உணவே மருந்து : தவிர்க்கப்பட வேண்டிய உணவு முறைகள்!

செப்டம்பர் 1-15 2019

அண்மையில், ‘தனது உணவில் கீரையும் மோரும் ஒன்றாக எடுத்துக்கொண்டதால், பாண்டிச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஆர்த்தி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

கீரையும் மோரும் சேர்த்துச் சாப்பிடுவதால்…

கீரையிலும் மோரிலும் நிறைந்துள்ள கால்சியம் ஒன்றாக இணையும்போது கீரையில் உள்ள ‘ஆக்ஸாலிக் ஆசிட்’டினால் அந்த உணவு அப்படியே வயிற்றில் தங்கிவிடுகிறது. அதுவும், கரையாத தன்மையுடைய கால்சியம் ஆக்ஸலேட் வடிவில் வயிற்றில் தங்கிவிடும். இந்த கால்சியம் ஆக்ஸலேட் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றுப்போக்கை உண்டாக்கும். தொடர்ந்து ஏற்படும் வயிற்றுப் போக்கால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உயிர் இழக்கும் நிலையும்கூட நேரும். சிலருக்கு வாயுத்தொல்லை ஏற்படும். சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகி வாந்தியை உண்டாக்கும்.

கீரையில் நிறைய சத்துகள் உள்ளன! ஆனால், கீரையை இரவில் சாப்பிடக் கூடாது. ஏனெனில், கீரையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது, இரவில் செரிமானத் தன்மையை அதிகரிக்கலாம். அதனால் வாய்வோ மலம் வெளியேறும் உணர்வோ அல்லது வாந்தியோ ஏற்படலாம். இவை இரவு தூக்கத்தை முற்றிலும் கலைத்துவிடும்.

கவனிக்க வேண்டிய இன்னொரு தவறான பழக்கம் – உணவு உண்ட பிறகு உடனே காபி, டீ குடிப்பது. பலருக்கும் இன்று இந்தப் பழக்கம் இருக்கிறது. ஒரு திட உணவுக்குப் பின்னர் திரவ உணவு எடுக்கும்போது அது செரிமானப் பிரச்சனையை உண்டாக்கும். ஆகையால், உணவுக்குப் பின் (அசைவ உணவாக இருந்தாலும்) சிறிது இளஞ்சூடான தண்ணீரை, சிப் செய்து குடிக்கலாம். இது, உணவு செரிமானமாக உதவும்!

ஏன் அப்படி சேர்த்துச் சாப்பிடக் கூடாது?

பொருந்தா உணவுகளை ஒரே நேரத்தில் உண்ணும்போது உடனடியாக அது விளைவை ஏற்படுத்தாது. மாறாக, சில மணி நேரங்களிலோ அல்லது தினங்களிலோ அதன் தன்மையை வெளிப்படுத்தும். வயிறு உப்பசம், உடல் சோர்வு ஆகியவையே அதற்கான முதற்கட்ட அறிகுறிகள். இதுவே நாளடைவில் நம்முடைய செரிமான சக்தியைப் பாதித்து, வாந்தி, சோர்வு ஏற்படும் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும்.

உணவு உண்ணும்போது குளிர்பானங்கள் எடுத்துக் கொள்வது சிலர் பழக்கம். ஆனால், இருக்கக் கூடியதிலேயே அதிக நச்சு வாய்ந்த ‘காம்பினேஷன்’ இதுதான். சாப்பிடும்போது குடிப்பதும் தப்பு. தண்ணீர் குடித்தால், நம் வயிற்றில் சுரக்கும் ஆசிட்டானது தண்ணீரினால் அல்கலைனாக மாறிவிடும். அந்த அமிலத்தன்மை கரைவதால் உணவில் உள்ள ஊட்டச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்ளாமல் செய்துவிடும். இதனால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். உடலில் நச்சுகள் மிகவும் அதிகமாகும்.

அதேபோல் உணவு உண்ணும்போது பழங்கள் சாப்பிடக் கூடாது. சிலர் பாதி சாப்பாடு, பாதி பழங்கள் என இரண்டையும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். சிலர் சாப்பிட்டு முடிந்தவுடன் சிறிது பழம் சாப்பிடுவார்கள். இதுவும் மிகக் கேடு தரும். பழம் சீக்கிரம் செரிக்கும். உணவோ  மெதுவாகச் செரிக்கும். அதனால், இரண்டும் கலக்கும்போது வினைபுரிந்து புளித்த ஏப்பம், வாந்தி, செரிமானக் கோளாறு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

காலை உணவாக சாப்பிடும் ஃபிளேக்ஸ் சீரியல் உணவுகளோடு பால் கலந்து உண்ணும்போது, அதனுடன் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரிக் பழரசங்களை சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது. பாலில் ஊறவைத்த அவலுக்கும் இது பொருந்தும். பால் சேர்க்காத ஃபிளேக்ஸ் அல்லது அவல் எனில், பழரசம் எடுத்துக் கொள்ளலாம். பால் சேர்த்த ஃபிளேக்ஸுடன் இப்படி பழரசமும் சேர்த்து எடுத்துக் கொள்கிறபோது அது, நம் வயிற்றிலிருக்கும் என்சைம்ஸை முற்றிலுமாக சேதப்படுத்திவிடும். பால் சேர்த்துச் சாப்பிட்ட உணவுக்கு ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே பழச்சாறுகளைச் சாப்பிட வேண்டும்.

பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. வாழைப்பழ மில்க்ஷேக் செரிமானத் தன்மையை முற்றிலும் பாதிக்கும். இதனால்தான் இந்த மில்க்ஷேக் குடித்த பல குழந்தைகளுக்கு அலர்ஜி, வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுங்கள்.

பாஸ்தாவுடன் தக்காளியோ பாலடையோ சேர்த்து சமைக்கக் கூடாது. இந்தக் கலப்பு வயிற்றிலுள்ள என்சைம்களை பாதித்து செரிமானத் தன்மையை பாதிக்கும். அதே நேரம் பாஸ்தாவைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என, பாஸ்தாவுடன் முட்டை, இறைச்சி ஆகியவற்றையும் சேர்த்து சமைக்கிறார்கள். இப்படிச் செய்வதும் தப்பு. இது நாளடைவில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும். இதன் முதல்கட்ட அறிகுறியே சோர்வு, வயிற்றுவலி, கவனச்சிதறல், சருமப் பிரச்சனைகள் ஆகியவை. பாஸ்தாவை, நூடுல்ஸ் போல காய்கறி, இறைச்சி என எதுவுமே சேர்க்காமல் சமைத்து சாப்பிடுவதே நல்லது.

மட்டனையும் சீஸையும் சேர்த்து சாப்பிடக் கூடாது. தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் மட்டனில் ‘கோலா உருண்டை செய்யும்போது சீஸ் சேர்க்க மாட்டார்கள். ஆனால் சென்னையில் பெரும்பாலான உணவகங்களிலும் பலரின் வீடுகளிலும் கோலா உருண்டையில் மட்டனுடன் சீஸ் சேர்த்தே சமைக்கிறார்கள். இந்தக் காம்பினேஷன் மிகவும் ஆபத்தான ஒன்று. இரண்டு ஹெவி உணவையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும்போது அவற்றின் விளைவும் அதிகமாக இருக்கும். மட்டன் கோலா உருண்டையில்தான் சீஸ் சேர்க்கக் கூடாது. ஆனால், காய்கறி கோலா உருண்டையில் சீஸ் சேர்க்கலாம்.

இன்னொரு முக்கியமான விஷயம், சிக்கனோடு மட்டன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதேபோல சிக்கனோடு மற்ற எந்த இறைச்சியும் சேர்த்து சாப்பிடக் கூடாது. அதாவது, உணவில் ஒரு ஹை புரோட்டீனும் இன்னொரு ஹை புரோட்டீனும் ஒன்றாக சேர்த்துச் சாப்பிடக் கூடாது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஹை புரோட்டீன் நம்முடைய செரிமான மண்டலத்தையே அசைத்துப் பார்க்கும். இது நாளடைவில் பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

புளிப்புத்தன்மை அதிகமுள்ள சிட்ரிக் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை ஆகிய பழங்களுடன் பால் சேர்த்து சாப்பிடக் கூடாது.

அமிலத்தன்மையுள்ள ஆப்பிள், மாதுளை, ஸ்டிராபெர்ரி இவற்றை, இனிப்புப் பழங்களான வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா, உலர் திராட்சை ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. குறிப்பாக, கொய்யாப் பழத்தை, வாழைப் பழத்துடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இது குறித்த ஆராய்ச்சியில், இந்த காம்பினேஷனில் பழங்களைச் சாப்பிட்டவர்களுக்கு தலைவலி, வாந்தி, அலர்ஜி, செரிமானக் கோளாறு ஆகியவை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

ஸ்டார்ச்சுடன் ஹை புரோட்டீன் கூடாது

பட்டாணி, சோயா உள்ளிட்ட ஹை புரோட்டீன் உணவுடனும் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமானது, இறைச்சி (ஹை புரோட்டீன்) உணவுடன் பழங்கள் சேர்த்துச் சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

விருந்து நிகழ்ச்சிகளில், முதல் நாள் இறைச்சி (அதிக புரோட்டீன் கொண்ட உணவு) சாப்பிட்டால், மறுநாள் காலையில் பப்பாளிப் பழத்தை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளியில் உள்ள ‘பப்பைன்’ நம் உடலில் உள்ள புரதத்தை வெளியேற்ற உதவும்.

பீட்ஸாவுடன் கார்பனேட்டட் டிரிங்ஸ் சேர்த்துச் சாப்பிடவே கூடாது. ஆனால், கடைகளில் செய்யும் தவறே _ இந்த இரு உணவையும் சேர்த்துக் கொடுப்பதுதான். இப்படி சேர்த்துச் சாப்பிடும்போது இதிலுள்ள ஹை அசிட்டிக், செரிமானக் கோளாறில் ஆரம்பித்து பல பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.

எனவே, இவற்றை ஒவ்வொரு வீட்டிலும் பட்டியல் இட்டு ஒட்டி வைத்துப் பின்பற்றுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *