பெரியார் பார்ப்பன வெறுப்புடையவர் அம்பேத்கர் பார்ப்பன வெறுப்பில்லாதவரா?

அக்டோபர் 16-31

நேயன்

ஈ.வெ.ரா. பார்ப்பன வெறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால், அம்பேத்கர் எப்போதும் பார்ப்பன வெறுப்பைக் கொண்டதில்லை. பார்ப்பனர்களை நேசித்தார்.

இது இந்தப் புரட்டல் பேர்வழி கூறும் அடுத்த வேறுபாடு _ குற்றச்சாட்டு.

பெரியார், அம்பேத்கர் இருவரின் பேச்சு, எழுத்து எல்லாமே ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு எதிரானவையே! இதில் பெரியாரை மட்டும் பிரித்துப் பேசுவது அயோக்கியச் செயல்.

இருவருமே ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை, கொடுமையை, ஒடுக்குமுறையை, அவர்கள் கற்பித்த பேதத்தை, ஜாதியத்தை, இழிவை எதிர்த்தவர்களே தவிர, தனிப்பட்ட பார்ப்பன விரோதம், வெறுப்பு கொண்டவர்கள் அல்லர். அம்பேத்கர் பார்ப்பன ஆதரவில் வளர்ந்தவர்; பெரியார் பார்ப்பனரை நண்பராகக் கொண்டவர்.

பார்ப்பானையும் பாம்பையும் கண்டால், பாம்பை விட்டுவிடு; பார்ப்பானை அடி என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படும் பிரச்சாரம் தவறானது. அதைப் பலமுறை சொல்லி விளக்கிவிட்டோம். இது வடநாட்டு ஹிந்திப் பழமொழியே தவிர, பெரியார் சொன்னதல்ல.

ஆரியப் பார்ப்பனர்கள் பற்றி பெரியார் நிலைப்பாடு என்ன என்பதற்கு கீழ்க்கண்ட அவரது பேச்சே நல்ல உதாரணம்.

பார்ப்பனர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் செயல்திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகமும் நானும் சொல்வதெல்லாம் நாங்களும் கொஞ்சம் வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.

தவிரவும் பார்ப்பனர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்கள் அனுசரிக்கிற சில பழக்க வழக்கங்களையும், முறைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இது அவர்கள் மனம் வைத்தால் மாற்றிக்கொள்வது பெரிய காரியம் அல்ல.

விஞ்ஞானம் பெருக்கம் அடைந்துவிட்டது. இந்நிலையில் நமக்குள் மனித தர்மத்தில் பேதம் இருப்பானேன்? ஆகவே உள்ள பேதம் மாறி, நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் பாடுபடுகின்றேன். நம்மிடையே பேதவுணர்ச்சி வரக்கூடாது என்பதில் எனக்குக் கவலையுண்டு.

எனவே, முயற்சியில் பலாத்காரம் சிறிதும் இருக்கக் கூடாது என்பதிலும் எனக்குக் கவலையுண்டு.

காலம் எப்போதும் ஒன்றுபோல இருக்க முடியாது. நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும் பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்பிற்கிடமில்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழக பின் சந்ததிகளும், பார்ப்பனர்களின் பின் சந்ததிகளும் இப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூறமுடியாது. ஆகவே, அதிருப்திகளுக்குக் கடினமானவற்றை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம். எனவே, கால வளர்ச்சிக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சென்னை இராயப்பேட்டை, இலட்சுமிபுரம் யுவர் சங்கம் என்கிற பார்ப்பனர் சங்கக் கூட்டத்திலே (5.1.1953) பேசியவர் பெரியார் அவர்கள். (விடுதலை 8.1.1953)

அதேபோல் அம்பேத்கரும், அயல்நாட்டிலிருந்து வந்த பார்ப்பனர்கள், இந்த மண்ணின் மக்களான பார்ப்பனர் அல்லாதாரிடம் நன்றியோடு நடக்க வேண்டுமே தவிர அவர்களை அடக்கி ஒடுக்கி, இழிவுபடுத்தி, ஆதிக்கம் செலுத்தி, உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்றுதான் கூறினார். இதை இருவரின் முழுமையான பேச்சுகளையும், எழுத்துகளையும், போராட்டங்களையும், உரிமை முழக்கங்களையும் அறிந்தால் நன்கு புரிந்து கொள்ளலாம். எனவே, இவரது இந்தக் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது. பெரியார் மீது இவர்களுக்குள்ள வெறுப்பின் வெளிப்பாடு.

நாகபுரியில் 1956இல் பவுத்த மதம் தழுவியபோது அம்பேத்கர் எடுத்த 22 உறுதிமொழிகள் இதோ!

1. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன். 2. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.  3.கணபதி, கௌரி மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.  4.கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன். 5.மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.  6.இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளைச் செய்யமாட்டேன். 7.புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீற மாட்டேன். 8.பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.  9.மானுட சமத்துவத்தை நம்புவேன். 10.சமத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாகப் பாடுபடுவேன். 11.புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன். 12.புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்றுச் செயல்படுவேன். 13.எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன். 14.பொய் பேச மாட்டேன். 15.களவு செய்ய மாட்டேன். 16.உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன். 17.மது அருந்த மாட்டேன். 18.புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன். 19.மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தைத் தழுவிக் கொள்கிறேன். 20.புத்தரும், அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன். 21.இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன். 22.புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன் என்றாரே!

இந்திய மக்களின் பாதுகாப்பில் அம்பேத்கர் சமரசம் செய்து கொள்ளாதவர். இதை ஈ.வெ.ரா.விடம் காணமுடியாது. அவர் இனவெறியாளர்.

இது இந்த ஆர்.எஸ்.எஸ். எத்தரின் ஏழாவது அபாண்டக் குற்றச்சாட்டு.

அம்பேத்கர் பேசியதாக இவர் எடுத்துக்காட்டும் வாசகங்களே நம் விளக்கத்துக்குச் சாதகமானவையாகும். அவர் வாதத்திற்கு வலு சேர்ப்பவையல்ல.

அம்பேத்கரின் சொற்களில், சுயராஜ்யத்தைப் பாதுகாப்பது என்பதைவிட மிக முக்கியமான கேள்வி, சுயராஜ்யத்தில் இந்துக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதுதான். இந்து சமூகம் ஜாதிப் பிரிவினை அற்ற ஒரு சமூகமாக மாறும்போது மட்டுமே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் பலம் பெற்றிருப்பதான நம்பிக்கை அதற்கு ஏற்படும் என்பதே எனது கருத்து. அத்தகைய ஓர் உள்ளுறை ஆற்றல் இல்லாமல் போனால், இந்துக்களுக்கான சுயராஜ்யம் என்பது அடிமைத்தனத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு பாதையாகவே இருக்கும் என்பதே இவர் மேற்கோள் காட்டும் அம்பேத்கர் கூற்று.

இதில் என்ன சொல்கிறார் என்றால்,

இந்திய நாட்டின் சுதந்திரத்தை விட, இந்துக்களில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை பாதுகாப்பும், சம உரிமையுமே முதன்மையானது என்கிறார். ஜாதியை ஒழிக்காமல் சுதந்திரம் பெறுவது _ அது பெருவாரியான மக்களை அடிமைப்படுத்தவே பயன்படும் என்கிறார்.

பெரியாரும் இதைத்தான் சொன்னார். இந்த நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து இந்துமத பேதம், இழிவு இவற்றை ஒழித்து ஜாதியை ஒழித்து, சமத்துவ, சம உரிமையை நிலைநாட்டும் வரை இந்த நாட்டுக்கு சுதந்திரம் தேவையில்லை என்றார்.

இதில் அம்பேத்கர், பெரியார் இருவருமே ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். அப்படி யிருக்க பெரியாரை மட்டும் தேச விரோதியைப் போல காட்டுவது மோசடியல்லவா?

இந்தக் குற்றச்சாட்டு கூறும் இந்த ஆள் ஒரு பைத்தியக்காரனோ என்கிற அய்யத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, இவர்களிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *