிக்கிறீங்க. கார் வாங்குற வேலையைப் பாருங்க. மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்’’ என்றார் அம்மா மணிமொழி.

கார் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் மகனுக்காக மணிமொழி பரிந்து பேசியதைக் கேட்ட சுந்தரம் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

கார் வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். பணம் கட்டி மகன் பெயரிலேயே பதிவு செய்யவும் ஏற்பாடு செய்தார். ஒரு நாள் கார் விற்பனை நிலையத்திலிருந்து காரை வீட்டிற்கு எடுத்துவர தகவல் தெரிவித்தார்கள். ஆனால், மணிமொழியும் ஆனந்தனும் நல்ல நாளில்தான் காரை வீட்டுக்கு எடுத்து வரவேண்டும் என்று கூறிவிட்டனர். அதனால், சில நாள்கள் தாமதமாக வீட்டுக்கு எடுத்து கார் வரப்பட்டது. கார் வீட்டிற்கு வருமுன் ஊரில் உள்ள கோயில் ஒன்றில் படையலும் பூசையும் போடப்பட்டது. காருக்கு மாலை போட்டு குங்குமம், விபூதி பட்டை எல்லாம் வைத்து அதோடு சக்கரத்தில் எலுமிச்சம் பழத்தையும் வைத்து நசுக்கச் செய்தான் ஆனந்தன். ஆனால், சுந்தரத்திற்கு அறவே இதெல்லாம் பிடிக்கவில்லை. அவர் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்.

சில நாள்களில் காருக்கு பதிவெண் முடிவாக இருந்தது. கார் கம்பெனிகாரர்கள் சொன்ன பதிவெண்ணை ஆய்வு செய்தான் ஆனந்தன். அந்த எண்ணைக் கூட்டிப் பார்த்தான். கூட்டுத் தொகை இரட்டிப்பு எண்ணாக வந்தது. அதில் அவனுக்கு திருப்தி இல்லை. தனக்கு ராசியான எண் அய்ந்து என ஒரு சோதிடர் சொன்னதை நினைத்துப் பார்த்தான். அதை அவன் முழுவதுமாக நம்பியதால் அவர்கள் சொன்ன பதிவெண்ணை மாற்றி வாங்க முடிவுசெய்தான். அதற்காக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சென்-று அலைந்தான். நிறைய செலவும் செய்து பதிவெண்ணை மாற்றினான்.

இதையெல்£ம் கேள்விப்பட்ட சுந்தரம் மிகவும் எரிச்சலைடைந்தார்.

“எந்தப் பதிவெண்ணா இருந்தா என்ன? அதுக்கெல்லாம் செலவு செய்ஞ்சு மாத்தணுமா?’’ என்று பொங்கினார் சுந்தரம்.

“ஏங்க, முதன்முதலா கார் வாங்கியிருக்கோம். பாதுகாப்பு முக்கியம் இல்லையா? ஏன் புள்ளய எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்றீங்க’’ என்று சற்றே கோபத்துடன் கேட்டார் மணிமொழி.

“இப்படிச் செய்வதுதான் பாதுகாப்பா? இதெல்லாம் முட்டாள்தனம். முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனம்.’’ என்று முனகியபடியே அந்த இடத்தை விட்டு அகன்றார் சுந்தரம்.

அடுத்த சில நாள்களுக்கு வேறு ஒரு வாடகைக் காரில் நீண்ட தூரம் கார் ஓட்டப் பழகிக் கொண்டான் ஆனந்தன். நன்றாகப் பழகிய பின் ஒரு நாள் காரை முதன்முதலாக வெளியே எடுத்துச் செல்ல முடிவு செய்தான். முதன்முதலாகச் செல்ல வேண்டிய இடத்தையும் அவனே தேர்வு செய்து அதை அம்மாவிடமும் தெரிவித்தான்.

“அம்மா, முதன்முதலா காரை நம்ம குலதெய்வம் கோயிலுக்கு எடுத்துக்கிட்டுப் போய் வரலாமா?’’ என்றான் அம்மாவிடம்.

“நானும் அதைத்தான் சொல்ல நினைத்தேன் ஆனந்தா. அப்பாவிடமும் சொல்லிவிடு. அப்பா அதெல்லாம் வேணாம்னுதான் சொல்வார். அவர் வந்து ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கட்டும். நாம் பூசாரியை வைச்சி பூசைகள் செய்வோம். அப்படி செய்ஞ்சாத்தான் கார் பாதுகாப்பா இருக்கும். விபத்து எதுவும் ஏற்படாது’’ என்று மகன் சொன்னதை ஆமோதித்துப் பேசினார் மணிமொழி.

அவர்களது குலதெய்வக் கோயில் என்பது பத்து மைல் தொலைவில் இருந்தது. பூசை பற்றி பூசாரியிடம் ஆலோசனை செய்தனர். பூசாரி கூறிய தேதியில் பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இரவு பத்து மணிக்குத்தான் பூசைகள் செய்ய வேண்டுமென பூசாரி கூறினார். மணிமொழியும் ஆனந்தனும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

பூசை நாளன்று மணிமொழியும் ஆனந்தனும் குலதெய்வம் கோயிலுக்குக் கிளம்பத் தயாராயினர். முதலில் சுந்தரம் வர மறுத்தார். ஆனால், மகனும் மனைவியும் மிகவும் வற்புறுத்தியதால் வேண்டா வெறுப்பாகவே கிளம்பினார். மேலும் அவர்களைத் தனியாக அனுப்பவும் அவர் விரும்பவில்லை.

அன்று மாலை வேளையிலேயே காரை எடுத்தான் ஆனந்தன். அம்மாவையும் அப்பாவையும் காரில் உட்கார வைத்து காரை ஓட்டிச் சென்றான் ஆனந்தன். மகன் கார் ஓட்ட தாங்கள் உட்கார்ந்து செல்வதை நினைத்து இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் சுந்தரம் மட்டும் இது தேவையில்லாத பயணம் என்று வருந்தவும் செய்தார்.

பத்து மைல் தூரம் காரை ஓட்டிவந்த ஆனந்தன் குலதெய்வம் கோயிலை அடைந்தான். அங்கிருந்த பூசாரி அவர்களை வரவேற்றார்.  கோயிலுக்கு முன் அவர் சொன்ன இடத்தில் காரை நிறுத்தினான்.

பூசாரி உத்தரவுப்படி ஆனந்தன் காரைக் கழுவி சுத்தப்படுத்தினான். காருக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டு பூசைகள் போடப்பட்டன. சூடம், சாம்பிராணி எல்லாம் கொளுத்தி படையல் ஜோராகச் செய்தார் பூசாரி. இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டே வேதனைப்பட்டார் சுந்தரம். மணிமொழியும், ஆனந்தனும் சாமி கும்பிட்டுவிட்டு காரின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்டார்கள். பூசாரி ஏதேதோ மந்திரங்களைச் சொல்லி இருவருக்கும் குங்குமம், விபூதி கொடுத்தார். இருவருக்கும் மாலை அணிவித்து காரை சுற்றிச் சுற்றி வரச் செய்தார். பூசாரி சொன்ன அனைத்தையும் பயபக்தியுடன் இருவரும் செய்தனர்.

பிறகு அங்கேயே பொங்கல் வைத்து படைத்துச் சாப்பிட்டனர். அப்போது நடுநிசி பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. பூசாரி தனக்குத் தேவையான பணத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டதுடன் தன்னை அவரது வீட்டுக்குக் கொண்டுபோய் விடுமாறு கேட்டுக்கொண்டார்.

எல்லாம் முடிந்தபின் காருக்கு அருகில் வந்த சுந்தரம் இரவு வெகுநேரம் ஆகிவிட்டபடியால் இங்கேயே உறங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து செல்லலாம் என்றார். காரணம், இரவு நேரத்தில் செல்வது பாதுகாப்பு இல்லை என அவர் நினைத்தார். ஆனால், அதற்கு ஆனந்தன் ஒப்புக் கொள்ளவில்லை.

“அப்பா, நான் காலையில் சீக்கிரமா காலேஜுக்கு போகணும். நாளைக்கு ஒரு தேர்வும் இருக்கு. அதனால் இப்பவே கிளம்ப வேண்டும். இரவு நேரம்னு பயப்படாதீங்க. நாங்கதான் சாமி கும்பிட்டு விட்டோமே! எதுவும் ஆகாது. பத்திரமா வீடு போயிடலாம்’’ என்றான் ஆனந்தன்.

பூசாரியும் அதை ஆமோதித்தார்.

பிறகு மூவரையும் காரில் உட்கார வைத்து காரை ஓட்டினான் ஆனந்தன். சுந்தரம் பதற்றத்துடனேயே உட்கார்ந்திருந்தார். சின்னப் பையன், தூங்கிவிட்டால் என்ன செய்வது எனப் பயந்தார்.

கார் பாதி தூரம் சென்றது. சுந்தரம் பயந்தது போலவே ஆனந்தன் சில வினாடிகள் கண் அயர்ந்தான். அடுத்த வினாடி கார் சாலையை விட்டு இறங்கி ஒரு மரத்தில் பெருத்த ஓசையுடன் மோதி நின்றது.

சுந்தரத்தைத் தவிர மூவருக்கும் பலத்த அடி. சுந்தரம் ஓரளவு காயத்துடன் தபபினார். அனைவரும் ஒரு மாதம் வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்ந்து சிகிச்சை பெற்று நலம் பெற்றனர்.

ஆனந்தனுக்கோ, அனைவருக்கும் தொல்லை கொடுத்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

“ஆனந்தா! சாமியோ, அதற்கு செய்யும் பூசையோ பயன் தராது. நம்மைக் காக்காது. நாம்தான் நமது பகுத்தறிவைப் பயன்படுத்திக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். நள்ளிரவில் ஓய்வெடுத்துத் தூங்க வேண்டிய நேரத்தில் கார் ஓட்டியதால் நேர்ந்த சங்கடத்தைப் பார்த்தாயா? தூக்கம் வந்தால் கார் ஓட்டக் கூடாது. மீறி நடந்தால் எந்தச் சாமியும் நம்மைக் காப்பாற்றாது. காருக்குப் படையல் போட்ட பூசாரியைப் பார். அவரும் அடிபட்டுக் கிடக்கிறார். இனிமேலாவது கவனமாக இரு. பகுத்தறிவுடன் எந்தச் செயலையும் செய்’’ என்று மகனிடம் கூறினார் சுந்தரம்.

“சரிப்பா’’ என்றான் ஆனந்தன். மணிமொழியும் சுந்தரம் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.

– ஆறு.கலைச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *