கவிதை : பொன்னாடு வெல்கவே!

ஜனவரி 16-31 2020

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்

உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா?

உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர்

பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்!

உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி அதுதான் தம்பி!

பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று

பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள

எண் தவிர்ந்தார் எல்லாரும், “எங்கள் திரவிடந்தான்

என்று விடுதலையடையும்” என்கின்றார் அன்றோ!

 

பனியில்லை; குளிரில்லை; இருள் கிழித்துக் கொண்டு

பகலவன் தான் தலைகாட்டப் பல்காட்டி வாழ்த்தி

இனியில்லை மடமை என ஆர்த்தாயே தம்பி

இரு! பார் இதோ அறிவுக் கண்ணாடி பூண்பாய்!

முனைக்குமரி விந்தியத்தின் இடைப்பாங்கு வாழும்

                முத்தமிழர் எல்லாரும், இத்திராவி டந்தான்

இனியடிமைத் தளையறுத்து விடுதலையே கொள்ள

                ஏற்றசெயல் செய்கின்றார் தெரிகின்ற தன்றோ!

 

தைத்திங்கள் முதல்நாளின் திருவிழா, உன்றன்

                தனிமையினை நீக்கித் திராவிடரெல் லாரும்

எத்தாலும் ஒன்றென்று காட்டிற்றுக் கண்டாய்!

                இனத்துநினை வெல்லாம்உன் மனத்தளவே அன்றோ?

முத்துநிறை கீழ்க்கடல், மேற் கடல், தெற்கே குமரி,

                முன்வடக்கில் விந்தியமாம் மேவுதிரா விடர்கள்

ஒத்திந்த நாட்டினது விடுதலைக்கே என்றும்

                உழைக்கின்றார் நிலங்குலுங்க! உற்றறிநீ தம்பி.

என்நாடு பிரிக எனப் பணிசெய்கின் றாய்நீ!

                எதிர்ப்போனும் அதைத்தானே செய்கின்றான் தம்பி?

பொன்னாடு திராவிடமாம் என்கின்றாய் அஃது

                புன்நாடென் றுரைப்பானும் பொன்னாடென் போனே!

தென்னாட்டிற் கிளர்ச்சியினைச் செய்கின்றாய் நீதான்.

                சிரித்தபடி நிற்பானும் அதைத்தான்செய் கின்றான்

இன்னதனை நீயுணர மாட்டாயா தம்பி?

                இனிவெற்றிக் கொடியேற்றல் ஒன்றுதான் பாக்கி!

மடமை என ஒன்றுண்டு! வாய்பெரிது! கையில்

                வாள் ஒன்று வைத்திருக்கும்! சிறைவீட்டு வாயிற்

படிமீது நிற்கும்!பல் லாற்பல்லை மெல்லும்!

                பார் என்று கூச்சலிடும்! போர்நிறுத்தக் கெஞ்சும்!

விடேன் என்று மேற்செல்வாய்! விடுதலையைச் செய்வாய்!

                வீறிட்டுப் பாயும்உன் உடற்குருதி யால்உன்

கடமைசெய்வாய்! அம்மடமை தலைகவிழ்ந்து போகும்.

                கண்மூடி யிருந்திட்டால் மண்மூடும் உன்னை!

உன்நாட்டை மீட்கநீ உயிர்நீக்கப் பெற்றால்

                உயிர்நீங்கச் செய்தானும் உன்நாட்டை மீட்டோன்!

தென்னாட்டிற் பிறந்தாயா? இல்லையா? நீ இத்

                திருநாட்டின் மறவனா? இல்லையா? வீரர்

கல்நாட்டிக் கல்நாட்டிக் காலமெலாம் குருதிக்

                கடலேமுக் கடலாகப் புகழ்நாட்டி னார்இப்

பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்!

                புதிய திராவிடம் வாழ்க பொங்கலோ! பொங்கல்!

(பாவேந்தரின் பொங்கல் வாழ்த்துக் குவியல்

என்னும் நூலிலிருந்து – 1954ஆம் ஆண்டுப் பதிப்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *