மக்கள் இப்போது எங்குச் சென்றாலும் காதில் இயர்போனை (ஹெட்போன்) மாட்டிக் கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. வாகனம் ஓட்டும்போதுகூட காதில் இயர்போனை மாட்டிக்கொள்வதால் சாலையில் ஏற்படும் விபத்துகளும் எராளம்.
காது கேளாமை
அதிகமாக இயர்போன் பயன்படுத்தினாலே எல்லோரும் சொல்லக்கூடிய, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்பது அது 90 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது கேட்கும் திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகிறது.
‘குறிப்பிட்ட அளவுக்கு மேல் சத்தத்தை அதிகப்படுத்தினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும்’ என்கிற எச்சரிக்கை வருகிறது. அதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
காதுகளில் தொற்று
நிறையப் பேருக்கு ஒரே இயர்போனை மாற்றி மாற்றி உபயோகிக்கும் பழக்கம் இருக்கும். இரண்டு பேர் ஒரு இயர்போனை ஆளுக்கொரு முனையாக மாட்டிக் கொண்டு இருப்பார்கள். இது மிக மிக தவறு. காதின் வெளிப்புறம்தானே என்று நாம் மாட்டிக் கொள்ளும்போது பல தொற்றுகள் காதுக்குள் பரவ நாமே வழிவகுக்கிறோம். இதைத் தவிர்க்கலாம்.
காது மரத்துப் போதல்
ஒரு சிலர் எப்போதும் இயர்போனைக் கழற்றாமல் காதிலேயே மாட்டிக்கொண்டு இருப்பார்கள். ஏதாவது ஒரு சத்தம் காதில் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என அடிமையாகிப் போயிருப்பார்கள். இவர்களுக்கு காதின் உணர்வுத்தன்மை குறைந்து மரத்துப்போகும். இதையே தொடர்ந்து செய்யும்போது நிரந்தரமாக கேட்கும் தன்மையை இழக்க நேரிடும்.
மூளை பாதிப்பு
நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் இயர்போனானது மின்காந்த அலைகளை உருவாக்கும். காதின் உட்புறப் பகுதிகள் மூளையுடன் இணைந்துள்ளதால் இது மூளையைப் பெருமளவில் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாம்.
மனநல பாதிப்பு
இயர்போனை, தேவைப்படும்போது முக்கிய குறிப்பு எடுத்தல் போன்ற வேலைகளுக்கும் கொஞ்சம் நேரம் இடைவெளிவிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது, ஞாபக சக்தி குறைபாடு, தூக்கமின்மை, தலைவலி, ஒவ்வாமை, சிந்திக்கும் திறன் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படச் செய்யும். இயர்போன் அதிக நேரம் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
(தகவல் : சந்தோஷ்)