பெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா!

அக்டோபர் 01-15 2019

 

பெண்கள் அதிகம் பங்குகொள்ள யோசிக்கும் போட்டி – பளுதூக்குதலும் வலுதூக்குதலும். இந்தப் போட்டிகளில்தான் செல்லுமிடமெல்லாம் வெற்றியுடன் திரும்புகிறார் பட்டுக்கோட்டைக்கு அருகில் நாட்டுச்சாலை என்னும் சிறிய கிராமத்தில் பிறந்த சினேகா, பளுதூக்குதல் போட்டிகளில் தேசிய, மாநில அளவில் கைநிறைய பதக்கங்களைப் பெற்று மின்னி ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்!

“அப்பா செல்லதுரை அவருடைய சின்ன வயசுல பல ஊர்களுக்கும் போய் கபடியில் கலந்துகிட்டு பரிசெல்லாம் வாங்கியிருக்காரு. குடும்ப வறுமை காரணமாக ஒரு கட்டத்தில் கபடியில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டு கூலி வேலைக்குப் போய் வீட்டைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார்.

எங்க அப்பாவுக்கு நாங்க ரெண்டு பொண்ணுங்கதான். அதனால், எங்களை சிறு வயது முதலே விளையாட்டுச் சிந்தனையுடனே வளர்த்தார். அப்போதிருந்தே விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி ஆர்வத்தோட எங்களுக்கு சொல்லித்தருவாரு அப்பா. அதுதான் எங்களை விளையாட்டை நோக்கி அழைத்து வந்தது’’ என்றபடி உணர்ச்சிப் பெருக்கில் மூச்சு வாங்குகிறார்.

தொடர்ந்து பேசும் சினேகா, “நான் நாட்டுச்சாலை அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரைக்கும் படித்தேன். அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் எந்த விளையாட்டுப் போட்டி நடந்தாலும் ஆர்வத்துடன் நானும் அக்காவும் கலந்துகிட்டு பரிசு வாங்குவோம். எங்க அப்பா எங்களைக் கபடி வீராங்கனைகளா மாத்தணும்னுதான் ஆசைப்பட்டாரு. ஆனால், என்னோட அக்கா பளுதூக்குதல் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சா. அதனால் நானும் எட்டாம் வகுப்பு படிக்கும்போது பளு தூக்குதல் போட்டிகளில் கலந்துக்க ஆரம்பிச்சு, பள்ளிகள் அளவில் பரிசுகளும் வாங்க ஆரம்பிச்சேன்.

பரிசுகள் குவியக் குவிய அதில் எனக்கு ஆர்வம் அதிகமாயிடுச்சு. ஆனால், தொடர்ந்து மேலும் முன்னேறப் பயிற்சி பெறணும்னா அதுக்கான கோச் அங்க இல்ல. மேலும், பளுதூக்குதல் போட்டிகளுக்குச் சத்து நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிடணும். அதுக்கு நிறைய செலவாகும்.

அப்போது நடந்த விளையாட்டு விடுதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி அடைந்து புதுக்கோட்டை விளையாட்டு விடுதியில் இடம்பிடித்தார். விளையாட்டு விடுதியில் தங்கிக்கொண்டே புதுக்கோட்டை ராணி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்தார். விளையாட்டு விடுதியில் வழங்கப்பட்ட பயிற்சிகள் சினேகாவை மேலும் வலுவாக்கியது. அதன் பின்னர்தான் அவர் பல்வேறு பதக்கங்கள் வாங்கிக் குவிக்க ஆரம்பித்தார்.

ஒன்பதாம் வகுப்பிலேயே மாநில அளவில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வாங்கினேன். இப்போது நான் ஜே.ஜே.கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறேன். இந்தக் கல்லூரியில் எனது சாதனைகளைப் பார்த்து விளையாட்டு கோட்டாவில் இலவசமாக கல்வி கொடுத்திருக்கிறார்கள்’’ என்கிறார் புன்னகையுடன். இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட பதக்கங்கள் வாங்கியிருக்கிறார் சினேகா. கடந்த ஆண்டு தென் மாநிலங்கள் அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். கடைசியாக நடந்த தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.

இப்போது தேசிய அளவிலான பளுதூக்கும் சாம்பியன் போட்டிக்கும், பல்கலைக்கழகங்கள் அளவிலான சாம்பியன் போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார். “எங்க வீடு சின்ன கூரைவீடுதான். அதுவும் போனவருசம் அடிச்ச கஜா புயலில் சிதைஞ்சி போச்சு. இப்போ மோசமான நிலைமையில்தான் இருக்கு. அப்பா, அம்மா ஜெயந்தி ரெண்டு பேருமே விவசாய கூலி வேலைகளுக்குப் போய்தான் எங்களை படிக்க வைக்குறாங்க. என்னோட அக்கா சிவரஞ்சனியும் பளுதூக்குதல் வீராங்கனைதான். அவர் சென்னையில் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.

ஒவ்வொரு தடவை போட்டிகளில் பளு தூக்கும்போதும் அப்பாவோட முகம்தான் ஞாபகம் வரும். அதுதான் எனக்கான ‘எனர்ஜி டானிக்.’ அப்பாவோட கனவை நெஞ்சில் சுமந்துக்கிட்டு ஓடிகிட்டு இருக்கோம். நிச்சயமா ஒரு நாள் சாதிச்சுக் காட்டுவோம்’’ என்கிறார், இலட்சியத்துடன்!

தகவல்  சந்தோஷ்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *