மருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்

அக்டோபர் 01-15 2019

தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்ஃபுளூயன்சா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஃப்ளூ காய்ச்சல் இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தில் இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளில் பரவுகிறது. நோயாளி இருமும்போதும், தும்மும்போதும் ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு இந்நோய் பரவுகிறது. வட இந்தியாவில் பருவமழை பெய்கிற ஜூலை, செப்டம்பர் மாதங்களிலும், தென்னிந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இன்ஃப்ளூயன்ஸா எனும் சளிக்காய்ச்சல் மிக அதிகமாக உச்சநிலையை எட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குளிர்காய்ச்சலின் மிக முக்கியமான மற்றும் பொதுவான சிக்கல் என்பது நிமோனியாவாகும். சுவாசத்திறனில் இது ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கும் கூடுதலாக இதய தசை அலர்ஜி மற்றும் இதயச் சுற்றுப்பை அலர்ஜி ஆகிய பிற உடல் அமைப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்ஃப்ளூயன்ஸா என்பது 1 முதல் 2 நாள்கள் வரையிலான அடைகாத்தல் காலத்தைத் தொடர்ந்து வழக்கமாக தீவிரத் தன்மையுடன் வெளிப்படும். முதலில் நோய்த்தொற்று ஏற்பட்டவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய்த்தொற்று ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. நோய்த்தொற்றுள்ள பிற பொருள்களோடு தொடர்பு கொள்வதன் வழியாகவும் இது பரவக்கூடும்.

காய்ச்சல், குளிர் காய்ச்சல், தலைவலி, கடுமையான தலைவலி, உடல்நலக் குறைவு மற்றும் பசியற்ற தன்மை ஆகிய அறிகுறிகள் நோயாளியிடம் காணப்படும். இத்துடன் வறட்டு இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை வலி போன்ற சுவாசப் பாதை நோய் அறிகுறிகளும் பெரும்பாலானவர்களுக்குக் காணப்படும்.

இந்நோய் தாக்கப்பட்டவர்களுக்கு துவக்கத்தில் காய்ச்சல் மிக அதிக தீவிரமானதாக இருக்கும். மூன்று நாள்களுக்குப் பின்னர் அது குறைந்து படிப்படியாக மறைந்துவிடும். சராசரியாக 4 முதல் 8 நாள்கள் வரை இந்நோய் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. சிவப்பான மற்றும் நீர் ததும்பும் கண்களுடன், மதமதப்பான முகத்தோடும் நோயாளிகள் காணப்படுவார்கள். காய்ச்சலுக்குப் பின்னர் அதிலிருந்து முழு நிவாரணம் பெறுவதற்கு சில வாரங்கள் ஆகும். அக்காலத்தில் வறட்டு இருமலும், உடல்நலக் குறைவும் நோயாளியின் மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.

தடுப்பு வழிகள்:

இன்ஃப்ளூயன்ஸா மற்றும் அதன் கடுமையான விளைவுகள் ஏற்படாமல் தடுக்க நோய்த்தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் பருவகால போக்கின் அடிப்படையில் தென்னிந்திய மாநிலங்களில் வசிக்கும் நபர்களுக்கு இந்த நோய்த்தடுப்பூசியை வழங்குவதற்கான சிறந்த காலம் என்பது, மழைக்காலம் தொடங்குவதற்கு சற்று முந்தைய காலமாக எனினும் அதிக ஆபத்துக்கு வாய்ப்புள்ள நபர்கள் மற்றும் குழுக்களுக்கு ஆண்டின் எந்த நேரத்திலும் ஃபுளூ தடுப்பூசி மருந்தை வழங்கலாம்.

இருமல் மற்றும் தும்மலுக்குப் பின்னர் கையைத் தூய்மைப்படுத்துவது, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது, நோய் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுக்கு ஆன்டி வைரஸ் மருந்துகளை வழங்குவதும் இந்த நோயின் ஒட்டுமொத்த சுமையினைக் குறைத்து குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *