திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கியது!
மஞ்சை வசந்தன்
அமெரிக்காவில் 75 ஆண்டுகளாக மனிதநேயத்திற்கு குரல் கொடுக்கிற, அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறம் சார்ந்த சுயநலமற்ற, பொதுநல நோக்குடைய அமைப்பு அமெரிக்க மனிதநேயர் சங்கம் (American Humanist Association).
இந்த அமைப்பின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது’ (Humanist Lifetime Achievement Award) வழங்கப்பட்டது. அவரது சமூகநீதி மற்றும் சுயமரியாதை குறித்து மக்களிடம் 75 ஆண்டுகளுக்கு மேலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை அடைவதிலும், பெரியார் வழியில் ஆற்றிவரும் மனிதநேயத் தொண்டுகளைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டது.
இவ்விருது 1953ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் விருதினை ஆன்டன் ஜே கார்ல்சன் (Anton J. Carlson) பெற்றார். இவ்விருதினை ஜேம்ஸ் ரண்டி (James Randi), பால்கர்ட்ஸ் (Paul Kurtz) மற்றும் இர்னி சேம்பர்ஸ் (Ernie Chambers) உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். 1996ஆம் ஆண்டு புகழ் பெற்ற உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) பெற்றுள்ளார். இவ்விருதினைப் பெறும் முதல் இந்தியர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மனித நேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு ‘மனிதநேய வாழ்நாள் சாதனை’ விருதினை வழங்கும் காட்சி.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமெரிக்க மனிதநேயர் சங்கம் வழங்கிடும் இந்நிகழ்வு நடைபெற்றது. விருது வழங்கிடும் நிகழ்வின் வரவேற்புரையினை பேராசிரியர் முனைவர் அரசு செல்லையா வழங்கினார். அமெரிக்கா மனிதநேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட், விருது பெறவுள்ள தமிழர் தலைவர் பற்றிய சிறப்பினை எடுத்துரைத்து விருதினை பலத்த கைத்தட்டலுக்கிடையே தமிழர் தலைவருக்கு வழங்கி சிறப்பித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க மனிதநேய அமைப்பின் ‘மனிதநேய வாழ்நாள் சாதனை’ விருதில் இடம்பெற்றுள்ள வாசகங்களை அதன் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் படிக்கும் காட்சி.
American Humanist Association
2019 Humanist Lifetime Achievement Award
K.Veeramani
For work that embodies humanism and for furthering humanist values in thought, writing and activism.
ராய் ஸ்பெக்ஹார்ட் ஆற்றிய உரை:
“டாக்டர் கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியாரின் கொள்கை வழி நின்று சுயமரியாதையையும், பகுத்தறிவையும் உலகெங்கும் பரப்பி வருபவர்.
1933இல் பிறந்த அவர் தனது 10ஆவது வயதில் மேடையில் பேசத் தொடங்கியவர். சாரங்கபாணி என்கிற அவர் பெயரை அவரது ஆசிரியர் வீரமணி என்று மாற்றம் செய்தார். தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் பிறந்தவர். 1956 முதல் பெரியாருடன் தொடர்பு கொண்டு அவர் கொள்கைகளைப் பரப்பி வருபவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
1961இல் திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். 1962இல் ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
1978 அன்னை மணியம்மையார் மறைவுக்குப் பின் திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்று பல சாதனைப் பணிகளைச் செய்தார்.
கிராமப்புறத்து, வறுமை நிலையில் வாழும் மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதன் வேந்தராகவும் இருந்து கல்வித் தொண்டாற்றி வருகிறார்.
2003இல் காரைக்குடி அழகப்பா, பல்கலைக்கழகம் இவருக்கு ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் அளித்து பெருமைப்படுத்தியது.
“சமூகநீதிக்கான வீரமணி விருது’’ இவர் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன் முதல் விருது இந்தியாவின் மேனாள் பிரதமர் மாண்பமை வி.பி.சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சமூகநீதிக்காகவும், ஜாதி ஒழிப்பிற்காகவும், பகுத்தறிவு பரப்புவதற்கும் இவர் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். 40க்கும் மேற்பட்ட முறை கொள்கைசார் போராட்டங்களில் ஈடுபட்டமைக்காகக் கைது செய்யப்பட்டார்.
சமுதாயத்தில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையவும், சமூகநீதி காத்து, மனிதநேயம் வளர்க்கவும் இவர் வாழ்நாள் முழுவதும் முழுநேரத் தொண்டு செய்து வருவதைப் பாராட்டி இவ்விருதினை வழங்குகிறோம்.’’ என்று செயல் இயக்குநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விருது பெற்று ஏற்புரையாற்றும் காட்சி.
ஆசிரியரின் ஏற்புரை
விருதினை பெற்றுக்கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையில், “விருது தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டதாக நான் எண்ணவில்லை. பெரியாரின் தொண்டன் என்பதால்தான் வழங்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். பெரியார்தாம் விருதுக்கு உரியவர். இத்தகைய விருது மேலும் பணியாற்றுவதற்கு _ இயக்கத்தின் தூண்களாக விளங்கிடும் கருப்புச் சட்டைத் தோழர்களின் ஒத்துழைப்பிற்குக் கிடைத்த விருது’’.
இந்த விருது பெரியார், பெரியாரின் தொண்டர்கள், பெரியார் இயக்கம் இவற்றிற்குரியது. இது உலகளாவிய பெரியார் கொள்கைக் குடும்பத்திற்கானது. பெரியார் உலகால் ஏற்கப்பட்டது எனக்கு மகிழ்வளிக்கிறது. பெரியார் உலகமயமாகி வருவது மிகப் பெரிய முன்னேற்றம்.
பெரியார் பன்னாட்டு அமைப்பும், மனிதநேய அமைப்பும் சேர்ந்து மனிதத் தொண்டாற்றுவதும், பெரியார் சிந்தனைகளைப் பரப்புவதும் மகிழ்ச்சியைத் தருகிறது. எனது குடும்பம் என்பது மிகப் பெரிய இந்த இயக்கமும் இயக்க உறுப்பினர்களும்தாம்!
எனக்கு உற்ற துணையாய் இருக்கும் என் இணையர் மோகனா, கவிஞர் கலி.பூங்குன்றன், வீ.குமரேசன், துரை.சந்திரசேகரன், ச.இன்பக்கனி, ரெங்கநாயகி, டாக்டர் சோம.இளங்கோவன், இலக்குவன் தமிழ், ரவிசங்கர் கண்ணபிரான் போன்றோருக்கு எனது நன்றி!’’ என்று விருது பெற்ற பின் தனது ஏற்புரையில் தமிழர் தலைவர் குறிப்பிட்டதோடு அவர்களை மேடைக்கும் அழைத்தார். இது அவரின் மாண்பிற்கும் மனித நேயத்திற்கும் சிறந்த சான்றாகும்.
“வீரமணி ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில், சுயநலமில்லாது, எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர் வந்தார் _ வருகிறார் _ வரக்கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்’’ என்று பெரியாரால் பாராட்டப்பட்ட, தன்னலமற்ற ஒரு மனிதநேய வாழ்நாள் போராளிக்கு இவ்விருது முற்றும் ஏற்புடையது என்பதோடு அவ்விருதுக்கும் சிறப்பு கிடைக்கிறது.
திருமாவளவன் உரை
இந்த மாநாடு ஒரு தொலைநோக்குப் பார்வையோடு, மனிதநேயத்தை, சமூகநீதியை நிலைநாட்ட நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கு பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இங்கு பெரியார், அம்பேத்கர் பற்றி கருத்துப் பகிர்வு நடைபெறுவது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடு.
19ஆம் நூற்றாண்டில்தான் மேற்கத்திய நாடுகளில் மனிதநேயம் குறித்த சிந்தனை எழுந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மனிதநேயம் பற்றிய வரலாறு புத்தரின் காலத்திலேயே 2500 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
புத்தர் சமத்துவம் முன்மொழிந்த புரட்சியாளர். சமத்துவம் மனிதர்களிடையே உருவாக மனிதநேயம் முக்கியம். இது இல்லை யென்றால் சமத்துவம், சுதந்தரம், சமூகநீதி எதையும் அடைய முடியாது.
சமத்துவம் வெறும் சொல்லல்ல. அது ஒரு முழக்கம். அம்பேத்கர், பெரியார் இருவரின் முழக்கமும் சமத்துவத்திற்கானது. உலகம் முழுவதும் பெண்ணிடமிருந்துதான் எல்லா உயிர்களுக்கும் பிறப்பது நிகழ்கிறது. பிறப்பே நமக்குச் சமத்துவத்தைத் தருகிறது.
திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார். வள்ளலார் மனிதநேயத்தையும் தாண்டி உயிர்நேயம் போதித்தார். இது நேயத்தின் உச்சம். எந்த உயிரும் பாதிக்கப்படக் கூடாது என்றார். இப்படி தமிழ்ச் சமூகம் விரிந்த பார்வை உடையது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் உயரிய உலகப் பார்வை தமிழருடையது. மனித நேயமும் சமத்துவப் பார்வையும் இருந்தால்தான் இவை சாத்தியம்.
பெரியாரும் அம்பேத்கரும் மிகப் பெரிய ஆளுமைகள். பெரியாரை கடவுள் எதிர்ப்பாளராகவும், பார்ப்பன எதிர்ப்பாளராகவும் சுருக்கக் கூடாது. அவர் சமத்துவத்தை அடைய முயன்ற போராளி. இந்து சமூகம்தான் சமத்துவத்தை மறுக்கிறது. இதைச் சரியாக, நுட்பமாகக் கண்டறிந்து கூறியவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.
சமூகநீதி என்பது இடஒதுக்கீடு என்பது மட்டுமல்ல; அது மனித சமத்துவத்திற்கானது. உலகிற்கு சுதந்தரம், சகோதரத்துவம், சமத்துவம் இந்த மூன்றும் முக்கியம். இந்து தர்மம் மேற்கண்ட எல்லாவற்றையும் மறுக்கிறது. பிறப்பால் உயர்வு தாழ்வை இந்து மதம் கற்பிக்கிறது.
இந்தியாவில் உள்ள வர்ணாஸ்ரம தர்மம் படிநிலைப் பிரிவு கொண்டது. ஒவ்வொரு வர்ணமும் தனக்குக் கீழான ஒரு ஜாதியைக் கொண்டுள்ளது. அதனால் தனக்கு மேலுள்ள ஆதிக்க ஜாதியை நோக்கி அவை விழித்தெழாமல் செய்கிறது.
மனுஸ்மிருதி சமத்துவத்தைத் தடுக்கிறது. இது பார்ப்பனருக்கு மட்டும் உயர்வு தருகிறது. ஜாதியக் கட்டமைப்பைத் தகர்க்க, அதைப் பாதுகாக்கும் மதத்தை எதிர்க்க வேண்டும். ஜாதியைத் தகர்க்க கடவுள், விதி இவற்றைத் தகர்க்க வேண்டும்.
‘மனித நேயமும் சமூக நீதியும்‘ என்னும் தலைப்பில் எழுச்சி தமிழர் விடுதலை சிறுத்தையின் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் உரையாற்றும் காட்சி.
இந்த எதிர்ப்புகள் சமத்துவத்தை அடையத் தேவைப்படுகின்றன. எனவேதான், கடவுள் இல்லவே இல்லை என்று கூறவேண்டிய தேவையும் கட்டாயமும் பெரியாருக்கு வந்தது. மனிதனைச் சிந்திக்க விடாமல் தடுப்பவற்றைத் தகர்க்க முயன்றார் பெரியார்! அவரது கொள்கைகளை உலக அளவில் பரப்பி வருபவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். திராவிடர் கழகத்தாலும் அதன் தலைவர் கி.வீரமணி அவர்களாலும்தான் உலக அளவில் மனித நேயத்தைக் கட்டமைக்க முடியும். பெரியாரால்தான் அரசியல் அமைப்பாக தி.மு.க.வும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்ற முடியாமைக்கு பெரியாரே காரணம் ஆவார். தந்தை பெரியாரின் பிறந்த நாளில் பெரியாரைக் கொச்சைப்படுத்தும் நிலை வந்தது. தமிழனின் பார்ப்பன அடிமைத்தனத்தின் விளைவு அது!
நாம் பெரியாரின் நோக்கத்தையும், அம்பேத்கரின் நோக்கத்தையும் நிறைவேற்றப் போராடுவோம்; வெற்றி பெறுவோம்! என்று எழுச்சிமிக்க உரையாற்றினார்.
திருமாவேலன் உரை
‘தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்’ இது ஒரு சிக்கலான தலைப்பு. உண்மையான சித்தாந்தங்களை உணராத, அர்ப்பணிப்பு இல்லாத, முழுமையான புரிதல் இல்லாதவர்களிடம் சிக்கியுள்ளதுதான் ‘தமிழ்த் தேசியம்’ என்னும் வார்த்தை.
‘தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்‘ என்னும் தலைப்பில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் மாநாட்டில் உரையாற்றும் காட்சி
1900 தொடக்க காலத்திலே தமிழ்த் தேசியம் தொடங்கப்பட்டுவிட்டது. அதற்குப் பெயர்தான் திராவிடர் இயக்கம்.
தமிழர் என்பதும் திராவிடம் என்பதும் ஒரே பொருள் தரும் இரு வார்த்தைகள். பெரியார் தமிழ் என்று எழுதினால் அடைப்புக்குள் திராவிடம் என்றும், திராவிடம் என்று எழுதினால் தமிழ் என்று அடைப்புக்குள் எழுதியவர். பாவாணரின் கருத்தும் அதுவே. தமிழ்த் தேசியம் படிப்போர் முதலில் பாவாணரின் ‘திராவிடத்தாய்’, ‘ஒப்பியன் மொழிநூல்’ இரண்டையும் படித்துவிட்டு தமிழ்த் தேசியம் பேசவேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அமெரிக்க மனித நேயர் சங்கத்தின் செயல் இயக்குநர் ராய் ஸ்பெக்ஹார்ட் 2019ஆம் ஆண்டிற்கான ‘மனிதநேய வாழ்நாள் சாதனை’ விருதினை வழங்கினார். அப்போது உறுதுணையாய் இருப்போரையும், கழகத்தினரையும் ஆசிரியர் மேடைக்கு அழைத்து சிறப்பித்தார்.
தமிழ் _ தமிழம், திரமிள, திரவிட, திராவிடம் என்று திரிந்தது. ‘திராவிடம்’ என்பதை பெரியார் இனமாகவோ, மொழியாகவோ பயன்படுத்தவில்லை. ‘திராவிடம்’ என்பதை அரசியல் சொல்லாகப் பயன்படுத்தினார். திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காவிட்டால் சூத்திரர் கழகம் என்று பெயர் வைத்திருப்பேன் என்றார்.
ஆரியனுக்கு ‘திராவிடன்’ என்று சொன்னால் எவ்வளவு கோபம் வருமோ அந்தக் கோபம் ‘தமிழன்’ என்று சொன்னால் வரும் என்றால், நான் ‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைப்பேன் என்றார்.
தனித்தமிழ் தந்தை என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகளார், “தன் கொள்கைகளை அதிகம் பரப்பியவர் பெரியாரும் திராவிடர் கழகமும்’’ என்றார். தமிழுக்குப் பெருந்தொண்டாற்றியவர் பெரியார் என்று பாவாணர் பாராட்டினார்.
தந்தை பெரியார் தமிழுக்கும், தமிழருக்கும் ஆற்றிய தொண்டு ஏராளம். “தமிழ்நாட்டுக்கு தமிழர் நாடு என்று பெயர் இல்லையென்றால் நான் வாழ்ந்து என்ன பயன்?’’ என்று வேதனைப்பட்டவர் பெரியார்!
1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்தவர் பெரியார்!
1948இல் திருக்குறளே திராவிடர் கழகத்தின் கொள்கை என்று கூறியவர் பெரியார்!
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களும் – பார்வையாளர்களும்
மதத்தில் சமஸ்கிருதமும், ஆட்சியில் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்துவதால் தமிழ் தன் மதிப்பை, உயர்வை, சிறப்பை இழந்தது என்றார் பெரியார்.
மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சி, சமுதாய உணர்ச்சி வராது. எனவே, மொழி உணர்ச்சி கட்டாயம் என்று 1972இல் கூறியவர் பெரியார்.
தமிழ்த் தேசியம் பேசுவோரின் பேச்சில் இளைஞர்கள் மயங்குவதால் பெரியாரின் உண்மையான தமிழ்த் தேசிய உணர்வை நாம் பரப்ப வேண்டும்.
விருதுடன் தமிழர் தலைவர் ஆசிரியர்
பெரியாரிடம் உள்ள தமிழ்த் தேசிய கூறுகள் நூற்றுக்கு மேல். தமிழ் இனப்பெருமை, தமிழ்நாட்டின் பெருமை, தமிழ்நாடு என்று பெயர் இருக்க வேண்டும், தமிழனின் கடந்த காலப் பெருமை, தமிழ்ப் பெருமை, தனித்தமிழ் நாடு, வடவர் எதிர்ப்பு, மார்வாடி, தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆதிக்க எதிர்ப்பு, ஈழத்தமிழர் நலன், மொழிவாரி மாநில ஆதரவு, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, தமிழ்த் தொழிலாளி முதலாளி நலன், தமிழர் ஒற்றுமை, சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பு போன்று அந்தப் பட்டியல் நீளும். இவற்றை அறிந்தவர்கள் பெரியாரைத் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகத் சித்தரிக்க மாட்டார்கள்’’ என்று ஆய்வு உரையாற்றினார்.
மாநாட்டின் சிறப்புக் கூறுகள்:
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் திங்களில் 21, 22 சனி ஞாயிறுகளில் வாசிங்டன் மேரிலாண்டில் Montgomery கல்லூரியின் வளாகத்தில் “பன்னாட்டு மனிதநேய சுயமரியாதை மாநாடு’’ எழுச்சியோடு நடைபெற்றது.
தமிழ்நாட்டிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.
ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டமைப்பின் 2019-ஆம் ஆண்டிற்கான ‘சமூகநீதிக்கான வீரமணி விருதினை’ டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன் தமிழ் ஆகியோர் தமிழர் தலைவர் முன்னிலையில் வழங்கினர்.
பிரான்சு உள்பட மலேசியா முதலிய நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து பங்கு கொண்டவர் களுள் மேனாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள் என்று பல்வகைப்பட்டவர்களும் இடம் பெற்றனர். இதில் மகளிர் பன்னிருவர் ஆவர்.
இம்மாநாடு அமெரிக்காவின் மனிதநேயர் சங்கமும் (American Humanist Association), பெரியார் பன்னாட்டு அமைப்பும் (Periyar International) இணைந்து இந்த ஈடு இணையற்ற எழிலார்ந்த மாநாட்டை நடத்தின.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனிதநேயர்கள், மனித உரிமையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ்ச் சங்கத்தினர்கள், அறிவியலாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்று பலதரப்பு அறிஞர் பெருமக்களும் அறிவியல் _ பகுத்தறிவு _ நாத்திகக் கருத்துகளை காரிருள் கிழித்த கதிர் ஒளியாகப் பாய்ச்சினர்.
பெண்ணியம், மனிதநேயம் என்னும் திசையில் முற்போக்கு முத்துக்களை வாரி இறைத்தனர்.
பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தினரும் தங்கள் பங்குக்குக் கருத்து மாரி பொழிந்தனர்.
குழந்தைகள், இளைஞர்கள் இல்லாமலா எதிர்காலம்? எனவே அவர்களுக்கான இடமும் அளிக்கப்பட்டிருந்தது.
ஜாதியை எதிர்த்து சண்டமாருதம் நடந்தது. “ஜாதிக்கென்று தனிக் குருதிப் பிரிவு உண்டா?’’ என்னும் வினாக் கணை தொடுக்கவும் பட்டது.
பசியை எதிர்த்துப் போர் என்னும் மனிதநேயக் குரலும் ஓங்கி ஒலித்தது.
‘திருக்குறளும், மனிதநேயமும்’ என்னும் தலைப்பிலும் டாக்டர் ஆர். பிரபாகரனின் உரை அவையைக் கவர்ந்து ஈர்த்தது.
“இயற்கைக்கு மேலான எந்த சக்தியும் உலகில் கிடையவே கிடையாது. ஏதாவது மானுட வளர்ச்சிக்கு நல்லது நடக்க வேண்டுமானால் அது மனிதர்களான நம்மால்தான் முடியும்“ என்றார் டெபி ஆலன்.
சமூகநீதிக்கான வீரமணி விருது
பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சமூகநீதிக்காக உழைக்கும் பெருமக்களுக்கு ‘சமூக நீதிக்கான வீரமணி விருது’ ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. விருதுடன் ரூபாய் ஒரு இலட்சமும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.
மேனாள் பிரதமர் வி.பி.சிங், மேனாள் முதல் அமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர், மேனாள் உ.பி. முதல் அமைச்சர் மாயாவதி, மேனாள் அ.இ. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமார், கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த சட்ட நிபுணர் மேனாள் அட்வகேட் ஜெனரல் இரவிவர்மக் குமார், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோரை ஒருங்கிணைத்து சமூக நீதித் தளத்தில் தடம் பதித்த தோழர் கோ. கருணாநிதி முதலியோருக்கு சமூகநீதிக்கான வீரமணி விருது அளிக்கப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டை மகத்தான முறையில் நடத்துவதற்கு முக்கிய மூலாதாரமாக இருந்தவரும், ஜெர்மன் மொழியில் தந்தை பெரியார்பற்றி நூல் எழுதியவரும், தமிழ்நாட்டில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களான இருளர் மக்கள் பற்றி கள ஆய்வு நடத்தியவருமான பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் (Ulrike Niklas) அவர்களுக்கு இவ்வாண்டுக்கான (2019) ‘சமூகநீதிக்கான வீரமணி விருது’ம், ரூபாய் ஒரு லட்சமும் – பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களின் பாராட்டு உரையைத் தொடர்ந்து வி. சீனிவாசன் அவர்களால் பலத்த கைஒலிக்கு இடையே வழங்கப்பட்டது.
ஏற்புரை வழங்கிய பேராசிரியை உல்ரிக் நிக்லஸ் அவர்கள் நெகிழ்ச்சியுடன் சிறிது நேரம் உரையாற்றி, அதற்கு மேல் பேச இயலாமல் நா தழுதழுக்க தன் உரையை முடித்துக் கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் அமைந்த, இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற கலை விருந்து, பறை இசை அனைவரையும் எழுச்சியுறச் செய்தது.
கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், பரத நாட்டியம், பாட்டிசை என பல நிகழ்ச்சிகளும் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது.
அமெரிக்காவில் இரு நாள்கள் நடைபெற்ற இம்மாநாடு மனிதநேய உலகளவில் முன்னெடுப்பதற்கான முயற்சிகளுக்கு அடித்தளம் அமைத்தது. பெரியாரின் உலகளாவிய பரவலுக்கும் அது களம் கண்டது.