தந்தை பெரியார்
ஒருவனைப் பார்த்து, “நீ ஏன் சூத்திரன், கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி’’ என்று கேட்டால் அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறானென்றால், மதப்படி _ சாஸ்திரப்படி, கடவுள் அமைப்புப்படி என்கின்றான். நீ ஏண்டா பார்ப்பான் உயர்ந்த ஜாதி என்றால், அதற்கு அவன் மதப்படி, சாஸ்திரப்படி கடவுள் அமைப்புப்படி என்றுதான் பதில் சொல்லுகின்றான். அது போலத்தான் பணக்காரனும் கடவுள் கடாட்சத்தால்தான் பணக்காரனாக இருக்கிறேன் என்கிறான். நாள் பூராவும் உழைக்கின்ற நீ ஏண்டா ஏழையாக இருக்கிறாய் என்றால் அது கடவுள் செயல், கடவுள் கஷ்டப்படுவதற்காக என்னை அப்படிப் படைத்துவிட்டார் என்கிறான். இப்படிச் சமுதாயத்தில் உள்ள குறைகளுக்குக் காரணமாக இருப்பது நம் மதம், சாஸ்திரம், கடவுள் இவையே. நம் மக்களின் இழிவிற்கும், பேதத்திற்கும், கவலைக்கும், மானமற்ற தன்மைக்கும் காரணமாக இருப்பதால், இவற்றை ஒழித்தால்தான் நமது சமுதாயமானது அறிவு பெற்று நல்வாழ்வு வாழமுடியும் என்பதால் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டியது அவசியமாகிறது.
40 ஆண்டுகளாக இவற்றை ஒழிக்கப் பாடுபட்டும் முடியவில்லை என்றால், அதற்குக் காரணம், நம்மைவிட நம் எதிரிகளிடம் பத்திரிகை பலமும், பணமும், பிரச்சார பலமும் நிறைய இருக்கின்றன. சாதாரண அனாமதேயங்களை எல்லாம் பிரச்சாரத்தின் பலத்தாலும் பெரிய மகானாக்கிக் காட்டுகிறார்கள். நம் மக்களுக்குப் போதிய அறிவில்லாத காரணத்தால் அதனை நம்புகின்றனர். நம் பிரச்சாரத்தால் மக்கள் சிறிதளவு அறிவு பெறுகின்றனர். என்றால், அதைவிடப் பல மடங்கு பிரச்சாரத்தாலும், விளம்பரத்தாலும் மக்கள் தங்கள் சிந்தனாசக்தியையும், அறிவையும் இழக்கின்றனர். பத்திரிகைகள் யாவும் கட்டுப்பாடாக மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான பிரச்சாரங்களையே கருதி விளம்பரம் செய்து வருகின்றன. நம்மிடமும் ஒரு கோடி ரூபாயிருந்து, ஒரு 100, 150 பத்திரிகைகள் இருந்து, 500 பிரச்சாரகர்கள் இருந்தால் அறிவுத்துறையில் கழுதையைக்கூட மகானாக்கிவிட முடியும். விளம்பரத்தால் சாதித்து விட முடியும்.
நம் நாட்டின் பெரிய கேடு _ இதுவரை அறிவுத்துறையில் மக்களைத் திருப்ப ஒருவர் கூட தோன்றாததேயாகும். ஓரிருவர் தோன்றியிருந்தாலும் கூட அவர்களும், அவர்களின் கருத்துகளும் மறைக்கப்பட்டு விட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றினார். அதன்பின் அறிவுப் பிரச்சாரத்திற்கு ஆளே இல்லாமல் போனதோடு, மக்களிடம் மடமையை வளர்க்கும் பிரச்சாரங்களும், சாதனங்களும் மிக அதிகமாகி மக்களை அறிவற்ற மடையர்களாக்கி விட்டன. ரஷ்யாவிலே அவர் தோன்றினார், துருக்கியிலே அவர் தோன்றினார், லண்டனிலே ஒருவர் தோன்றினார், அமெரிக்காவிலே ஒருவர் தோன்றினார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதுபோல ஓர் ஆள் _ அறிவில் சிறந்த ஓர் _ ஆள் நம் நாட்டில் தோன்றினார் என்று சொல்ல முடியாதே!
நம் நாடு புண்ணிய பூமி, ஜீவபூமி என்றெல்லாம் அழைக்கப்பட்டாலும், நம் நாட்டில் பெரிய மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், தெய்வசக்தி பொருந்தியவர்கள், கடவுள் அருள்பெற்றவர்கள், என்றெல்லாம் தோன்றினாலும் கூட, இவர்கள் அனைவருமே மக்களின் முட்டாள்தனம், மூடநம்பிக்கை, அறிவற்ற தன்மை ஆகியவற்றை வளர்க்கவே பாடுபட்டார்களே ஒழிய, ஒருவர்கூட மக்கள் அறிவைப் பற்றியோ, இழிவைப் பற்றியோ, மானமற்ற தன்மை பற்றியோ சிறிதும் சிந்தித்தவர்கள் கிடையாது. நம் இலக்கியங்கள், மத நூல்கள் சாஸ்திரங்கள் எல்லாம் மடமையை வளர்க்கத் தக்கனவாக அமைந்தனவே தவிர, அவற்றால் மக்கள் சிந்தனை அறிவு பெற வழியே இல்லாமல் போய் விட்டது என்பதோடு நமக்கிருக்கிற நூல்களில் அறிவிற்கு மாறான, சிந்தனைக்கு மாறான மூடநம்பிக்கைக்கு ஆதாரமான பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையினாலே நம் மக்கள் அறிவு பெறவோ, சிந்தனை பெறவோ வழியின்றி அந்த ஆதாரங்களை நம்பி மூடநம்பிக்கைக்காரர்களாக, பகுத்தறிவற்ற ஜீவன்களாக வாழ வேண்டியவர்களாகி விட்டார்கள்.
உண்மையாக எவன் பெரியவனோ _ உண்மையாக எவன் மக்களுக்குத் தொண்டு செய்கிறானோ அவனுக்கு மதிப்பில்லாமல் போய், பொதுவாழ்க்கையின் மூலம் எவன் பிழைக்கிறானோ, பொறுக்கித் தின்கின்றானோ அவனுக்குத்தான் மதிப்பும், விளம்பரமும் அதிகமிருக்கிறது என்பதோடு, தங்கள் இனத்திற்கு ஆதரவாக இருக்கிற அனாமதேயங்களை எல்லாம் பார்ப்பான் பார்த்து மகான் என்கிறான், ரிஷி என்கிறான், மகாத்மா என்கிறான். பத்திரிகைகளும் அதற்கு ஆதரவாக இருந்து விளம்பரப்படுத்துகின்றன. தற்போது பத்திரிகைகள் யாவும் பார்ப்பானிடமும், பணக்காரனிடமும், பார்ப்பானின் அடிமைகளிடமும், சிக்கிவிட்டதால், புரட்டு _ பித்தலாட்டங்கள் மூலம் மனிதனை மடையர்கள் ஆக்கவே முயற்சிக்கின்றன; பாடுபடுகின்றன. அவற்றிற்கு முட்டாள்களுடைய மூடநம்பிக்கைக் காரர்களுடைய ஆதரவு அதிகமிருப்பதால், அவைதாம் அதிகம் விற்பனையாகின்றன. பாமர மக்களிடையே பரவுகின்றன. மனிதன் அறிவையும், சிந்தனையையும் வளர்க்கக் கூடிய பத்திரிகைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன என்றாலும், மக்கள் அவற்றை விரும்புவது இல்லை, வாங்கிப் படிப்பதும் கிடையாது. எனவே, மக்களுக்கு உண்மையான அறிவு வளர்வதற்கு இடமில்லாமல் போய் விட்டதோடு, மூடநம்பிக்கை _ முட்டாள் தனமான கருத்துக்களுக்குத்தான் மக்களிடம் செல்வாக்கு அதிகமாகி விட்டது.
மக்களுக்கு அறிவைப் புகுத்த முதலில் அவர்களிடம் இருக்கும் மடமையை அகற்ற வேண்டும். அந்த மடமைக்கு அஸ்திவாரமாக இருக்கும் முட்டாள்தனத்திற்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, முதலில் அவர்கள் மூளையில் படிந்திருக்கும் மடமையினை ஒழித்தாக வேண்டும். பிறகுதான் அறிவைச் செலுத்த முடியும். அவர்களைச் சிந்திக்கத் தூண்டமுடியும் என்பதால்தான், முதலில் கடவுளை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறோம்.
9.6.1968 அன்று புதுவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு
– ‘விடுதலை’ – 24.6.1968.